அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான்
ஆரம்பிக்கின்றன
கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.
மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.
ஆனால் என்ன வேடிக்கை, இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.
புங் ஒரு அப்பாவி போலவும் எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.
