யார்? யாருக்கு? எப்பொழுதிருந்து?
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் வீட்டிற்குக் குடிபுகும்போது, குருக்கள் அல்லது
ஐயரைக் கொண்டு வீட்டிற்கு சாந்தி செய்வது வழக்கமாகிவிட்டது. புதிதாகக் கட்டப்பட்ட
மாடமாளிகை என்றால் என்ன, அல்லது
முப்பது நாற்பது வருடப் பழமை வாய்ந்த ஒடிந்து விழும் வீடு என்றால் என்ன இது
பொருந்தும்.
அனேகமான குருக்கள்மாருக்கு நாங்களே சாந்தி செய்வதற்குத்
தேவையான பொருட்களையும் வாங்கிக் குடுத்து, அவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான கார் வசதியையும்
செய்து கொடுக்க வேண்டும். இதற்கு விதிவிலக்காக ஒருசிலர் இருக்கின்றார்கள். தாங்களே
சாந்திக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு தமது வாகனத்திலேயே
தரிசனமாகிவிடுவார்கள். பிழைக்கத்தெரிந்த அவர்கள் வளைந்து
கொடுக்கக்கூடியவர்களாகவும் உள்ளார்கள்.
ஒருமுறை எமது வீட்டிற்கு வந்த குருக்கள் மாவிலை கொண்டு வரவில்லை. "கொஞ்சம் இருங்கள், இதோ
வந்துவிடுகின்றேன்" என்று சொல்லிவிட்டு, எமது வீட்டின் பின்புறம் சென்று தேடுதல் செய்தார். ஒரு
மரமொன்றின் கொப்பைப் பிடித்து "இதுதான் இஞ்சத்தையில் மாவிலை" என்று
சொல்லி அதன் இலைகளைப் பிடுங்கி வந்தார். சடங்குகள் சம்பிரதாயங்களை வசதிக்கேற்றபடி
மாற்றிவிடுபவர்கள் இவர்கள்.
நண்பன் ஒருவனுக்கு இந்தக்குருக்களைப் பரிந்துரை செய்து அவரின்
ரெலிபோன் நம்பரையும் கொடுத்திருந்தேன். அவன் ரெலிபோன் செய்யும்போது குருக்கள்
வீட்டில் இருக்கவில்லை. 'ஆன்சர்
போனில்' தனது பெயர், ரெலிபோன் நம்பர்
என்பவற்றைப் பதிவு செய்திருந்தான்.
"ஐயா... நான்
ஒரு வீடு வாங்கியிருக்கிறன் ஐயா! நீங்கள்தான் அதுக்கு சாந்தி செய்யவேணும்
ஐயா!" என ஆயிரத்தெட்டு ஐயா போட்டிருந்தான் அவன். அவன் சிலவேளைகளில்
கிறுக்குக்கவிதைகளும் எழுதுவான். வீட்டிற்கு வந்த குருக்கள்'ஆன்சர் போனில்' இருந்ததைக் கேட்டுக்
குளிர்ந்து போய்விட்டார்.
"தம்பி...
நான் ஐயா கதைக்கிறன். வீட்டிற்கு சாந்தி செய்யவேணும் எண்டு ரெலிபோன்
எடுத்திருந்தீர்"
"யார் ஐயா!
யாருக்கு ஐயா! எப்பொழுதிருந்து ஐயா!" என்று கிறுக்கு ஒரு போடு போட்டானே, மறுமுனையில்
ரெலிபோன் அடித்து வைக்கப்பட்டது.
பிறகு என்ன? அவன் வீடு குடிபுகுவதற்கு படாதபாடு படவேண்டியதாயிற்று.
சாந்திக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகத் தேடி வாங்கி, சாஸ்திர
சம்பிரதாயங்களுடன் செய்யக்கூடிய ஐயரைக் காரில் ஏற்றி இறக்கி, 'நிமிராதே, குனியாதே, பிழைவிடாமல் தேவாரம்
பாடு' என்று
திட்டு வாங்கி ஒருவாறு சாந்தி செய்தான்.
No comments:
Post a Comment