கிறிஸ்டி நல்லரெத்தினம்
இத்தொகுப்பின் முத்திரைக்கதையான பால்வண்ணத்திலும் இச் சீண்டலை காணலாம். முப்பது வருடங்களின் பின் சந்திக்கும் காதலர்களின் சுயதரிசனம், மூடிக்கொண்ட மனக்கதவுகளின் திறப்பு விழா, திறந்து கொண்ட படுக்கையறை கதவுகள், பற்றிக்கொள்ளாத தீயும் பஞ்சும், தகர்க்கப்படாத நூல்வேலி என கதை விரிகிறது. அன்பின் அடர்த்தியை தராசிலேற்றி பார்க்கும் கதைக்கரு. சமுதாயம் சமைத்து வைத்த எல்லைகளை கதைநாயகர்கள் தாண்டிவிடுவார்களோ என்ற ஒரு பரிதவிப்பு வாசகன் மனதில் துளிர்விடாமல் இல்லை - அதுவே இக்கதையின் வெற்றி.
இதே சீண்டல் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' 'நாமே நமக்கு' 'அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை' கதைகளிலும் ஒரு சமுதாயச் சீண்டலாய் விரிகிறது.
ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமகனான மண்ணின் மைந்தன் அடோனிக்கும் வெள்ளை இனப்பெண்னை கரோலினுக்கும் உள்ள பிணைப்பு நிற வெறியை சுரண்டிப்பார்க்கிறது. 'நாமே நமக்கு' ஈழப்போரின் வேட்கையில் வெந்த கிருஷ்ணவேணியின் துயர வாழ்வை படம் போட்டு கட்டுவது மட்டுமல்லாமல் 'கறை இங்கும் உண்டு' எனும் காட்சியாய் விரிகிறது.
இன்னொரு கிருஷ்ணவேணியை 'கலைந்தது கனவு' கதையின் நாயகியாய் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இவள் அவள் அல்ல! வாழ்வின் வலியை அனுபவித்தவள் இவள். தன் கணவன் அகிலனில் இருப்பிடத்தை உரிமையுடன் ஆக்கிரமித்து "இஞ்சையே இருக்கப்போறேன்" என ஒரு குடும்பக்கட்டமைப்பில் மனைவியின் இடத்தை மீட்டெடுக்கும் நாயகியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
'வெந்து தணிந்தது காடு' கொரோனா காலத்தில் வைத்தியசாலையில் பணிபுரியும் அகிலனின் தொழில்-குடும்பம் எனும் இரு மையங்களை இணைக்கும் நிகழ்வின் சாரம் மட்டுமே. 'அனுபவம் புதுமை' பலகலைக்கழக பேராசிரியர் நெயில் றொபின்ஷன் தன் மகளும் கல்விப் பயணத்தில் தன்னை ஏமாற்றியதை அறிந்து வெதும்பும் ஒரு தந்தையின் காட்சித் திரட்டு. ஒரு சிறுகதையின் சிறப்பம்சமாக கருதப்படும் 'முரண்பாட்டுடனான முடிவு' இங்கு சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது. தொகுப்பில் உள்ள பல கதைகள் உளவியல் நோக்குடன் எழுதப்பட்டவை. இது ஒரு புதிய பரிமாணமாய் கருவிற்கு வலுச்சேர்க்கின்றது.
பால் வண்ணம் தொகுதியில் உள்ள பல கதைகள் நெஞ்சை வருடிச்செல்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில 'சலித்தெடுத்து ரசித்துக்கொள்' என கூறி விலகிச்செல்கின்றன.
கதைக்களங்களின் தெரிவு கருவிற்கு வலுச்சேர்க்கின்றன.
ஆபீஸ், பல்கலைக்கழகம், வைத்தியசாலை, கல்லூரி என வேறுபட்ட களங்கள் நிச்சயம் கதை நகர்த்த உதவுவது மட்டுமல்லாமல் ஆசிரியருக்கு இக்களங்களின் செயல்பாடுகள் பற்றிய நுணுக்கமான அறிவுத்தேடலை வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன.
ஒரு கதைக்களத்தை உருவாக்கி அங்கு பேனாவும் கையுமாய் மறைந்திருந்து கதாபாத்திரங்கள் பேசுவதையும் அங்கு நிகழ்வதையும் கதாசிரியர் குறிப்பெடுத்து எழுதுவது போன்ற நடையிலேயே இத்தொகுதியில் உள்ள அனேகமான கதைகள் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இந்த 'காட்சி வர்ணனைப் பார்வையே' கதாசிரியர் சுதாகரின் எழுத்து நடையின் முத்திரையாகவும் அமைந்துவிடுகிறது. இது குறையல்ல. ஒரு தனித்துவ முத்திரையே.
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஞானம், பதிவுகள், கணையாழி, இலக்கியவெளி, செம்மலர் போன்ற இலக்கியத்திறனுள்ள
வெளியீடுகளில் வெளிவந்தவை. தேர்ந்த வாசகர்களை வசீகரித்து இக்கதைகள் ஒரு கோர்வையாக நூல் உருவில் வெளிவந்துள்ளது வரவேற்கத்தக்கதே!
No comments:
Post a Comment