Thursday, 20 January 2022

`முள்ளும் மலரும்’

முள்ளும் மலரும் திரைப்படத்தை எண்பதுகளில் பார்த்திருந்தாலும், அதன் நாவல் வடிவத்தை நாற்பது வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வாசிக்கக் கிடைத்தது. நாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெருத்த வேறுபாடு இருந்ததைக் கண்டுகொள்ள முடிந்தது. திரைப்படம் ஒரு முள்ளுக் (காளி) கூட மலரும் என்பதைக் காட்டி, நாவலுக்கு ஒரு புது அர்த்தத்தைக் கற்பித்தது. ஆனால் நாவல்? ஒரு கொடியில்/செடியில் முள்ளும் மலரும் தனித்தே இருப்பதைக் காட்டுகின்றது. திரைப்படத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் நாவலை எத்தனை பேர் வாசித்திருப்பார்கள்? திரைப்படத்தைப் பார்த்து காளி (ரஜனிகாந்) மீது ரசனை வைத்திருந்தவர்கள், நாவலை வாசிக்காமல் இருப்பதே நல்லது.

முள்ளும் மலரும் கல்கி இதழ் நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் உமாசந்திரன் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல். பூர்ணம் ராமச்சந்திரன், தாய் உமா மீது கொண்ட பாசத்தினால், தனது புனைபெயரை உமாசந்திரன் என வைத்துக் கொண்டார். உமாசந்திரன் நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, தொழில் நிமித்தம் அங்கே சென்றார். ஒரு மாதம் வரையில் அங்கே தங்கியிருந்து, விஞ்சில் பல தடவைகள் சென்று பலரையும் சந்தித்து உரையாடியபோது கருக்கொண்டதுதான் `முள்ளும் மலரும்’ நாவல். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற பூர்ணம் விசுவநாதன், இவரது உடன் பிறந்த சகோதரர்.

விஞ்ச் ஒப்பரேட்டரான காளியண்ணன், அவனின் தங்கை வள்ளி, இவர்களின் அத்தை அஞ்சலை, பொறியியலாளரான குமரன், குமரனின் நண்பர்கள் வீரமணி கனகா(வீரமணியின் தங்கை), மங்கா, மங்காவின் தாய் வெள்ளாத்தாள், காளியண்ணனின் நண்பர்கள் முனியாண்டி மாயாண்டி – இவர்கள் நாவலின் முக்கிய பாத்திரங்கள்.

காளியண்ணன் முரடன், திமிர் பிடித்தவன், அதிகம் படிக்காவிடினும் தான் செய்வதே சரியானது என்று நம்புவன். தனது தங்கை வள்ளி மீது கொண்ட பாசம், அவளே வாழ்வு என்ற கோலம் அவனுடையது. குமரன் சுருளியாற்றுத்திட்டப் பொறியியலாளராக அங்கே வருகின்றான். ஏற்கனவே தன் இஷ்டப்படி உடும்புக்கொட்டகையில் இருந்து விஞ்ச் ட்ராலியை இயக்கிக் கொண்டிருந்த காளியண்ணனுக்கு, குமரனின் கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை. இருவரும் முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.
காளியண்ணனும் வள்ளியும் எப்படி அனாதைகளாக அங்கு வந்து சேர்ந்தார்களோ, அதே போல மங்காவும் அவளது தாயார் வெள்ளாத்தாளும் அங்கு வந்து சேர்கின்றார்கள். காளியண்ணன் அவர்களுக்கு அடைக்கலம் குடுக்கின்றான். மங்கா அடக்கமுடியாத புள்ளிமான், துணிச்சலான பெண், எந்நேரமும் அடங்காத பசி அவளுக்கு. வள்ளியும் மங்காவும் சிநேகிதர்கள் ஆகின்றனர். முள்ளிமலைக்காடு, வீரன் வாய்க்கால், கன்னிமலையென சுற்றித் திரிகின்றார்கள். கெளரி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்கின்றார்கள். ஆறு, நீலமலை, அணைக்கட்டு, சம்பா நீர்த்தேக்கம் போன்ற இயற்கைக் காட்சிகளுடன் நாமும் பயணிக்கின்றோம். மனதிற்கு இதம் தரும் இயற்கைக் காட்சிகளினால் குளிர்ந்து போகின்றோம்.

மங்கா அடிக்கடி காளியண்ணனைச் சீண்டியபடி இருப்பாள். ஒருநாள் காளியண்ணன் உடும்புக்கொட்டகையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவனின் மணிக்கூட்டைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுவாள். காளியண்ணன் மங்காவைத் துரத்தியபடி உடும்புக்கொட்டகையை விட்டு அதிக தூரம் சென்றிருப்பான். அந்த நேரம் பார்த்து வள்ளி அங்கே வருகின்றாள். ட்ராலியை மேலே இயக்குவதற்கான மணி ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. காளியண்ணன் அங்கே இல்லாததால் பதறிப்போய் தானே விஞ்ச்சை இயக்குகின்றாள். விஞ்சில் மேலே வந்த குமரன் நடந்தவற்றை அறிந்து கொள்கின்றான். அதற்குள் காளியண்ணனும் அங்கே வந்து சேர்ந்துவிடுவான். காளியின் உதாசீன குணத்திற்காகத் திட்டித் தீர்க்கின்றான் குமரன். காளியின் நடத்தையையிட்டு அவனுக்கொரு எச்சரிக்கைக் கடிதம் குடுக்கின்றான். பவர்ஹவுசிற்கு வேலைக்குப் போகின்றவர்களைத் தவிர மற்றவர்களை ட்ராலியில் ஏற்றக்கூடாது என்று தடை உத்தரவு போடுகின்றான். இதுவரை காலமும் செங்குத்தான மலைச்சரிவில் இறங்குவதற்கு, பலரையும் தனது விஞ்ச் ட்ராலியின் மூலம் ஏற்றியிறக்கிக் கொண்டிருந்த காளியண்ணனை ஒருவரும் பிழை சொல்வதில்லை. புதிதாக வந்த எஞ்சினியர் குற்றம் சுமத்துகின்றார் என மனதுக்குள் மறுகுகின்றான் காளியண்ணன். வீட்டிற்கும் போக மனமில்லாமல் தவிக்கின்றான்.

இருளர்கள் வசிக்கும் முள்ளிமலைக் குடியிருப்பான காத்தான்கடவில் அன்று `வள்ளி திருமணம்’ கூத்து நடக்கவிருப்பதாக அறிந்து அங்கு செல்கின்றான். கூத்தில் நம்பிராசன் வேடத்தில் நடிப்பவனுக்கு இயலாமல் போகவே காளியண்ணன் அவனது பாத்திரமேற்று நடிக்கின்றான். புலி ஒன்றின் தாக்குதலால் அங்கே ஒரு கையை இழக்கின்றான். (திரைப்படத்தில் இந்தக் காட்சியை இயக்குனர் மகேந்திரன் சற்றே மாற்றியமைத்திருப்பார். காளியை, 10 நாட்கள் வேலையை விட்டு நிறுத்தியிருப்பார் குமரன். காளி, குமரன் மீது கொண்ட ஆத்திரத்தினால் குடித்துக் கூத்தாடிவிட்டு வீதியில் விழுந்து கிடப்பான். அப்போது அவன் மீது ஒரு டிரக் வண்டி ஏறி இறங்குவதால் அவன் கை ஒன்றை இழக்கின்றான்.)

ஒருதடவை பெரும்மழை பெய்து அணைக்கட்டு உடையும் தறுவாயில் இருந்தபோது, குமரன் அதன் நீரைத் திறந்து வெளியேற்றும் முயற்சியில் ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றான். அந்த நேரம் வள்ளி குமரனை ஆபத்தினின்றும் காப்பாற்றுகின்றாள். குமரனுக்கு, வள்ளி மீது ஒருதலைப் பட்சமாக காதல் அரும்புகின்றது. குமரன் வள்ளியை விரும்புவதை மாயாண்டியின் மனைவியான அங்காயி காளியண்ணனுக்குப் போட்டுக் குடுத்துவிடுவாள்.

காளியண்ணன், குமரன் மீது கொண்ட ஆத்திர அவசரத்தில், வள்ளியை முனியாண்டிக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகின்றான். பெட்டிக்கடை வைத்திருக்கும் தறுதலையான முனியாண்டியை, பரிசம் போடுவதற்காக வீட்டிற்கும் அழைத்து வருவான். அந்த இடத்தில் மங்கா குறுக்கே பாய்ந்து பரிசத்தட்டைத் தட்டிவிடுவாள். (இந்தக் காட்சி நாவலிலும் திரைப்படத்திலும் – காளி ஒரு கையை இழந்த பின்னர் வருகின்றது. இயக்குனர் மகேந்திரன் - காளி ஒரு கையை இழக்கும் வரைதான் தான் நாவலை வாசித்ததாகக் குறிப்பிடுகின்றார். அத்தோடு நாவலை நிறுத்துவிட்டு படமாக்கியதாகக் குறிப்பிடுவார். அப்படியாயின் திரைப்படத்தில் எப்படி அந்தக் காட்சி, நாவலில் வருவது போன்று அச்சொட்டாக வர முடியும்? மகேந்திரனின் கூற்று சற்று முரண்பாடாகத் தெரிகின்றது.)

பரிசம் போட்ட செய்தியை மங்கா குமரனுக்குச் சொல்லிவிடுவாள். குமரன் காளியண்ணனின் வீடுவரை வந்து வள்ளியைப் பார்த்துப் பேச விரும்புகின்றான். திருமணம் முற்றான விடயத்தைக் காளி சொல்லி, குமரனை வள்ளியிடமே கேட்கச் சொல்லுவான். வள்ளி மெளனமாக நின்று கண்ணீர் வடிப்பாள்.

வள்ளியைத் திருமணம் செய்ய காளியண்ணன் சம்மதிக்காததால், குமரனின் பாதை திசை மாறிப் போகின்றது. சங்கிலி ஒன்றை வாங்கி வள்ளிக்கு திருமணப்பரிசாக மங்காவிடம் குடுத்துவிட்டு, குமரன் தனது நண்பன் வீரமணியின் பாதையில் ராணுவ சேவைக்குப் புறப்படுகின்றான். ராணுவ எஞ்சினியரான குமரன், இமயமலை எல்லையில் சீனர்களுடன் நடக்கும் யுத்தகளத்தில் பணி புரிகின்றான்.

முனியாண்டிக்கும் வள்ளிக்கும் திருமணநாள் நெருங்குகின்றது. முனியாண்டிக்கும் மாயாண்டியின் மனைவி அங்காயிக்கும் கள்ளத்தொடர்ப்பு இருக்கின்றது. இது காளிக்குத் தெரியாதது. அங்காயிக்கு முனியாண்டி வள்ளியைத் திருமணம் செய்வதில் துளியும் விருப்பமில்லை. `குமரன் மூலம் வள்ளி கர்ப்பமாகிவிட்டாள்’ என்ற புரளியை அவிட்டு விடுகின்றாள். முனியாண்டி இரவோடு இரவாக அங்காயியையும் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டு ஓட்டமெடுக்கின்றான்.

காளியண்ணனை மங்கா திருமணம் செய்கின்றாள்.

குமரன் மார்பில் காயம் பட்டு இராணுவ வைத்தியசாலைக்கு வருகின்றான். அங்கே டாக்டராகப் பணிபுரியும் அகிலாவைச் சந்திக்கின்றான். அகிலா ஒருதலைப் பட்சமாக குமரனை விரும்புகின்றாள். குமரன் தன்னுடைய நிலையை அகிலாவுக்குத் தெளிவுபடுத்துகின்றான். அப்புறம் குமரனின் நண்பனான வீரமணியின் மரணம், சீன – இந்திய யுத்தம் சற்றுத் தணிந்த நிலையில் குமரன் இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெறுதல், புதிய வேலை ஒன்றில் சேருதல் எனக் கதை திசைமாறிப் பயணிக்கின்றது.

நாவலின் இறுதிப் பகுதியாக - குமரன் தன் புதிய வேலையைப் பொறுப்பெடுக்க முன்னர் மீண்டும் ஒருதடவை சுருளியாற்றுத் திட்டத்தைப் பார்க்க விரும்புகின்றான். மூன்று வருடங்களின் பின்னர் அங்கே பயணிக்கின்றான். வள்ளியின் கையில் ஒரு குழந்தையைக் கண்டதும் குமரன் அதிர்ச்சியடைகின்றான். வள்ளி ஒன்றும் சொல்லாமலே சென்றுவிடுவாள். மங்காவைச் சந்தித்தபோது, அது மங்காவின் குழந்தை என்றும், மங்கா காளியண்ணனை மணம் புரிந்துகொண்டாள் என்பதையும் அறிகின்றான் குமரன். முனியாண்டி இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிச் சென்றதால் வள்ளியின் திருமணம் தடைப்பட்டுப் போனதென்று தெரிந்து கொள்கின்றான். வள்ளி இன்னமும் திருமணம் செய்யவில்லை என்பது குமரனுக்கு அதிர்ச்சியைத் தருகின்றது.

காளியண்ணன் அப்போதும்கூட குமரன் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்தான். ஆனால் வள்ளி இப்போது எதற்கும் துணிந்தவளாகிவிட்டாள். குமரனைத் திருமணம் செய்யும் நோக்கில் மங்காவையும் கூட்டிக்கொண்டு கெளரிஅம்மன் கோவிலுக்குப் புறப்படுகின்றாள். கெளரிஅம்மன் கோவில் பிரசாதத்தட்டில், முன்பு மங்காவிடம் வள்ளிக்குக் குடுத்திருந்த சங்கிலி இருந்ததைக் கண்டு அதிசயிக்கின்றான் குமரன். அதை எடுத்து வள்ளியின் மாங்கல்யம் இதுதான் எனச் சொல்லிக்கொண்டு அவளின் கழுத்தில் கட்டிவிடுகின்றான் குமரன். பூசாரி அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும்போது கோவில் மணி அடிக்கின்றது. எல்லோரும் திரும்பிப் பார்க்கின்றார்கள். அங்கே காளியண்ணன் மணி அடித்தபடி நிற்கின்றான்.

திரைப்படம் நாவலின் அசல் வடிவம் அல்ல. பல மாறுதல்களைக் கொண்டது. குறிப்பாக குமரனின் பூர்வீகம் பற்றி நாவலில் வரும் விலாவாரியான தகவல்கள் திரைப்படத்தில் இல்லை. அதே போல காளி / வள்ளியின் ஆரம்பக் காட்சிகள் நாவலில் இல்லை. கூடுதலாக - நாவல் காளியண்ணன், மங்காவின் அகால மரணங்களுடன் முடிவடைகிறது. இவற்றையெல்லாம் மகேந்திரன் தனது திரைக்கதையில் சேர்க்கவில்லை. நாவலுக்கும் திரைப்படத்துக்கும் பெருத்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் - இரண்டுமே சுவை நிறைந்தவையாகவே உள்ளன.

திரைப்படத்தைப் பார்த்து காளி (ரஜனிகாந்) மீது ரசனை வைத்திருந்தவர்கள், நாவலை வாசிக்காமல் இருப்பதே நல்லது என்று ஆரம்பத்தில் கூறியிருந்தேனல்லவா! அதற்குக் காரணம் - நாவலில் காளியண்ணன் ஒருபோதும் தனது இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. முள்ளாகவே இருந்துவிடுகின்றான். அதுவே அவனுக்கு வினையாகவும் முடிகின்றது.



No comments:

Post a Comment