Friday, 10 April 2020

வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்


`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ - கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.


கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தன் இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கின்றார். இவர் ஏற்கனவே மகாஜனக்கல்லூரி 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றை வெற்றிமணி இதழ் மூலம் நடத்தியிருந்தார். கனடாவில் சிறுகதைப் போட்டி மூலம் தமிழ் பெண்கள் எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை மூலம் பல சிறுகதைப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றார். இவர்களது அனுபவங்கள் தான் இந்தத் தொகுப்பு வெளிவருவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.


மொத்தம் 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பின் முதல் பரிசு பெற்ற கதை ‘தாள் திறவாய்’. கதாசிரியர் எஸ்.நந்தகுமார் (நந்து சுந்து), சென்னை. நல்லதொரு சிறுகதைக்குரிய பல அம்சங்கள் கொண்டது இக் கதை. 

Monday, 6 April 2020

தக்கன பிழைக்கும் - கங்காருப் பாய்ச்சல்கள் (30)



எப்போதோ நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளில் ஐந்து சிறுகதைகள் எனக்கு இப்போது பிடித்திருக்கின்றது எனச் சொல்வதும், அதையே இன்னொரு எழுத்தாளர் – எனக்கோ அவர் எழுதியவற்றுள் இரண்டு கதைகள் தான் பிடித்திருக்கின்றது என்று சொல்வதும் எத்துனை அபத்தம். குறைந்தது அந்த எழுத்தாளரை இத்தனை வருடங்கள் கழித்தும் கொண்டாடுகின்றோமே என்பதையிட்டு பெருமைப்படுங்கள். ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில் எனக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்வதைப் போல் இருக்கின்றதல்லவா இது! அந்த எழுத்தாளர் எப்போது இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறையை அவதானிக்க வேண்டும். அந்தக் காலத்தில் எத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் சிறப்புற்று இருந்ததானால் தான், அவரும் தொடர்ந்து எழுதியிருப்பார் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை?

இதையும் கடந்து - இப்போது சிலர் தொகுப்புகளை விமர்சிக்கும்போது, இன்னாரது தொகுப்பில் உள்ள ’இந்த ஒரு சிறுகதைக்காகவே’ அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்வது நகைப்புக்கிடமாக உள்ளதல்லவா? ‘ஓ… என்னுடைய கதைகளில் இந்தக் கதையை சிறந்தது எனப் புகழ்ந்துவிட்டாரே’ என எழுதிய எழுத்தாளரும் புளகாங்கிதம் கொள்வதும் வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் அவரது தொகுப்பில் இருக்கும் எஞ்சிய கதைகளை என்னவென்று சொல்வதாம். எழுத்தாளரைக் குளிர்விப்பது ஒருபோதும் அவரது கதைகளை விமர்சனம் செய்வது என்று சொல்லலாகாது. இத்தனை கதைகளில் இது ஒன்றுதான் இப்பொழுது தேறியிருக்கின்றது என்றால், இன்னும் நூற்றாண்டுகள் கழித்து?

வாசகர்களே உங்கள் கருத்து என்ன?


Saturday, 4 April 2020

அக்கினிக்குஞ்சிற்கு வாழ்த்துகள்



அவுஸ்திரேலியாவில் இணையத்தளம் ஒன்றின் சாதனை. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.

1991 ஆம் ஆண்டிலிருந்து சஞ்சிகை வடிவில் பல இதழ்களை மணம் பரப்பி, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து இணையத்தளமாக வடிவெடுத்து இன்று ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது அக்கினிக்குஞ்சு.
 

செய்திகள், இலக்கியம், சினிமா, நேர்காணல்கள், ஒளிப்படைப்புகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இந்த இணையத்தளம், பல்லாயிரம் வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை இணையத்தளத்திற்கு வரும் வாசகர் கடிதங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு வருட முடிவிலும் புத்தக வெளியீட்டுவிழா, சிறுகதை – குறுநாவல் போட்டிகள் என அசத்தும் இவ் இணையத்தளம், கடந்த இரண்டு வருடங்களாக இசையருவிப் பாடல் போட்டி, படைப்பாளர்/கலைஞர் கெளரவிப்பு என வருவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி.

முதியவர்களும் வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்கள். சுருக்கமாக `முக்கிய செய்திகளை’ச் சுழன்றோடும் ஆரம்ப வடிவமைப்பு. இலங்கை, இந்தியா, உலகச் செய்திகள் எனத் தனித்தனியான வகைப்பாடுகளில் செய்திகள். பலதும் பத்தும், அன்றாட நிகழ்ச்சிகள், கதம்பம் என நாளுக்கு நாள் பதிவேற்றம். உலகத்தின் சகல படைப்பாளர்கள் / கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரே இடம் அக்கினிக்குஞ்சு.

அக்கினிக்குஞ்சினிணையத்தள முகவரி - https://akkinikkunchu.com/


மெல்பேர்ணிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சிற்கும், அதன் ஆசிரியர் யாழ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.



Wednesday, 1 April 2020

தொண்ணூற்றி ஒன்பது வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம் நிறைவு பெற்றது.



அஞ்சலிக் குறிப்பு

‘சக்கடத்தார்நாடகம் பார்த்திருக்கின்றீர்களா?

ஒருகாலத்தில் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறிய அந்த நாடகத்தில், அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து கேட்கக்கூடாத பல கேள்விகள் கேட்டபடியே ஒருவர் வருவார். அந்த ஆசிரியர் பாத்திரத்தில் வருபவர்தான் இங்கே கீழுள்ள மூன்று சம்பவங்களிலும் பாத்திரமாகியுள்ளார். அவர் கலைவளன் திரு. சிசு நாகேந்திரன்.

இந்த 'சிசு'வில் ஒரு விஷேசம் இருக்கின்றது. தாய் பெயர் சின்னம்மாள்; தந்தை பெயர் சுந்தரம்பிள்ளை. இருவரினதும் முதலெழுத்துக்கள்தான் சிசு. எம்மத்தியில் வாழ்ந்து வந்த கலை, இலக்கிய 'முதுசொம்' ஆன இவர் 2020 மாசி மாதம் 10 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.

அவர் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்.