கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 15 - பெரிய பிரிட்டனில் சின்ன வியாபாரம்
அதிகாரம் 15 - பெரிய பிரிட்டனில் சின்ன வியாபாரம்
பூமா கொடுத்த
மேல்மாடி அறையில் கண்ணயர்ந்த அமிர் அடுத்த நாள் வெகு நேரஞ் சென்றே கண் விழித்தான்.
அவனுக்காக ஒரு நாற்றமெடுக்கும் வியாபாரம் கீழே எதிர்பார்த்து இருப்பது அவனுக்கு
அப்போது தெரியாது.
பூமா ஏலவே வேலைக்குப் போய்விட்டாள். அமிரின்
மனம் நதியாவைச் சுற்றி வலம்வர, மாடியிலிருந்து
கீழிறங்கி வந்து, வரவேற்பறையில்
உள்ள ஒரு வான்நீல சோபாவில் அமர்ந்த அவனை சுவர்களின் பூவரசம்பூ வண்ணம் ஈர்த்தது.
அது அவனது இதயத்துக்கு குளிராக இருந்தது.
அப்பொழுது ஆவரங்கால் அன்ரி வரவேற்பறைக்குள்
வரமுயல்வதை அமிர் அவதானித்தான். நல்லெண்ணெய் மணம் கட்டியம் கூற, உடம்பை இரு பக்கமும் தாழ்த்தி உயர்த்தி
புறப்பக்கமாக வளைந்த கால்களைப் பக்குவமாக மேலே உயர்த்திப் பின் அவதானமாகக் கீழே
வைத்து அறையுள் நுழைந்து, பச்சைப்
பட்டுச் சேலை கதைசொல்ல, 22 கறற்
தங்க நகைகள் மின்னிச் சிரிக்க, ஆவரங்கால்
அன்ரி நீள் சோபாவில் தொப்பென அமர்ந்தார். அவரால் சாதாரண மனிதர்களைப் போல பதிந்த
சோபாவில் அமர்வது கொஞ்சம் சிரமமல்ல மிகச் சிரமம் என்பது அமிருக்குப் புரிந்தது.
ஆவங்கால் அன்ரி சேலையின் தொங்கலை வில்லங்கமாக
இழுத்துப் பல்லைக் கடித்துக்கொண்டு இடுப்பில் சொருகினார். அது அவர்
வியாபாரத்துக்கு ஆயத்தம் என்பதன் அறிவிப்பு என்பது பாவம் அமிருக்குத் தெரியாது.
அவனது எண்ணம் எல்லாம் நதியாவை வட்டமிட்டபடியே இருந்தது.
தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த
கறுப்புக் குரங்குப் பொம்மையின் மூக்கையும் அமிரின் எடுப்பான மூக்கையும்
ஒப்பிட்டுக் கடைக் கண்ணால் மேய்ந்தபடி தான் ஆயத்தப்படுத்தி வந்த பேரத்தை இன்னொரு
முறை மனதில் சரிபார்த்துக்கொண்டு அன்ரி கூறினார்.
“தம்பி அமிர் உம்மைப்
பற்றி எனக்கு நல்லாகத் தெரியும். நல்ல இடத்து ஆள். அதனாலேதான் பூமா தன்னுடைய அறையை
உமக்குக் கொடுக்கச் சொன்னவுடனே மறுக்காமல் தந்தனான்."
அமிருக்கு அன்ரியின் வார்த்தைகள் சுவைத்தன.
அவனுக்குத் தெரியாது அது வரப் போகிற பாய்ச்சலின் பீடிகையென்று. அன்ரியை நன்றியோடு
பார்த்தான்.
“தம்பி நான் இப்ப
எங்கள் யாழ்ப்பாணப் பெடியளுக்கு வீடு கொடுப்பதில்லை. பூமா சொல்லியிருப்பாளே?"
“ஓம் ஆவரங்கால்
அன்ரி. பூமா சொன்னவள். ஏன் அன்ரி கொடுப்பதில்லை என்று?"
அவவிற்கு அமிர் சொன்ன
ஒரு வார்த்தை பிடிக்கவில்லை என்பதை அவவின் மூக்கு காட்ட, அவ தனது பால் வெள்ளைக் கூந்தலைத் தடவியபடி சொன்னா,
“முன்பு நான் பெடியளை
வைத்திருந்து நிரம்பக் கஷ்டப் பட்டனான். எல்லோரும் கடைசி இரண்டு மூன்று மாத
வாடகைக் காசு, சாப்பாட்டுக் காசு,
கறனற்-காஸ்-தண்ணிக் காசு ஒன்றும் தராமல்
ஓடிவிட்டான்கள். எனக்குத் தெரியும் நீர் அப்படிச் செய்யமாட்டீர் என்று."
இவ்வாறு ஆவரங்கால் அன்ரி சொல்லிவிட்டு அமிரின் பிரதிபலிப்பை அவனது முகத்தில் தனது
பூஞ்சல் கண்ணால் தேடினார்.
“நீங்கள் முன்பின்
தெரியாத பெடியளிடம் முற்பணம் வாங்காமல் அறையைக் கொடுத்திருக்கக்கூடாது."
அந்த வார்த்தைகள், குழிமுயல், வேடனின் வலையை தானே விறாண்டி விரித்து அதற்குள், வலியவே விழுந்தது போல, அன்ரிக்குப்பட்டது. அவர் கொடுப்புக்குள் சிரித்து,
அவனது வெள்ளைச் சேட் பையில் பின்னல்
செய்திருந்த றோசா மலரில் மயங்கியபின் தனது தாவலுக்கு ஆயத்தமாகினார்.
“தம்பி அமிர், அந்த கோதாரியிலே போன பெடியள் மாதிரி நீர்
ஏமாற்றமாட்டீர் என்று எனக்கு நல்லாகத் தெரியும். நான் என்ன சொல்லுகிறேன் என்று
விளங்குதே தம்பி?"
ஆவரங்கால் அன்ரியின் 22 கறற் ஐந்து சோடிக் காப்புகள், மூன்று மோதிரங்கள், மின்னுகிற சிவப்புக் கல் தோடுகள், நீண்ட இரண்டு சங்கிலிகள், ஒன்றிலே பெரிய பச்சைப் பதக்கத்தின் ஒளிவீச்சு
வேறு - அவற்றிலே இலயித்திருந்த அமிர் திடுக்கிட்டு, “ஓம் ஆரங்கால் அன்ரி" என்றான்.
“எனக்குத் தெரியுந்
தம்பி. அந்த நாசமாய்ப் போவான்களைப் போல சொல்லாமல் கொள்ளாமல் ஓடமாட்டீர்
என்று."
“ஆவரங்கால் அன்ரி.
நான் அப்படிச் செய்ய மாட்டேன். என்னை நம்புங்கள்."
அமிர் பகர்ந்த
விடையில் திருப்திப்படாமல்,
“உப்படித்தான்
முன்னர் இருந்த பெடியள் எல்லாம் சொன்னவை. அத்தோடு இன்னும் சொன்னவை. தாங்கள்
அப்பிடித் தாய் தகப்பனுக்குப் பிறக்கேலை என்று சொல்லிப்போட்டு வருமதியைத் தராமல்
கடைசியிலே பேசாமல் கொள்ளாமல் ஓடினவை" என்று ஒருபோடு போட்டார் ஆவரங்கால்
அன்ரி.
அப்பொழுது ரெலிபோன் மணி அடித்தது. அன்ரி போனை
எடுத்து யார் என்று விசாரித்துவிட்டு, “தம்பி உனக்குத்தான். பெம்பிளைக் குரலாக இருக்கிறது" என்று கூறியபடி
றிசீவரைக் கொடுத்துவிட்டு மற்றவர் கதைப்பதைக் கேட்பது நாகரிகமல்ல என்பது தனக்கும்
தெரியும் என்பதைப் பறைசாற்ற எழுந்து வெளியே போனார்.
றிசீவரைக் காதில் வைத்து “ஹலோ யார் ......?" என்று இழுத்த அமிருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“நதியா பேசுகிறேன்."
“நீயா? எப்படித்தெரியும் பொலிஸ் என்னை விட்டதும்,
நான் ஆவரங்கால் அன்ரி வீட்டுக்கு
வந்ததும்?"
“இப்பதான் மூத்தான்
வந்து சொல்லிவிட்டு அவரையும் கூட்டிக்கொண்டு அவசர அவசரமாக வெளியே
ஓடுகிறார்கள்."
நதியா ரெலிபோனில் பேசிக்கொண்டிருந்தாள்.
தான் யாரோடு கதைக்கிறேன் என்பது அன்ரிக்குத்
தெரியப்படாது என்பதற்காக சுருக்கமாக 'ஆம்” 'இல்லை” 'உடுப்பு பேக்” 'புத்தகம்” 'கொஞ்சம் பொறுத்து” என்று
அமிர் கூறுவது வரவேற்பறை வாசலை ஒட்டியபடி காதைத் தீட்டிக்கொண்டு நின்ற ஆவரங்கால்
அன்ரிக்கு நன்கு கேட்டது.
ரெலிபோன் பேச்சு முடிய அன்ரி உள்ளே வந்து தனது
வியாபாரத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்கினார். அமிரின் கண்கள் யன்னல்
கண்ணாடியூடாக வெளியே வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஒரு வெள்ளைக் காரை நோட்டம்
பார்த்தபடியிருக்க அவர்கள் சம்பாசனை விட்ட இடத்திலிருந்து வளர்ந்தது.
“எங்கே கதையை
விட்டனான் தம்பி? ஓ ஞாபகம்
வருகிறது. அந்த எழிய பெடியளைப் போலச் செய்யமாட்டீர், இல்லையே?"
“பூமா என்னைப் பற்றி
சொலியிருப்பாளே?"
“ஓம் ஓம். நீர்
அப்படிச் செய்யமாட்டீர் என்று சொன்னவ. அத்தோடு குடிக்கிற தில்லை, புகைக்கிறதில்லை, போதைப்பொருள் பாவிக்கிற பழக்கம் இல்லை என்றும் சொன்னவ.
லண்டனிலே உப்படி ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் தம்பி. பெம்பிளையளே குளிரைச்
சாட்டுக்கு வைத்து நல்லாப் போடுகிறார்கள்."
“நீங்கள்
குடிக்கிறதில்லையோ?"
“தம்பி உள்ளதைச்
சொன்னால் என்ன. எங்கேயாவது ‘பாட்டிக்குப்’
போனால் பிரெண்டி அல்லது விஸ்கி கொஞ்சம்
மற்றவையின் அருக்கினைக்காகப் பாவிக்கிறனான்" என்று சொல்லிக் கொடுப்புக்கள்
சிரித்துவிட்டு அன்ரி தனது சின்ன வியாபாரத்தை ஆரம்பிக்கத் தொடங்கினார்.
பெரிய பிரிட்டனில் இப்படியும் ஒரு சின்ன
வியாபாரம் அன்ரி வீட்டில் மட்டுமல்லப் பெரிய இடங்களிலும் நடைபெறுகிறது என்பது
தெரியாத அமிர், “ப+மா என்னைப்
பற்றிச் சொல்லியிருப்பாளே?" என்று கேட்டுவிட்டு அன்ரியைப் பார்த்தான்.
“பூமா வேறு ஒன்றும்
சொல்லவில்லையோ?" அன்ரி
கேட்டா.
“வேறு என்ன?"
“என்னுடைய வீட்டு
வாடகை, மற்ற காஸ்-கறன்ற்-தண்ணிக்
காசு பற்றி?"
“இல்லை."
“தம்பி கிழமைக்கு
வாடகை 45 பவுண். பிறகு தண்ணி,
காஸ், கறன்ற் - அதுக்கு கிழமைக்கு 15 பவுண். எல்லாம் 60 பவுண். விளங்குதே தம்பி? ஒவ்வொரு திங்கட்கிழமையும் தவறாமல் தரவேண்டும். அத்தோடு
சிநேகிதர் சிநேகிதிகளை இங்கே அழைத்துவரக் கூடாது. வெளியிலே வைத்துக் கதைத்துப்
போட்டு அனுப்பிவிடவேணும். விளங்கினதே தம்பி? நீர் காசை ஓழுங்காகத் தராவிட்டால் பிறகு
......................" அன்ரி வசனத்தை முடிக்காது அமிரின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்தார். அமிர் காசைக்
குறைக்கச் சொல்லிக் கேட்பான், ஏதோ
அமிருக்காக என்று சொல்லி ஐந்து பவுணுக்கு மேலே குறைக்க முடியாது என்று சொல்லிப்
பார்ப்பம் என்று எண்ணியபடி ஆவலோடு அமிரின் முகத்தில் விடையைத் தேடினார்.
ஆவரங்கால் அன்ரி காசு விசயத்தைச் சொன்னதும்
அமிருக்குப் பக் என்றது. உழைப்பில்லை. அகதிப் பணமும் வீட்டு வாடகைப் பணமும்
நிறுத்தப்பட்டுவிட்டது. எப்படிக் காசை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொடுப்பது என்ற
கவலை அவனைப் பற்றிக்கொண்டது. கில்லாடி வீட்டில் இருக்குமட்டும் அமிருக்குப்
பணத்தைப் பற்றிய கவலை இருக்கவில்லை.
ஆரம்பத்தில் நதியா பண உதவி செய்தபொழுது மனதுக்கு இருந்த சங்கடம் பின்னர் இருக்கவில்லை.
நதியாவே மணந்து பிடித்து அவ்வப்போது காசு உதவி வந்தாள். அவளுக்கு கொடுக்குமதி 3470 பவுண். நதியாவிடம் உள்ள உத்தம குணங்களை அவன்
வேறு எவரிடமும் கண்டதில்லை. இருந்தாலும் ஏன் நதியா தனக்கு அவ்வாறு தருமதேவதையாக
உதவுகிறாள் என்பதை விளங்கிக்கொள்ள அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. இனி அவளை எப்படிப்
பணம் கேட்பது என்ற கவலை வேறு.
“என்ன தம்பி யோசிக்கிறாய்? வேணுமென்றால் ஒரு ஐந்து பவுண்
குறைத்துவிடுகிறேன்."
“நான் கில்லாடி
வீட்டில் அறை வாடகை, சாப்பாடு
காஸ்-கறன்ற்-தண்ணி எல்லாத்துக்கும் சேர கிழமைக்கு 35 பவுண்தான் கொடுத்தனான்."
அதைக் கேட்ட அன்ரி விழுந்து விழுந்து சிரித்தார்.
அவவின் கொடுப்பில் பற்களே இல்லை. முரசு மட்டுமே அமிருக்குத் தெரிந்தது.
எஞ்சியிருந்த முற்பற்களும் அரை குறையாக காவிபடிந்து காணப்பட்டன. அவ சிரிப்பை
நிறுத்தி அமிரின் நடு உச்சி பிரித்து வாரிய முடியை உற்றுப் பார்த்துவிட்டு
சொன்னார்.
“தம்பி லண்டனிலே உந்த
‘றேற்’ எங்கேயும் இல்லை. நீரும் உந்த எழியதுகள் மாதிரிக்
கதைக்கிறீர்."
அன்ரியின் வாயிலிருந்து பொய் சொல்கிறாய் நீ
என்ற குற்றச்சாட்டு வேறு வார்த்தைகளில் பொரிவதை அமிர் கவலையோடு நோக்கினான்.
“தம்பி உமக்காக ஐந்து பவுண் குறைத்துவிடுகிறேன்.
அதுக்கு மேலே குறைக்கேலாது. கிழமைக்கு 55 பவுண். காலமை ஒரு வெறுந் தேநீர், பின்னேரம் ஒரு பால் தேநீர் அவ்வளவுதான்."
“சாப்பாட்டோடு சேர
எவ்வளவு அன்ரி?”
அன்ரி என்ற சொல் அவவின் கண்களிலே திடீரென
மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனை பல்லைக் கடித்து மூடிமறைத்துக் கொண்டு,
“அதிகம் இல்லைத்
தம்பி. கிழமைக்கு 75 பவுண்தாரும்.
என்ன தம்பி?"
“ஓம் அன்ரி."
“தம்பி, அன்ரி என்று சொல்லாதையும். ஆவங்கால் அன்ரி
என்று சொல்லும்."
“ஏன்?"
அந்தக் காரணத்தை எண்ணி எண்ணி தினம் தினம்
கட்டிலில் புரண்டு எழுந்து இருந்து கண்ணீர்விடும் அன்ரியால் எப்படிச் சொல்ல
முடியும்? கண்கள் பனித்தன.
வரவேற்பறையின் சுவர்களைப் பார்த்தபடி இருந்தார். அவரது கண்களிலிருந்து நீர்
வழிந்தது. அமிருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தான் ஏதன் தவறு செய்துவிட்டேனோ
என்று ஆழமாக யோசித்தான். அப்பொழுது அவ கண்களைத் துடைத்துவிட்டு,
“தம்பி, அன்ரி என்று மட்டும் ஒருநாளும் சொல்லாதையும்.
எப்போதும் ஆவரங்கால் அன்ரி என்று சொல்லும்" என்றார்.
“ஆவரங்கால் உங்கள்
சொந்த ஊர்ப் பெயர்தானே? ஏன் அதனை
உங்கள் பெயரோடு இணைத்து …." என்று
அமிர் இழுத்தபடி அன்ரியைப் பார்த்தான்;.
“ஆவரங்காலும் அதன்
கிழக்கே உள்ள மாடு மேயும் தூவெளியும் என் இறுதி நாள்வரை என் கண்களை விட்டு என்றுமே
மங்கி மறையாது ராசா. அங்கேதான் என் இதயம், நரம்புகளின் இயக்கம், இரத்தத்தின்
துடிப்பு, வெதும்பும் சதை,
ஆவி எல்லாம் நிரந்தர ஜீவியம் செய்கின்றன.
இந்த வெறும் உடல்தான் ராசா லண்டனிலே இருக்கிறது. ஏழேழு ஜென்மங்கள் வந்து போனாலும்
தூவெளியின் காட்சிகளும் அதனோடு இரண்டற இணைந்த என் வாழ்வும் என் கண்களை விட்டு
என்றும் அகலாது ராசா."
அமிருக்கு ஒன்றுமே புரியவில்லை. அது
வேதனையாழின் சோக நாதம் என்பதுமடடும் தெளிவாகியது. தூவெளியென்றால் என்ன? அவனால் ஊகிக்க முடியவில்லை. அன்ரியைப் பார்த்து,
“தூவெளி!" என்று மட்டும் கூறிவிட்டு
அவவின் பாலின் நுரைபோன்ற தலைமுடியைப் பார்த்தான்.
“தூவெளியை உனக்குத்
தெரியாதோ, தம்பி?"
“தெரியாது ஆவரங்கால்
அன்ரி."
அவ உடம்பை நிமிர்த்தி சோபாவில் கெட்டியாக
அமர்ந்த பின்னர், கண்களைத்
துடைத்துவிட்டுக் கரகரத்த குரலில் சொன்னார்.
“யாழ்ப்பாணத்தின்
இதயம் மாதிரி, குடாநாட்டின்
மத்தியில் ஆவரங்கால். ஒரு அழகான கிராமம். இயற்கையின் எழில் துள்ளி விளையாடும்
நல்லூர். அது தெரியுமே?"
“ஓ.
பருத்தித்துறை-யாழ்ப்பாண வீதியிலே. வீதி ஓரம் ஒரு சிவன்கோயிலும் இருக்கிறது. அதன்
ஓரமாக ஆலமரம் இலுப்பை மரம், தென்னந்தோப்பு
- கிழக்கே வயல் வெளி."
“ஓம். ஓம். தம்பி
அமிர், ஆவரங்கால் குடிமனைக்குக்
கிழக்கே ஓர் உப்புநீர் ஏரி. அதற்கு கிழக்கே ஓர் ஓவென்று பரந்த வெளி. மாடு மேய்கிற
தரவை. அதுதான் தூவெளி."
“பெரிய வெளி, இல்லையே ஆவரங்கால் அன்ரி?"
“ஓம் பெடியா. மேற்கேயிருந்து
கிழக்காக கிட்டத்தட்ட மூன்று மைல். வடக்கு-தெற்காக இரண்டு தொடக்கம் மூன்று மைல்.
யாழ்ப்பாணத்தின் நர்த்தன தீவு. அது தெரியுமே?"
“அற்புதமான பெயர்.
அது எப்படி இருக்கும்."
“நான்கு பக்கமும்
உப்புநீர் ஏரியால் சூழப்பட்ட ஓவென்ற பரந்த சமவெளி. மாரியில் ஏரி பரந்து கோலோச்சும்
காட்சி கச்சிதம். வடதுருவத்திலிருந்து வரும் கறுப்பு வாத்துகள் கூட்டமாக விழுந்து
நீந்தும் காட்சி அற்புதமாயிருக்கும். வகைவகையான பறவைகள், குருவிகளின் ஓயாத ரீங்காரம். இடையிடையே
ஆட்காட்டிகளின்கணீரென்ற நீண்டு நீண்டு ஒலிக்கும் குரலோசை"
அன்ரியின் வர்ணனை அமிரைச் சுண்டி இழுக்க,
அவன் இலக்கிய சுவையின் நர்த்தனங்கள்
அவவின் கண்களிலும் வதனத்திலும் கதைபேசுவதை இரசித்துக் கொண்டிருந்தான். அன்ரி தனது
வர்ணனையைத் தொடர்ந்தார்.
"மேற்;கே உள்ள குடிமனையை ஏரி ஊடாக இணைக்கும் உப்பு நீரின் கீழே வருடம் முழுவதும்
தவம்புரியும் கல் வீதி. பரந்த வெளியில் ஆங்காங்கு பச்சை ஊசியிலை ஈச்சம் புதர்கள்,
இரண்டொரு பூவரசுகள் அவற்றை அண்டி
சுமைதாங்கிகள், உப்புக் காற்றின்
எரிச்சல் பொறுக்காது எந்த நேரமும் கீ என்று கூவி மிரட்டும் சவுக்கஞ் தோப்புக்கள்,
ஏரியின் கரைகளில் ஆங்காங்கு பெரும்
பெரும் தாழம் புதர்கள். புதர்களிலிருந்து தவழ்ந்து வரும் தெய்வ நறுமணம்.
மற்றும்படி நிலத்தோடு ஒட்டிய புல்வெளிதான்."
“ஆவரங்கால் அன்ரி,
நீங்கள் செப்பமாக வர்ணிக்கிறீர்கள்.
எங்கே அன்ரி படித்னீங்கள்?"
“படித்ததோ. ஒரு
வருடமோ இரண்டு வருடம். பிறகு எருக்கடகத்தைத் தூக்கிக்கொண்டு தூவெளிக்கு
மாட்டுக்குப் பின்னாலே போனதுதானே."”
“தூவெளியென்றதும்
நீங்கள் ஆளே மாறிவிட்டீர்கள். கவிஞனைப் போலக் கதைக்கிறீர்கள்."
“அது என்ன கவிஞனோ
கத்தரிக்காயோ அது எனக்குத் தெரியாது பெடியா. ஆனால் ஆவரங்கால் தூவெளி எவ்வளவு
ரம்மியமான இடம் தெரியுமோ? ஒன்றன்
வாலை மற்றது பற்றி ஓடும் வெள்எலிகள், ஒரு ஈச்சம் புதரிலிருந்து மற்றதுக்குத் தாவும் நரை முயல்கள், கோழிக் குஞ்சு போலக் குடுகுடுவென்று ஓடும்
காடைகௌதாரிகள், கொக்குகள்,
வண்ணவண்ணக் குருவிகளின் ஓயாத ஓசைகள் -
இவைதான் பரந்த தூவெளியின் இரத்தினப் பொக்கிசங்கள். கோடை வெய்யிலில் உப்பங்;
காற்று அனலை அள்ளி வீச, அந்தப் பரந்த தூவெளியிலே மாடுகள் குனிந்தபடி
மேய, எருக்கடகத்தை எங்காவது
வீசிவிட்டுத் தாழம் புதருள் நுழையும் போது வருகின்ற சுகமும் சுகந்தமும் மனநிறைவும்,
லண்டன் வாசனைத்திரவியக் கடைகளில்
பவுண்களை அள்ளி இறைத்தாலும் வாங்க முடியாத சுவர்க்க லோகத் திரவியங்கள்."
“ஏன் அன்ரி
உங்களுக்கு உப்புத் தரைவையிலே அவ்வளவு பற்றும் பாசமும்?"
“தம்பி அமிர்,
அந்த உப்பந் தரைவையின் தாழம்
புதர்கள்தான் என்னுடைய நந்தவனம். சின்ன வயதில் நிழல் தந்து தாலாட்டிய அது பின்னர்
நான் பற்றிப்படர மனம்நிறைந்த துணையையும் தேடித் தந்தது. அங்குதான் எங்கள்
கந்தருவம் நடந்தது. எனது மூத்த மகன் ரமணனும் அங்குதான் ஜெனித்தான். சுவர்க்கத்தை
நான் கண்டதில்லை. ஆனால் சுவர்க்கத்தை நான் தாழம் புதர்களின் மத்தியின் நிழல்
படிந்த சொகுசான மணற்பரப்பிலே அனுபவித்திருக்கிறேன். இறுதியில் அந்தவிடந்தான்
........"
அன்ரி தான் சொல்லவந்ததைச் சொல்ல முடியாமல்
மீண்டும் தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த கறுப்புக் குரங்குப் பொம்மையைப்
பார்த்தார். அவர் கண்கள் சோகமாக அமிரைப் பார்த்தன. அமிருக்கு என்ன சொல்வதென்றே
புரியவில்லை. அவன் தலையைத் திருப்பி பூவரசம்பூ வண்ணச் சுவரைப் பார்த்தான். அன்ரி
மீண்டும் தனது தூவெளிச் சரித்திரத்தைத் தொடர வாயைத் திறந்தார்.
“தம்p ராசா, என்னையும் நான்கு
பிள்ளைகளையும் லண்டனுக்கு வெருட்டி
ஓட்டியதும் அந்த ஆவங்கால் தூவெளியில் உள்ள தாழம் புதர்தான். அதை நான் மறக்க
முடியாது. என் இரத்தத்தின் இரத்தத்தை நான் மறக்க முடியாது. ஏழேழு பிறவிக்கும்
மறக்கக்கூடாது. மறக்காமல் இருக்கவே நான் விரும்புகிறேன். மறப்பது மாபாவம்
ராசா."
அமிருக்கு ஆவரங்கால் அன்ரி என்ன கூறப்போகிறார்
என்பது எப்பனும் பிடிபடவில்லை. ஆனால் தாழம் புதருக்கும் அன்ரியின் லண்டன்
வருகைக்கும் தொடர்பு இருப்பதை அறிந்ததும் அவன்
அன்ரியின் வித்தியாசமான கதையைக் கேட்க காதைத் தீட்டினான். அன்ரி மீண்டும்
தொலைக் காட்சிப் பெட்டிக்கு மேNலு
இருந்த கறுப்புக் குரங்குப் பொம்மையைப் பார்த்தபடி இருந்தார். அவரது கண்கள்
கலங்கியிருந்தன.
“ஆவரங்கால் அன்ரி
மீதிக் கதை இப்ப வேண்டாம். இன்னொரு நாளைக்குச் சொல்லுங்கோ. உங்களுக்கு மனம்
சரியில்லை."
“இன்னொரு நாளைக்குச்
சொல்லாம் என்றால் இப்பவும் சொல்லலாம், இல்லையே தம்பி? பெடியள்
துப்பாக்கி எடுத்தவுடனே எல்லோரையும் போல நானும் சந்தோசப் பட்டனான். தமிழனின்
பிரச்சினைக்கு விடிவு பிறந்துவிட்டது. சமஷ்டி கேட்ட தமிழரசுக் கிழடுகளின் மேடை
அரசியல் யாழ்ப்பாணத்துக்கு ஒத்துவராது. பெடியள் விரைவில் தமிழ் ஈழம் கொண்டு
வருவார்கள் என்று பூரணமாக நம்பினனான். வீட்டுக்கொரு வீரன் கேட்டார்கள். என்
மூத்தவன் ரமணனை வீரப் பயணம் அனுப்பி வைத்தேன். இறுதியிலே அவன் சிங்களவனோடு
யுத்தம்புரிந்து போர்க்களத்திலே இரத்தம் கொட்ட கொட்ட வீரச் சாவைத்
தழுவவில்லை."
“என்ன கதை
சொல்கிறீர்கள் நீங்கள்?"
“கேளடா தம்பி இந்தக்
கட்டையின் கதையை. நான் கல்யாணம் முடித்து, தூவெளிப் பக்கம் போகாமல் விட்டு இருபத்தாறு வருடங்களுக்குப் பிறகு நடந்த
சோக காவியம். ஒரு இயக்கம் பகை இயக்கப் பெடியளைக் கடத்திக் கொல்கிறது என்ற கதை
காட்டுத் தீயாக வந்து என் வீட்டு வாசலைத் தட்டியது. என் மகனை வேறொரு இயக்கக்காரன்
கடத்திக்கொண்டு போட்டான் என்று கதைதான் அது. மார்பிலே குத்தி, தலையிலே அடித்து ஓடி ஓடித் தேடினேன்."
“கிடைக்கவில்லையா?"
“இல்லைக் கிடைத்தான்
என் மூத்த மகன் ரமணன்."
“எங்கே?"
“நான் எங்கே அவனைச்
சனித்தனோ அங்கே அந்த தாழம் புதரின் அதே நிழலிலே கிடைத்தான். முண்டமாக. அதுவும்
முழுதாக அல்ல."
“முழுதாக அல்ல"
அமிர் ஒன்றும் புரியாமல் திருப்பிச் சொன்னான்.
“தலை இல்லாத முண்டமாக
அவன் சனித்த அதே ஆவரங்கால் தூவெளித் தாழம் புதருள் கிடந்தான்."
வரவேற்பறை உயிர் துறந்தது. ஒப்பாரி மட்டும்
கேட்கவில்லை. இருவரும் நிலத்தைப் பார்த்தபடி சிலையாக இருந்தனர்.
சற்று நேரங்கழித்து
அமிர் வினாவினான்.
“உங்களுக்கு எந்த
இயக்கம் செய்ததென்று தெரியுமோ?"
“இயக்கத்தை விடு
தம்பி. கடத்திச் சென்று கொன்று முண்டத்தைத் தாழம் புதரில் வீசிய அழுக்குமூட்டை
எமனையே எனக்குத் தெரியும்."
“யார் அவன்? எங்கே இருக்கிறான்?"
“அவன் இங்கேதான்
இருக்கிறான்;."
“இங்கேதான் என்றால்?"
“வேறெங்கே? லண்டனில்தான். பெரிய வீடு. புதுக் கார்.
யாழ்ப்பாணத்தில் கொள்ளையடித்த தங்க நகை அணிந்து உலாவருகின்ற கடத்தி வந்த வடிவான
பொதுநிறப் பொம்பிளை, பிள்ளைகுட்டி
எல்லாத்தோடும் பெரிய மனிதனாக வாழ்கிறான் லண்டனில்."
ஆவங்கால் அன்ரியின் கதையைக் கேட்ட அமிரின்
கண்கள் செவ்வரத்தம் பூ வண்ணக் கோலங்கொண்டன. வன்முறையின் பரமவைரியான அவனது இருதயம்
படபடத்தது. தலை முடியைக் கோதி உயர்த்தி வெந்தணலாகக் கொதித்தான்.
அன்ரி நிதானமாகக் கையை ஊன்றி எழுந்து தாண்டி
அடி எடுத்து வைத்து நடந்து சமையல் அறைக்குச் சென்றார். உடன் அமிர் சோபாவைவிட்டு
துள்ளி எழுந்து யன்னல் ஓரம் விரைந்து யன்னல் திரைச் சீலையை அவசர அவசரமாக
விரல்களால் சிறிது நீக்கி அந்த வெள்ளைக் கார் ஓரம் எதையோ ஆவலோடு தேடினான். அவனை
ஏமாற்றமே பற்றியது. மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தான்.
அன்ரி சமையல் அறைக்குள் இருந்து திரும்பி
வந்தார். அவரின் ஒரு கையில் பச்சைத் தகர டப்பா உண்டியல் இருந்தது. அதை
பக்கவாட்டில் சிறிது நீட்டிப் பிடித்திருந்தார். அவர் தனது நாளாந்த உண்டியல்
குலுக்கும் சேவைக்கு ஆயத்தம் என்பதை கையில் இருந்த தகர ட்ப்பா உண்டியல் சொன்னது.
சேவைக்குப் போக முதல் தனது சின்ன வியாபார வித்தையை மீண்டும் அவிழ்த்தார்.;
“தம்பி அமிர்,
இன்றைக்குச் சனிக்கிழமை. ஒவ்வொரு
திங்களும் முற்பணமாக செலுத்த வேண்டும். தெரியுமெல்லே? கிழமைக் காசு 75 பவுண். முற்பணம் 100
பவுண். மொத்தம் 175 பவுண் வருகிற
திங்கட்கிழமை. சரிதானே தம்பி?";
அமிர் வாய் திறக்கவில்லை. அன்ரியின்
வார்த்தைகள் வடதுருவத்திலிருந்து வட அத்திலாந்திக் சமுத்திரத்தைத் தாண்டி வந்த
கிடுகிடுக்க வைக்கும் குளிர்ச் சூறாவளி போல கூச்சல் போட்டுக்கொண்டு அவனது
காதுகளுள் நுழைந்தன. வேலை இல்லை. நதியாவின் உதவியையும் இனிமேல் எதிர் பார்க்க
இயலாது. ஜீவிதாவோ பூமாவோ காசு பற்றிய மூசே எடுக்கவில்லை. நாளைய மறுதினம் மட்டுமல்ல
ஒவ்வொரு திங்களும் 75 பவுண்
அன்ரிக்கு தள்ளியே ஆகவேண்டும். என்ன செய்வது? அரசியல் தத்துவம் பேசத் தெரிந்தளவுக்கு வாழ்க்கைத்
தத்துவத்தை அவனால் உணர முடியவில்லை. மத்தியதர செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு உள்ள
குறைதான். படிப்புக் கேற்ற வேலை தேடுகிறான். டாக்டர், பட்டயக் கணக்காளர் வேலையைத் தவிர, படித்த பட்டத்துக்கு ஏற்ற தொழில் லண்டனில்
கிடையாது என்பதை அவன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
காஞ்சிபுரம் பச்சைப் பட்டுச் சேலையைச்
சரிபார்த்து, அள்ளும் கொள்ளை 22 கறற் தங்க நகைகளைத் தொட்டுப் பார்த்து,
உள்ளுரத் தானே சிரித்து மகிழ்ந்து,
கையில் தகர உண்டியல் ஏந்தி அன்ரி
மனோபார்க் முருகன் கோவிலுக்கு போக ஆயத்தமாகியபின்,
“தம்பி அமிர். வாவன்
தம்பி. உண்டியல் குலுக்குவம். பாவம் கறுப்பு நரிப் பெடியள் சிங்கள ஆமியோடு
அடிபட்டுச் சாகுதுகள். இப்படிச் சேர்த்து அனுப்பினால்தானே, பெடியள் விட்டுக்கொடுக்காமல் போர்புரியுங்கள்"
என்று கூறியபடி கடைக் கண்ணால் அமிரின் வெள்ளைச் சட்டைப் பையின் தையல் அலங்கரித்த
றோசா மலரைப் பார்த்தார்.
“ஆவரங்கால் அன்ரி,
நடக்க முடியாமல் தள்ளாடுகிறீர்கள். ஏன்
உண்டியல் குலுக்கி இந்த வயதிலே வீணாகக் கஷ்டப்படுகிறீர்கள்?"
“இன்னும் எவ்வளவு
காலத்துக்கு ராசா. இன்னும் ஒரு ஒன்பது மாதத்துக்குத்தானே."
“ஏன் அன்ரி
அமங்கலமாகப் பேசுகிறீர்கள்?"
“தம்பிக்கு நான்
சொன்னது விளங்கவில்லை."
அன்ரி தோளில் தொங்கிய பேக்ககைத் திறந்து ஒரு
கவரை எடுத்து அமிரிடம் நீட்டியபடி,
“தம்பி அமிர்,
இந்தாபிடி உனக்கும் ஒரு அழைப்பு."
“என்ன அழைப்பு?"
“என்னுடைய மூத்த
மகளின் இரண்டாவது பெட்டையின் நடன அரங்கேற்றம். பன்னிரண்டாயிரம் பவுண் செலவழித்து
தடல்புடலாக நடத்துகினம். இலங்கைக் காசுக்கு பதினைந்து லட்சம். கட்டாயம் வந்திடு.
என்னுடைய பிள்ளையள், பேரப்பிள்ளையள்
எல்லோரையும் பார்க்கலாம்."
அவன் வரவேற்பிதழை
வாசித்தான்.
“பெக் தியேட்டர்,
ஹையிஸ், மிடிள்செகஷ்...... கனதூரமெல்லே அன்ரி
போகவேண்டும்."
“தம்பி என்னுடைய
கடைசிப் பெட்டை கார் கொண்டு வருகிறாள் என்னை ஏற்றிக்கொண்டு போக. நீரும் என்னோடு
வரலாம்."
“காரா? நிட்சயம்
வருவேன்."
“தம்பி கோவிலுக்குப்
போக நேரமாகிறது. நான் வருகிறேன். உண்டியல் குலுக்கவேணும்."
ஆவரங்கால் அன்ரி
ஒற்றைக் கையில் பச்சைத் தகர டப்பா உண்டியலைப் பிடித்தபடி கால்களை வில்லங்கமாக
முன்னே எடுத்து வைத்தவர் திரும்பி, “தம்பி, இன்றைக்கு சனிக்கிழமை. திங்கட்கிழமை 175 பவுண். மறக்க வேண்டாம் தம்பி" என்று
கூறிவிட்டு நகர்ந்தார். வீட்டு வாசலில் வீதியின் மறு பக்கத்தில் வெள்ளைக் காரின்
ஓரமாக நதியா அமிரின் இரண்டு பேக்குகளுடன் மறைந்து நின்று தன்னை நோட்டம் பார்ப்பதை
அன்ரி அவதானிக்கவில்லை.
அன்ரியின் நச்சரிப்பைக் கேட்ட அமிர்
திங்கட்கிழமை பணத்தை எப்படிக் கொட்டுவது என்ற திக்பிரமையில் தலை முடியை
பிய்த்தான்.
தொடரும்...
No comments:
Post a Comment