Tuesday, 21 October 2025

தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - விமர்சனம்



பயணங்கள் போவது பலருக்கும் பிடித்தமானது. புதிய இடங்களைத் தரிசிப்பதிலும், அங்கு வாழும் மனிதர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதிலும், அவற்றிற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும் பலருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், மிகவும் சுவையாகப் பதிவு செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தி.ஞானசேகரன் அவர்கள் - இலண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண அனுபவங்கள், கனடா பயண அனுபவங்கள், வட இந்திய பயண அனுபவங்கள், அவுஸ்திரேலியப் பயணக்கதை என ஐந்து பயண அனுபவப் புத்தகங்களை வரவாக்கியிருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் வியந்து வாசித்த `அவுஸ்திரேலிய பயணக்கதை’ என்னும் நூல் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூல் 1999 ஆம் ஆண்டு ஞானம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது. நூலின் அணிந்துரையை பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும், முன்னுரையை திரு லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள்.

நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் பூர்வீக மக்கள் சுமார் 60,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்து, 1788 ஆம் ஆண்டளவில் வந்த கைதிகள் மற்றும் அவர்களுடன் கூட வந்தவர்களினால் உருவாக்கப்பட்ட நாடே இன்றைய நவீன அவுஸ்திரேலியா ஆகும். இன்று அவர்களின் பரம்பரையினர் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டு, புதிதாகக் குடியேறியவர்களையும் வாழ வைத்திருக்கின்றார்கள். அவுஸ்திரேலியா 270 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் இணங்கி வாழும் ஒரு பல்லின நாடாக மிளிர்வதுடன், அதன் வளர்ச்சி ஏனைய நாடுகளைக் காட்டிலும் பல மடங்கு முன்னேற்றத்தையும் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்நூலாசிரியர், சுமார் 225 ஆண்டுகளைக் கொண்ட நவீன அவுஸ்திரேலியாவை, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு முறைகளுடன் ஒப்பிட்டு முடிச்சுப் போடுவதைப் பார்த்து நான் வியந்து நிற்கின்றேன். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வருகையும் ஏறக்குறைய 225 ஆண்டுகளைக் கொண்டதுதான். ஆனால் அவர்களின் கடும் உழைப்பும், சிந்திய இரத்தமும் அவர்களின் வாழ்வை உயர்த்தப் பயன்படவில்லை, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரவே பயன்பட்டிருக்கின்றது என்பதை அறியும்போது ஏதோ ஒரு நெருடல் மனதில் வந்து போகின்றது.

அவுஸ்திரேலியா, இலங்கையை விட 120 மடங்கு பெரிதானது. ஆனால் சனத்தொகையில் இலங்கையை விட சிறிதளவே (அவுஸ்திரேலியா - 27 மில்லியன்கள், இலங்கை – 22 மில்லியன்கள்) கூடுதலாகவுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ட்ஸ்மேனியா என்னும் தீவு, இலங்கையின் பரப்பளவைக் கொண்டது என்பதும் ஆச்சரியமான தகவல் ஆகும். தற்போது அவுஸ்திரேலியாவின் சனத்தொகையில் 57% ஐரோப்பியர்கள் வாழ்கின்றார்கள். அதில் 33% ஆங்கிலம் பேசும் வெள்ளையர்கள். இந்த நாட்டிற்கு சொந்தமான பூர்வீக குடிகள் 3.8%. இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து குடியேற்றம் எவ்வளவு வேகமாக நடைபெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

`ஆங்கிலேயரின் சிறைக்கூடம் அழகிய நாடாகியது’ என்ற முதல் கட்டுரையில் இருந்து, `இருபத்து நான்கு மணிநேரமும் ஒலிக்கும் இன்பத்தமிழ் ஒலி’ வரை விறுவிறுப்பாக நகரும் இக்கட்டுரைகள், கடந்த 25 வருடங்களாக இங்கே வாழ்ந்துவரும் எனக்கு பல புதிய தகவல்களையும், இன்னும் நிறையவே இந்த நாட்டில் பார்க்க இருக்கின்றது என்ற செய்தியையும் தருகின்றது.

ஆசிரியர், அவுஸ்திரேலியாவிற்கு வந்து முதலில் இறங்கிய இடம், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சிட்னி நகரத்தில்`ஹோம் புஷ்’ ஆகும். இந்த நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் தான் அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பில் வெள்ளவத்தையை `குட்டி யாழ்ப்பாணம்’ என அழைப்பது போல், சிட்னியின் `குட்டி யாழ்ப்பாணம்’ `ஹோம் புஷ்’ எனக் குறிப்பிடுகின்றார். அங்கே அமைந்துள்ள பாடசாலையில் 60% தமிழ் மாணவர்கள் பயில்கின்றார்கள்.

இப்போது சிட்னி நகர் அமைந்திருக்கும் இடத்தில் முன்னர் `அபோர்ஜினிஸ்’ மக்கள் வாழ்ந்தார்கள். 1770 இல் பிரித்தானியா கடற்படையைச் சேர்ந்த கப்டன் ஜேம்ஸ் குக்கின் வருகையின் பின்னர் - ஆதிமக்கள் வாழ்ந்த இடங்களெல்லாம், பிரித்தானியாவில் இருந்துவந்த கைதிகள் மற்றும் அவர்களுடன் கூட வந்தவர்களின் வசமாகி அவர்களின் குடியேற்ற நாடாகியது. அதே போல அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பரா கூட ஆதியில் `அபோர்ஜினிஸ்’ இன மக்களே வாழ்ந்ததாகவும், 1820 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசமாகியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. ஆதிவாசிகளின் பாஷையில் `கன்பெரி என்றால் மக்கள் கூடுமிடம் என்பதாகும். அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியா மெல்பேர்ணா என ஒன்பது வருடங்கள் இழுபறிபட்ட நிலையில், கடைசியாக இரண்டுக்கும் நடுவே இருந்த கன்பரா தலைநகராகியது என்பதையும் இந்நூலில் அறியக்கூடியதாக உள்ளது.

சிட்னியில் - உயர் கோபுரமான AMP Tower, `ஒப்ரா ஹவுஸ்’, `சிட்னி ஹாபர் பிறிட்ஜ்’, `சிட்னி துறைமுகம்’ போன்ற பல இடங்களைப் பார்த்து இந்திரலோகத்திற்கு ஒப்பிடும் ஆசிரியர், இலங்கையில் தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவத்தை அவுஸ்திரேலியாவில் கார் லைசன்ஸ் மாற்றீடு செய்கின்றது என்பதை அவதானித்துள்ளார். மேலும் அவுஸ்திரேலியாவின் சனத்தொகைப்படி மூன்று பேருக்கு ஒரு கார் இருப்பதாக அதிசயிக்கின்றார்.

இந்தப் பயண நூலில் 20 வகையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றின் தலைப்புகளுமே, அதன் உள்ளடக்கங்களைச் சொல்லிவிடுகின்றன. `தொழிநுட்ப ரீதியில் ஒரு பாரிய சாதனை’ என்ற கட்டுரை இயந்திர மயமான வாழ்க்கையையும், பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்வது பற்றியும் குறிப்பிடுகின்றது. `ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கோயில்களும் சமய நிறுவனங்களும்’ என்ற கட்டுரையில் சிட்னி முருகன் கோவில், `ஹெலன்ஸ்பேர்க்’ சிவா விஷ்னு ஆலயம் ஆகிய கோவில்களின் தரிசனம் பற்றிக் கூறுகின்றார். பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் அவர்களைச் சந்தித்தது பற்றியும், அவர் மூலம் சிட்னியில் இருக்கும் மன்றங்கள், மூத்த பிரஜைகள் சங்கம்,`சிட்னி தமிழ் மன்றம்’, பழைய மாணவர் சங்கங்கள் என்பவற்றையும் அறிந்து கொள்கின்றார். தவிர சிட்னி மூத்த பிரஜைகள் சங்கத்தின் ஆதரவில் நடந்த நாடகக் கருத்தரங்கம் ஒன்றில் விரிவுரையாளர் த.கலாமணி, கார்த்திகா கணேசர், கட்டிடக் கலைஞர் ஆ.சந்திரசேகரன், கலாநிதி வே.இளங்கோ போன்றவர்களை சந்தித்துக் கொள்கின்றார்.

அவுஸ்திரேலியாவில் 1956, 2000 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கிறீஸ் ஆகிய மூன்று நாடுகளும் சகலவிதமான ஒலிம்பிக்போட்டிகளிலும் பங்குபற்றும் நாடுகளாக உள்ளன.

`பெற்றோரில் தங்கியிருக்காத பிள்ளைகள்; பிள்ளைகளில் தங்கியிருக்காத பெற்றோர்’ என்ற தலைப்பு – குழந்தை ஒன்று பிறந்து, வளர்ந்து, படித்துப் பெரியவராகி, தொழில் ஒன்றைப் பெறும் வரை அரசாங்கம் அவருக்கு எப்படி உதவுகின்றது என்பதைப் பற்றியும் பெற்றோர்களுக்கு அவர்கள் சுமையில்லை என்பதையும் சொல்கின்றது. அதே போல 67 வயதைக் கடந்துவிட்ட குடியுரிமை பெற்றவருக்கு பென்ஷன் கிடைக்கின்றது.

மேலும் - பிரித்தானியக் கைதிகள் வந்த காலத்தை நினைவுபடுத்தும் சின்னங்கள் - அவர்களின் கதைகள், பழங்குடி மக்களின் வாழ்க்கை வரலாறு, மெல்பேர்ணில் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து சீனர்களின் வருகை, அவுஸ்திரேலியா தன்னினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் நாடு, பாடசாலையில் தரம் ஆறிலிருந்து பாலியல்கல்வி போதிக்கப்படுதல் என பல சுவையான தெவிட்டாத செய்திகள் இந்நூலில் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

அவுஸ்திரேலியாவில் ஏழு மாநிலங்கள் இருக்கின்றன. இந்நூல் `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ என்றபோதிலும் கூடுதலான வரை அவர் பயணம் செய்த, நியூசவுத்வேல்ஸ் (சிட்னி), கன்பரா, விக்டோரியா (மெல்பேர்ண்) ஆகிய மூன்று மாநிலங்களைப் பற்றியே எழுதப்பட்டுள்ளது. அங்கே தான் சந்தித்துக் கொண்ட எஸ்.பொ, மாத்தளை சோமு, இன்பத்தமிழ் வானொலி பா.பிரபாகரன், முருகபூபதி, டாக்டர் பொன்.சத்தியநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா, பாமினி செல்லத்துரை, டாக்டர் நடேசன், அருண் விஜயராணி, புவனா இராஜரட்ணம், எஸ்.சிவசம்பு, எஸ்.இரவீந்திரன், மாவை நித்தியானந்தன் என்பவர்களையும் மறக்காமல் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.

இந்தப் பயண இலக்கியங்களில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், `காலத்துடன் மாறும் தரவுகள்’ ஆகும். ஒருவருக்குரிய அடிப்படைச் சம்பளம், நிரந்தரத் தொழில் புரிபவர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி, சனத்தொகை மதிப்பீடு, அதில் வெவ்வேறு இன மக்களின் விகிதாசாரம், அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி, ஒருவரின் ஓய்வூ பெறும் வயது போன்றவற்றின் தரவுகள் இன்று பெருமளவு மாறிவிட்டன.

எமது தமிழ் பண்பாட்டு விழுமியங்களை நாம் போற்றும் அதே நேரம், ஏனைய மக்களின் வரலாறுகளையும் நாம் தெரிந்து கொள்ள பயணங்கள் உதவுகின்றன. பயண இலக்கியம் என்பது ஒருவர் தான் பார்த்த இடங்களை மாத்திரம் சொல்லிவிட்டுப் போவதல்ல. அதன் வரலாறு, அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல் நடப்புகள், தொழில்நுட்பப் புரட்சிகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். தி.ஞானசேகரனின் பயண நூல்களை வாசிப்பதன் மூலம், நாம் அந்த நாடுகளுக்கு எப்படிப் போகலாம், எங்கு தங்கிக் கொள்ளலாம் என்ற விபரங்களையும்கூட அறியக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் இந் நூலாசிரியர் எழுதிய `வட இந்திய பயண அனுபவங்கள்’ என்ற நூலை வாசித்து, ஆர்வ மேலீட்டினால் சமீபத்தில் வட இந்தியாவிற்குப் போய் ஜெய்ப்பூர், அக்ரா (தாஜ்மகால்), மதுரா போன்ற இடங்களைப் பார்வையிட்டிருந்தேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

`அவுஸ்திரேலியப் பயணக்கதை’ என்ற இந்த நூல் - அவுஸ்திரேலியாவைப் பார்வையிட விரும்புவர்களுக்கும், அந்நாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுடையவர்களுக்கும் ஒரு திறவுகோல் ஆகும்.

No comments:

Post a Comment