சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற
நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது.
தனது மகன் மருமகளுடன் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள்.
உறக்கத்தில் சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள்.
"அண்ணா!
உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு
வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்."
"அப்பா திவசத்துக்கு வரேல்லையே?" மகன் கேட்டான்.
"வாறன், வாறன்" என்றபடியே இரண்டாவது ஃப்ளோரிலிருந்து தரைக்குக் கீழிறங்கினார். அவருக்கு இப்போது செத்தவீடு, திவசதினங்களுக்கெல்லாம் போவதற்கு விருப்பமில்லை. இந்தக் கொண்டாட்டங்களிலை மனம் ஈடுபட்டால் கெதியிலை உலகவாழ்க்கையைத் துறக்க நேரிடும் எனப் பயந்தார்.
திவசம் வலு தடல் புடலாக நடந்தது. ஐயர் மந்திரங்கள் ஓதினார்.
போனதடவை அஸ்தியை தண்ணீரிலை கரைக்கேக்கை சிவசம்பு கால் தவறி ஆற்றுக்கை விழப்
பாத்திட்டார். அது முதல் கொண்டு பயம் இரட்டிப்பாகிவிட்டது.
"இவள் பரமேசு
என்னை இழுக்கப் பாத்திட்டாள். நல்லகாலம். தப்பி வந்திட்டன்" என்பார்.
திவசம் முடியும் தறுவாயில் மெல்ல நழுவி வீட்டிற்குப் போகப்
பார்த்தார் சிவசம்பு.
"திவசத்துக்கு
வந்தால் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேணும்" என்று அடாத்துப்
பிடியாக சிவசம்புவைப் பிடித்து விட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு ஐயரிட்டைப்
போனார்.
"ஐயா!
எனக்கொரு நூல் ஓதிக் கட்டிவிடுங்கோ. அடிக்கடி பரமேசு கனவிலை வாறாள்" நூல்
ஒன்றைக் கையிலே கட்டிக் கொண்டார். நூலையும் சாப்பாட்டையும் மாறி மாறிப்
பார்த்துக்கொண்டே சாப்பாட்டில் ஒரு பிடி பிடித்தார்.
வீட்டிற்குப் போகும்போது வாசலில் பரமேசுவின் அழகிய படம் ·பிறேம் போட்டுக்
குடுத்தார்கள். அதை வாங்கி அருகே இருந்த மேசைமீது வைத்து அழகு பார்த்தார். அதைக்
குடுத்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்களும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். இன்னும்
இரண்டு படம் தாருங்கள் என்று கேட்டு வாங்கினார்.
"பாத்தியேடி!
தங்கைச்சியிலை எவ்வளவு பாசம் எண்டு. ஒண்டுக்கு மூண்டு படம் எடுக்கிறார்"
என்றாள் ஒருத்தி.
"மனிசன்
இவ்வளவு பாசத்தை வச்சுக்கொண்டு பயப்பிடுது" தூரத்தில் சிவசம்புவின் செய்கைகளை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.
வீட்டிற்கு வந்ததும் கத்திரிக்கோல், ஸ்குறூட் றைவர்
சகிதம் அங்குமிங்குமாக ஓடித் திரிந்தார் சிவசம்பு. தனது படுக்கை அறைக்குள் போய்
நேற்று வந்த தனது மகளின் ஜேர்மன் கடிதத்தை எடுத்து வந்தார். மேசைமீது தான்
கொண்டுவந்த தங்கையின் படங்களைப் பரப்பி பிஷியாகிப் போனார். ஃபிறேமை நோண்டி
நோண்டிப் பிடுங்கினார். தங்கையின் படங்களை அதனின்றும் கழட்டி எடுத்தார். ஜேர்மன்
கடிதத்துடன் வந்த தனது மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களையும் அந்த ஃபிறேமிற்குள்
மாட்டினார். தங்கையின் படங்களை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காகப் போன அவர், பின்பு ஏதோ எண்ணம்
கொண்டவராக மேசை லாச்சியை இழுத்து அதற்குள் அந்தப்படங்களை தள்ளி விட்டார்.
ரி.விக்கு முன்னால் இருந்த மகன் கடைக்கண்ணால் அவரது செய்கைகளைப் பார்த்தபடி
இருந்தான்.
சற்று நேரத்தில் மகன் அவரின்
படுக்கை அறையின் கதவை மெதுவாகத் திறந்து எட்டிப் பார்த்தான். அவரது
மேசையில் மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களும் அழகாக சிரித்தபடி இருந்தன. சிவசம்பு
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.
●
●
சிறந்த கதை. இது நடந்த நிகழ்வுகள்தானே ஐயா. அருமை.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி. உண்மைக் கதைதான்.
ReplyDelete