சித்தர்கள், சாமிமார்கள், துறவிகள் காடு மலை குகைகளில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். தற்போதும் சிலர் அப்படி வாழ்ந்து வருகின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் க்ரிபித் (Griffith) என்ற நகரில் அப்படியொரு இத்தாலியத் துறவி வாழ்ந்திருக்கின்றார். ஆசாபாசங்களைத் துறந்த அவர் வாழ்ந்த குகையை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்.
க்ரிபித், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு பிராந்திய நகரம். அவுஸ்திரேலியாவின் உணவுக்கிண்ணம் என அழைக்கப்படும் இந்த இடம் மெல்பேர்ணிலிருந்து ஐந்தரை மணித்தியாலங்கள் கார் ஓடும் தூரத்தில் இருக்கின்றது. மெல்பேர்ணிலிருந்து க்ரிபித் நோக்கிப் போகும் பாதைகளில் கடுகு வயல்கள், `சண்றைஸ்’ எனப்படும் நெல் வயல்கள், `வைன்’ தயாரிக்கப் பயன்படும் திராட்சைத்தோட்டங்கள், தோடம்பழத் தோட்டங்கள் என்பவற்றைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. கூடவே பாதையின் இருமருங்குகளிலும் இறந்திருக்கும் எண்ணற்ற கங்காருக்களையும் காணக்கூடியதாக இருந்தது. இந்தக் கங்காருக்கள் பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலும் மாலை நேரங்களிலும், அதி வேகமாகச் செல்லும் வாகனங்கள் மீது – வீதிக்குக் குறுக்காகப் பாய்வதால் விபத்துக்குள்ளாகின்றன.
இந்த ஹெர்மிட்ஸ் குகையானது க்ரிபித் நகரில் மெக்பெர்சன் மலைத்தொடரில் (Mcpherson Ranges) உள்ளது.
இந்தக் குகையை, சுரங்கத் தொழிலாளியான வலேரியோ ரிசெட்டி (Valerio Ricetti) என்பவர் 1929 முதல் 1952 வரையிலான காலப்பகுதியில் தனது குடியிருப்புக்காக வடிவமைத்தார். இவர் பாறைகள் நிறைந்த அந்த மலைப்பகுதியை பாதைகள், கல் படிகள், சுவர்கள் கொண்ட அழகிய பகுதியாக மாற்றினார். அங்கே இருந்த பிரதான குகை அவரின் வசிப்பிடமாயிற்று. கூடவே தோட்டம், நீர்த்தொட்டிகள், பாறை சுவரோவியங்கள், தேவாலயம் என்பவற்றையும் அவர் உருவாக்கினார்.
வலேரியோ ரிசெட்டி இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தது ஒரு வரலாறாகும். 1897 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த ரிசெட்டி, சீமெந்து மேசன் தொழிலாளியாக அங்கே பயிற்சி பெற்று பின்னர் வீதி, ரயில் சுரங்கப்பாதை கட்டுமானங்களில் பணி புரிந்தார். அங்கு நிலவிய பொருளாதார வீழ்ச்சி, மற்றும் வரவிருந்த போர் காரணமாக – 1914 ஆம் ஆண்டு அங்கிருந்து தனது 16வது வயதில் தெற்கு அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தார். அங்கு சில மாதங்கள் வேலை செய்துவிட்டு, அங்கிருந்து ப்ரோக்கின் ஹில்லிற்கு சென்ற அவர் சுரங்கங்களில் வேலை செய்தார். அங்கிருக்கும் காலங்களில் ஆங்கிலத்தை பேசுவதற்கு கற்றுக் கொண்டார். தான் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருந்த பெண்ணினால், அவர் காதல் நிராகரிக்கப்படவே மனம் உடைந்தார்.
அங்கிருந்து மீண்டும் தெற்கு அவுஸ்திரேலியா சென்ற ரிசெட்டி, அங்கிருக்கும் காலங்களில் பல வேலைகளைச் செய்தார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் அவருக்கு மனிதநேயத்தின் மீது ஏமாற்றத்தைத் தரவே அவர் அங்கிருந்து அடிலெயிட், மெல்பேர்ண் என்ற இடங்களுக்குச் சென்று, 1928 ஆம் ஆண்டளவில் நியூ சவுத் வேல்ஸிற்கு வந்தார்.
நியூசவுத் வேல்சில் இருக்கும் பொழுது ஒருநாள் க்ரிபித் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள சினிக் ஹில்லிற்கு வந்தார். அன்று பெய்த திடீர் மழையினால், இரவு அங்கு தங்கிய அவர் மறுநாள் காலையில் பெரியதொரு பாறையையும் இரண்டு நீர்த்தேக்கங்களையும் மலையடிவாரத்தில் பழங்கள் மற்றும் காய்கறிப்பண்ணையையும் கண்டார். அந்தக் குகையை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார்.
அங்கிருக்கும் காலங்களில் ஒருதடவை பாறைகளிலிருந்து விழுந்தகாயங்களுக்குள்ளானார். அவ்வழியே சென்ற ஒருவர் மூலம் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார். மருத்துவ நிலையத்தை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் தனிமையை விரும்பி குகைக்குத் திரும்பினார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில், ரிசெட்டி குகைகளில் இருப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை. சில அரசியல் காரணங்களினால் சிறையில் அடைக்கப்பட்டு, மனச்சோர்வு காரணமாக பின்னர் மனநல காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். எட்டு மாதங்களில் விடுவிக்கப்பட்ட அவர், 1942 முதல் 1952 வரை சில பண்ணைகளில் வேலை செய்தார்.
பண்ணைகளில் இருக்கும் காலங்களிலும் அவர் தனிமையையே விரும்பினார். காதல் தோல்வி அவருக்கொரு வடுவை நிரந்தரமாகவே ஏற்படுத்திவிட்டது. மாறாத் துயரத்துடன் ஒரு துறவி போல தன் வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ்ந்தார். 1952 இல் இத்தாலிக்குச் சென்று மீண்டும் அவுஸ்திரேலியா வரத் திட்டமிட்டிருந்த அவர், இத்தாலிக்குப் போனவிடத்தில் அங்கேயே காலமானார்.
No comments:
Post a Comment