Saturday, 2 August 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (3)


தந்திரம்

2008 ஆம் ஆண்டு. இலக்கியவிழா ஒன்றில் புத்தகங்கள் விற்பனை செய்பவர்களுக்கு உதவியாக இருந்தேன். இன்னொரு  நாட்டு எழுத்தாளர் ஒருவரது புத்தகம் ஒன்றும் அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் வரவில்லை. மேசையில் மலை போல நிமிந்து இருந்தன அவை. மனதால் எண்ணிப் பார்த்து இருபது புத்தகங்கள் இருக்கு என்றேன் விற்பனைக்குப் பொறுப்பான நண்பரிடம். அவர் தனது காலால் கீழே தட்டிக் காட்டினார். அங்கே மேலும் ஐந்து பெட்டிகள் விற்பனைக்காகக் காத்திருந்தன. என்னையும் அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. ஐந்து டொலர்கள் மட்டுமே அந்தப் புத்தகத்திற்குப் போடப்பட்டிருந்தது. நிறுத்து விற்றால்கூட ஐந்து டொலர்களுக்கு மேல் தேறும் அந்தப் புத்தகம்.

புத்தக விற்பனை எல்லாம் அமோகம் என்று நினைத்துவிடாதீர்கள்! விழாவிற்கு வருபவர்களே குறைவு. வருபவர்களும் மேசைமீது ஏதாவதைக் கண்டுவிட்டால், பாம்பைக் கண்டுவிட்டது போல அதை விலத்தித்தான் செல்கின்றார்கள். இடையிடையே ஒருவர் இருவரென வந்து புத்தகத்தை விசிறி போல விரித்துப் பார்ப்பதும், பின்னர் புத்தகத்திற்கு நோகாதவாறு பவுத்திரமாக மேசையில் வைப்பதுமாகவே  இருந்தார்கள்.

விழா முடிவதற்கு அரை மணித்தியாலங்கள். மூன்று நான்கு குடும்பத்தினர் அங்கே வந்தார்கள். சிறியவர்களும் பெரியவர்களுமாக பத்துப் பதினைந்து பேர்கள் மட்டில் இருந்தார்கள். அவர்கள் நேரே புத்தக மேசையடிக்கு வந்தார்கள். மேலே குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தை மாத்திரம் அவர்கள் கரிசனையுடன் வாங்கினார்கள். சிலர் ஐந்து புத்தகங்கள் கூட வாங்கினார்கள். நண்பர் கீழே இருந்த பெட்டிகளை உடைத்து அடுக்க அடுக்க, நான் விற்பனை செய்தேன். கண நேரத்தில் நாற்பது புத்தகங்கள் காலி. ஒரு சில நிமிடங்களில் எங்களைத் திக்குமுக்காடப் பண்ணிவிட்டர்கள் அவர்கள்.

வாங்கியவர்கள் அங்கே சும்மா நிற்கவில்லை. கையிலே புத்தகங்களை விசுக்கியபடி முன்னுக்குப் போவதும் பின்னுக்கு வருவதுமாக அல்லோல கல்லோலப்பட்டார்கள். புத்தகத்தை விரித்துப் பார்ப்பதும், தங்களுக்குள் பலத்துக் கதைத்து சிரிப்பதும், புத்தகத்தை ஒருவர் திறந்து புதையலைக் காட்டுவது போல மற்றவருக்குக் காட்டுவதுமாக நின்றார்கள்.

விற்பனை களை கட்டத் தொடங்கியது. அடுத்த அரைமணி நேரத்தில் புத்தகங்கள் எல்லாம் காலி. புத்தகங்கள் எல்லாம் என்றால் அவருடைய புத்தகங்கள் மாத்திரம் காலி. மிகுதி எல்லாப் புத்தகங்களும் அப்படியே பவுத்திரமாக இருந்தன.

மேலே சொன்னவை ‘யாவும் கற்பனை அல்ல’.


No comments:

Post a Comment