Monday, 14 September 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 14 - புதிய  பூதம்


                 “ஏன் ஸ்கொற்லன்ட் யாட் பயங்கரவாத எதிர்ப்பிரிவு பொலிஸ் அதிகாரி எங்களிடம் வரப்போகிறான்? உனக்கு ஏதாவது புரிகிறதா, ஜீவிதா?"

                பூமாவின் கேள்விக்கு ஜீவிதா வாயால் பதில் கூறாமல் காலடியிலுள்ள செங்கம்பளத்தைப் பார்த்தபடி பக்கவாட்டில் தலை அசைத்தாள். வலது நெஞ்சில் படர்ந்த கூந்தலை அவள் விரல்கள் நோண்டிக்கொண்டிருந்தன.

                நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டது. ஜீவிதாவோ பூமாவோ சாப்பாட்டுப் பொட்டலங்களை இன்னும் தொடவில்லை. அவை யாராவது தங்களை விழுங்கி ஏப்பம் விடார்களா என்று தவம் கிடந்தன.

                பச்சைக்கண் பொலிஸ் பெட்டை ஜீவிதாவின் முந்தானையையும், பூமாவின் வெள்ளைக் கல் மூக்குத்தியையும் கடைக் கண்ணால் பார்த்தபடி வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். அவள் வாய் திறந்து ஏதாவது சொல்வாள் என்று எதிர் பார்த்தார்கள். அவள் மூச்சுவிடவே இல்லை. தன்பாட்டில் விடுவிடுஎன்று போய்க் கொண்டிருந்தாள்.

                 எங்கும் பேயுறங்கும் நிசப்தம். பயம் அவர்களைத் தாலாட்ட அவர்கள் கால்களும் கைகளும் தப்புத்தாளம் போட்டுக் கொண்டு இருந்தன.

                நேரம் இரவு எட்டு மணி. அவர்கள் இருவரும் வரவேற்பறையை விட்டு வெளியேறி நகர்ஓடையின் இருபக்கமும் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தனர். அந்த நீண்டு நீண்;டு செல்கின்ற நகர்ஓடையில் யாருமே தென்படவில்லை. ஓரே மரண நிசப்தம். தரையின் சிவப்புக் கம்பளமும், சுவரின் மாறிமாறிக் குத்தாக அமைந்த கறுப்பு-சிவப்பு பத்தி வண்ணங்களும் பயத்தைவேறு அள்ளி இறைத்து அவர்களை முறைத்துப் பார்த்தன.
ஏன் ஜீவிதா எங்களை இங்கே நிறுத்தி வைத்துள்ளார்கள்?"
அதுதான் எனக்கும் புரியவில்லை? சிங்கள ஆமி செய்கிறது போல வம்புக்கு வைத்திருக்கிறார்களோ? ஒன்றுமே புரியவில்லை பூமா" என்று ஜீவிதா கூறிவிட்டு பூமாவைப் பார்த்தாள். அவள் முகத்தில் அச்சம் அள்ளிப் பூசி இருந்தது. 
இது லண்டன் ஜீவிதா. சிங்கள இராணுவம் செய்வது போல - பிரிடிஷ்காரன் அப்பாவித் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துப் போட்டு, கொலை செய்து பிரேதத்தை புதைக்கவோ மலசலக் குழியில் பதுக்கவோ மாட்டான். அப்படி கெட்டது எதுவும் இந்த நாட்டிலே நடவாது ஜீவிதா. எங்களையும் விசாரிக்கப் போகிறார்கள் போல?"
அப்படியும் இருக்கலாம். எங்களிடமும் ஏதாவது பிடுங்கி எடுக்கிற பொலிஸ் புத்திதான். உலகமெல்லாம் பொலிஸ் புத்தி ஒரேமாதிரித்தான்." ஜீவிதா கூறினாள்.
இப்போதே நேரம் இரவு எட்டாகிவிட்டது. எப்போது விசாரிக்கப் போகிறார்கள்?"

                அவர்களது கண்களைத் திடீரென நகர்ஓடையின் அந்தத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு உருவங்கள் சுண்டி இழுத்தன. ஊன்றிப் பார்த்தார்கள். அவர்கள் முகங்களில் ஒளியும் இருளும் மாறி மாறி மின் வெட்டின. ஒருவித திகிலோடு கவனமாக அவதானித்தார்கள்.

                அதே ஊதிப்புடைத்த வெள்ளைக்காரன். அவனருகே கிட்டத்தட்ட அவனளவு உயரமான இன்னொருவன். ஜீவிதா உற்றுப் பார்த்தாள். மீண்டும் கண்மடல்களை அகல விரித்து கவனமாகப் பார்த்தாள். வாடியிருந்த அவள் வதனம் செந்தாமரை மொட்டு திடீரென ஒரேயடியாக மலர்ந்தது போல உயிர் பெற்று பிரகாசித்து ஒளிவீசியது. 

அமிர் பூமா!" அவளின் ஆனந்தக் குரல் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.
அமிரா!"
ஓம். அந்த கறுப்புக் கண்ணாடி போட்ட வெள்ளையனோடு எங்களை நோக்கி வருவது அமிர்தான். நன்றாகப் பார்."

                அப்பொழுது அமிரை அழைத்து வந்துகொண்டிருந்த ஊதிப்புடைத்த வெளள்ளைக்காரனைப் பூமா மிக உற்று நோக்கினாள். கறுப்பு மூக்குக் கண்ணாடி அவனது அடையாளத்தைக் காணவிடாது திரை போட்டது. பூமா வைத்த கண் வாங்காமல் அவனோ இவன்என்று அங்கலாய்த்தாள்.

                அந்த கருநீல கழுத்துப்பட்டி கட்டிய வெள்ளைக்காரன் எதுவித உணர்ச்சிகளும் இன்றி நேரே நிமிர்ந்து பார்த்தபடி, அணி நடையில் நடப்பது போல ஒரே சீராகக் காலடிகளை எடுத்து வைத்து, செங்கம்பள நகர்ஓடை நீளத்துக்கு நடந்து வந்து அவர்களைக் கடந்து தொடர்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தான்.

                அமிர் போகவில்லை. அவன் தன்னைத் தேடி வந்தவர்களைப் பார்த்துச் சிரித்தபடி, ஜீவிதா அருகே நின்றான். 

                பூமா அமிரைப் பார்க்கவில்லை. போய்க்கொண்டிருந்த அந்த வெள்ளையனை விழுங்கிவிடுவது போல தலையை நிமிர்த்தி வாயை ஆவென்று திறந்தபடி பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் தொடர்ந்து அதே சீர்ப்பிரமாணத்தில் நடந்து மறு அந்தத்தில் திரும்பி மறைவதை பார்த்து 'என்னை விசாரித்த அதே வெள்ளைக்காரன் தானா? ஏன் இரவு நேரம் கறுப்புக் கண்ணாடி போட்டிருக்கிறான்?” என்று தன்னுள் கூறிப் பெருமூச்சுவிட்டாள். அவளுக்கு அமிரை விசாரிக்க விருப்பம். ஆனால் காலையில் ஆவரங்கால் அன்ரி வீட்டில் சந்தித்த ஊதிப்புடைத்த வீமன் போட்ட எச்சரிக்கை இரைந்து உறுமி அவளை மிரட்டியது.

                        ழூ

                ஜீவிதாவின் கார் வீடு திரும்பிக்கொண்டிருந்தது. நேரம் இரவு ஒன்பதாகப் போகின்றது. எதிரே அடுத்தடுத்து வந்த வாகனங்களின் முகப்பு வெளிச்சங்கள் சின்ன சின்ன வட்ட அம்புலிகளாகத் தெரிந்தன.

                கார் ஓட்டுநர் ஆசனத்தில் இப்பொழுது ஜீவிதா இல்லை. பூமாவே ஜீவிதாவின் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள். காரின் பின் ஆசனத்தில் இருந்த ஜீவிதா தனது அருகில் இருந்த அமிரோடு உரையாடுவதைக் காதில் வாங்கியபடி, பூமா காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

லிவர்பூலுக்கு ஏன் போனீர்கள்?" ஜீவிதா வினாவினாள்.

      நடந்தவற்றை அப்படியே அமிர் ஒப்புவித்தான். இறுதியாக அது கில்லாடியின் பேக். அவர் ஹோட்டல் கார் பார்க்கில்சூட்டியின் காரடியிலே நிற்கிறார். என்னைக் கொண்டுவரச் சொல்லிவிட்டு முன்னே போய்விட்டார்" என்று கூறிய அமிரின் காதுகளில், அதன் பின்னர் பொலிசார் அவனை லிவர்பூல் ஹோட்டலில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பேக்கில் ஹெரோயின் போதைப் பொருள் இருப்பதை அவதானித்தபின் நடந்த, உரையாடல்கள் ஒலித்தன.
                                               
எங்கே கார் நிற்கிறது?" 
கார் பார்க்பண்ணுமிடத்தில்."
கார் என்ன நிறம்?"
சிகப்பு. பி.எம்.டபிள்யூ."
“‘நம்பர்;’ என்ன?"
யு796 ருலுரு."
நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்?"
ஈஸ்ற்ஹம். நியூஹம் பரோ."
நீ ஏன் அவர்களோடு வந்தாhய்?"
ஊர் பார்க்கலாம். வாறியா என்று கேட்டார்கள். 'ஆம்' என்று கூறி வந்தேன்."
நீ எங்கே அவர்களைச் சந்தித்தாய்?"
நான் கில்லாடி வீட்டில்தான் தங்கி இருக்கிறேன்."
என்ன விலாசம்?"
“239 பேர்ஜஸ் வீதி, ஈஸ்ற்ஹம், நு6 னுகு5"
உன்னிடம் கார் இருக்கிறதா?"
இல்லை."
உன்னுடைய மோபைல் ரெலிபோன் நம்பர் என்ன?"
என்னிடம் மோபைல் இல்லை."
உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?"
எட்டு பவுணும் கொஞ்சச் சில்லறையும்."

நீ எந்த நாட்டவன்."
யாழ்ப்பாணம், சிறீ லங்கா."
"நீ நன்றாக ஆங்கிலம் பேசுகிறாய். நீ யூ.கேக்கு வந்து எவ்வளவு காலம்?"
ஏழு மாதம்."
நீ இலங்கையில் ஆயுதம் ஏந்திய இயக்கம் எதிலாவது இருந்தாயா?"
இல்லை. நான் ஒரு மிதவாதி, ஜனநாயகவாதி. வன்முறையைக் கடுமையாக  எதிர்ப்பவன்."
நீ இலங்கையில் என்ன தொழில் செய்தாய்?"
பி.ஏய்ச்.டி. பட்டம் பெறுவதற்காக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன்."
ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு என்ன துறையில்?" என்று விசாரித்தான்.
அரசியல் விஞ்ஞானம்."
எது சம்பந்தமாக?"
பெரும்பான்மை ஆட்சியும் பயங்கரவாதமும்."
என்ன?"
பெரும்பான்மை ஆட்சியும் பயங்கரவாதமும்."

                அத்தோடு அவனது காதுகளில் கேட்ட ஹோட்டல் விசாரணைச் சம்பவங்களின் தொடர்பு அறுந்தது.
                                               
                                                             ழூ
                நிலத்தை இருள் நன்கு கௌவியிருந்தது. வீதி நீளத்துக்கு மின்சாரக் குமிழ்களும் ரியூப்களும் இருளைப் பகலாக்கின. வீதி நிறைந்த கார்கள் ஒளி பாய்ச்சி மெதுவாக அணிநடை வகுத்து ஊர்ந்தன. அந்த அணிநடை நடுவே காரை மெதுவாக ஓட்டிய பூமா,

என்ன அமிர் கதையை நிறுத்தி விட்டீர்கள். பின்னர் என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று தூண்டினாள் ஜீவிதா.
                “பிறகு என்ன. லிவர்பூல் ஹோட்டல் அறையிலிருந்து விசாரணை செய்த அந்தப் பொலிஸ்காரி விசாரணையை நிறுத்தி விட்டு, மற்ற ஒரு பொலிஸ்காரனுக்கு ஏதோ கூறி அவனை அழைத்துக் கொண்டு வெளியே போனாள்.
                ஏறக்குறைய அரை  மணி நேரத்தின் பின்னர் உள்ளே நின்ற ஒரு பொலிஸ் காரனுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அதனை அடுத்து அவன் நான் போதைப் பொருள் வைத்திருப்பதாகக் கூறி எனது கைகள் இரண்டையும் பின்னுக்கு மடக்கி விலங்கிட்டுவிட்டு ஒரு கதிரையில் இருக்கும்படி கட்டளையிட்டான்."
நீங்கள் உள்ளதைச் சொல்லியிருக்கலாமே?" பூமாதான் சொன்னாள்.
உள்ளதைச் சொன்னேன். அந்தப் பார்சல் என்னுடையது அல்ல என்று வாதிட்டேன்.
'வாயை மூடிக்கொண்டிரு. பொலிஸ் நிலையத்துக்குப் போனபின்னர் கதைக்கலாம்என்று அதட்டினான். அதன்மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அறையை விட்டு வெளியேறியவர்கள் கில்லாடியையும் சூட்டியையும் கைது செய்யப் போய் விட்டார்கள் என்றே நான் நம்பினேன். வேறு இலங்கையரை நான் லிவர்பூல் சென்ற நேரம் தொடக்கம் காணவில்லை. எனவே அவர்களை இலகுவாக அடையாளங் கண்டு பிடிப்பார்கள் என்றே எதிர்பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை."

                கார் ஓடிக் கொண்டிருந்தது. பூமாவின் மனத் திரையில் அந்த கறுப்புக் கண்ணாடி ஊதிப்புடைத்த வீமன் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தான். திடீரென அவள் அமிரைக் கேட்டாள்.
அது உங்களுடைய பேக் அல்ல என்பது பின்னர் பொலிசுக்குத் தெரியுமா?"
ஆம்."
அப்படியானால் ஏன் இத்தனை நாட்களாக அடைத்து வைத்திருந்தார்கள்?"

அமிருக்கு பக் என்றது.

                ஸ்கொற்லன்ட் யாட்டில் அமிரின் விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த  ஊதிப் புடைத்த நீலக் கண் அதிகாரி, கில்லாடியும் சூட்டியும் தாம் தப்புவதற்காகவே அமிரைப் பலி வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. ஆனால் அந்த அதிகாரி அமிரை ஐந்து நாட்கள் தடுத்து வைத்ததற்கு வேறு காரணங்கள் இருந்தன. 

                அமிரின் வாக்கு மூலங்களும் ரேப் றெக்கோடரும் யாழ்ப்பாண தீவிரவாத இயக்கங்களிலிருந்து தப்பியோடி மேற்கு நாடுகளில் வாழும் சில பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட துப்புகளையும் செய்திகளையும் வெளிச்சமிட்டதினாலேயே, அவை சம்பந்தமான முக்கிய வாக்கு மூலங்களைப் பெறுவதற்காகவே ஐந்து தினங்கள் அவனை ஸ்கொற்லன்ட் யாட்டில் அந்த ஊதிப்புடைத்த நீலக் கண் அதிகாரி தடுத்து வைத்திருந்தான். அந்த விசாரணையை நடாத்திய அதிகாரி அதன் மூலம் தனக்குப் பதவி உயர்வும் புகழும் சேரும் என்பதற்காகவே அமிரைத் துருவித் துருவி விசாரித்ததினால் அவனுக்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டன. இன்றேல் கைது செய்யப்பட்ட அன்று இரவே அமிர் விடுதலையாகியிருப்பான்.

                அமிரை விடுதலை செய்த பொழுது 'மிஸ்டர் அமிர். நான் உன்னைச் சந்தித்ததையோ உன்னிடம் வாய்ப்பிறப்பு வாங்கியதையோ எந்தக் காரணம் கொண்;டும் யாருக்கும் வெளியிடக் கூடாது. அதனால் எதிர்காலத்தில் வீண் துன்பங்களை நீ சந்திக்கவேண்டி வரும்என்று எச்சரித்திருந்த காரணத்தினாலேயே அமிர் பூமாவின் 'ஏன் இத்தனை நாட்களாக அடைத்து வைத்திருந்தார்கள்?” என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. கார் இரைச்சலில் கேட்காதது போல பாசாங்கு செய்தான்.
                                                                               
                                         ழூ

                அப்போதைப் பொருள் பேக் அமிருடையது அல்ல என்று தெரிந்த பின்னரும் ஸ்கொற்லன்ட் யாட் பொலிசார் கில்லாடியையும் சூட்டியையும் கைது செய்யாமல் விட்ட செயல் அமிருக்கு மட்டுமல்லாமல் ஜீவிதா பூமா இருவருக்கும் புதிராகவே இருந்தது. 

                ஸ்கொற்லன்ட் யாட் அதிகாரிகள் கில்லாடியையும் கோட்டான் சூட்டியையும் கைது செய்யாமல் விட்டதற்கு வேறு காரணங்கள் இருந்தன. கில்லாடி சூட்டி ஆகிய இருவரும் உள்நாட்டுள் போதைப் பொருள் ஏற்றி இறக்கும் வியாபாரிகள். அவர்கள் பெயர் விலாசம் எல்லாவற்றையும் சேகரித்து விட்டார்கள். அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஆனால் ஸ்கொற்லன்ட் யாட்டின் நோக்கம்  ஹெரோயினை லிவர்பூல் துறைமுகத்துக்கு கடத்தி வரும் மாபியா கூட்டத்தைக் கைப்பற்றுவதே. அந்த மாபியா கூட்டம் உசாராகிவிடும் என்ற காரணத்தினாலேயே கில்லாடியையும் சூட்டியையும் கைது செய்யவில்லை.

                                                ழூ
                கார் ஒரு சந்தியில் பச்சைச் சைகைக்காக நிறுத்தப்பட்டு இருந்தது. பூமா திரும்பி அமிரைப் பார்த்துக் கேட்டாள். அவள் வேறு ஒரு திசைக்கு அமிரை இழுக்கப் போகிறாள் என்பது ஜீவிதாவுக்கும் அப்போது விளங்கவில்லை.
என்ன அமிர் நான் சொன்னது கேட்கவில்லையா?"
என்ன கேட்டாய்?"
ஏன் ஐந்து நாட்கள் ஸ்கொட்லன்ட் யாட்டில் தடுத்து வைத்திருந்தார்கள்?"
தெரியாது."
உங்களுக்கு ஒன்றுந் தெரியாது. லண்டனிலே சனம் உங்களைப் பற்றிக் குசுகுசுக்கிறதும் தெரியாது."
என்ன பூமா புதிர் போடுகிறாய்?"
புதிர் ஒன்றுமில்லை. சகோதரி மாதிரிப் பழகிவிட்டேன். சொல்ல வேண்டியது என்னுடைய கடமை" என்று கூறிய பின்னர்தான் அவள் தான் முகத்துக்கு நேரே அந்த விசயத்தைச் சொல்வது முறையோ என்று தன்னைத் தானே வினாவினாள். அவள் சொல்லப் போவது ஜீவிதாவுக்கு பட்டிருக்கவேண்டும். அமிர் என்ன சொல்லப் போகிறான் என்று அவனது வாயைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதித்தாள்.
என்ன குசுகுசுக்கிறார்கள்?" அமிர் குழம்பிய மனதோடு கேட்டான்.
நீங்கள் நதியாவோடு .............." அவளுக்கு அதன் மேல் சொல்ல முடியவில்லை.
அமிருக்கு நெஞ்சில் சுத்தியலால் படாரென அடித்தது போல இருந்தது. அதனைக் காட்டிக்கொள்ளாமல்,
எனக்கு நீ என்ன சொல்ல விரும்புகிறாய் என்பது புரியவில்லை" என்று கூறினான்.
நதியாவும் நீங்களும் கோவிலில் நெருக்கமாக நின்று ..." அவளால் தொடரமுடியவில்லை. அமிருக்கு விளங்கியது. தாங்கள் இருவரும் கோவிலில் நெருக்கமாக நின்று சிரித்துப் பேசுவதைக் குறிப்பிடுகிறாள் என்று.
அபத்தம். அவள் என்கூடப் பிறந்த தங்கை மாதிரிப் பழகுகிறாள். உப்படிச் சொல்வது முறையில்லை. அவள் ஒரு அப்பாவிப் பெட்டை" என்றான் அமிர்.

                நதியாவின் பேச்சு வந்ததும் ஜீவிதாவின் உள்ளத்தில் ஒளித்திருந்த சந்தேகப் பேய் தலையை விரித்தது. அதுவரை பேசாதிருந்த அவள் தனது உள்ளக் குமுறலைக் கொட்டினாள்.

நீங்கள் அவள் வீட்டில் வசிக்கிறீர்கள். அந்தப் பெட்டை நாய்க்கு கிழவன் வெறுத்துப் போயிட்டுது. அழகான இளம் மாப்பிள்ளை தேவைப்படுகிறது போல. வீட்டில் கதைத்தால் கில்லாடி சந்தேகப்படுவான். அதனால் கோவிலிலும் ........."
                அமிருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அதனை அவன் அடக்கிக் கொண்டதே ஓர் அதிசயந்தான். காரின் யன்னலூடாக வெளியே பார்த்தபடி சொன்னான். ஜீவிதா, கோவில் புனிதமானவிடம். அதன்மீது மனித ஊத்தைகளைக் கொட்டிக் களங்கப் படுத்த வேண்டாம்."
நீங்கள் எப்பவும் அந்த நலிந்த கூட்டம் பக்கந்தான். சொந்த பந்தங்கள் அறிந்தால் காறித் துப்புங்கள்." ஜீவிதா பொரிந்தாள்.
ஜீவிதா மேல்தட்டு என்றால் கொம்பா? லண்டனிலே வெள்ளைக்காரன் எங்கள் ஆட்களுக்குத் துப்புகிறது தெரியுமெல்லே. பெரியது சின்னது என்று பார்த்துத் துப்புகிறானா?"
தமிழ் அரசுக் கட்சி வன்னியசிங்கம்தான் முதலில் சமபந்தி போசனம் வைத்து அந்த கூட்டத்துக்குப் பரிந்து பேசினவர். நீங்களும் அவர்கள் கொடியிலே வந்த அரசியல் வாதிதானே? அந்த எழியவளோடு சிநேகிதம் வைக்கிறதென்றால் நான் பிரிந்து போகிறதைவிட வேறு வழி எனக்கு இல்லை."

                அமிர் அப்படியான கொடூரமான வார்த்தைகள் ஜீவிதாவின் வாயிலிருந்து கொட்டும் என்று கனவிலுமே எதிர்பார்க்கவில்லை. எனினும் நிதானத்தைக் கைவிடாது சொன்னான்.

உங்கள் இருவரிலும் நதியா வயதில் குறைந்தவள். படிப்பில் குறைந்தவள். அனுபவத்தில் குறைந்தவள். ஏன் குலம்கோத்திரத்தில்கூடக் குறைந்தவள். ஆனால் உலகத்தை உணர்ந்தவள். நியாய அநியாயம் புரிந்தவள். வாழ்க்கையின் பெருமை சிறுமைகளைத் தெரிந்தவள். யாழ்ப்பாண கலாசாரத்தின் குறியீடு அவள். தர்மத்தின் நாதம் அவள்."
                இறுதி மூன்று சொற்களும் தான் கஷ்டப்பட்ட சமயம் 'நீங்களா சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து உதவினீர்கள்என்று கேட்பதற்குப் பதிலாக அவனால் பயன்படுதப்பட்டவைகளே. அவன் மனதுக்குள் தனது ஆத்திரங்களையும் குமுறல்களையும் நசுக்கி அமுக்கி வைத்துக்கொண்டான்.

                பூமாவுக்கு விளங்கியது அவன் நதியா பக்கந்தான் பேசுவான் என்று. சிநேகிதம் என்றால் தனிப்பட நட்பு என்பதல்ல அதன் கருத்து, ஆபத்து வேளைகளில் நண்பனைத் துன்பங்களிலிருந்து மீட்பதே அதன் பிரதான மந்திரம் என்பது புரிந்தவள் பூமா. எனவே அவள் அமிருக்கு நிதானமாகக் கூறினாள்.

அமிர் உலகம் பேசுவதை விடுவோம். இப்போ நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்?"
கில்லாடி வீட்டுக்கு."
அதை நான் விரும்பவி;லை. பொலிஸ் உங்களைக் கைது செய்யக் காரணம் கில்லாடிதான் என்பதற்காக மட்டுமல்ல. வேறு முக்கிய காரணமும் இருக்கிறது."
என்ன காரணம்?"
மூத்தான் பெண்சாதிதான் கிசுகிசு கதையைப் பரப்புகிறாள். அது கில்லாடி காதில் விழுந்தால்? பிறகு குடும்பத்துள் குழப்பந்தான். குடும்பம் பிரியநேர்ந்தால்? உலகம் உங்களைத்தான் தூற்றும். அதற்கு நீங்கள் காரணமாகக் கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம்."

                அவளுடைய சொற்கள் அமிரின் நெஞ்சை உறையச் செய்தது. மூத்தான் பெண்சாதி தன்னையும் நதியாவையும் கோவிலில் நோட்டம் பார்த்த கோலங்கள் அவன் கண்களில் நெழிந்தன. அமிர் பதில் பேசவில்லை. கண்ணாடியூடாக எதிரே வீதியைப் பார்த்தான். வாகனங்களின் சின்ன சின்ன வட்ட வெளிச்சங்கள் இரவைக் கிழித்து மின்னலடித்தன. பூமா அமிரின் பதிலை எதிர் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். அமிர் நீண்ட நேர மௌனத்திற்குப் பிறகு கேட்டான்.
பூமா நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?"
பூமாவுக்கு விளங்கியது அமிர் யதார்த்தமாகச் சிந்திக்க முற்பட்டுவிட்டான் என்று.
அமிர், லண்டனுக்கு வந்ததும் சனம் மாறிவிடுகிறது. நீங்கள் படித்தனீங்கள். உங்களுக்கு ஒரு கௌரவமான பின்னணி உள்ளது. உங்கள் செயல் ஒரு குடும்பத்தை பிரிக்கக்கூடாது. அவள் ஒரு சின்னப் பெட்டை. பிறகு உங்களுக்கு மட்டுமில்லை எங்கள் சனம் எல்லாத்துக்கும் கெட்டபெயர்தான் வரும். நீங்கள் இனிமேலும் கில்லாடி வீட்டில் வசிப்பதை நான் விரும்ப வில்லை." பூமா தான் சொல்ல நினைத்ததை - தனது கடமை என்று எண்ணியதை மளமளவென்று சொல்லிவிட்டு ஜீவிதாவைப் பார்த்தாள். ஜீவிதாவும் இன்னொரு காரணம் கூறினாள்.
ஊர்க் குசுகுசுப்பு கில்லாடி காதில் விழுந்தால்? அவன் கழுதைப்புலி இயக்கத்திலே இருந்த வேளை தெல்லிப்பழையில் எத்தனைபேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றவன்? தெரியாதே? அவன் உங்களை உயிரோடு வாழவிடான். அவன் செய்யாவிட்டாலும் ஆளை வைத்துச் செய்விப்பான். அவனிடம் காசு விளைகிறது."
சரி. நீங்கள் இரண்டு பேரும் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்?" திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டான்.
நீங்கள் இனிமேல் நதியாவீட்டில் வசிக்கக் கூடாது. இப்போ அங்கே செல்லவேண்டாம்."
சரி. நான் அங்கு வசிக்காமல் விடுகிறேன். இப்பொழுது நான் போய்த் தங்குவதற்கு ஒரு இடந்;தேவையே? இரவில் எங்கே தேடுவது."

                அவனது கேள்வி அங்கு நிசப்தத்தை உண்டாக்கியது. சில வினாடிகள் கழித்து,
பூமா" என்றாள் ஜீவிதா.
என்ன ஜீவிதா?"
நீ என்னுடைய அறைக்கு வா. உன்னுடைய அறையை அமிருக்கு கொடுப்பம்."
ஆவரங்கால் அன்ரி என்ன சொல்கிறாவோ? அவ யாழ்ப்பாண பெடியளுக்கு இனிமேல் வீடு கொடுப்பதில்லை என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார்."
எதற்கும் மோபைல் போனை எடுத்து அன்ரியைக் கேட்டுப்பார் பூமா."

                பூமா கiரை ஓட்டியபடியே ஆவரங்கால் அன்ரியிடம் தனது அறையை அமிருக்குக் கொடுக்கும்படி போனில்கேட்டாள். பூமாவின் அறையை அமிருக்குக் கொடுக்க அன்ரி முதலில் தயங்கிய பொழுதிலும், பூமா ஒருவாறு அவவைச் சம்மதிக்கச் செய்தாள். ஜீவிதாவின் வீட்டுக்கு பூமா குடி போகத் தேவை இல்லை தனது அறையில் தங்கலாம் என்றார் அன்ரி. எல்லாம் அன்ரியின் லண்டன் வியாபாரந்தான்.

                ஆவரங்கால் அன்ரி வீட்டில் வசிக்க அமிருக்கு அறை கிடைத்ததில் ஜீவிதாவுக்குத்தான் அதிக மகிழ்ச்சி. காரணம் நதியா இனிமேல் அமிரைச் சுற்றிச் சுற்றி வரமாட்டாள் என்று நம்பினாள். அமிரும் பூமாவும் காரைவிட்டு இறங்கியதும், ஜீவிதா காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு, நதியா இனிமேல் தன் வழியில் குறுக்கிடாள் என்ற மகிழ்ச்சியோடு சென்றாள்.


                ஆனால் நதியா அமிரைப் பின் தொடர, அவளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இரத்தத்தின் இரத்தங்களைத் துரத்திப் பிடித்து இழுத்துச் சென்று அடித்துக் குத்தி கழுத்தை நெரித்துச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று வீமன்காமக் கொலனிப் பனந்தோப்புச் சல்லிதோண்டிய பள்ளங்களுள் உதைத்துத் தள்ளிய கழுதைப்புலி இயக்க கில்லாடி வருவான் என்பது அப்பொழுது ஜீவிதாவுக்குத் தெரியாது.

தொடரும்...

No comments:

Post a Comment