
இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம்
அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்
குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம்
ஆண்டு வந்திருந்தது. அந்தப் புத்தகம்
பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக்
குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட
போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள் என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த
வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை
ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும்
அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால
மூலதனம், அரசியல் ஆவணம்.



