Friday, 1 October 2021

விடியல் சஞ்சிகை – புரட்டாதி இதழ்

 

`விடியல்’ புரட்டாதி (2021) இதழ் வாசிப்புக்குக் கிட்டியது. `சுட்டுத் தள்ளுங்கள்! எல்லாவற்றையும்..’ மொபைல் காமிரா காதலர் சேலம் லக்சுமிகாந்தன், `பேருருவின் புறவாசல்’ மகரந்தன் ஆகியோரை அதிதிகளாகக் கொண்ட அழகான அட்டைப்படத்துடன் வந்திருக்கின்றது.

லக்சுமிகாந்தன், டப்பாக் கமராவிலிருந்து மொபைல் கமரா வரை எதையும் விட்டுவைக்காத கலைஞர், கமராக்களின் நுணுக்கங்களை விவரித்துச் செல்லும் இவர் `இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்ற எழுத்தாளர் என்பது கூடுதல் செய்தி.

மகரந்தன் எழுதிய `பேருருவின் புறவாசல்’ – பேருரு தும்பியா யானையா மக்கள் கூட்டமா? விறுவிறுப்பாக பல தகவல்களைத் தந்துகொண்டே சென்றது.

ஆவணி இதழ் பக்கத்துக்குப் பக்கம் கைக்கூ கவிதைகளால் சுவை சேர்த்தது, எனில் புரட்டாதி இதழ் வாசகர்களின் சுவைமிகு கடிதங்களால் நிரம்பி வழிகின்றது.

`ஆலகால விஷம்’ – ஐந்தாவது முத்தம் – ஒரே `இச்’சில் போட்டுத் தள்ளும் கைங்கரியம். விஷக்கன்னி – உடம்பு பூரா விஷம். நகைச்சுவைப் பாணியில் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. ராஜ்ஜாவுக்கு வாழ்த்துகள்.

மு. முருகேஷ் எழுதிய `பின்னிருக்கையில் மனிதம்’ நல்ல படைப்பு. உண்மைக்கதை. அடுத்தவருக்கு உதவுதல் பற்றிய படைப்பு.

தவிர பல நேர்காணல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என சஞ்சிகையைச் சிறப்புற வைக்கின்றன. பக்க எண்ணிக்கைகளில் சஞ்சிகை சிறிதாயினும் - கடுகு சிறிது, காரம் பெரிது என உணர்த்தி நிற்கும் சஞ்சிகை.

ஒரு வட்டத்திற்குள் செயல்படாது இலக்கியப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில் விரிவதைப் பாராட்டுகின்றேன். `ஈழத்துச் சிறப்பிதழ்’ வருவதைத் தொடர்ந்து பல சிறப்பிதழ்கள் வெளிவர வாழ்த்துகள்.


No comments:

Post a Comment