கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் நுழைந்தாள் லாவண்யா.
மெல்லியதாகப் படபடக்கும் விரல்களினால் பாத் ரூம் கதவைச் சாத்தியவள், “சொறி லேட்டாயிட்டா? ” என்றாள்.
லாப் டொப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தன் “பரவாயில்லை வாங்க, வணக்கம்” என்றான் பதிலுக்கு. குரலில் பதட்டமா பரவசமா கண்டுகொள்ள முடியவில்லை அவளுக்கு.
சில நொடி மௌனம். யாராவது கலைக்க வேண்டுமே…
“என்ன கமல்ஜீயோட படமா பாக்கிறீங்க? ” என்ற லாவண்யாவின் கேள்விக்கு “ ஐயோ அம்மா இந்தா இப்பவே மூடி வைக்கிறன். சும்மா நீர் வரும் வரையும் பொழுது போக வேணும் எண்டு தான் பாட்டுக்களை மட்டும் தட்டிப் பாத்துக் கொண்டிருந்தனான். எனக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணேலாது” என்று சொல்லியபடியே லாப் டொப்பை மூடி பண்ணி மேசையில் வைத்தான். விட்டால் அவளும் சேர்ந்து பார்க்கத் தொடங்கி விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும்.
இன்னும் அந்த குறும்புச் சிரிப்பு அப்படியே அவளிடம் ஒட்டியிருந்தது. “ சரி பெண்டாட்டி இப்ப சொல்லுங்க” அருகில் வந்தமர்ந்து அவளது விரல்களைப் பிடித்தவனிடம் பிடுங்கித் தின்ற வெட்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் “ வைகுந்தன் சூடா ஒரு ப்ளாக் கோப்பி குடிக்கலாமா? ” என்றாள்.“என்னப்பா நீர், இரவு ஏழு மணிக்கு கல்யாண பங்ஷன் முடிஞ்சு டினர் சாப்பிட்டு எல்லாரோடையும் படம் எடுத்து சாத்திர சம்பிரதாயம் முடிச்சு ஹோட்டலுக்கு வர 11 மணி. பிறகு குளிச்சுத்தான் வருவன் எண்டு அடம் பிடிச்சு இப்ப 11.45க்கு இவ்வளவு லேட்டா பெஸ்ட் நைட்டுக்கு வந்து பக்கத்தில இருந்திட்டு இப்ப என்ன கோப்பியா வேணும்? ” என்றான் டென்ஷனுடன் கோபம் காட்டி.
“இல்ல கோவமா இருக்கிறீங்க போல இருக்கு. எனக்கு கோப்பி வேண்டாம். லேசா தலையிடிக்குது. அது தான் கேட்டனான் பரவாயில்ல” என்றாள் சமாளித்தபடியே.
“என்ன தலையிடிக்குதா மருந்து கொண்டந்தனீரா?” என்று பதறிய படியே ரூம் சேர்விஸிடம் கோப்பிக்கு டெலிபோனிலேயே ஓடர் பண்ணிவிட்டு மீண்டும் பக்கத்தில் வந்தமர்ந்தான்.
“முதல் நாளே இந்தப் பாடு படுத்துறீர்” என்றபடி ரூம் போ(B)ய் கொண்டு வந்த கோப்பித் தட்டை வேண்டி மேசையில் வைத்துவிட்டு கதவைச் சாத்தினான்.
கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தவளின் இடுப்பை முழங்காலில் நின்று அணைத்தபடி “ ப்ளீஸ் கோப்பி குடிக்க முதல் ஒரு முத்தம்” என்றான்.அவ்வளவு அருகில் அவ்வளவு காதலுடன் வைகுந்தனின் கண்களை அவளால் சந்திக்க முடியவில்லை.
சிறிது திமிறி “ஐயோ வெக்கமா இருக்கு விடுங்களேன் ப்ளீஸ்” என்றாள். ஆனால் கைப்பிடி இறுகியதே ஒழிய தளரவில்லை.
தன் மெல்லிய உதடுகளை அவன் உள்வாங்கிக் கொள்ள சில நொடிகள் தன் கண்களை மூடித்திறந்தாள்.
மெல்ல அவளை விடுவித்தவன் “ ஸொறி லாவண்யா உம்மட கோப்பி ஆறுது, எத்தனை ஸ்பூன் சீனி? ” என்றான்.
“இரண்டு” என்ற பதிலைத் தொடர்ந்து “ பல்கனியில் இருந்து குடிப்பமா? ” என்றவளுக்கு
மறுபேச்சில்லாமல் அவர்களது அறைக்கென்றே பிரத்தியேகமாக இருந்த பல்கனியைத் திறந்த வண்ணம் வெளியே வந்தவன் “ வா லாவண்யா” என கைகளை நீட்டினான்.
அவனுடைய விரல்களைப் பினைந்தபடியே கோப்பி குடித்து முடித்து எழுந்தவளை பின்பக்கமாய் அணைத்து நெஞ்சில் சாய்த்த படியே காதோரம் “ ஜ லவ் யூ” சொன்னவனுக்கு
“நானும்” என்று பதிலுக்குச் சொன்னவளை “ அப்ப ரூமுக்கு போவமா? ” என்றான் கெஞ்சலாக.
“கோவிக்காட்டி ஒண்டு கேக்கவா? ” என்று கேட்ட லாவண்யாவிடம் “ கேளுங்க தாயே இண்டைக்கு கோவமே வராது கேளுங்க” என்றான் கண்களால் சிரித்தபடியே.
“இல்ல தூரத்தில தெரியிறது தானே மரினா பே (MARINA BAY) ? அங்க வரைக்கும் நடந்து போயிட்டு வருவமா? ”
“ஏய் என்ன விளையாடுறியா? இண்டைக்கு பெஸ்ட் நைட். அதத்தான் விடு. தல இடிக்குது எண்டு கோப்பி எடுத்துத் தந்தன். இல்ல படுக்கப் போறன் எண்டு கேட்டாக் கூட சரி தாயே படும்மா எண்டு சொல்லியிருப்பன். இப்ப எத்தின மணி தெரியுமா? சாமம் 1.15. இப்ப போய் வோக் கேக்குது”
“இல்ல ப்ளீஸ் வைகுந்தன் ப்ளீஸ்” என்றாள்.
“ சரி நீர் தான் இண்டைக்குப் புரிஞ்சு நடக்கேல்ல அட்லீஸ்ட் நானாவது நடப்பமே வெளிக்கிடுங்க தாயே” என்றான்.
அவசர அவசரமாய் ஜீன்ஸ் ரீசேட்டுக்கு மாறி வந்தவளை பார்த்தபடி “ நாளேல இருந்து ஒழுங்கா புடவை கட்டி பூ வச்சு இருக்கோணும். மாமியார் பாத்தா ஏதாவது சொல்லப்போறா”
“சரி இண்டைக்கு மட்டும் ப்ளீஸ்” என்றவளை அணைத்த படியே ஹோட்டலை விட்டு இறங்கினான்.
அவளது விரல்களைப் பிடித்த வண்ணம் நடப்பது சந்தோஷமாக இருந்தது. புதிதாக இருந்தது. இவள் தானா எனது வருங்காலம் என்று நினைக்க வியப்பாக இருந்தது அவனுக்கு.
“இந்த ரவெல்ஸ் அவனியூ மரினா ஸ்க்யார் (RAFFLES AVENUE MARINA SQUARE) ரோட்டைத் தாண்டினா மரினா பே ( MARINA BAY) தானே? என்று கேட்டவளிடம்,
“ஏய் உனக்கு எப்பிடி ரோட்டுப் பெயரெல்லாம் தெரியும்? இது தானே உனக்கு பெஸ்ட் ரிப் சிங்கபூருக்கு? ” என்றான் வியப்பாக.
“இல்ல ஓரியன்டல் சிங்கப்பூரில (ORIENTAL SINGAPORE) தான் பெஸ்ட் நைட்டுக்கு ரூம் புக் பண்ணியிருக்கிறீங்க எண்டு சொன்னீங்க. அப்ப வெப்ல போய் பாத்தனான்” என்றாள் அமைதியாக.
வைகுந்தன் லாவண்யாவை மரினா பே ரெஸ்டோரன்ட் வரை நடக்க விட்டு விட்டு….
அவர்களைப் பற்றி :
வைகுந்தன் தொழில் நிமித்தம் சிங்கைக்கும், லாவண்யா மேற்படிப்பிற்காக ஜேர்மனிக்கும் வந்த பின்னர் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டார்கள். அதுவும் வைகுந்தன் எடுத்த முயற்சியால் தான்! லாவண்யா வெளியிட்ட சிறுகதைத் தொகுதியை மிகச் சிரமப்பட்டு பெற்று அதற்கு விமர்சனம் எழுத அதுவே எழுத்து- விமர்சன உறவுக்கு வித்திட்டது. பின்னர் தான் இலங்கையில் ஒரே ஊரில் ஒரே காலத்தில் படித்தவர்கள் என்பது வைகுந்தன் சொல்லி லாவண்யாவுக்குத் தெரிந்தது. இப்போது 2 வருடங்களாக அவளின் அனைத்து எழுத்துக்களுக்கும் முதல் வாசகன் முதல் ரசிகன் அவன் தான். அவளின் எழுத்துக்களுக்கு விரிந்த பார்வை ஒன்றை பெற்றுக் கொடுத்திருந்தான் அவனைப் போலவே. ஒரு அவசர நாளின் மதிய இடைவேளையில் அவள் “ I THINK I LOVE U” என்று எஸ்.எம்.எஸ் அனுப்ப அவன் “நானும்” என்று பதிலுக்கு அனுப்ப அதுவே காதலாகி கல்யாணம் முதலிரவு வரை கொண்டு வந்து விட்டிருந்தது…
சரி வைகுந்தனும் லாவண்யாவும் மரினா பே இரவு ரெஸ்டோரன்ட் ஒன்றின் வெளி முற்ற இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள். சந்திப்போம்.
“ஏய் லாவண்யா நீர் சரியான வித்தியாசமா இருக்கிறீர். பெஸ்ட் நைட்ல புருஷனைக் கொண்டு வந்து காத்து வாங்க விட்டிருக்கும் முதல் பெண்டாட்டி நீர் தான் ” என்றவனிடம் நெருங்கி அமர்ந்து அவனது தோளில் தலையைச் சாய்த்து அவனது வலக்கையை தனது இரு கைகளாலும் கட்டிப் பிடித்தபடி “ வைகுந்தன் இப்ப சொல்லுங்க ” என்றாள்.
கையில் கட்டியிருந்த கடிகாரம் 2.10ஐ காட்டியது.
“என்ன சொல்ல லாவண்யா அது தான் 2 வருஷம் உழச்ச காசெல்லாம் உமக்கு ஜேர்மனிக்கு கோல் பண்ணியே கரைச்சு முடிச்சிட்டன். இப்ப காசுமில்ல கதையுமில்ல. நீர் தான் இனி உழச்சு எனக்கு கஞ்சி ஊத்தோணும்”
“அதுக்கென்ன கஞ்சி தானே ஊத்திட்டா போச்சு” என்றவள் “எனக்கு முதல் யாரையும் லவ் பண்ணியிருக்கிறீங்களா? ” அதே இறுக்கிய அணைப்புடன் புன்னகைத்தபடி கேட்டாள்.
“என்ன திடீர் எண்டு”
“இல்ல சும்மா கேக்கிறன்”
“முதலே சொன்னான் தானே. ஊரில ஒண்டு ரெண்டு பேர். நெருக்கம் தான். காதல் எல்லாம் இல்ல. கல்யாணம் கட்டேணும் எண்டெல்லாம் யோசிக்கேல்ல. உம்ம சந்திச்சா பிறகு தான் எல்லா ஆசையும் வந்தது”
“நெருக்கம் எண்டா”
“அந்த இரண்டு பேரோடையும் ஒண்டா இருந்தனான்”
“ஒண்டா எண்டா? ”
“ஒண்டா எண்டா ஒண்டா”
“என்ன செக்ஸ் வச்சிருந்தீங்களா? ”
“ம்”
“எப்பிடி? ”
“ரூமுக்கு வந்தீரெண்டா எப்பிடி எண்டு காட்டுவன்”
கண்களால் சிரித்தபடியே “ அது எப்பிடி எண்டு எனக்குத் தெரியும். இல்ல பிறகேன் அவங்கள கைவிட்டனீங்க? பாவம் இல்லயா? ”
“பாவமா? ஒரு பொம்பிளய காதலிக்கிறன் கல்யாணம் முடிக்கிறன் எண்டு சொல்லி போட்டு யூஸ் பண்ணினாத் தான் தப்பு. ஆனா நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்லயே. அந்த வயசில தேவை, தாகம் இருந்துது. அது தான். ஒராளுக்கு என்ன விட வயது வேற கூட. மற்றது சின்னப்பிள்ள”
“ஜயோ கொண்டம்ஸ் பாவிச்சீங்களா அந்தப் பிள்ளக்கு பிரச்சனை ஒண்டும் வரேல்லயே” என்றாள் பதட்டத்துடன். “ம்” என்றான் தர்ம சங்கடத்துடன்.
“அவ்வளவும் தானா? இங்க சிங்கபூரில ஒண்டும் இருக்கேல்லயா? ”
“இருந்தது. உம்மோட நல்லா பழகின இந்த ஒண்டரை வருசத்துக்கு முதல்”
“யாரோட? ”
“ இங்க காசுக்குத்தானே போனது. பெரிசா கோப்பரேட் பண்ணமாட்டாளுகள். விசர் தான் வரும.; ஒரு 10- 15 தரம் இருக்கும். ஆனா ஊரில இருந்த மாதிரி இல்ல.”
சிரித்தபடியே “காசுக்குப் போன அப்பிடித்தானே இருக்கும். அவங்க எப்பிடி காதலோட கனியோனும் எண்டு எதிர்பாப்பீங்க? ”
“அது தான் எல்லாத்துக்குமாக நீர் வந்திட்டீர் தானே. இனி எல்லாம் நீ தான் லாவண்யா” இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“கதை எழுதுற பெண்டாட்டி இருக்கிறது ஒரு விதத்துக்கு நல்லம். இப்ப பாரும் எல்லாத்தையும் ஓபனா கதைக்க முடியுது. ஆனா பெஸ்ட் நைட் அண்டைக்கு கிறுக்குத் தனமா ராத்திரியெல்லாம் அவளோட ரோட்டில திரிய வேண்டிக் கிடக்கு” என்றான் தொடர்ந்து.
“எனக்கு ஒரு டவுட்”
“என்ன திரும்பவுமா? மணி இப்ப 3.20”
“இல்ல இப்பிடி போறது சரியா தப்பா? ”
“குஷ்பூட்ட தான் கேக்கோணும். அதுக்கெண்டு இருக்கிற ஆக்களிட்ட போறது தப்பில்ல எண்டு நினைக்கிறன். அதுவும் உன்னப் போல ஒரு பெண்டாட்டி வந்து அமையுறதா இருந்தா தப்பேயில்ல” சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தான்.
“அப்ப ஊரில போன இரண்டு பேர்? ”
“அது அவையளும் சேந்து தான் போர்ஸ் பண்ணினவங்க”
“ஓ! இல்லாட்டி நீங்க சின்ன பிள்ள. போயிருக்க மாட்டீங்க”
“என்ன லாவண்யா செல்லம் கோவிகிறீரா? இந்த ஒண்டரை வருசமா நல்ல பிள்ளயா தானே இருந்தனான்”
“சீ! கோவம் இல்ல. சும்மா கேட்டனான்” என்று அவனது வலது கையில் மிருதுவாக முத்தமிட்டவள் “ இன்னொரு டவுட்” என்றாள்.
“என்ன? ”
“ நீங்க இங்க சண்டே ஸ்கூல ரிலிஜன் படிப்பிக்கிறீங்க தானே? ”
“ம்”
“எப்பிடி பிள்ளையளுக்கு மோரல்ஸ் சொல்லிக் குடுப்பீங்க? ”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? ”
“ இல்ல நாம பொய் சொல்லாம இருந்து பிள்ளையளுக்கு பொய் சொல்லக் கூடாது எண்டு சொல்லிக் குடுப்பம். நாம பெரியவங்கள மரியாத செய்து பெரியவர்களை கனம் பண்ணு எண்டு சொல்லிக் குடுப்பம். சைவ சமயத்தில பஞ்சமா பாதகங்கள் இருக்கே! அத செய்யக் கூடாது எண்டு சொல்லிக் குடுக்கேக்க நாம தப்பு செய்யாம இருந்தா தானே ஏலும். நம்மளால செய்ய முடியாதத எப்பிடி பிள்ளையளுக்கு சொல்லிக் கொடுக்கிறது? இல்ல இதெல்லாம் தப்பு எண்டு சமயத்தில சொல்லியிருக்கு ஆனா உங்களால முடியாட்டி நீங்க தப்பு செய்யலாம் என்னப் போல எண்டு சொல்லிக் குடுப்பீங்களா? ”
திரும்பி அவளை ஆழமாகப் பார்த்தவன் அவளது கைகளை எடுத்து தனது கைக்குள் வைத்தபடி சில விநாடிகள் அமைதியாக இருந்தான்.
“லாவண்யா” என்றான் மெதுவாக.
“என்ன? ”
“தாங்கியூ. நீ என் பெண்டாட்டியா வந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு. நீ என் பக்கத்திலேயே இரு போதும். அடுத்த சண்டே ஸ்கூல் கிளாசில சுத்தமான மனசோட படிப்பிக்கிறன்”
“தாங்கியூ” என்றவள்” “என்னப் பற்றி ஒண்டும் கேக்க மாட்டீங்களா? ”
“ஊரில உமக்குப் பின்னால சுத்தின ஆக்கள தெரியும். பிறகு நீரா சொன்ன ஒண்டு இரண்டு காதல் கத தெரியும்”
“அது இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் இருந்ததா எண்டு கேக்க மாட்டீங்களா? ”
“ஏய் என்னட்ட அடி வாங்கப் போறீர். கல்யாணத்துக்கு உடுத்திக் கொண்டு நாள் பூரா போஸ் குடுத்த களைப்பு. இப்ப இரவிரவா வேற நித்திர கொள்ளேல்ல. எழும்பு லவண்யா ப்ளீஸ்”
“என்னட்ட கேளுங்களன். ப்ளீஸ். நீ யாரோடையும் இருந்தனியா எண்டு கேளுங்களன்”
“ஏய் விளயாடாத லாவண்யா. எழும்பு” என்று அவளை பலவந்தமாக அணைத்துத் தூக்கியபடி ஓரியன்டல் சிங்கப்பூரை நோக்கி நடந்தான்.
விடியலின் சாயல் ஆங்காங்கே தெரிந்தது.
“என்ன லாவண்யா சைலன்ஸ்? வரேக்க வந்த மாதிரி இல்ல ”
“ இல்ல அப்பிடித்தான் வாரன்” என்றாள் வலுக்கட்டாயமாக்கிய சிரிப்புடன்.
தோளை மெதுவாக அணைத்தவன் “ நீ என் வாழ்கைடா செல்லம். நீ நிறைய எழுதோணும். நான் உன் பக்கத்திலேயே இருக்கோணும். உன்னப் பற்றி அப்பிடி யோசிக்கக் கூட என்னால ஏலாது.
பெஸ்ட் நைட் தான் இல்லாமப் போச்சு பெஸ்ட் டோனாவது (DAWN) இருக்கா? ” என்றவனை மீண்டும் காதலுடனும் டென்ஷனுடனும் பார்த்தாள்.
22 வயதில் வயிற்றில் வந்த கருவை தனியே சென்று வலிக்க வலிக்க கலைத்த உண்மையைச் சொல்லாமல் பெஸ்ட் டோனுமில்லை பெஸ்ட் டஸ்க்கும் ( DUSK) இல்லை என்று தீர்மானித்தவளாக!!!
மணி இப்போது 5.25.
•
யுகமாயினி (ஏப்ரல், 2008)
No comments:
Post a Comment