Friday, 4 December 2015

ஆழியாள் மதுபாஷினி




  


திரும்பிப்பார்க்கின்றேன்

திருகோணமலையிலிருந்து  அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன்   பயணித்த  ஆழியாள் மதுபாஷினி

அவுஸ்திரேலியாவின்  ஆதிக்குடிகளின்  துயர்மிகு வாழ்வின்  பக்கங்களை   தமிழுக்கு  அறிமுகப்படுத்தியவர்

தமிழர்  வாழ்  நிலங்களில்  புதிய  பரிணாமமாக  ஆறாம் திணையை   ஆய்வுக்குட்படுத்தும்  ஆளுமை

                                 முருகபூபதி

பால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை   அப்பிள்  பழங்களின்  ஊடாகத்தான் அறிந்துகொண்டேன்.

வெளியே  வர்த்தகத்திற்கு செல்லும்  அப்பா,  திரும்பிவரும்பொழுது  வாங்கிவரும்   அப்பிள் பழங்களை  அவுஸ்திரேலியா  அப்பிள்   என்றுதான்  அறிமுகப்படுத்துவார்.  

எனது  மகனுடன்  அவனது பதினோரு  வயதில்  இலங்கை சென்றபொழுது,  கொழும்பு  புறக்கோட்டையில்  நடைபாதை வர்த்தகர்கள்,  " அவுஸ்திரேலியா  அப்பிள்  "  என்று  கூவிக்கூவி விற்றபொழுது   அதனை   வேடிக்கையாகப்  பார்த்தான்.  அந்த பஸ்நிலையத்தில்  தனியார்  பஸ்  நடத்துனர்கள்,  பஸ்செல்லும்  இடம் பற்றி  உரத்த  குரலில்  தொடர்ச்சியாகச் சொல்லி  பயணிகளை அழைப்பதையும்    விநோதமாகப்பார்த்தான்.

இங்குள்ளவர்களுக்கு  எதனையும்  சத்தம்போட்டுத்தான் அறிமுகப்படுத்தவேண்டுமோ...?  என்றும்  கேட்டான்.

அவன்  இலங்கை  வந்தபொழுது  எத்தனை  விநோதங்களைப் பார்த்தானோ   அதேயளவு  விநோதங்களை  வேறு வேறு கோணங்களில்   நானும்  அவுஸ்திரேலியா  கண்டத்துள்  பிரவேசித்த 1987 முற்பகுதியில்   சந்தித்தேன்.

மேற்கு   அவுஸ்திரேலியா  மாநிலத் தலைநகர்  பேர்த்தில் தரையிறங்கி,  சில  நாட்கள்  அங்கு  வேலை தேடிப்பார்த்து கிடைக்காமல்,  மெல்பனுக்கு  ஒரு  காலைப்பொழுது  பஸ் ஏறியபொழுதுதான் --- அந்தப்பயணம்  முடிவதற்கு  சுமார் 48 மணிநேரங்கள்   செல்லும்  என்ற  தகவல்  தெரிந்தது.    இரண்டு முழுமையான  பகல் பொழுதுகள்.  இரண்டு  முழுமையான இரவுப்பொழுதுகள்.

பேர்த்திலிருந்து  புறப்பட்டு  சில  மணிநேரம்  கடந்து  கால்கூலி, கூல்காலி   என்ற  இடங்களை   அண்மித்தபொழுது,  அங்கு தங்கக்கனிவளம்  கிடைப்பதாக  அருகில்  அமர்ந்திருந்த  பயணி  சொன்னார்.

ஊரிலிருந்து  புறப்படும்பொழுது, "  பேனையும்  பேப்பரும்  மாத்திரமே பிடிக்கத்தெரிந்த  நீ,  அங்கே  சென்று  என்னதான்  செய்யப்போகிறாய்...? "  என்றுதான்  அம்மா  கண்ணீருடன் விடைகொடுத்தார்.

" யோசிக்காதீங்க  அம்மா.   அங்கு சென்று  அப்பிள்  தோட்டத்தில்  பழம்  பிடுங்கி  உழைத்தாவது  குடும்பத்தை  காப்பாற்றுவேன் " என்றேன்.   தங்கச்சுரங்கம்  இருப்பதும்  முன்பே    தெரிந்திருந்தால் அங்கும்   வேலைசெய்து  தங்கமாக  அள்ளிவருவேன் எனச்சொல்லியிருக்கலாம்.

வழியில்   மதிய  உணவுக்காக  அந்த  பஸ்  தரித்து நின்றபொழுது உணவு   விடுதியின்  வாயிலில்  முற்றிலும்  புதிய  தோற்றத்துடன் பார்ப்பதற்கு  சற்று  பயம்வரக்கூடிய நிலையில்  பெரிய  உடலமைப்பும்  பரட்டைத்தலையும்கொண்ட  ஒரு  மனிதரைக்கண்டு  தயங்கினேன்.

அவர்கள்தான்  இந்தத்தேசத்தின்  சொந்தக்காரர்கள். அவர்களுக்குரியதைத்தான்  ஆங்கிலேயர்  அடித்துப்பறித்து  கொலைகள்   செய்து  அபகரித்துவிட்டார்கள்   என்று  அருகிலிருந்து பயணி  சொன்னபொழுது , அவுஸ்திரேலியா  பற்றிய  சித்திரம்   எனக்குள்  பல  வண்ணங்களில்   பதிவாகத்தொடங்கியது. அந்தப்பதிவுகளும்    முற்றுப்பெறாமல்  தொடரும்  பயணங்கள் போன்றவை.


அவுஸ்திரேலியாவுக்கு  வந்து  மறு ஆண்டு  (1988)   இந்தத்தேசம் ஆங்கிலேயர்களினால்    கண்டுபிடிக்கப்பட்டு  200  வருடங்கள் நிறைவாகியிருந்தது.

இந்தக்கண்டத்தின் ஆத்மாக்களான  பூர்வகுடி  மக்களிடம்  இலக்கியம், இசை,   ஓவியம்,  பண்பாட்டுக்கோலங்கள்,    உணவு  நாகரீகம், கலாசாரம்,   வலிகள்  நிரம்பிய  போராட்டங்கள்  நிரம்பியிருக்கின்றன.

தமிழ்   இனமான  உணர்ச்சியூட்டும்  கவிஞர்கள்  மத்தியில்  அறிவுபூர்வமாக -  அமைதியாக  அந்த   ஒலிகளை   ஊடறுத்துக்கொண்டு இந்த   மண்ணின்  மக்களையும்  தமிழ்  இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியவர்தான்   ஆழியாள்  என்ற  புனைபெயரில் எழுதிவரும்    மதுபாஷினி .

மற்றவர்கள்    நவீன்  இராஜதுரை.     நூலகர்  பாக்கியநாதன்,   மாத்தளை சோமு.    இவர்கள்  நால்வரும்   தமிழ்  இலக்கிய  வட்டாரத்தில்  நன்கு அறியப்பட்டவர்கள்.

சட்டத்தரணி   நவீன்  இராசதுரை  மூத்த  எழுத்தாளர்  காவ லூர் இராசதுரையின்   மகன்.   இவர்  மொழிபெயர்த்த    ஹென்றி லோசன் கதைகளை  சென்னை   மித்ர பதிப்பகம்   வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய  படைப்பாளி  ஹென்றி லோசனின்   கல்லறையை தஸ்மேனியா  தீவில்  போர்ட் ஆதர்  என்ற  இடத்தில் தரிசித்திருக்கின்றேன்.   போர்ட் ஆதர்   கிட்டத்தட்ட  அந்தமான் தீவுதான். கைதிகள்  சிறைவைக்கப்பட்ட  பிரதேசம்.

நூலகர்  பாக்கியநாதன்  மறைந்துவிட்டார்.  அவர்  எழுதிய "அவுஸ்திரேலியா  ஆதிவாசிகளும் பண்பாட்டுக்கோலங்களும் " - என்ற விரிவான  கட்டுரையை  மல்லிகை  அவுஸ்திரேலிய  சிறப்பு  மலரில் (2000 ஆம் ஆண்டு)  பதிவுசெய்துள்ளோம்.  ஆனால் அதனைக்காணமலேயே  அவர்  நிரந்தரதுயிலில்  ஆழ்ந்தார்.

மாத்தளைசோமு  நாடறிந்த  எழுத்தாளர்.   அவுஸ்திரேலியா ஆதிவாசிகளின்   கதைகளை  இலங்கை,   தமிழக  இதழ்களில் அறிமுகப்படுத்தி   நூலாகவும்  தொகுத்திருக்கிறார்.

ஆழியாள்  மதுபாஷினி  மற்றும்  ஒரு  பக்கத்தை அறிமுகப்படுத்தினார்.   ஆங்கில   மொழிவாயிலாக  சில ஆதிவாசிகளின்  கதைகள்,   கவிதைகளை   தமிழுக்குத்தந்துள்ளார். ஆர்ச்சி வெல்லர்,   சாலிமோர்கன்,   மெர்லிண்டா  போபிஸ்,   ஜாக் டேவிஸ்,   எலிசபெத்  ஹொஜ்சன்,   பான்சி ரோஸ்  நபல்ஜாரி ஆகியோரின்  படைப்புகள்  சிலவற்றை  (சிறுகதை, கவிதை) தமிழுக்குத்தந்துள்ளார்.   தொடர்ந்தும்  மொழிபெயர்ப்பு  பணிகளில் ஆழியாள்  மதுபாஷினி   ஈடுபட்டுவருகிறார்.   அவர்  ஆங்கில இலக்கியத்திலிருந்து  அறிமுகப்படுத்தியவர்கள்  கவிதை, சிறுகதை, நாவல்,  ஓவியம்,  நாடகம்,  திரைப்படச்சுவடி  முதலான  பல்துறை ஆற்றல்  மிக்க  ஆளுமைகள்  என்பதை  இணையத்தின்  வழிதேடுதலில்   அறியக்கிடைக்கிறது.   

தமது  முதுகலைமாணி  பட்டப்படிப்பில்  ஆங்கில  இலக்கியத்தையே ஆழியாள்   தேர்வுசெய்தமையால்,  தனது  கவியாளுமையை மொழிபெயர்ப்பின்  பக்கமும்  திருப்பியிருக்கிறார்.

எனினும்,   ஆழியாளின்  கவிதைகள்தான்  அவரை   தமிழ்  இலக்கிய உலகிற்கு  பரவலாக  அறிமுகப்படுத்தியிருக்கிறது

இன்று  இலங்கையில்  தமிழ்ப்பிரதேசங்களில்  பேசுபொருளாக இருப்பது  காணாமல்  போனவர்கள்  விவகாரம்.   போரிலும் சரணடைந்தும்,   சுற்றிவளைப்பிலும்  காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும்   இதுவரையில்  சரியாக  கணக்கிடப்படவில்லை.

அதுபோன்ற  ஒரு  யுகம்  இந்தக்கண்டத்திலும்  ஒரு  காலத்தில் நீடித்திருந்தது.    தத்தெடுத்தல்  என்ற பெயரில்  ஆதிவாசிகளின் அடையாளத்தையே   பூண்டோடு  அழிக்க  எடுக்கப்பட்ட  அந்த  கொடிய    முயற்சிகள்  பற்றியும்  திரைப்படங்கள்,  ஆவணப்படங்கள், புதினங்கள்,    ஆய்வுகள்  வெளியாகியிருக்கின்றன.

ஒரு காலத்தில்   இங்கிலாந்திலிருந்து  வந்த  வெள்ளை இனக்கைதிகளுக்கும்   ஆதிவாசிப்பெண்களுக்கும்  பிறந்த குழந்தைகளின்   நிறத்தை  வெள்ளை  நிறமாக்கும்  முயற்சியிலும் அவர்களிடமிருந்து  புதிய  வெள்ளை   இனச்சந்ததியை உற்பத்திசெய்யும்     தூரநோக்கிலும்   பகிரங்கமாக              களவாடப்பட்ட ( Stolen Children - Stolen Generations )  குழந்தைகள் பற்றிய  திரைப்படங்களும்  வெளியாகியுள்ளன.

அவ்வாறு  துயர்மிகுந்த  பக்கங்களை  தமிழ்  இலக்கியத்தின்  பக்கம் காண்பித்தவர்   ஆழியாள்.

பரமட்டா,   வகவகா,   பண்டூரா,   கப்புக்கா,   உம்பாகும்பா,  டுவம்பா, வங்கரத்தா,    மங்கான   இவ்வாறாக  நூற்றுக்கணக்கான  ஊர்கள் பிரதேசங்கள்   இன்றும்  இந்த  மண்ணின்  மைந்தர்களை நினைவூட்டுகிறது.    அம்மக்களின்  பெயர்களில்  வீதிகள்,   நகரங்கள்.

அவர்களின்   தேவதூதன் போன்று  அம்மக்களின்  நிலங்களுக்காக நீதிமன்றில்   போராடி  வென்ற  மாபோ   என்ற  பெரியவர்  பற்றிய திரைப்படமும்  பார்த்திருக்கின்றேன்.

அம்மக்களையும்   தமிழ்  இலக்கிய  உலகம்  தெரிந்துகொள்ளவேண்டும்   என்ற  தனது  உள்மனயாத்திரையை பதிவுசெய்த   ஆழியாள்,   இலங்கையில்  திருகோணமலையில்  பிறந்து   அங்குள்ள  புனித  சவேரியார்  பாடசாலையில்  கற்றபின்னர்,   மதுரையில்  மீனாட்சி  கல்லூரியில்  ஆங்கில இலக்கியத்தில்   கலைமாணிப்பட்டம்   பெற்று,  தாயகம்  திரும்பி, யாழ்ப்பாணம்   பல்கலைக்கழகத்தின்  வவுனியா  வளாகத்தில்  ஆங்கில   இலக்கிய  விரிவுரையாளராக  பணியாற்றிய பின்னர்அவுஸ்திரேலியா   சிட்னியில்    நியூ சவுத்வேல்ஸ்  பல்கலைக்கழகத்தில்   ஆங்கில  முதுமாணிப்பட்டமும்  தகவல் தொழில்நுட்பத்தில்   பட்ட  மேற்படிப்பு   டிப்ளோமாவும் .   பெற்றவர். தற்பொழுது   அவுஸ்திரேலியா  தலைநகர்  மாநிலம்  கன்பராவில் தமது   கணவர்,   குழந்தையுடன்  வசிக்கிறார்.  

இவருடைய  கணவர்   ரகுபதியும்  தேர்ந்த   வாசகர்.   கலை, இலக்கிய ஆர்வலர்.    நண்பர்  ஜெயமோகனும்  தமது  அவுஸ்திரேலியா  பயண இலக்கியம்   புல்வெளிதேசம்   நூலில்   ஆழியாள்  பற்றியும்  பதிவுசெய்துள்ளார்.

நாம்  சிட்னியில்  நடத்திய  இரண்டாவது  எழுத்தாளர்  விழாவில் கலந்துகொண்ட   ஆழியாளின்  முதல்  கவிதைத்தொகுப்பு  உரத்துப்பேச   நூலை   மூத்த  இலக்கிய  ஆர்வலர்  கோவிந்தராஜன் விமர்சித்து  ஆழியாளின்  கவியாளுமையை  எமக்கு அறிமுகப்படுத்தினார்.   அன்றுதான்  ஆழியாளை  முதல்  முதலில் சந்தித்தேன்.     அடுத்த  ஆண்டு  ( 2003  இல்)   மெல்பன்  விழாவுக்கு வந்து  பெண்படைப்பாளிகளின்  தொகுப்பான  ஊடறு  இலக்கிய மலரை   அறிமுகப்படுத்தி  உரையாற்றிய  அவர்  அதன்பிறகு  எமது இலக்கிய  இயக்கத்திலும்  இணைந்துகொண்டு  இன்றுவரையில்  தமது   ஆதரவை  வழங்குகிறார்.

 2004   இல்  கன்பராவில்  நான்காவது  விழாவை   அவரே  ஒழுங்கு செய்தார். எனினும்   அவ்வேளையில்  அவருக்கு  அவசரமாக இலங்கை     செல்ல வேண்டியிருந்தது.

" உரியவர்  இல்லையென்றால்  ஒரு  முழம்  கட்டை " என்பார்கள். ஆழியாள்  இல்லாமல்  விழாவா...?  என்று  ஆழ்ந்துயோசித்தபொழுது, " எதற்கும்  யோசிக்கவேண்டாம்.   எல்லா  ஒழுங்குகளும் செய்திருக்கின்றேன்.    மெல்பனிலிருந்து  வருபவர்கள்  தங்கியிருந்து செல்வதற்கும்   தனது  வீட்டையும்  ஏற்பாடுசெய்து தேவையானவற்றையும்  வாங்கிவைத்துவிட்டுத்தான்  புறப்படுகிறோம்என்று    தைரியம்    சொன்னவர்.

அவ்வாறே   அவரும்  அவருடைய   கணவரும்  செய்தனர்.   இத்தகைய   அபூர்வகுணமுள்ள  நல்ல  மனிதர்களுடன்  வாழும்  இந்த   வாழ்க்கை  பெறுமதியானது.   அந்த  விழாவுக்கு இலங்கையிலிருந்து   ஊடகவியலாளர்  தேவகௌரி,   எழுத்தாளர் தில்லை    நடராஜா  ஆகியோரும்  வந்தனர்.   கவிஞர்  அம்பியின் பவளவிழாவையும்  கன்பராவில்  நடத்தினோம்.   மெல்பன்,   சிட்னி, கன்பராவிலிருந்தும்   பல   எழுத்தாளர்கள்,   கலை,  இலக்கிய ஆர்வலர்கள்   வருகைதந்தனர்.   மறைந்த  ஓவியர்  செல்வத்துரை அய்யாவின்   நினைவாக   கன்பரா  தமிழ்  மாணவர்கள்  மத்தியில் ஓவியப்போட்டியும்    நடத்தி  பரிசுகள்  வழங்கினோம்.   இவ்வளவு பணிகளையும்   நாம்  எந்தச்சிக்கலும்  இல்லாமல்  சிறப்பாக  முழுநாள் நிகழ்வாக   செய்து   முடிக்க,  சரியான  திட்டமிடலையும்  முழு ஒத்துழைப்பையும்   முன்னேற்பாடாகவே  வழங்கிய   ஆழியாளையும்   அவர்  கணவர்  ரகுபதியையும்  மறக்கத்தான் முடியுமா....?

உரத்துப்பேச (2000)  துவிதம்  (2006)  கருநாவு  ( 2013)  என்பன  அவருடை கவிதைத்தொகுப்புகள்.

ஆழியாள்   தமது  முதலாவது   தொகுதியை  யாருக்கு   சமர்ப்பணம் செய்திருக்கிறார்   பாருங்கள்.

மூதூர்க்கிராமத்தில்   இரு மொழிகளை  ஊட்டி,  இலக்கியத்தை என்னுள்  ஊடுபாவ  வைத்த  என்  பள்ளி  ஆசிரியர்களுக்கு  - குறிப்பாக  வண்ணமணி  ஐயா,   இக்பால்  சேர்,   நிக்கொலஸ்  சேர், மறைந்த   லியோன் மாஸ்டருக்கு.

திருகோணமலை   மாவட்டத்தில்  இரண்டு  தேசிய  சிறுபான்மை இனங்களின்   மத்தியில்  பிறந்து  வாழ்ந்திருக்கும்  ஆழியாளிடம்  அவர்   கற்ற  பாடசாலையே  எதிர்காலத்தில்  செல்லும் பாதையையும்   தெளிவாக்கியிருக்கிறது.    அதனால்தான்  அவரால் தேசிய   ரீதியாக  மட்டுமன்றி  சர்வதேச  சகோதரத்துவத்துடனும் சிந்திக்கவும்   இயங்கவும்  முடிந்திருக்கிறது.   இப்படி  ஒரு மாணவியைப்பெற்ற  அந்த   ஆசிரியப்பெருந்தகைகள் பாக்கியசாலிகள்தான்.

மௌனமாக   இருந்த  ஆழியாள்  உரத்துப்பேசிய  இக்கவிதை  1996 ஆம்   ஆண்டு  ஒரு   போர்க்காலத்தில்   வெளியாகிறது.

காதுகொள்ளாக் காட்சிகள்
மழை ஓய்ந்தும் / ஓட்டுக்கூரைகள் /  பளீரெனச்சுத்தமாய்க் கிடந்தன.
வானம்  இன்னமும் /  நீலம்பாரிக்காத  மனமாய். /  தார் ரோடுகள்
வானவில்லை   இடைக்கிடை /  நினைவூட்ட, /  பூமிப்பரப்பு முழுதினின்றும் /  புகையெழுந்துசாம்பிராணியையும்  அகிலையும்
நினைவிருத்த,  /   மண்வாசனை   சுகந்த  கீதமாய் /   நாசி வருடிப்போயிற்று.
என்  எதிரே /  வந்த  இரணுவ வண்டி / விலத்திப்போகையில்,
பஞ்சு மிட்டாயைக் கைமாற்றி /   வலதுவிரற் பிஞ்சுகளால் / 
கையை எக்கி, /  உயரவீசி ஆட்டுகிறாள் /  ஒரு சிறுமி
இனிய வான் கடிதப்பதிலாக / அதனுள் நின்ற / அவர்களில் பலரும்
அவ்வாறே கைகாட்ட, / வியப்பில் ஒரு  நொடி / உறைந்த இரத்தம்
அவசரமாய் ஓடியது /   உரத்துக்கேட்டபடி, /
" என் நாட்டில் போரா யார்  சொன்னது... ?

ஒரு சமாதான  காலத்தில்  (2002)  ஆழியாள்   எழுதும்  கவிதையை பாருங்கள்.

ஞாபக  அடுக்குகள்
அது சமாதானத்தின் காலம் /  எனவும் /  போர்கள்  எல்லாம் புறங்காட்டிப்போன  காலம்  எனவும்  /  பேசிக்கொண்டார்கள்.
நாங்கள்  நுனிமர  உச்சிகள்  தாவி /   காற்றைக்கடந்ததுடன்
இள முகில்களைக்கிளறி /  வற்றாத கிணறுகளுக்காக
வானத்தை  குடைந்தபோது /  நட்சத்திரங்கள்  வெளிப்பட்டன
புதைகுழிகளிலிருந்து- /  நாறிக் காய்ந்த பிணங்களின் /   விலா என்புகளாய்

ஆழியாளின்   மூன்று  தொகுப்புகளும்  கூறும்  செய்திகள்  ஏராளம். சமூக  சுயவிமர்சனப்பாங்கிலும்  அமைந்திருப்பவை.    பெண்கள் சந்திப்புகளிலும்    கலந்துகொண்டிருக்கும்  இவர்,   தமிழ்  மக்களின் புலப்பெயர்வையும்    ஆய்வுக்குட்படுத்தி    அந்தப்புதிய   வாழ்வை ஆறாம்   திணைக்கு    ஒப்பிட்டிருப்பவர்.
ஏற்கனவே    நாம்   தமிழர்  நிலங்கள்  என  அறியப்பட்ட  நெய்தல், மருதம்,    முல்லை,   குறிஞ்சி,   நெய்தல்,  பாலை   என்பனவுக்கு  அப்பால்  புகலிட  மண்ணை   ஆழியாள்  ஆறாம்திணை  என்று வகைப்படுத்தி    ஆய்வுசெய்து  சமர்ப்பித்த  உரையை   இந்த  ஆண்டு மே  மாதம்  கன்பாராவில்  நாம்   நடத்திய  இலக்கியசந்திப்பில் கேட்டேன்.

எனினும்  அன்று  சபையிலிருந்த பலருக்கு  அதன்  உள்ளார்ந்த உண்மை   தெளிவாகவில்லை.   எனினும்  ஆழியாள்  சொல்லவந்த விடயம்  சிலருக்குப்  புரிந்தது.

இதுவிடயமாக  மேலும்  பலர்  ஆய்வுசெய்துவருகின்றனர். ஆழியாளின்   அக்கட்டுரை  பரவலான  வாசிப்புக்குச் செல்லவேண்டும். ஆழியாளிடமிருந்து   தமிழ்  இலக்கிய  உலகம்  மேலும்  எதிர்பார்க்கும் பல   விடயங்கள்  அவருடைய  உள்மன  யாத்திரையில் இடம்பிடித்திருக்கின்றன.

சமகாலத்தில்   பெண்ணியக் கவிஞர்களில்  ஆழியாள் கவனிப்புக்குள்ளான    முக்கியமான   ஆளுமை.
---0---



1 comment:

  1. ஆழியாள் நூல்கள் இனிமேல் வாசிக்க வேண்டும். அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete