Monday, 10 October 2016

கனவு மெய்ப்பட வேண்டும் - சிறுகதை


சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களுமாக காலத்தைக் கழித்துவிட்டு ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார்.

Friday, 7 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

7. சமூகப் பணி
  
ஒரு கல்லூரியின் எழுச்சி மேன்மை முதன்மை என்பன முதற்கண் அதன் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. அதிபரின் முகாமைத்துவ-நிருவாகத் திறமை இரண்டாம் பட்சந்தான். அதிபர்தான் உதவியாசிரியர்களை முதலாம் பட்சமாகச் சிருஷ்டிக்க வேண்டியவர். சிருஷ்டிகர்த்தா பொய்த்தால், உதவி ஆசிரியர்கள் கல்லூரியை இரண்டாம் பட்சமாக்கிவிடுவர். அதன் மேலும் அவர்கள் கொண்டு செல்லத் தயங்கமாட்டார்கள். உழுகிற மாடானாலும், மௌனமாக ஏரைப் பிடித்துக் கொண்டிருந்தால், காலகதியில் படுக்கவும் தொடங்கிவிடும். அதிபர் மட்டும் ஒரு கல்லூரியை ஓஹோ என்ற நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

Sunday, 2 October 2016

கடைசி ஓட்டம் – சிறுகதை





தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது – மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட தர்முவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

Saturday, 1 October 2016

பொய் அன்பு போகும்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

தயாளினியும் பத்மாவும் பூங்காவில் பிள்ளைகள் விளையாடுவதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பிள்ளை… பிரணவன் உச்சிக்குப் போகாதை. கவனம்” பத்மா சொல்வதற்குள் தீபன் அவனைத் தள்ளி விட்டான்.

தீபனின் தாயார் தயாளினியும் அதைப் பார்த்திருந்தார்.

பிரணவன் மறுபுறமுள்ள பற்றைக்குள் விழுந்தான். கால் முறிந்து வைத்தியசாலையில் படுத்திருந்தான்.

தள்ளியதைப் பிள்ளையும், பார்த்ததைத் தாயாரும் ஒருவருக்கும் சொல்லவில்லை.


“முற்பிறப்பிலை செய்த பாவத்திற்கு தண்டனை” வைத்தியசாலைக்கு வெளியே நின்ற தயாளினி யாருக்கோ சொல்வது பத்மாவிற்குக் கேட்டது.