Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Friday, 17 July 2026

“எனக்கு உன்னைத் தெரியாது” – சிறுகதை

 

இரவு  மணி பத்தாகிவிட்டது. இன்னமும் மோகன் வீடு வந்து சேரவில்லை. வேலை அலுவலாகச் சற்றுப் பிந்தும் என்று சொல்லியிருந்தான், என்றாலும் இதற்குள் வந்திருக்க வேண்டும். நளாயினி போன் செய்தபோது மோகனின் மொபைல்போன் சுவிச் ஓஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு துடித்துப் போனாள். எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் மோகன் வேலை முடிந்து பிந்தி வருவதுண்டு. அந்த வேளைகளில் அவன் கொஞ்சம் மதுவும் அருந்தியிருப்பான்.

என்ன செய்வது? குழந்தையின் தேகம் அனலாகக் கொதித்தது.

நளாயினி தன் குழந்தையை மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு, பின்புறமிருந்த வீட்டிற்குச் சென்று கண்ணீர் விட்டாள். மோகன் எங்கே போயிருக்கின்றான் என்று சரியாகத் தெரியாதபடியால் அவர்களால் நளாயினிக்கு உதவ முடியவில்லை.

வீட்டிற்குத் திரும்பிய நளாயினி இரவு முழுவதும் விழித்திருந்து, ஒரு மூலையில் குழந்தையுடன் ஒடுங்கிப் போயிருந்தாள்.

அன்று இரவு முழுவதும் மெல்பேர்ண் சிற்றியில் அலைந்து திரிந்துவிட்டு விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு ரக்‌ஷியில் வந்து இறங்கினான் மோகன்.

“இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீர்கள்?” அழத் தொடங்கிவிட்டாள் நளாயினி.

“குழந்தாய்…. நான் சுவாமி தரிசனம் முடித்து வந்திருக்கின்றேன்” பக்தியின் குரலை முன் வைத்தான் மோகன்.

Wednesday, 8 July 2026

யெளவனம் – சிறுகதை

               

கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக் கொண்டான்.  'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம் இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். அவள் அருகே பையன் ஒருவனைத் தூக்கி வைத்திருந்தபடி சேலை அணிந்த இன்னொரு வயது முதிர்ந்த பெண்.

அந்த இளம் பெண் ஒரு கலைப்படைப்பு. அப்படித்தான் இருக்க வேண்டும். அடிக்கடி சட்டையை மேலும், பாவாடையைக் கீழும் இழுத்து விட்டுக் கொண்டாள். இரட்டைப் பின்னலைத் தூக்கிப் பின்னாலே எறிந்து கொண்டாள். இரட்டைப்பின்னலுக்கு தப்பிய முடி, புகையிர நிலையத்தின் செயற்கை ஒளியில் பொன்னிறமாகத் தகதகத்து காற்றினில் துடித்துக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த 'லிப்ஸ்டிக்'கை எடுத்து உதட்டருகே கோடிழுத்துக் கொண்டாள். உதடுகளை மேலும் கீழும் அசைத்து சப்புக் கொட்டி அழகு காட்டினாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருபது, இருபத்திரண்டு வயது இருக்கலாம்.

இவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். புகையிரதம் புறப்படுவதற்கு இன்னமும் இரண்டோ மூன்று நிமிடங்கள்தானிருந்தன. புகையிரதம் கொஞ்சம் தாமதித்துப் புறப்பட்டால் நல்லது போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனம் பரபரப்படையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் மறைந்து விடுவாள்.

புகையிரதம் புறப்படுவதற்காகக் கூவியது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

Monday, 25 May 2026

எனது சிறுகதைகள் பெதும்பை (சொல்வனம்), மவுஸ் (வாசகசாலை) தேர்வாகியுள்ளன

 

2026 ஏப்ரல்: நாம் தவறவிடக் கூடாத சிறந்த சிறுகதைகள்! | தினேஷ் ஜெயபாலன் & மந்திரமூர்த்தி அழகு

Monday, 18 May 2026

பெதும்பை - சிறுகதை

 

அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சுஜித்தா பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள் நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில் ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.

சில நாட்களாக சுருக்கங்கள் விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும் தழும்பிக் கிடந்தன.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும் தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின் வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.

அப்பா ஒரு போர்வீரர் அல்ல. எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும் இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.

மாலை சரிந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தே குரல் எழுப்பியபடியே மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன். தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின் பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள் இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.

“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

Friday, 8 May 2026

மவுஸ் – சிறுகதை

காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.


செய்தி இதுதான்.

|
காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|

•

எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

•
ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன். முதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.

Friday, 1 May 2026

"ததிங்கிணதோம்" - சிறுகதை

 


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

Tuesday, 14 April 2026

எதிர்பாராதது! - சிறுகதை


நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.

Monday, 1 December 2025

அம்பலம் - சிறுகதை

வயது முதிர்ந்தோர் இல்லத்தில் பிரபல எழுத்தாளர் நிரஞ்சன் இருந்தார். அவரைச் சந்திப்பதற்காக பத்திரிகை நிருபரான தணிகாசலம் சென்றிருந்தார்.

“எழுத்தாளர் நிரஞ்சனைப் பாக்க வேணும்…”

“செகண்ட்  ஃப்ளோர் மூண்டாவது ரூமுக்குப் போங்க…”

தணிகாசலம் லிப்ற் இருக்கத்தக்கதாக படிகளின் வழியே ஏறி மேலே போனார். அறை திறந்து இருந்தது. உள்ளே உறக்கத்தில் இருந்தார் நிரஞ்சன். அவரை எழுப்புவதா விடுவதா என்ற தயக்கத்தில், அவரின் கட்டிலுக்கு எதிராக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.

நிரஞ்சனின் முகத்தில் சவரம் செய்யப்படாமல் வெள்ளி முடிகள் எங்கும் பரவிக் கிடந்தன. படுக்கையிலும் தனது மொட்டையை மறைப்பதற்காக தொப்பி அணிந்திருந்தார். அவரை முதன்முதலாகச் சந்தித்தது அப்படியே நெஞ்சில் நிழலாட்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. தொப்பியைக் முழுகும்போதும் கழட்ட மாட்டாரோ?

இருவருக்கும் வயதில் பெரிதளவு வித்தியாசம் இல்லை. ஆனால் மூப்பும் பிணியும் வயது பார்த்து வருவதில்லை. அவர்களின் பரம்பரை அலகுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல சங்கதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன. நிரஞ்சன் உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டார். மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்றான நோய் அவரை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர் ஒரு தண்ணிச்சாமி. அதுவே அவரை நோயாளியாகவும் ஆக்கியிருக்கலாம். நீரிழிவும் கொலஸ்ரோலும் ஒவ்வொரு பக்கமாகப் பிடித்திழுக்க, ஒரு தடவை ஸ்ரோக்கும் வந்திருந்தது. மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகள் வேலைக்குப் போவதால் இதுவே பாதுகாப்பான இடம் எனக் கருதி, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இடையிடையே வந்து பார்த்து உணவும் குடுத்துவிட்டுச் செல்வார்கள்.

தமிழ் மக்களுக்கான அந்த முதியோர் காப்பகத்தில் நிரஞ்சனுடன் ஆணும் பெண்ணுமாக மேலும் பதினான்கு பேர்கள் இருக்கின்றார்கள்.

நிரஞ்சன் `வாசல்’ என்ற சிறுகதைத்தொகுப்பையும், `ஊர்வலம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கின்றார். அதன் பின்னர் உதிரிகளாகச் சில கதைகளும், புதுக்கவிதைகளும் எழுதியிருக்கின்றார். ஆனால் தொகுப்பில் போடுமளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்த உதிரிகளிலும் சில இலக்கியத் தரமில்லாமல் இருந்தன. ஆனால் `வாசல்’ தொகுப்பு சிறுகதை இலக்கியத்திற்கே ஒரு வாசல் என்றும், `ஊர்வலம்’ தொகுப்பு புதுக்கவிதையின் ஒரு திறவுகோல் எனவும் இன்றளவில் பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. சில பல்கலைக் கழகங்களில், இவை இரண்டும் இன்னமும் பாட நூல்களாக இருக்கின்றன.

திடீரென விழித்துக் கொண்ட நிரஞ்சன், படுக்கையில் இருந்து எழுந்தார்.

“சொன்னபடி வந்துவிட்டீர்கள். நான் சற்றே அயர்ந்து போனேன்” சிரித்துக் கொண்டார் நிரஞ்சன்.

“பேட்டியைத் தொடங்கலாமா?” என்றார் தணிகாசலம்.

Wednesday, 17 September 2025

மிஸ்டர் பீன், தேங்காய், கத்தி

தணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு அங்காடிக்குச் செல்கின்றார். திடீரென்று தனது மேலங்கிக்குள் இருந்து ஒரு முழு மீனை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரம் ஒன்றினுள் போட்டு, அப்பிடி ஒரு சுழட்டு இப்பிடி ஒரு சுழட்டு விட்டு, மீனைத் தூக்கித் தூக்கிப் போட்டார். திருப்தி வந்தவுடன் சட்டியை எடுத்துக் கொண்டார். பின்னர் தனது பொக்கற்றுக்குள் இருந்து ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். `பீலர்’ ஒன்றை எடுத்து உருளைக்கிழங்கின் மேல்புறத் தோலை சீவிப்பார்த்து, திருப்தி வந்தவுடன் அதையும் எடுத்துக் கொண்டார்.

அத்துடன் தணிகாசலம் படத்தை இடையில் நிறுத்திக் கொண்டார்.

Tuesday, 9 September 2025

சியாவோ எனும் அதிகாலை நட்சத்திரம் – சிறுகதை

 

“சேர்… இன்று மாலை நான் உங்களைச் சந்திக்கலாமா?”

“ஹாய் சியாவோ… எப்பொழுது சீனாவிலிருந்து வந்தாய்?”

“நேற்றுத்தான்…”

“படிப்பு, ஆராய்ச்சி எல்லாம் எப்படி இருந்தது?”

“நல்லபடியாய் முடிந்துவிட்டது சேர்… உங்களுடன் கதைப்பதற்கு நிறைய இருக்கின்றன. தனியாகக் கதைக்க வேண்டும். குறிப்பாக இரண்டு முக்கிய விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.”

“சரி… இன்று மாலை ஐந்து மணிக்கு பிறிம்பாங் லைபிறறிக்கு வர முடியுமா?”

“ஓகே… சேர்.”

`தனியாகக் கதைக்க வேண்டும்’ என்கின்றாள். என்னவாக இருக்கும்? மனம் அலை பாய்ந்தது.

•
சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள், உள்ளூர்ப் பேப்பரில் வந்த கட்டிங் ஒன்றை நீட்டிய அம்மா, அதைப் பார்க்கும்படி சொன்னார்.

Friday, 8 August 2025

நினைவில் நின்றவை


குரல் வடிவம் : கெளசி

நினைவில் நின்றவை சிறுகதையா?  இசையும் கதையுமா? அதற்கும் அப்பால் காட்சிப்படிமங்களுடன் விரியும் புதிய வடிவம். AI தொழில்நுட்பத்துடனும் வசீகரிக்கும் குரலுடனும் உங்களை உங்கள் பள்ளி வாழ்க்கையில் இருந்து இக்கணம் வரை இழுத்துச் செல்லும்.