கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 16 - கறுப்பங்கி மர்ம நெட்டையன்
அமிர் ஸ்கொற்லன்ட் யாட்டிலிருந்து திரும்பிய நான்காவது தினம். கோடை கால மதியத்துக்கு வெகு நேரம் இருந்தது. பகலவனின் கதிர்கள் ஈஸ்ற்ஹம் நகரை அணைத்து கணகணப்பூட்டியது.
"நாட்டுப் பீத்தல் நாய்க்குக்கூட நல்ல
குளிர்மையான சடைநாய் தேவைப்படுகிறது. யாழ்ப்பாண தாழ்வாரத்திலே எச்சம்
பொறுக்கினதுகளுக்கு லண்டன் வந்ததும் எங்கள் நடுப்பந்தி தேவைப்படுகிறது" என்று
புறுபுறுத்தபடி அசைந்தார். அந்த நாட்டுப் பெட்டை நாய், நடுவீட்டில் ஒரே பந்தியில் இருப்பதை திரும்பி வந்து
தான் காணப்போவது அப்போது அன்ரிக்குத் தெரியாது.
அதிகாரம் 16 - கறுப்பங்கி மர்ம நெட்டையன்
அமிர் ஸ்கொற்லன்ட் யாட்டிலிருந்து திரும்பிய நான்காவது தினம். கோடை கால மதியத்துக்கு வெகு நேரம் இருந்தது. பகலவனின் கதிர்கள் ஈஸ்ற்ஹம் நகரை அணைத்து கணகணப்பூட்டியது.
ஆவரங்கால் அன்ரி தனது வீட்டின் முன்னுள்ள நடை
பாதையில், கையில் உண்டியலை
பக்கவாட்டில் நீட்டிப் பிடித்தபடி, பிரயத்தனப்பட்டு
கால்களை மேலே தூக்கி இழுத்து முன்னே வைத்து ஆமை வேகத்தில் அசைவதை எதிர்ப்பக்க
நடைபாதையில் பிளெசற் பூங்காவிற்குப் போக வேகமாக சென்று கொண்டிருந்த நதியா கண்டாள்.
நதியாவின் சிவப்பு பிளவுசும,; கறுப்பு ரவுசரும் அன்ரியின் கண்களுக்கு அழைப்பு
அனுப்பி இருக்கவேண்டும். வெண் தலையைத் திருப்பி எதிர்ப்பக்க நடைபாதையை வெறித்துப்
பார்த்தார். கோவிலில் அவள் அமிரோடு சல்லாபம் புரிவது நினைவில் வந்து கண்ணில்
மிதக்க மூக்கைச் சுழித்தார். நதியாவைப் பற்றி மூத்தான் பெண்சாதிவேறு முதல் நாள்
அன்ரிக்குக் குசுகுசுத்திருந்தாள். மீண்டும் அன்ரி அவதானித்தார். துள்ளிப்
பாய்ந்து எழுந்து விழுந்து நடனமிட்ட நதியாவின் ‘போனி ரெயில்’ அன்ரியின் எரிச்சல் புகைச்சலுக்கு பெற்றோல் ஊற்றியது.
நதியா பிளெசற் பூங்காவிற்குள் கால்பதித்தபடி
அங்குள்ள உயர்ந்து பரந்த விருச்சங்களை நோக்கினாள். மாரியில் மொட்டையாக கருமையாகக்
காட்சியளித்த அவை ஈரவெப்ப வலயக்காடுகள் போல ஒரே பச்சைமயமாகக் காட்சியளித்தன.
மனம் குளிர்ந்தது.
கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். 'இன்னும்
ஐந்து நிமிடம் இருக்கிறது' என்று
வாய் சொல்ல, ரெனிஸ் மைதானங்களின்
எதிரே உள்ள ராட்சத மேப்பிள் மரத்தின் கீழே உள்ள ஒரு பச்சை வாங்கில் நதியா
அமர்ந்தாள். அருகே உள்ள விளையாட்டுப் பரப்பில் வெள்ளைகள் உதைபந்தாட்டம் ஆடுவதைப்
பார்த்துக் கொண்டிருந்தவள் தீயை மிதித்தவள் போலத் திடுக்கிட்டாள். கண்களைக்
கசக்கிக்கொண்டு பார்த்தாள். 'யார்
அந்த குழந்தைகள் மிருகக் காட்சிச்சாலை வேலி ஓரம் ஆளையாள் ஒட்டினாற்போல நின்று
கதைப்பது?” என்று தன்னை
உசாராக்கிக் கேட்டவள் மீண்டும் அந்த உயர்ந்த பெட்டையைப் பார்த்தாள். 'ஜீவிதாதான். கருநீல ஜீன்சும், வெள்ளை பிளவுசும,; கறுப்பு தொப்பியும் அணிந்திருக்கிறாள். யாரவன்
நெட்டையனாக இருக்கிறான்? கிட்டப்
போனால்தான் அடையாளம் காணலாம். கறுப்பு சேட்டும் கறுப்பு ரவுசரும்
அணிந்திருக்கிறான். ஒரு வேளை ஒன்றாகத் தொழில் செய்பவனாக இருக்குமோ? அதுதான் அவ்வளவு நெருக்கமாக நின்று கதைக்கிறாள்
போல. ஒருவேளை அமிரின் வருகைக்காக என்னைப் போலவே காத்திருந்த வேளை அவனை
எதிர்பாராமல் சந்தித்ததால் கதைக்கிறாளோ? அப்படித்தான் இருக்கும். நான் அமிரோடு கதைப்பதை விரும்பமாட்டாள். நான்
யாருக்கும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது. போவது நல்லது” என்று எண்ணிக் கலவரப்பட்டபடி மரக்கிளைகள் ஊடாக மேலே
வானத்தைப் பார்த்தாள்.
மிகமிக உயரத்தில் காட்சியளித்த நீலவானத்தில்
ஒரே திக்கில் பறந்து கொண்டிருந்த இரண்டு விமானங்கள் உறுமி ஊதி வெளியேற்றும்
ஒடுங்கிய இரண்டு கீற்று வெள்ளைப் புகை அடையாளங்கள் தொடர்ந்து தொடர்ந்து சமாந்தரமாக
நீண்டுகொண்டிருந்தன.
நதியாவின் மனம் மீண்டும் அவளது அந்தரங்க
சாம்ராச்சியத்துள் நுழைந்தது. ஜீவிதா அங்கிருக்கும் பொழுது தனது எண்ணத்தை
அமிருக்குக்கூறி அவனது சம்மதத்தைப் பெற முடியாதென்ற அச்சம்வேறு அவளை உறுத்தியது.
மேலும் அங்கிருப்பதால் பிரயோசனமில்லை என்று முடிவுசெய்தபின் வீடு திரும்ப வாங்கிலை
விட்டு எழுந்த பொழுது அவள் கண்களில் ஜீவிதாவின் நகர்வு மின்வெட்டியது. ஜீவிதா
ஓட்டமும் நடையுமாக மேற்குப் பக்க வாயில் பக்கம் விரைந்து பிளெசற் பூங்காவைவிட்டு
வெளியேறுவதைக் கூர்ந்து அவதானித்தாள். அச்சமயம் அந்தக் கறுப்பு அங்கி நெட்டையன்
பூங்காவின் கிழக்கு வாயிலை நோக்கி நடக்க அவன் எதிரே அமிர் பூங்காவினுள் வருவதைக்
கண்ட நதியாவின் முகம் விடிவெள்ளி கண்ட கானகத்து வழிப் போக்கன் போலப் பொலிவடைந்தது.
அப்பொழுது அமிரைக் கடந்து சென்ற கறுப்பு அங்கி
நெட்டையன், திரும்பி வந்து
மறைந்து நின்று அமிரைப் புகைப்படம் எடுத்தது அமிருக்கோ நதியாவுக்கோ தெரியாது. ஏன்
அமிரைப் புகைப் படம் எடுத்தான்? அதற்காக
இருக்குமோ?
நதியாவின் சிவப்பு பிளவுசே, அங்கு வந்த அமிருக்கு அவள் மேப்பிள் மரத்தின்
கீளே இருக்குமிடத்தைக் காட்டியிருக்கவேண்டும். அவன் விறுவிறென்று நீண்ட கால்களை
எட்டி வைத்து விரைந்து போய் அவளுக்குத் தரிசனம் கொடுத்தான். அவளது முகம் மலர்ந்து
மல்லிகை போலப் பொலிந்து புன்னகை சொரிய அவனைப் பார்த்து,
“அமிரண்ணா"
என்றாள்.
“நதியா, மன்னித்துக்கொள். சொன்ன நேரத்துக்கு
வரமுடியாமல் போய்விட்டது" என்று கூறியபடி அவளருகே வாங்கிலில் இருந்த அமிரை,
அவளின் கழுத்துத் தங்க மாலையில் தொங்கிப்
பக்கவாட்டில் ஆடிய இலைவடிவ சிவப்புப் பதக்க வைடூரியத்தின் ஒளி வீச்சு பற்றி
இழுத்து மடக்கியது. அப்பொழுது நதியா, “பரவாயில்லை. ஏன் வரச் சுணங்கினது?" என்று வினாவினாள்.
“இவ்வளவும்
ஜீவிதாவோடு பேச ரெலிபோன் பண்ணிப் பார்த்தேன். வீட்டிலும் இல்லை. நாகப்பனின்
அலுவலகத்துக்கும் போன் செய்தேன். அவள் வேலைக்கும் போகவில்லையாம்."
நதியாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நிட்சயமாக
ஜீவிதா அமிரைச் சந்திப்பதற்காக பூங்காவிற்கு வரவில்லை என்பது அவளுக்கு
வெளிச்சமாகியது. தான் அவளை அங்கு பார்த்தது பற்றிக் கூறினால் முற்கோபியான அமிரைச்
சமாதானப் படுத்தி தனது அலுவலை முடிக்க முடியாது என்பதை உணர்ந்த அவள், ஜீவிதாவை அங்கு காணாதது போலவே பாசாங்கு பண்ணத்
தீர்மானித்தாள். அப்பொழுது அமிர் கேட்டான், “ஏன் நதியா திடீரென முகம் மாறிவிட்டது? கில்லாடி வீட்டில் இல்லையா?"
“இல்லை. அவர் டோவர்
துறைமுகத்துக்குப் போய்விட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி ஒருவரை மீட்டுவரப்
போய்விட்டார்."
“தனியவா?"
“இல்லை. கூட்டாளி
சொலிசிற்றர் நாகப்பனோடு போயிருக்கிறார்."
“எப்பொழுது திரும்ப
வருவார்கள்?"
“நிட்சயமாக நேரம்
சொல்ல முடியாது. பெரும்பாலும் இன்று மாலை ஆறு மணிக்குப் பிறகு தான் வருவார்கள்.
ஒரு முக்கிய செய்தி, இரவு
ஊத்தைவாளி குகன் வீட்டுக்கு வந்து குசுகுசுத்தவன் ......"
“என்ன ஏதன்
வித்தியாசமாக?"
“ஓம். பொலிஸ் வந்து
தங்கள் வீடுகளுக்குள் பாய்ந்து கிண்டிக் கிளறி தேடுதல் செய்யப் போவதாக செய்தி
கிடைத்திருப்பதாக."
“ஏன் பொலிஸ் வரப்
போகுதாம்?"
“நீங்கள்
பொலிசுக்குத் தகவல் கொடுப்பதாக அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். உங்களில் ஆத்திரமாக
உள்ளார்கள். மூத்தான், பெண்சாதியையும்
பிள்ளைகள் மூன்றையும் கூட்டிக்கொண்டு வேறு இடத்துக்குப் போய்விட்டார்."
“எந்த இடத்துக்கு?"
“போறஸ்ற் கேற்
நகருக்கு."
அவர்களுடைய உரையாடல் திடீரென அறுந்தது. அவர்கள்
இருவரும் பிற்பக்கமாக உள்ள விளையாட்டு மைதானத்தை ஒரே சமயத்தில் நோக்கினர். உதை
பந்தாட்டம் விளையாடிய வெள்ளைப் பெடியளுக்கிடையில் சூடுபறக்கும் கூச்சலும்
பாய்ச்சலும் அடிதடியுமாக இருந்தது. பூங்காவில் நின்ற மக்கள் ஓடிச் சென்று சுற்றி
நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்கள் மத்தியிலே நின்ற கறுப்பங்கி நெட்டையன்
தன்னையும் அமிரையும் நோட்டம் பார்ப்பதை நதியா கடைக் கண்ணால் கண்டுவிட்டாள்.
ஜீவிதாவுடன் நின்ற நெட்டையன், தங்களை
ஏன் வேவு பார்க்க வேண்டும் என்ற பயம் அவளை நெருடியது. அவளுக்குப் பதற்றமாக
இருந்தது. அதனை அமிருக்குச் சொல்வதா விடுவதா என்பதைத் தீர்மானிக்க முடியாது அவள்
தலையைப் பக்கவாட்டில் ஆட்டினாள்.
“என்ன நதியா, முகம் திரும்பவும் மாறுகிறது? என்ன? ஏதோ மறைக்கிறாய், இல்லையா?"
“ஒன்றுமில்லை.
அவர்கள் உங்களில்தான் சந்தேகப்படுகிறார்கள். நீங்கள் தங்களைக் காட்டிக்கொடுத்ததாக
நம்புகிறார்கள்."
“நான் எதற்காக
அவர்களைப் பற்றித் தகவல் கொடுக்கவேண்டும்? பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். அந்தப் பழமொழி உனக்குத் தெரியாதா,
நதியா?"
“எனக்கு என்னுடைய
அவர் உப்படித்தொழில் செய்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஊரிலேயும் இயக்க சாட்டிலே
எத்தனை கொடுமை செய்தவர்? என் தலை
எழுத்து உப்படி ஒரு மனிதனுக்குக் கழுத்தை நீட்டினது. இயக்;கத்துக்கு ஓடியிருக்கலாம். நான் மடைச்சி. அதைவிடுங்கள்.
அவர் வீட்டிலே இருந்த போதைப்பொருட் பொட்டலங்களை எல்லாம் பொலித்தின் பேக்கில்
போட்டு தோட்டத்தில் தக்காளிப் பாத்திக்குள் புதைத்து விட்டார்."
“பொலிசுக்கும் மிக
இலகுவாகவிருக்கும்."
“என்ன சொல்கிறீர்கள்?
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை."
“எல்லாப்
பொட்டலங்களையும் ஒரே இடத்தில் இலகுவாக தூக்கி எடுக்கலாம்."
அப்பொழுது வீசிய காற்று பாக்கு நீரிணையைக்
கடந்து பின் பனைகளைக் கடந்து வேம்புகளைத் தழுவி வருகின்ற யாழ்ப்பாணத்து டிசம்பர்
மாத வடகீழ்ப் பருவக்காற்றுப்போல இதமாக இருந்தது.
நதியாவின் கண்கள் அமிரின் நடுவடுகிட்டு வாரிய
தலைமுடியிலிருந்து, அவனது
எடுப்பான மூக்கிற்குத் தாவின. அவனைப் பார்த்து,
“நான் இங்கே ஏன் வரச்
சொன்னேன் தெரியுமா?" என்று
கூறியபடி தனது கைப் பையைத் திறந்து ஒரு கடித உறையை எடுத்தபொழுது அவளது அழகிற்கு
மேலும் அழகூட்டிய தங்க வளையல்கள் ஐந்து சோடிகளும் கலீரெனச் சிரிப்பொலி எழுப்பின.
அந்த உறை அமிரின் கவனத்தை ஈர்ந்தது. இதுவரை
அவள் உறையை நீட்டியபோது அதனுள் கடிதம் இருக்கவில்லைக் காசு இருந்தது. இம்முறை
என்னவாக இருக்கும் என்று எண்ணியபொழுது அவள் அந்த உறையை அவனது கையில் திணித்தாள்.
“என்ன நதியா?"
“திறந்து
பாருங்களேன்."
பணமாக இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்
என்று மனம் எண்ணியது. முகத்தின் மாறு கோலங்கள் வேறு கதை சொன்னன. இப்பொழுது
பணத்தைப் பொறுத்தவரை அவன் படி இறங்கிவந்த செய்தி வரலாறாகிவிட்டது. அவனது சூடு
சொரணை மூட்டைகட்டிப் பிரயாணமாகி நீண்ட
காலம். யாழ்ப்பாணத்தில் பஞ்சணை மெத்தையில் படுத்தவர்கள், பளிங்குக் கல் பதித்த குளியல் அறையில் சீறிவரும் குழாய்
நீரில் குளித்தவர்கள், இலங்கை
இராணுவம் படையெடுத்து வந்தபொழுது வீடுவாசல் பொருள் பண்டத்தைவிட்டு வெறுங்கையோடு
ஓடிச்சென்று கிடைத்த கோவில் கொட்டகையிலோ வீட்டுக் கோடியிலோ படுக்கவில்லையா?
வற்றிப்போன குளத்து அழுக்குத் தண்ணீரில்
தாகம் தீர்க்கவில்லையா? மனிதனுக்கு
இல்லாவிட்டாலும் சமாளிக்கத் தெரியும். இருந்தாலும் அனுபவிக்கத் தெரியும்.
அமிர்மட்டும் விதிவிலக்கா? உறையைத்
திறந்து பார்த்தான்.
“ஆயிரம் பவுண்."
நதியா சொன்னாள்.
“ஏன் இவ்வளவு பணம்?"
அமிர் அடித்தொண்டையால் அனுங்கினான்.
“அன்ரி
முற்பணத்துக்கும் நச்சரிப்பார். பிறகு ஒவ்வொரு கிழமையும் கை ஏந்திக்கொண்டு திரியப்
போகிறீர்களோ? அன்ரியின்
நச்சரிப்புத் தாங்காமல்தான் முன்பிருந்த பெடியள் ஓடினதுகள்."
“நதியா, நான் எனக்கே ஒரு அவமானம். நான் எப்ப உன்னுடைய
பணத்தைத் திருப்பித் தரப்போகிறேனோ தெரியவில்லை."
“நீங்கள் என்
பணத்தைத் திருப்பித் தரத் தேவையில்லை. ஆனால் நான் சொல்கிறபடி செய்தால்
போதும்."
“என்ன செய்யவேண்டும்,
சொல் நதியா?"
“நீங்கள் வேலைக்குப்
போகவேண்டும். ஒவ்வொரு தொழிலும் மகத்துவமானது. அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தொழிலுக்கும் மேன்மையுமிருக்கிறது கீழ்மையும் இருக்கிறது. எந்தத்
தொழிலையும் இழிவாகக் கருதக்கூடாது. ஏன் என்றால் எந்தத் தொழில் செய்பவனும் தன்
தொழில் தனக்கு வாழ்வளிக்கும் தெய்வம் என்றே கருதுகிறான்."
“நதியா என்ன நீ இன்று
தத்துவம் பேசுகிறாய்?"
“என்னுடைய அப்பா அப்படித்தான்
தன் தொழிலைப் பற்றிக் கூறுவார்."
அவளுடைய தந்தை ஒரு நாளாந்த தோட்டக் கூலி. ஒரு
கூலியாளுக்குத் தெரிந்த ஒரு சின்னச் செய்தி கலாநிதிப் பட்டத்தை நெற்றியிலே ஒட்டப்
போகிறவருக்குத் தெரியவில்லை. அது அவனுக்கு உறைத்தது. அப்பொழுது பறந்து வந்து மேலே
மேப்பிள் மரக்கிளையில் இருந்த வெள்ளைச் சோடிப் புறாக்களைப் பார்த்தபடி மௌனமாக
இருந்தான்.
“என்ன வேலை கிடைத்தாலும் போங்கள். உங்களுடைய
படிப்பிற்குத் தகுந்த வேலை கிடைக்குமட்டும் நீங்கள் வேலைக்குப் போகவேண்டும்.
இல்லாவிட்டால் என்னுடைய உதவியும் கிட்டாமல் போனால் என்ன செய்வீர்கள்? பணத்துக்காகக் கெட்ட கூட்டங்களோடுதான்
சேரவேண்டி வரும்."
அவள் தன்னுடைய பண
உதவி இனிமேல் கிடையாது என்பதை நாசூக்காகச் சொன்னதைப் புரியாத அமிர், “நீ கவலைப்படாதே நதியா. ஜீவிதா எனக்கு
உதவுவாள்" என்று கூறிவிட்டு தலையை நிமிர்த்தி மீண்டும் அந்த பால் வெள்ளைப் புறாச்
சோடிகளைப் பார்த்தான்.
நதியா அவனுக்காகப் பச்சாதாபப்பட்டாள். அவனது
வெள்ளைச் சேட்டின் பையை அலங்கரித்த றோசா மலரைப் பார்த்தவாறு சிறிது நேரம்
யோசித்தாள். பின்னர் மீண்டும் அந்த வெள்ளைச் சோடிப் புறாக்களைப் பார்த்துக்
கொண்டிருந்த அமிருக்குக் கூறினாள்.
“அமிரண்ணா, இவ்வளவு காலத்திலே ஜீவிதா எவ்வளவு பணந் தந்தார்?
நீங்கள் கனவுலகத்தில் இருக்கிறீர்கள்.
ஐம்பது பவுணாவது தந்தாரா?"
நதியாவுக்கு வேறேதோ அமிருக்குக் கூறவேண்டும்
போலிருந்தது. அதைக் கூறமுடியாமல் வேறு பாதையால் சுற்றிவளைத்து தனது எண்ணத்தை
மெல்லிதாக வெளிப்படுத்திய பின்னர் அவனது முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று
நோக்கினாள்.
“நதியா நீ ஜீவிதாவை
மிக மட்டமாக நினைக்கிறாய்" என்று கூறியபடி அமிர் வாங்கைவிட்டு எழ நதியாவும்
எழுந்தாள். இருவரும் உரையாடியபடி அருகருகே நடந்தனர். அவள் மேலும் ஜீவிதாவின்
கதையைத் தொடவில்லை.
அமிரின் கமகட்டளவு உயர நதியா தலையை
நிமிர்த்தியபடி அவனைப் பார்த்துக் கதைத்ததில் கழுத்தில் சிறிய பிடிப்பு. வலியைப்
போக்கக் கழுத்தைத் திருப்பியவள் படம் விரித்த நாக பாம்பைக் கண்டவள் போல
அதிர்ந்தாள். மூத்தானின் மனைவி தனது கடைக் குட்டியோடு சற்றுத் தூரத்தில் ஒரு
வாங்கில் இருப்பதைக் கண்டாள். அங்கு நின்று கதைப்பது அபாயம் போல அவளுக்குப்பட்டது.
“அன்ரி வீட்டில்
இல்லைத்தானே?" நதியா
கேட்டாள்.
“ஓம்."
“நாங்கள் அவவின்
வீட்டிற்குப் போய் அங்கிருந்து கதைப்போம். ஒரு முக்கிய கதை இருக்கிறது.
அதற்காகத்தான் பூங்காவிற்கு வரச்சொன்னனான்?"
அவர்கள் இருவரும் பிளெசற் பூங்காவைவிட்டு
வெயியேறி வீதி ஓரத்து சீமெந்து நடைபாதை வழியே நெருக்கமாக நடந்தார்கள். அந்த
கறுப்பங்கி நெட்டையன் அவர்களைத் பின் தொடர்வது அவர்களுக்குத் தெரியாது.
அன்ரியின்
வரவேற்பறைக்குள் புகுந்த நதியாவை, தொலைக்
காட்சிப் பெட்டியின் மேல் இருந்த கருங் குரங்கு-பொம்மையின் கோமாளிச் சிரிப்பே
வரவேற்றது. அமிருக்கு அருகே நீண்ட சோபாவில் இருந்த நதியா தனது கை பேக்கைத் திறந்து
இன்னொரு உறையை எடுத்து அமிரிடம் நீட்டினாள். அமிருக்கு ஒன்றும் புரியவில்லை.
திறந்து பார்க்கும்படி தலையை அசைத்துக் கண்ணால் சொன்னாள். அவளின் ‘போனி ரெயில்’ ஆடியசைந்து அமிரின் பிரதிபலிப்பை நோட்டம் பார்த்தது.
அவன் உறையைத் திறந்தான். ஆச்சரியம் அவனை அழைத்தது.
“என்ன நதியா, மீண்டும் பணம். பாஸ்போட்?"
அவள் ஒன்றும் பேசவில்லை. அவன் பாஸ்போட்டைத்
திறந்து பார்த்தான். நதியாவின் படம்தான் முதலில் அவன் கண்களில் பட்டது. அவன்
நதியாவைப் பார்த்தான். அவள் கண்கள் பனிக்கத் தொடங்கின. ஆனால் அவள் உறுதியாக
இருக்கிறாள் என்பதை அவளது வார்த்தைகள் தெளிவுபடுத்தின.
“அமிரண்ணா, காலையில் நான் உங்களுக்கு ‘போனில்’ கூறினது இதைப்பற்றித்தான்."
அவனுக்கு ஏதோ தவறு நடக்கப் போகிறது என்ற
உணர்வு. மௌனமாக சுவரைப் பார்த்தபடி இருந்தான். அவள் மீண்டும் சொன்னாள்.
“நான் மிகுதிக் கதையை
இறுதித் தினம் கூறுகிறேன்."
“எனக்குப் பயமாக
இருக்கிறது நதியா. இந்திய சமாதானப் படையின் காலத்தில் யாழ்ப்பாணத்திலே கழுதைப்புலி
இயக்கத்திலே இருந்த சமயம் கில்லாடி பண்ணிய பயங்கரம் தெரியுந்தானே? தெல்லிப்பழை 'போஸ்ற் மாஸ்டர்' ராசையா, ஒப்பந்தகாரர்
பூபாலசிங்கம், தையிட்டி சிவபாதம்,
மாவிட்டபுரம் கனகசபையின் பேரன், நாகமணியின் பேரன் - இப்படி எத்னை பேரைச்
சுட்டுக்கொன்று வீமன்காமக் கொலனிப் பள்ளங்களுக்குள் வீசினவன். லண்டனில்கூட யாரும்
அவரைப் பகைக்க விரும்பமாட்டார்கள்."
“வீணாகப்
பயப்படுகிறீர்கள். அவருக்கு எப்படித் தெரியவரும்? நீங்கள்தான் இந்த உலகில் நான் நம்பும் ஒரே ஆள்.
நீங்களும் மறுத்தால் நான் வாழ் நாள் முழுவதும் நரகக் கிடங்கில் வாழவேண்டியதுதான்.
நான் இனிமேல் எனக்காக வாழவிரும்பவில்லை."
“மன்னித்துக்கொள்
நதியா. கில்லாடி மட்டுமல்ல எங்கள் உறவுச் சனம்கூட என்மீது வசைபாடும்;."
“அமிரண்ணா, நீங்கள் இப்போது அன்ரி வீட்டில்
வசிக்கிறீர்கள். யாருக்குமே தெரியப் போவதில்லை. என் உயிர் தொங்குகிற கயிற்றின்
புரிகள் பல அறுந்து இப்பொழுது ஒரு புரியிலேதான் தொங்குகிறேன். நான் உங்களைத்
துன்பப்படுத்த விரும்பவில்லை. விரும்பம் இல்லாவிட்டால் விடுங்கள். நான் வேறு
மார்க்கத்தைத் தேடிக்கொள்கிறேன்."
“சரி. நான் என்ன
செய்யவேண்டும் சொல் நதியா?"
அவளின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அவனால்
மறுக்கமுடியாது. மறுப்பது செய்நன்றி மறந்த செயலாகவிருக்கும் என்று அவன் மனம்
ஓலமிட்டது. தனக்கு வரக்கூடிய அபாயத்தைப் பொருட்படுத்தாது செஞ்சோற்றுக் கடனைத்
தீர்க்க உறுதிபூண்டான்.
“நான் என்ன
செய்யவேண்டும்?"
“விமான ரிக்கற்
புக்பண்ணவேண்டும்."
“யாழ்ப்பாணத்துக்கு?"
“இல்லை இந்தியாவுக்கு
- சென்னைக்கு. அங்கிருந்து வேதாரணியம் போய் வத்தை மூலம் ...."
“அங்கு யார்
இருக்கிறார்கள்?"
“ஒரு தூரத்து உறவு.
அக்கா முறை?" என்று நதியா
சொன்னாள். அது பச்சைப் பொய்.
அவள் கூறிய அக்கா, உறவு முறை அக்கா அல்ல. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாடு
சென்று வேதாரணியத்தில் தலைமறைவாய் வாழ்பவள். இருபத்தாறு வயது. கட்டு மஸ்தான உடல்.
சிறுத்தையின் கூரிய விழிகள். உரமேறிய கைகள். இரும்பு போன்ற வலிய இதயம். அவளிடம்
இவள் ஏன் போக வேண்டும்?
“நீ இவ்வளவு நாளும்
தமிழ்நாட்டில் வாழும் அக்கா பற்றி என்னிடம் எதுவுமே கூறவில்லை." அமிர்
சொன்னான்.
அதனை அமிர் விசாரித்து சிந்திக்காமல் இருக்க
வேண்டும் என்பதற்காக,
“நான் உங்களுக்குக்
கூறாத விடயங்கள்தான் அநேகம். கூறிய விடயங்கள் சொற்பம்" என்றாள் நதியா.
“என்ன சொல்கிறாய்
நதியா? உன்னுடைய பேச்சு இன்று ஒரே
புதிராக இருக்கிறது."
நதியா அவனுக்கு மட்டும் ஒரு புதிரல்ல. மனித
குலத்துக்கே ஒரு புதிர் என்பது அப்பொழுது அமிருக்குத் தெரியாது.
அமிரின் மனதில் ஐயங்கள் கிளர்ந்து எழுந்தன.
நதியாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவளின் முகம் மரத்து இருந்தது. அதில்
ஒருவித வைராக்கியம் படர்வதைக் கண்டான். அந்த வைராக்கியத்தை ஊடறுத்து ஒளி வருவதைக்
கண்டான். அவனால் அவளின் எண்ணத்தை எடைபோட முடியவில்லை.
“நதியா நீ நெருப்போடு
விளையாடுகிறாய்."
“என்னால்
வாழ்க்கையோடு விளையாட முடியவில்லை, அமிரண்ணா."
“நதியா நீ தமிழ்நாடு
போவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் கில்லாடிக்கு, அக்காவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிப் போட்டுப்
போய்வருகிறதுதான் நல்லது."
“அப்படியானால் நான்
உங்களிடம் உதவி கேட்டு வந்திருக்கத் தேவையில்லையே?" இவ்வளவு இறுக்கமாக என்றுமே நதியா அமிரோடு பேசியதில்லை.
அமிருக்கு அது புரிந்தது.
“என்ன சொல்கிறாய்
நதியா? நான் உனக்கு உதவிசெய்யக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு கடமையா?"
“கில்லாடியை முழுதாக
உங்களுக்குத் தெரியாது. எல்லாம் தெரிந்தபடியால்தான் நான் இந்தியாவுக்குப் போக
முடிவு செய்துள்ளேன்."
“கொஞ்;சம் உனது எண்ணத்தை விளக்கமாச் சொல்
நதியா."
இத்தனை நாட்களும் அவனுக்கு மறைத்து வந்த அந்த
முடிவைச் சொல்ல முன்னர், அவள்
அமிரைச் சோகம் கொட்டும் கண்களால் சிறிது நேரம் உற்று நோக்கினாள். தலையைப்
பக்கவாட்டில் ஆட்டி யோசித்தாள். பின்னர் உறுதியான குரலில் சொன்னாள்.
“நான் கில்லாடியைத் தூக்கி வீசிப்போட்டு ஓடப்
போகிறேன்."
அவள் முகம் சிவந்து வெடித்தது. கண்கள் நீர்
சொட்டவில்லை. அக்கினித் திரவத்தைக் கக்கின. திடீரெனக் கண்கள் கோலம் மாறி பேரொளி
வீசின. ஒருகால் அணையும் விளக்கின் ஒளி தெரிந்தது. இன்னொருகால் பிரகாசமான சுடர் ஒளி
தெரிந்தது. அமிரினால் அவள் கண்களின் மொழியை வாசிக்க முடியவில்லை.
அவ்வேளை நல்லெண்ணெய் வாசம் கட்டியம் கூற,
ஆவரங்கால் அன்ரி கதவைத் திறந்து, வரவேற்பறை வாசலை அடைந்து வெருண்டு அவர்களை
வெறித்துப் பார்த்த பொழுதுதான் ஒரே சோபாவில் நெருக்கமாக இருந்த அமிரும் நதியாவும்
திகைத்து எழுந்தார்கள்.
அன்ரி அவர்களை வெறித்துப் பார்த்தார். அவரின்
கண்கள் கொவ்வைப் பழம் போலச் சிவந்தன. கீழ் உதட்டைக் கடித்துச் சினந்து தலையை வெட்ட
குலைந்த அவரது பால் வெள்ளைக் கூந்தல் சதுராட்டம் போட்டது.
“இதென்னடி தேவடியாள் மடமே? போடி நாயே வெளியே. இந்தப் பக்கம் கால் வை.
தட்டி முறிப்பன் காலை. ஓ!"
அன்ரியின் சொற்கள் நச்சு அம்புகளாக அவர்கள்
இதயத்தைக் கிழித்தன. நதியா எழுந்து தன் வீட்டுக்குப் பறந்தாள். அமிர்
தலைகுனிந்தபடி முதல் மாடியிலுள்ள தனது அறைக்குப் போனான்.
அன்ரி தொடர்ந்து வைதுகொண்டிருப்பது அமிரின்
காதுகளில் தெளிவாக விழுந்தது. அவன் தனது அறையில் கட்டிலில் மல்லாக்காகப் படுத்தபடி
‘உங்கடை தடிப்புக்காகத்தானே
இயக்கக்காரன்கள் எல்லாம் உங்களைத் தேடிப்பிடித்து உதைக்கிறான்கள்’ என்று தன்பாட்டில் புறுபுறுத்தான். ஏறக்குறைய
ஐந்து மணி நேரம் ஆவரங்கால் அன்ரி இரைந்து புகைந்து உருண்டு முடிந்தது.
மாலை ஆறு மணி. பூமா வேலையிலிருந்து வந்து கதவைத்
திறந்து மேல் மாடிக்குப் போகப் படியில் ஏற முயன்ற சமயம்,
“நில்லு பூமா. எனக்கு
மறுமொழிசொல்லிப் போட்டுப் பிறகு உன்னுடைய அறைக்குப் போ" என்று சமையல்
அறையிலிருந்து அகப்பையோடு வந்து கொண்டிருந்த அன்ரி ஆவேசமாகக் கத்தினார்.
பூமா தனது கை பேக்கை படிக்கட்டில் வைத்துவிட்டு,
தனது தலையில் இருந்த சிவப்பு சிலைட்டைக்
கழற்றி கூந்தலை ஒழுங்கு செய்தபடி, “என்ன
அன்ரி சூடு பறக்கிறது? யாழ்ப்பாணத்தில்
சிங்களப் படை கறுப்பு நரிகளை நல்லாக அடித்துப் போட்டார்கள் என்று ஏதாவது
கூடாத-கெட்ட செய்தி அங்கிருந்து வந்திருக்கோ?" என்று கேட்டாள்.
“யாழ்ப்பாணத்திலிருந்து
வரவில்லை. எல்லாம் இங்கே இருந்துதான்." அன்ரி ஆத்திரத்தில் காலில்
கல்லெறிபட்ட நாய் போல உரத்துக் கத்தினார்.
“என்ன சொல்லுகிறியள்?"
“நீ நல்ல பெடியன்
என்று புளுகினாய். அதனாலேதான் உன்னுடைய அறையை அமிருக்குக் கொடுத்தனான்."
“அதற்கென்ன இப்ப?"
“அதற்கென்னவோ?
அவர் அந்த எழிய பெட்டையைக் கூட்டிவந்து
நடு வீட்டுக்குள்ளே வைத்துக் கொண்டாட்டம் போடுகிறார்;. மூத்தான் பெண்சாதிக்கும் உவையிலே சந்தேகம். கோவிலிலே
போடுகிற கூத்துப் போதாதென்று அந்தப் பெட்டை நாயை வீட்டுக்குள்ளும்
கொண்டுவந்திட்டார்."
அன்ரியின் வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப்போன
பூமா, தொலைக் காட்சிப் பெட்டியின்
மேலிருந்த கறுப்புக் குரங்கு-பொம்மையைப் பார்த்தாள். அது ஆவரங்கால் அன்ரியைப்
பார்த்துப் பற்களை நெருமுவது போல அவளுக்குப்பட்டது.
பூமா மெதுவாகக்
கேட்டாள். “என்ன சொல்கிறியள்
அன்ரி?"
“அந்தக் கில்லாடி
பெண்டாட்டி தேவடியாள் நதியாதான். அவளைக் கூட்டிவந்து நடு வீட்டுக்குள்ளே வைத்து
நான் வந்த நேரம் - அவை சினிமா நடத்துகினம். கூதல் சினிமா. நாங்கள் உந்த எழியதுகளை
வீட்டுத் திண்ணையில்கூட ஏறவிடுவதில்லை. அது உனக்குத் தெரியுமெல்லே பூமா."
அன்ரி குலத்தை இழுத்துச் கூச்சல் போடுவது
பூமாவுக்கு எரிச்சல் ஊட்டியது. அவவுக்கு மெல்லிதாக ஒரு பாடம் புகட்ட விரும்பி,
“அன்ரி நீங்கள் எழிய
எழிய என்று கத்துகிறீர்கள். உங்கள் கூடப்பிறந்த தங்கை - அரசம்மாவின் மகன்
பீதாம்பரம் ஒரு சங்கானை நட்டுவப் பெட்டையைக் கிட்டடியிலே காதல் பண்ணிக் கலியாணம்
பண்ணினவராம். லண்டன் சனம் எல்லோருக்கும் தெரிந்து குசுகுசுத்து காறித்
துப்புகினம். தான் பெரிது என்று குலுக்கின ஆவரங்கால் அன்ரி இப்பவும் தடிப்பிலே
முக்குகிறாவோ என்று கேட்குதுகள். அது உங்களுக்குத் தெரியாதோ?" என்று கேட்டுவிட்டு அன்ரியின் முகத்தைப் பார்த்தாள்.
நட்டுவர் வெள்ளாள சாதியிலும் தாழ்ந்த
சாதியில்லை. ஆனாலும் அன்ரி வெந்தணல் கிடங்கினுள் தூக்கி வீசப்பட்டவர் போல தீய்ந்து
அங்கமெல்லாம் கருகினார். கண்கள் சிவந்து பிதுங்கின. இதயம் தீயில் வெந்து
வெடித்தது. நாக்கு வாய்க்குள் ஒட்டிக்கொண்டு புரள மறுத்தது. அன்ரியின் நெற்றியில்
வியர்வைத் துளிகள் காளான்களைப்போலப் பூத்தன. அன்ரி பூமாவை வெறித்துப்
பார்த்துவிட்டு, தொலைக் காட்சிப்
பெட்டியின் மேலே குந்தியிருந்த குரங்கு-பொம்மையை நோக்கினார். அது வாயைப் பொத்திச்
சிரிப்பது போல அன்ரிக்கு பட்டது.
பூமா தொடர்ந்து சொன்னாள்.
“அன்ரி நீங்கள்
சத்தம் போடாதையுங்கோ. இனிமேல் நதியா வீட்டுக்குள் வராமல் செய்கிறேன்."
அன்ரி மெதுவாகச் சொன்னார்.
“அதை மட்டும்
செய்தால் போதுமே? நேற்றைக்குத்
திங்கட்கிழமை என்னுடைய கிழமைக் காசும் முற்பணமும் தரவேண்டும். அதையும் தரவில்லை.
முன்னைய பெடியளைப் போலத் தட்டிக்கொண்டு ஓடுகிற புத்திதான்."
“ஆவரங்கால் அன்ரி,
இவ்வளவு நாளும் அமிர் ஸ்கொற்லன்ட்
யாட்டில் இருந்து கஷ்டப்பட்டவர். கொஞ்ச நாட்கள் பொறுங்கோ?"
“அதெல்லாம்
சரிப்பட்டு வராது பூமா. பிசகைத் தீர்க்காவிட்டால் அறையை இன்றைக்கே காலி
பண்ணச்சொல்லு."
பூமா படியில் வைத்த கைபேக்கை எடுத்து வந்து
திறந்து பணத்தை எடுத்து நீட்டியபடி,
“ஆவரங்கால் அன்ரி,
இதைப் பிடியுங்கள். இதிலே முப்பது பவுண்
இருக்கிறது. ஜீவிதாவிடம் கேட்டு மிச்சத்தை வாங்கித்தருகிறேன். இரண்டொரு நாள்
பொறுங்கள்."
“இந்த முப்பது எந்த
மூலைக்குப் போதும்? 175 பவுண் தரவேண்டும்."
“ஏன் அவ்வளவு காசு?"
“முற்பணம்
நூறு."
“எழுபத்தைந்து பவுண்
அறைக்கும் மற்றச் செலவுக்குமோ? என்னிடம்
கிழமைக்கு 55 பவுண்தானே
வாங்கிறியள்."
“உன்னைப் போலவே
ஆம்பிளையள்? அவை அள்ளி
விழுங்குவினம் எல்லே? இன்றைக்கு
அவர் எனக்கு முழுக் காசையும் தரவேண்டும். அல்லது கூட்டிவந்தது மாதிரி ஆளைப்
பிடித்து இப்பவே வெளியே தள்ளு" என்று கூறிய அன்ரி நிமிர்ந்து வரவேற்பறை
வாயிலைப் பார்த்தார். அமிர் அங்கு நின்றான். அவன் அன்ரியின் அருகே சென்று,
“இந்தாங்கள் 175 பவுண்" என்று கூறியபடி பணத்தை
நீட்டினான்.
அன்ரியின் முகம்
சூரியனைக் கண்ட எஸ்கிமோவனைப் போலச் சிரித்தது. பற்கள் தெரியப் பணத்தை வாங்கியதும்,
“தம்பி குறை
நினையாதையும். முன்பு இருந்த பெடியள் செய்த திருகுதாள வேலையாலே யாரோடு என்ன
கதைக்கிறது என்று தெரியாமல் சொல்லிப் போட்டேன். குறை நினையாதை., என்ன தம்பி?" என்று வெகு மரியாதையாகக் கூறினார்.
“பரவாயில்லை
ஆவரங்கால் அன்ரி. இதையும் வைத்துக் கொள்ளுங்கள். இதில் 750 பவுண். பத்துக் கிழமைக்கு" என்று கூறி அப்பணத்தை
அமிர் நீட்டிய பொழுது அன்ரி கண்மடல்களை அகல விரித்து, வாயை அண்டங் காக்கா போல ஓவெனத் திறந்து அவனைப்
பார்த்தபடி,
“தம்பி ராசா. நீ
இன்னும் பகல் சாப்பாடு சாப்பிடவில்லை. போய்ச் சாப்பிடு ராசா. கோழிக் கறி சமைத்து
வைத்திருக்கிறேன். வயிற்றுக்கு ஓரவஞ்சகம் செய்யாமல் நல்லாகச் சாப்பிடு மகனே"
என்று பூப்போன்ற குரலில் சொன்னார்.
பூமா திகைத்துப்போய் நின்றாள். அவள் நெஞ்சம்
உறுமிப் பொருமியது. கேள்விக் கணைகள் அவளைச்
சல்லடை போட்டன. அவளும் கண் மடல்களை மூட மறந்து, ஆவென்று அமிரை வெருண்டு பார்க்க அவள் உள் மனம் புகையத்
தொடங்கியது. 'உவருக்கேது உவ்வளவு
பணம்? முற்பணம்வேறு அள்ளி
வீசுகிறார். அமிர் வேலைக்கும் போவதில்லை. சமூக உதவிப் பணமும் நிறுத்தியாகிவிட்டது.
உவரும் கில்லாடி கூட்டத்தோடு சேர்ந்து போதைப் பொருள் வியாபாரந்தானோ? எதற்கும் ஜீவிதாவின் காதில் உடனே போட்டு
வைக்கவேண்டும.;”
தொடரும்....
No comments:
Post a Comment