Sunday, 10 August 2014

விக்கல்



மெல்பேர்ணில் உள்ள தோமஸ்ரவுனில் (Thomastown) எனக்கொரு நண்பர் இருந்தார். பேரம்பலம் என்பது அவர் பெயர். இளைமைக்காலத்து நண்பர். வயது அறுபதைத் தாண்டிவிட்டது. அவரைவிட எனக்கு மூன்று வயதுகள்தான் குறைவு.

அவருக்கு லாட்டரிச்சீட்டு எடுப்பதில் அலாதிப்பிரியம். எப்பவாவது தனக்கு விழும் என்ற நம்பிக்கை உள்ளதாகச் சொல்லுவார். என்னுடன் முன்பு வேலை செய்யும்போது அப்பிடியெல்லாம் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. மனைவி வந்த அதிஷ்டம், லாட்டரிச்சீட்டு எடுக்கின்றேன் என்பார். அவருடைய மனைவிக்கு விக்கல் வியாதி. அவ போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. பேரம்பலத்தைக் கண்டதும் அவரிடம் ஏறிய விக்கல் எந்தவித மருந்து மாந்திரீகத்திற்கும் கட்டுப்படவில்லை.
விக்கலும் தும்மலும் லேசுப்பட்ட சங்கதிகள் அல்ல. ஒரு கண நேரத் தும்மலில் கார் அக்ஷிடென்ற் வந்துவிடலாம். எமக்கு வீட்டுக்கு அருகிலிருப்பவர் தும்மும்போது தெருவே அதிரும். விக்கல் சபையோரின் மத்தியில் இருப்பவரை அடையாளம் காட்டிவிடும். இரண்டுமே ஆக்களைப் பொறுத்து பலவித தாள லயக் காட்டுகளுடன் தோன்றும்.

ஒருமுறை பேரம்பலத்தின் பேர்த்தியின் நான்காவது பிறந்ததினவிழாவிற்காக அவரது வீட்டிற்குப் போனோம். அப்போதுதான் அவருக்கு 'லொட்டோ' (Lotto) மீதிருந்த அதீத ஈடுபாட்டைக் கண்டேன். எல்லாரும் அவுஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் மச் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"ரி.வி சனலை மாத்தப் போறன். எல்லாரும் என்னை மன்னிச்சுக் கொள்ள வேணும்" கையில் A4 சைஸ் கொப்பி ஒன்றுடன் ஹோலிற்குள் நுழைந்தார் பேரம்பலம். ஒன்றரை அங்குலத் தடிப்பமுள்ள அந்தக் கொப்பியில் எல்லாவிதமான லொட்டோ பற்றிய தகவல்களும் இருப்பதாகச் சொன்னார். அவருக்கு அது ஒரு புதையல் மாதிரி. அவருக்கு கடந்த இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்பு வந்த லொட்டோ எண்கள் எல்லாம் மனப்பாடம்.

"அவருக்கு இன்னமும் சிவபுராணம் தெரியாது" என்று சொல்லிச் சிரித்தார் டயானா. டயானா என்பது பேரம்பலம் தனது மனைவிக்கு வைத்த செல்லப்பெயராக இருக்க வேண்டும். உலகில் எங்குதான் மனிதருக்கும் அவர்களின் பெயருக்கும் பொருத்தம் சரியாக அமைந்திருக்கின்றது? கலியாணம் செய்தபோது, அவரின் சிகை அலங்காரம் டயானாவின் சாயலில் இருந்ததுதான் அந்தப் பெயர் வரக்காரணமாக இருந்திருக்க வேண்டும்.

"எனக்கு லொட்டோ விழுந்தால், இதிலை இருக்கிற அனைவருக்கும் அதிலை ஒரு பங்கு உண்டு" என்றார் பேரம்பலம். கொடுக்கின்றாரோ இல்லையோ, இதைச் சொல்வதற்கு எப்படிப்பட்ட மனம் வேண்டும்!

காலம் மாறுகிறது. முதுமை காரணமாக முன்னையைப்போல பேரம்பலத்தின் வீட்டிற்குப் போவதில்லை. அவரும் வருவதில்லை.

பேரம்பலத்தின் 75 வது வயது பிறந்ததின கொண்டாட்டம் வந்தது. மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அப்போது அவர் என்னைத் தனியாக தனது ரூமிற்குக் கூட்டிச் சென்றார். அறைக்குள் ஒரு விளையாட்டு லொட்டோ மெஷின் வைத்திருந்தார். பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்டது. பேர்த்திக்கு kmart இல் வாங்கும்போது தனக்கும் அதுபோல ஒன்று வாங்கியதாகச் சொன்னார். அசப்பில் ரி.வி.யிலே பார்க்கும் மெஷினைப்போலவே இருந்தது. அதை உருட்டி விளையாடி எல்லாவிதமான லொட்டோ இலக்கங்களையும் போடக்கூடிய வசதி இருந்தது. இரண்டு பேருமாக இயந்திரத்தை இயக்கி விளையாடி அந்த வாரத்திற்கான இலக்கங்களைப் பெற்றுக் கொண்டோம். "இரண்டு பேருக்குமே இப்ப மறதி, அதோடை அறளை. இந்த மெஷின் இருக்கிறது வாச்சுப்போச்சடா" என்றார் பேரம்.

பேரம்பலத்தின் பேர்த்தி பெரியவளாகிவிட்டாள். சடங்கு பெரிதாகக் கொண்டாடினார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று தண்ணீர் வார்த்துவிட்டு, பிறகு ஹோலிற்குச் சென்றோம். இப்போது பேரம்பலத்தின் வீடு பெரிய பங்களா. இரண்டு மாடிக்கட்டடம். டபுள் கராஜ். அழகான லாண்ட்ஸ்கேப். அம்சமாக இருந்தது. இப்போதும் பேரம்பலம் லொட்டோ போடுகின்றாரோ தெரியவில்லை. ஆனால் மூச்சுக்கொரு தடவை லொட்டோ பற்றிப் பேசும் அவர், அன்று லொட்டோ பற்றி வாயே திறக்கவில்லை. தாங்கள் 'வேர்ல்ட் றிப்' (World Trip) இரண்டு தடவைகள் போய் வந்ததாகக் சொன்னார். ஹோலிற்கு சடங்கிற்கு வந்த அனைவருக்குமே தமது உலகச்சுற்றுலாவைப்பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

சடங்கு பெரிதாக நடந்தது. பேர்த்தி ஹோலிற்கு 'ஹெலிகொப்டரில்' வந்து இறங்கினாள். மாமன்மார்கள் ஹெலியிலிருந்து மணவறை வரைக்கும் அவளைப் பல்லக்கில் சுமந்து சென்றார்கள். பல்லக்கு போற வழி எங்கும் பலவித வர்ணங்களில் புகை அடித்தார்கள். 

"எங்கடை ஊரிலை வாழைக்குலைக்குத்தான் புகை அடிக்கிறவை. இஞ்சை மனிசருக்கே அடிக்கினம். ஒருவேளை கிருமி சாகப் புகை அடிக்கிறான்களோ?" என்று ஒருவர் முணுமுணுத்தார். இந்தமாதிரி ஒரு சடங்கை இதுவரை ஒருவரும் பார்த்ததில்லை என்று பேசிக் கொண்டார்கள்.

வீட்டிற்கு வந்து காரில் இருந்து இறங்கியதும், மனைவி என் கையைப் பிடித்தாள்.

"நான் விழமாட்டன். வடிவா நடப்பன். நீர் என்னை விடும்" என்றேன் நான்.
காரில் ஏறிய நேரம் தொடக்கம் ஏதோ ஒரு விஷயத்தை அடக்கி வைத்திருந்திருக்கின்றாள் அவள். அதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கைப்பிடிப்பு.

"ஒண்டைக் கவனிச்சனியளே! டயானாவுக்கு விக்கல் நிண்டு போச்சு!!"

"அப்ப பேரம்பலத்தாருக்கு லொட்டோ விழுந்திட்டுது" றைவர் சீற்றிலிருந்த மகள் தன்னை மறந்து கூக்குரல் போட்டாள்.

"எல்லாம் வரும் போகும்" என்றாள் மனைவி. அந்த 'எல்லாம்' என்பதற்குள் என்னவெல்லாம் அடங்கும்?




No comments:

Post a Comment