பகுதி (1)
ஒருமுறை நண்பன் ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது,
அவன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினான். தனது மகன் பாடசாலையில் `ஃபமிலி றீ’ பற்றி
ஒரு செயல்திட்டம் செய்வதாகவும், தன்னுடையதும் மனைவியினதும் இரண்டாவது பரம்பரைக்கு
அப்பால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் கவலை கொண்டான்.
“உனது குடும்பத்தில் எந்த எல்லை வரை உன்னால் சொல்ல முடியும்?”
திடீரென என்னிடம் கேட்டான் அவன். குடும்பத்தின் ஆணி வேரைக் கண்டிபிடித்து
விடவேண்டும் என்பதில் அவனது ஆர்வம் உச்சத்துக்கே சென்றுவிட்டதை அவதானித்தேன்.
அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி நானும் என் குடும்பத்திற்குள் பயணித்தேன்.
மூன்றாவது பரம்பரைக்கு அப்பால் என்னால் நகர முடியவில்லை.
இந்த உரையாடலின் பின்னர், இதுவரை காலமும் வாசிப்பதற்கு
பின் போட்டுவந்த அலெக்ஸ் ஹேலியின் `வேர்கள்’ நாவலைக் கையில் எடுத்தேன். `எதிர்
வெளியீடாக. வந்திருக்கும் இந்த நாவலை 2018 இல் இந்தியா சென்றபோது வாங்கியிருந்தேன்.
இந்தப் புத்தகத்தின் பருமன் தான் இத்தனை நாளும் என்னை வாசிப்பதற்குப் பயம்
காட்டியிருந்தது. ஏறக்குறைய 910 பக்கங்கள். எல்லாவற்றையும் புறம் தள்ளி ஒரே
மூச்சில் வாசித்து முடித்தேன். பொன். சின்னத்தம்பி முருகேசனின் அழகு தமிழ் என்னை
அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தது.
அலெக்ஸ் ஹேலி பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவர் இந்த
`வேர்களின்’ ஒன்பதாவது தலைமுறையைச் சார்ந்தவர். 1921 ஆம் ஆண்டு நியூயோர்க்கில்
பிறந்த அலெக்ஸ் ஹேலி சிறுவயதில் கடலோரக் காவற்படையிலும் பின்னர் ரீடர்ஸ் டைஜஸ்ட்
(Readers Digest), பிளேபாய் (Playboy) போன்ற பத்திரிகையிலும் பணிபுரிந்தவர்.
ஒருமுறை லண்டனில் உள்ள மியூசியத்திற்குச் சென்றபோது, அங்கே ஒரு பிரான்ஸ் அறிஞர்
எகிப்தியச் சிலையொன்றில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றைக் கணிக்கும்
முயற்சியில் ஈடுபடுவதைக் கண்டார். அப்போதுதான் தமது முன்னோர்கள் மூலம் வழிவழியாகக்
கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும் ஒலிக்குறிப்புக்களையும் கொண்டு தனது
பூர்வீகத்தையும் கண்டறியலாம் என்ற சிந்தனை அவருக்குள் பிறந்தது. அதற்கான பல
தேடல்கள் அர்ப்பணிப்புகளின் பின்னர் தனது பூர்வீக கிராமமான ஜுஃப்யூர்
சென்றடைந்தார். ஜூஃப்பூர் ஆப்பிரிக்காவில் காம்பியா பகுதியில் அமைந்திருக்கின்றது.
தனது மூதாதையரான குண்டா கிண்டே பற்றிய தகவல்கள், செவிவழிச் செய்திகள், ஆப்பிரிக்கா
கலாச்சாரம் என்பவற்றை உள்வாங்கிக் கொண்ட ஹேலி, அதனூடாக அமெரிக்காவில்
அடிமைப்பட்டுக் கிடந்த கறுப்பின மக்களின் வாழ்க்கையை எழுத ஆரம்பித்தார்.
1976ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளிவந்தபோது உலகம்
முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில்
வந்த இந்தப் புத்தகம் விற்பனையிலும் சாதனை படைத்தது.
அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய வெள்ளையர்கள், அங்கே
பூர்வீகமாக வாழ்ந்துவந்த பழங்குடியினரைத் துரத்திவிட்டு அவர்களின்
நிலபுலன்களையெல்லாம் அபகரித்தார்கள். அந்த நிலங்களில் உழைப்பதற்காக ஆப்பிரிக்காவில்
இருந்த மக்களைச் சிறைப்பிடித்து, விலங்கிட்டு கடல் மார்க்கமாக நெடுநாட்கள் பயணம்
செய்து கொண்டு வந்தார்கள். நோயினால் இறந்தவர்களையும், தப்பிக்க முயற்சி
செய்தவர்களைச் சுட்டுக் கொன்றும் கடலில் வீசினார்கள். ஒவ்வொரு கடல் பயணத்தின்
போதும் இப்படியாக மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள். எஞ்சியவர்களைக்
கொடுமைப்படுத்தி தமது பண்ணைகளில் வேலைக்கு அமர்த்தினார்கள்.
இன்னமும் வரும்.
நன்றி : ஈழநாடு (21.12.2019)
No comments:
Post a Comment