Thursday, 15 September 2022

பால்வண்ணம் - புதிய சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் குறித்து

 

பால்வண்ணம்

காதல் பிரச்சினைகள் தொடர்பான தற்கொலைகள் எமது பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகரித்துள்ளன. எனது சீர்மிய வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் இதுபற்றி என்னிடம் நிறையவே கேட்பார்கள்.எப்படி பிள்ளைகளோடு கதைப்பது? காதல் சரி என்று சொல்வதா?---இப்படி பல கேள்விகள். இன்றைய வகுப்பில் உங்களுடைய `'பால்வண்ணம்கதையை வாசித்துக்காட்டினேன். காதல் உயரமானது - உன்னதமானது என்ற கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதையின் பல சிறப்பம்சங்களை விவாதித்தோம். ''காதல் உணர்வு ஆரோக்கியமானது. சிலரின் நடத்தைகள், எடுக்கும் அவசர முடிவுகள் பற்றித்தான் நீங்கள் பிள்ளைகளோடு பேசவேண்டும். காதலிப்பது தவறென்று சொல்லக்கூடாது'' என்ற உளவியல் உண்மைக்கு உங்கள் கதையைச் சாட்சியாக்கிக் கொண்டேன். உண்மையில் என்னை மிகக் கவர்ந்த கதை. எழுத்தாளர் ஆணாக இருந்தும் ஒரு பெண்பாத்திரத்தை உயர்த்திவைத்துள்ள நேர்த்தி அற்புதம். மனம் நிறைந்த பாராட்டுக்கள் .

-    கோகிலா மகேந்திரன்

 

வெந்து தணிந்தது காடு

பிப்ரவரி கணையாழி இதழில் 'கோரானா 'பற்றிய அற்புதமான கதை வாசித்தேன். தன்னனுபவம் இல்லாமல் இவ்வாறு நேர்த்தியான சிறப்பான ஒரு படைப்பை தர இயலாது. தாங்கள் ஒரு மருத்துவராஇல்லை எனினும் நோயாளியாக இருந்த அனுபவம் அவ்வாறு தீட்டுவதற்கான திரைச்சீலையை விரித்திருக்கக்கூடும். அல்லது திறன்மிகு ஒரு கலைஞன் புறஅனுபவங்களை தொகுத்து எழுதவும் சாத்தியப்படும். குடும்பம் மருத்துவமனை ஒலிவர் வார்டு எலிசபெத் தாங்கள் என ஒரு நேர்த்தியான சித்திரங்களை வரைந்திருக்கிறீர்கள். படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள்!

-    பா. செயப்பிரகாசம், எழுத்தாளர்

 

கலைந்தது கனவு

ஆரம்பத்தில் சாதாரண கதை போலத் தோன்றினாலும் படிப்படியாக உங்களுக்கே உரித்தான முத்திரை பதிந்தது. கால மாற்றம் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. அத்துடன் மனித உணர்ச்சிகள் நேரம் போகப்போக வடிந்து குன்றிப் போவதும் அழகுற கதையோட்டத்தினாலேயே சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. சிறந்த கதை. பாராட்டுகள்.

-    யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

 

ஏன்?

நீங்கள் எழுதிய சிறுகதையை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. நானும், எனது மனைவியும் இந்தச் சிறுகதையை வாசித்து, உட்கருவினை நன்றாக அனுபவித்தோம். கதையின் கரு, எழுதிய பாணி, சொற்பிரயோகம் என்பன வாசித்த எங்களின் ஆர்வத்தை கடைசி வரை கவர்ந்திருந்தது. மருத்துவரான என் மனைவி முரளியின்வளர்ப்புமகளை முரளியின் மகள் என்று உங்கள் வசனங்களை வாசிக்க முன்னரே கூறிவிட்டார். இப்படியான பரங்கித் தோற்றமுள்ள சிலர் எங்கள் உறவினரிலும் உள்ளனர். உங்கள் முடிவுரையான வசனங்கள் மிகவும் உண்மையான கருத்தாகும். உங்கள் மற்றைய கதைகளையும் வாசிக்க ஆர்வம் உடையேன்.
- Dr R Sri Ravindrarajah

 

பாம்பும் ஏணியும்

மிகவும் இலகுவான நடையில், ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் புகலிடத்தில் அடையும் சவால்களை, துயரங்களை வெளிப்படுத்தும் கதை இது. இவற்றையெல்லாம் மீறி எவ்விதம் உயரப் பறக்கின்றாள் என்பதை வெளிப்படுத்தும் கதை. நடையும், கருத்தும் இக்கதையின் சிறப்பான அம்சங்கள்.

-    ..கிரிதரன்

 

யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

புலம்பெயர் வாழ்வை சொல்கிறது. ஆஸ்த்ரேலியாவை களமாக கொண்டது. ஸ்மார்ட் போனின் வருகை, உளவு பார்க்கப்படும் உணர்வை ஏற்படுத்துகிறது. கதைசொல்லி கணவன், பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் உள்ள மனைவியைப் பற்றி கதை சொல்கிறான். நினைவுகளும் நிகழ்வுகளும் பின்னிச் செல்கிறது. சுதாகருக்கு பிசிறற்ற நிதானமான மொழி வாய்த்திருக்கிறது. கதை இறுதி ஒருவகையில் நம் அனைவரின் இரட்டை நிலையின் மீதான விமர்சனமாக முடிகிறது

-    சுனில் கிருஷ்ணன்

 

No comments:

Post a Comment