அதிகாரம் 25 - பிரிடிஷ் லேடி
ஆவரங்கால் அன்ரியின் வரவேற்பறையில் தேநீர் பருகிக் கொண்டிருந்த
பூமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அமிருக்குத் திங்கட்கிழமை வேலை இல்லை. ‘எதற்காக
ஆத்துப் பறந்து அமிர் வெளியே
செல்கிறார்? என்னிடம் ஏதோ மறைக்கிறாரோ?
அதுதான் வெளியேறும் போது வழமையில் சொல்லும்
வாழ்த்துக்களையும் அவர் சொல்லாமல் நழுவுகிறார்.
என்னிடமிருந்து மறைக்க அப்படி என்ன
இருக்கிறது?’
காலை பத்து மணி
அளவில் பூமா ஸ்கொற்லன்ட் யாட்டுக்குப்
புறப்பட்டாள். பொலிஸ் தலைமையக பயங்கரவாத
எதிர்ப்பு நடவடிக்கைத் தலைவன் அவளை வரும்படி
அழைத்து இருந்தான். நாகப்பனின் யாழ்ப்பாண அட்டூழியம் பற்றி ‘சென்றல் கிறிமினல்’
நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்தயார் செய்யவே அழைக்கப்பட்டிருப்பது அவளுக்கு
அப்பொழுது தெரியாது.
அது அவள் ஸ்கொற்லன்ட்
யாட் செல்லும் நான்காவது தடவை.
அச்சமின்றித் தனித்தே சென்றாள். முதல்
முறை ஜீவிதாவோடு அமிரைத் தேடிச் சென்றவள்.
அடுத்த இரண்டு தடவையும் நாகப்பன்
அலுவலகத்தில் நடந்த சட்ட விரோத
தில்லுமுல்லுகள் பற்றிய
துப்போடு சென்றிருந்தாள். அந்தச் சட்டத்துக்கு முரணான
செயல்கள் பற்றிய துப்புக்கள் யாவற்றையும்
அவள் ஜீவிதாவுக்குத் தெரியாமல் ஜீவிதாவிடமே உருவி இருந்தாள்.
ஸ்கொற்லன்ட் யாட் வாயிலில் நின்ற
வெள்ளைச் சேட்டும் கறுப்பு ரவுசரும்
அணிந்த நீண்ட மூக்குக் காவலாளியிடம்
கையில் இருந்த கடிதத்தைக் கொடுத்தாள்.
முதல் முறை ஸ்கொற்லன்ட் யாட்
சென்ற சமயம் விசாரணை அறையில்வைத்து
ஜீவிதாவை உருட்டி மிரட்டியவன்தான் அந்த
பொலிஸ். அன்று தொடக்கம் அவனுக்கு
அவளைத் தெரியும். தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளாமல்
கடிதத்தை வாசித்தான்.
சில நிமிடங்களில் பொலிஸ்
சீருடை அணிந்த ஒரு பச்சைக்கண்
பெண்-பொலிஸ் அவ்விடம் வந்தாள்.
அவள் பூமாவின் மண்ணிறச் சுடிதார்
உடையையும், அவளது குளிருக்கான மண்ணிற
ஜம்பரையும் ஓரக் கண்ணால் நோட்டம்
பார்த்தாள். தொடர்ந்து அவளின் சிவப்பு சிலைட்டையும்,
தோளில் தவழ்ந்த பொப் கூந்தலையும்
அவளின் கண்கள் மேய்ந்தன. பின்னர்
சிவப்புக் கம்பளம் விரித்த ஓடையூடாக
லிஃப்ற் நிலையத்துக்குப் பூமாவை அழைத்துச் சென்றாள்.
அங்கிருந்து பதினெட்டாவது மாடிக்குப் போய், பயங்கர வாத
எதிர்ப்பிரிவு நீலக்கண் அதிகாரியின் அறை
வாயிலில் விட்டாள்.
பூமாவை உள்ளே வரும்படி
குரல் கேட்டது. அவள் அந்த
அதிகாரியின் அறைக்குள் காலடி வைத்ததும் ஆச்சிரியத்தில்
கண்மடல்களை விரித்து வாயைப் பிளந்தபடி
பார்த்தாள்.
அமிர் அந்த அதிகாரிக்கு
நேர் எதிரே மேசையின் மறுபக்கத்தில்
இருந்து சிரித்தான். ‘இங்கே ஏன் வந்தார்?
இங்கே வரத்தான் காலையில் நாயோட்டமாக
ஓடினாரோ? இந்தப் பொலிஸ் அதிகாரிக்கும்
இவருக்கும் என்ன தொடர்பு? என்னைப்
போல உந்த நீலக்கண் வீமனோடு
இவரும் தொடர்பு வைத்திருக்கிறாரோ? யாழ்ப்பாணத்தில்
கொலை அட்டூழியம் செய்து போட்டு வந்த
எவரையாவது பற்றிச்
சொல்லியிருப்பாரோ?’
பூமாவின் திகைப்பு நீலக்
கண் அதிகாரிக்குப் புரிந்தது.
“ஹலோ பூமா. அமருங்கள்."
“நன்றி"
என்று கூறியபடி அவள் தனது
கைப் பையை அவனது மேசையில்
வைத்துவிட்டு அமிரின் ஓரமாக அமர்ந்து,
அமிரை ஏன் வந்தாய் என்று
கேட்பது போலப் பார்த்தாள். அது
நீலக்கண் பொலிஸ் அதிகாரிக்கு விளங்கியது.
“ஹலோ பூமா, உன்னைப் போலவே
அமிரும் அடுத்த கிழமை நீதமன்றத்தில்
சாட்சியம் சொல்லவிருக்கிறார்."
“நீங்கள்
சொல்வது புரியவில்லை" என்று கூறிய பூமா
மீண்டும் அமிரைத் திரும்பிப் பார்த்தாள்.
“கில்லாடி,
சால்வை மூத்தான், கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி
குகனுக்கு எதிராக அமிர் சாட்சி
சொல்ல விருக்கிறார்."
“என்ன சாட்சியம்?" அவளுக்குப் புதிராக இருந்தது.
அந்த அதிகாரி அவளுக்குப்
பதில் சொல்லாமல், மேசையின் கீழ் லாச்சியில்
ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அமிர்தான் அவளின் கேள்விக்குப் பதில்
சொன்னான்.
“அவர்கள் கிறேற் பிரிட்டனில்
தஞ்சம் புக முன்னர் யாழ்ப்பாணத்தில்,
விடுதலைப் போராளிகள் என்ற போர்வையில் செய்த
கொலைகள் கொள்ளைகள் சித்திரவதைகள் பற்றி. அவர்களை ‘த
ஹேக்’ உலக நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த."
அந்த நீலக்கண் அதிகாரி
ஏதோ இரு ஆவணங்களை லாச்சியில்
இருந்து எடுத்து மேசையின் மேல்வைத்தான்.
அப்பொழுது ரெலிபோன் மணி ஒலிக்க,
றிசீவரை எடுத்துப் பேசினான்.
அந்தப் பொலிஸ் அதிகாரி
பூமாவின் சந்தேகத்தைப் போக்க விரும்பி,
“பூமா, நான் முன்னரே
சில விடயங்களைச் சொல்ல முடியவில்லை. அமிர்தான்
உனது நெடுந்தீவுக் கொடுமைகளை எனக்கு முதலில் சொன்னவர்.
அவர் அப்பொழுது லிவர்பூல் சம்பவத்தை அடுத்து ஸ்கொற்லன்ட் யாட்டில்
தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகே நான்
உனது வீடு தேடிவந்து அவற்றை
ஓழுங்கு முறையாகச் சேகரித்தேன்."
அதனைக் கேட்டதும் பிளெசற்
பூங்காவில் வைத்துப் புற் தரையில்
அமர்ந்திருந்து அவள் அமிருக்குச் சொன்ன
நெடுந்தீவுக் கொடுமைகள் பற்றிய வார்த்தைகள் அவளின்
காதுகளில் உயிர் பெற்றன.
'ஓருவன்,
அம்மா அழைத்து வரச் சொன்னதாக
என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோய் ஆலங்கேணிப்
பொட்டல் வெளியில் விட, அங்கு
நின்ற மரநாய் இயக்கப் பெரிய
மனிதன் - இப்பொழுது பாராளுமன்றத்தில் எம்.பியாக இருப்பவன்
அங்கே சுடலை அருகே உள்ள
பாழடைந்த வீட்டில் வைத்துக் கதறக்
கதற பலாத்காரமாக என் வாழ்க்கையைப் பாழாக்கினான்.
அதன் பின்னர் அந்த
ஜீப்பை ஓட்டி வந்தவன் - இப்பொழுது லண்டனிலே படித்த பெரிய
மனிதனாக வாழ்பவன் - என்னை வீட்டில் சேர்ப்பதாகச்
சொல்லி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்து,
பாதி வழியில் ஒரு பனை
அடைப்புக்குள் இழுத்துச் சென்று என்னைப் பலாத்காரமாகக்
கெடுத்தான் ........”
'நான் லண்டனில் வசிக்கும்
அந்த மிருகத்தைப் பழி வாங்கவேண்டும்.”
பொலிஸ் அதிகாரி மெதுவாகச்
செருமினான். அது பூமாவின் சிந்தனைக்கு
முற்றுப் புள்ளி வைத்தது.
அமிருக்குக் கொடுக்க வேண்டிய விளக்கம்
முடிந்தபடியால் அவனுக்கு வெளியேற அனுமதி
வழங்கப்பட்டது.
பொலிஸ் அதிகாரி தனது
கடமையைத் தொடங்கினார்.
“மிஸ் பூமா, அடுத்த
கிழமை நீதிமன்றத்திற்கு வந்து நீ முதல்
நாள் எனக்குச் சொன்ன கதையை
மீண்டும் சொல்ல வேண்டும். அது
‘த ஹேக்;’ உலக
நீதிமன்றத்தில் சொலிசிற்றர் நாகப்பனை நிறுத்த உதவும்."
தன்னை அந்தப் பொலிஸ்
அதிகாரி ‘அம்போ’ எனக் கைவிட்டு
விட்டதாக பூமா மனம் நொந்தாள்.
‘எங்கே போனாலும் பொலிஸ் புத்தி
ஒரே மாதிரித்தான் இருக்கிறது.’ இப்படி அவள் வாய்
முணுமுணுத்தது.
தன் வாழ் நாளில்
என்றுமே நீதிமன்றப் படிகளில் ஏறி கூட்டுக்குள்
நின்று பேச வரும் என்று
அவள் கற்பனையிலும் எண்ணியது கிடையாது. அதுதான்
யாழ்ப்பாண மண்ணின் பெருமை. 'இந்த
நாட்டுக்கு வந்த சனம் பாதிக்கு
மேல் அகதி வாழ்வு மறுக்கப்பட்டு
நீதிமன்றங்கள் ஏறி இறங்கி ஏங்கித்
தவிக்குதுகள். எல்லாம் துப்பாக்கி தந்த
கலாசாரம்தான். எனக்கும் லண்டனில் நீதிமன்றம்
ஏற வேண்டும் என்ற
தலைவிதி.
அவள் நீதிமன்றச் சாட்சிக்
கூட்டுக்கூள் ஏறுவதை வெறுத்தாள்.
நீதிமன்றங்களுக்குப் பாலியல் வன்முறை சம்பந்தமான
விசாரணைகள் வரும் வேளைகளில் சட்டத்தரணிகள்
பெண்களிடம் பச்சையாகக் கேட்பதைக் கற்பனை செய்தாள். அது
அவளை வெந்தணலில் வாட்டி எடுத்தது. ‘உந்தச்
சட்டத்தரணிகள் தங்கள் மனைவிகளை, தங்கள்
குமர்ப்பிள்ளைகளைச் சாட்சிக் கூட்டில் ஏற்றிப்
பச்சையாகக் கேள்விகளைக் கேட்பார்களா? எவளோ பெற்ற பிள்ளைதானே.
துகிலுரிந்து அலங்கோலப்படுத்தி வழக்கை வென்று பணத்தின்மேல்
பணத்தைச் சேர்க்கப் பார்க்கிறார்கள். என்னை விடுவார்களா? பச்சையாகக்
கேட்பார்கள்.’ 'எப்படி அணைத்தான்? எந்தக்
கன்னத்தில் முத்தங் கொடுத்தான்? எவ்வளவு
நேரம்? இனித்ததா? உறைத்ததா? புளித்ததா? புதிய அனுபவமா? பழைய
அனுபவமா?”
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிக்கு அவள்
முகபாவனை ஏதோ சொல்லியிருக்க வேண்டும்.
கதிரையை பின்னே தள்ளி நிமிர்ந்து
இருந்து சொன்னார்.
“மிஸ் பூமா. பரிஸ்டரின்
குறுக்கு விசாரணை பற்றிப் பெரிதாக
ஒன்றும் பயப்படத் தேவை இல்லை.
உனக்குச் சுடலை அருகே ஏற்பட்ட
அந்த கேவலங்களைத் துருவித் துருவிக் கேட்கமாட்டார்கள்.
எனக்கு நீ முதல் நாள்
சொன்னவற்றைத் திரும்பச் சொன்னால் போதும்."
அவள் அவனுடைய வார்த்தைகளில்
திருப்திப்பட வில்லை. ஆகவே அந்தச்
சிக்கலில் இருந்து தப்பும் நோக்கத்தோடு
குழந்தைப் பிள்ளை போல,
“ஐயா, நான் அன்று சொன்னவற்றை
எல்லாம் மறந்து போனேன்" என்றாள்.
அது ஒரு அனுபவம் இல்லாத
புதுப் பொலிஸ்காரனைக்கூட மடக்கப்
போதாதே?
அந்த நீலக்கண் அதிகாரி
கதிரையைவிட்டு எழுந்து, தனது மேசையின்
பின்னே உள்ள நீல அலமாரியைத்
திறந்து ஒரு சிறிய ஒலிப்
பதிவுக்கருவியை எடுத்து மேசையில் வைத்தான்.
பின்னர் பூமாவின் இருண்டு கறுத்த
முகத்தைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு,
“பூமா, நான் பொலிஸ் உத்தியோகத்தன்.
கடமை காரணமாகச் சிலவிடயங்களை வெளியிடுவதில்லை. முதல் நாள் நீ
கூறியவற்றை நான் இந்த ஒலிப்பதிவுக்;
கருவியில் பதிவு செய்திருக்கிறேன். மறந்திருந்தால்
அதை ஓரு முறை கேட்கலாம்"
என்று கூறிய நீலக்கண் அதிகாரி
அவளின் பதிலுக்குக் காத்திராமல் அந்தச் சிறிய ஒலிப்
பதிவுக் கருவியை முடுக்கினான்.
அவள் அதில் கவனம்
செலுத்தவில்லை. அந்தப் பொலிஸ்காரன் தன்னைச்
சாட்சிக் கூட்டில் ஏற்றுவதில் அழுங்குப்
பிடியாக இருப்தை அவள் உணர்ந்தாள்.
அந்த அதிகாரி யாருடனோ
ரெலிபோனில் பேசினார். சில நிமிடங்களில் அதே
பச்சைக்கண் பெண்-பொலிஸ் அங்கு
தேநீர்த் தட்டுடன் வந்தாள். முதன்
முறை அமிரைத் தேடி ஸ்;கொற்லன்ட் யாட் சென்றசமயம் ஜீவிதாவைப்
பதினெட்டாவது மாடியில் வைத்து வெருட்டியவள்
அவள்தான் என்பது பூமாவின் நினைவுக்கு
வந்தது.
அந்த பொலிஸ் அதிகாரி
கதிரையைவிட்டு எழுந்து தேநீர்க் கோப்பையை
எடுத்துப் பூமாவுக்கு நீட்டினான். அவள் வாங்கி மேசையில்
வைத்தாள்.
“தேநீர்.
பருகுங்கள்."
அந்த ஒலிப் பதிவு
செய்த பேச்சு இடையிடையே அவளை
அருவருக்கச் செய்தது. தான் அப்படியான
செய்திகளை ஒரு ஆணுக்குச் சொன்னதைப்
பற்றிய கவலை அவளை ஆக்கிரமித்தது.
அவள் நீதிமன்றச் சாட்சிக் கூட்டுக்குள் ஏறுவதை
எப்படியும் தவிர்க்க முயன்றாள்.
“ஐயா, நீங்கள் பதிவு செய்த
பேச்சு இருக்கிறதுதானே. அதை நீங்கள் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கலாந்தானே? நான் அந்த அலங்கோலங்களை
எல்லாம் எல்லோர் முன்னிலையிலும் சொல்ல
வேண்டுமா?"
அவள் தேநீரை இன்னும்
தொடவில்லை.
அவள் கண்களிலிருந்து கண்ணீர்
சொட்டுவதை அந்த அதிகாரி அவதானித்தான்.
அவள் மேசையில் வைத்த தனது
கைப் பையைத் திறந்து ரிசூ
கடதாசியை எடுத்துக் கண்களை ஒற்றினாள்.
நீலக்கண் அதிகாரிக்கு மனம்
கொஞ்சம் நெகிழ்ந்தது. பொலிசும் மனிதன்தானே? மனிதர்களே
கொடூரமான பொலிசாக அராஜகம் பண்ணும்
குடாநாட்டில் இருந்து வந்த பூமா
ஒரு பொலிஸ்-மனிதனைக் கண்டாள்.
கீழைத் தேசக் கலாச்சாரம்,
சட்டமாயினும் பெண்ணைத் துகில் உரிந்து
பார்க்க அனுமதிப்பதில்லை என்பது அந்த நீலக்கண்
அதிகாரிக்குச் செப்பமாகத் தெரியாது. அவனுக்குத் தங்கள் மேலைத் தேசச்
சட்டங்கள் அந்தக் கைங்கரியத்தை கீழைத்
தேசங்களில் சில வேளைகளில் வக்கிரபுத்தி
படைத்த சட்டத்தரணிகளால் அரங்கேற்று விக்கின்றன என்பதும் அவனுக்குத் தெரியாது.
இருப்பினும் ஒரு பொலிஸ்காரனிடம் எதிர்பார்க்க
முடியாத மனிதம் அவனிடம் மலர்ந்து
பரந்தது.
“பூமா, நீ கவலைப்
படத்தேவை இல்லை. நீதிமன்றந் தொடங்க
முன்னரே நான் நீதிபதிகளைச் ‘சேம்பரில்’
சந்தித்து, கமெறாவில் சாட்சியங்கூற ஒழுங்கு செய்கிறேன். நாகப்பனை
‘த ஹேக்’ உலக
நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டு மென்றால்
நீ ‘கமெறாவிலாவது’ சாட்சியம் கூறினால்தான் முடியும். இல்லாவிட்டால் அவனை அங்கு கொண்டு
செல்வது தவறும்."
நெடுந்தீவு ஆலங்கேணிச் சுடலையும் பனை அடைப்பும் அவள்
இரத்தத்தில் விதைத்து முளைக்க வைத்த
வெஞ்சினம் அவளை ஒருப்பட வைத்தது.
எனினும் தேநீரை அவள்
இன்னும் தொடவில்லை.
“பூமா, நாகப்பன்மீது மேலும் ஒரு ‘கிறிமினல்’
குற்றம் உள்ளது."
“லண்டனிலா?"
என்று கேட்ட பூமா 'அது
என்ன ‘கிறிமினல்’ குற்றம்?” என்ற ஆவல் சதிராட
கதிரையை இழுத்து நிமிர்ந்து இருந்தாள்.
“இல்லை.
புங்குடுதீவில் புரிந்த கொலைக் குற்றம்.
அதுவும் ‘த ஹேக்’
உலக நீதிமன்றத்துக்கு நாகப்பனைக் கொண்டு போக உதவும்."
“யாரைக்
கொலை செய்தார் அந்த நாகப்பன்?"
பூமாவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
“தீவுப்
பகுதி உதவி அரசாங் அதிபர்
நிக்சனை."
“அதற்குச்
சாட்சி அமிரா?"
“இல்லை.
நான்தான்."
“நீங்களா?"
“உலக மனித உரிமைகள் நிறுவனங்கள்
வெளியிட்ட செய்திக் குறிப்புகள். அத்தோடு
கொழும்புப் பாராளுமன்ற ஹன்ஷாட்" என்று பதிலளித்த அந்த
அதிகாரி தான் மேசை லாச்சிக்குள்
இருந்து எடுத்து மேசையில் வைத்த
ஹன்ஷாட்டையும் மற்றும் அம்நெஸ்ரி இன்ரநாசனல்
குறிப்புகளையும் தூக்கிக்கொடுத்தான்.
பூமா ஹன்ஷாட்டைக் கையில்
எடுத்தாள்.
“வீரசிங்கம் ஆனந்தசங்கரி எம். பி. தீவுப்
பகுதி உதவி அரசாங்க அதிபர்
நிக்சன் கொலை பற்றிப் கொழும்புப்
பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். வாசி பூமா."
அவள் தேநீர்க் கோப்பையைக்
கையில் எடுத்தாள்.
அவள் அந்த அறையைவிட்டு
வெளியேறியபோது அவளுக்கு லண்டன் வந்த
நோக்கம் நிறைவேறியது போன்ற உணர்வு. மனதில்
மகிழ்ச்சி என்றாலும் அது அரைகுறையாகவே இருந்தது.
இன்னும் ஆலங்கேணிச் சுடலை அருகே பாழடைந்த
வீட்டில் வைத்து அவளைக் கெடுத்த
ஒருவன் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறான். அவனைப் பழிவாங்க வேண்டும்
என்ற எண்ணம் பூதாகாரமாக உருவெடுத்தது.
ஜீவிதாவின் வழக்கு இறுதி விசாரணை
நீதிமன்றம் வர இன்னும் மூன்று
வாரங்களே இருந்தன.
அமிரும் பூமாவும் புகையிரதத்தில்
ஈஸ்ற்ஹம் நகரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நண்பகல் புகையிரதம் வெளித்திருந்தது. பூமாவும் அமிரும் அருகருகே
நெருக்கமாக இருந்தனர்.
“ஜீவிதாவின்
பரிஸ்டருடைய மிகுதிப்பணம் நாளைக்குச் செலுத்தவேண்டும். என்ன செய்யப் போகிறீர்கள்?"
பூமா கேட்டுவிட்டு அமிரின் முகத்தை ஆவலோடு
பார்த்தாள்.
“அன்ரியைக்
கேட்போமா?"
“கொஞ்சப்
பணமா? 1700 பவுண் அல்லவா."
“வட்டி என்றால் தயங்கமாட்டார்." அமிர்
சொன்னான்.
பூமா புகையிரத யன்னல்
கண்ணாடி யூடாக வெளியே பார்த்தாள்.
ஒரு பூங்கா - ஏராளமான மரங்கள்.
எல்லாம் கலிங்கத்துப் பரணியில் கூழ் காய்ச்சும்
பேய்களைப் போல இலைகளற்று
கறுத்து மொட்டையாக நின்றன. குளிரில் மனிதரெல்லாம்
அடையாளம் தெரியாதவாறு விதவிதமான குளிருடைகளால் தங்களை மூடியிருந்தனர்.
இருவரும் ஈஸ்ற்ஹம் புகையிரத
நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்.
நேரம் நண்பகலைக் கடந்துவிட்டது. குளிர் காற்று வேகமாக
வீசிக்கொண்டிருந்தது. பூமா அமிரோடு நெருக்கமாக
நடந்தாள். இரு பக்க நடைபாதைகளும்
முட்டிய சனம்.
பூமாவின் கவனத்தை வீதியின்
எதிர்ப்பக்க நடை பாதை கவர்ந்து
இழுத்தது. இடையே வீதி நிரம்பிய
வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன.
நடைபாதை நிறைந்த சனத்தினூடாக அந்த
உருவம் எதிர்ப்பக்க பஸ்தரிப்பு நிலைய மறைவில் நடந்துகொண்டிருந்தது
பட்டும் படாமலும் தெரிந்தது.
அமிர் எதிர்ப்பக்க நடை
பாதையைப் பார்த்தான். வெள்ளைகள், கறுப்பர்கள், ஏசியர்கள் - உலகத்தின் அத்தனை இனமக்களும் முண்டியடித்து
நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் அந்தப் பெண்மணி யார்?
“அமிர்,
அதோ பாருங்கள் அன்ரி பஸ்தரிப்பு நிலையம்
ஓரமாகச் செல்கிறார்."
“அது அன்ரி இல்லைப் பூமா.
தலை முடியைப் பார். கறுப்பாக
உள்ளது. அன்ரியின் முடி பால்வெள்ளை."
“ஓ நீங்கள் சொல்வது சரிதான்.
அது வேறுயாரோ. அவவின் கையில் உண்டியல்
இல்லை. நிட்சயமாக அது அன்ரி இல்லை."
வாகனங்களுடாகவும் சனத்தினூடாகவும் மீண்டும் பார்த்தனர்.
“இல்லைப்
பூமா. நல்லாக் கவனித்துப் பார்.
எப்படிக் காலைத்தூக்கிப் பக்கவாட்டில் நீட்டி இழுத்து வைக்கிறா.
எங்கள் அன்ரிதான்."
“இல்லை அமிர். அந்த மனுசியைப்
பாருங்கள். இளம் பெட்டைகள் கலியாணவீட்டுக்குக்
கட்டுகிற சிவப்புப் பட்டுச் சேலை கட்டியிருக்கிறார்.
ஜக்கட்டுக்குக் கீழே பாருங்கள். அன்ரி
சிவப்புச் சேலை கட்டுவதில்லை. அவ
கறுப்பு நரிகள் தீவிர பக்தை.
எப்பொழுதும் பச்சைச் சேலைதான் கட்டுகிறவ"
என்று கூறிய பூமா தலையை
நிமிர்த்தி அமிரின் முகத்தைப் பார்த்தாள்.
அந்தப் முதிய பெண்
சனக்கூட்டத்தினூடாக நடந்து கொண்டிருந்தாள். யாரென்பது
அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
“நாங்கள் ஏன் இங்கு
நின்று வாக்குவாதப்படுவான். வா பூமா வீதிக்கு
மறுபக்கம் போய் யாரென்று பார்ப்போம்."
வீதியைக் கடந்த இருவரும்
திகைத்துப் போயினர். விரைந்து அந்த
மனுசியை முந்தி, அவவின் முன்
ஒருவரோடு ஒருவர் ஒட்டினாற் போல
நின்றனர். பூமாவின் தலை அமிரின்
நாடியில் முட்டியது.
“என்ன நீங்கள் இரண்டு
பேரும் லண்டன் லீலையில் இறங்கி
விட்டீர்களோ?" அமிரும் பூமாவும் நெருங்கியபடி
தன்முன்னே நின்றதைக் கண்ட ஆவரங்கால் அன்ரி
கேட்டார்.
அன்ரியின் வெள்ளைக் கூந்தலுக்குக் கறுப்புச்
சாயம் பூசப்பட்டுள்ளதைப் பார்த்து பூமாவும் அமிரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். பக்கத்துப்
பாதசாரிகள் அவர்கள் இருவரையும் திரும்பிப்
பார்த்தனர். வாகனங்களின் இரைச்சல் அவர்களின் சிரிப்பொலியை
அமுக்கி இருந்தது.
அமிர் பூமா இருவரும்
அன்ரியின் தலைமுடியை விடாமல் உற்றுப் பார்ப்பதை
உணர்ந்த அன்ரிக்கு விளங்கியது ஏன் அவர்கள் அப்படி
வீதியிலே நின்று சிரிக்கிறார்கள் என்று.
“ஏன் நீங்கள் கெக்கட்டம்
போட்டுச் சிரிக்கிறீர்கள்? நான் மட்டுமே தலைக்கு
‘டை’ பண்ணி இருக்கிறேன். உங்கே
இன்னும் கலியாணம் செய்யாத பெடியள்கூட
தலை முடிக்கு ‘டை’ பண்ணுகினம். சிலபெடியளுக்குச்
சாயம் அடிக்க உச்சியிலே மயிரே
இல்லை. எனக்கு இந்த வயதிலேயும்
மயிர் அடர்த்தி. என்னுடைய மயிர். என்னுடைய
காசு. என்னுடைய விருப்பம். ஏன்
உங்களுக்குப் பற்றிக்கொண்டு வருகிறது? இல்லைக் கேட்கிறன் ஏன்
பற்றிக்கொண்டு வருகிறது?"
அன்ரியின் அதட்டல் பாதசாரிகள் அவரை
முறைத்துப் பார்க்கச் செய்தது.
“அன்ரி கோவியாதையுங்கள். எப்ப அன்ரி சாயம்
அடித்தனீங்கள்? எங்கே?" பூமா விடாமல் கேள்வி
தொடுத்தாள்.
“இப்பதான்.
அந்த முடக்கிலே இருக்கிற ‘பியூரி பாலரில்’. பதினைந்து
பவுண் கொடுத்தனான்."
“இலங்கைப் பணத்தில் 16,000 ரூபா.
ஏன் அன்ரி இந்த வயதிலே,
உந்த எடுப்பெல்லாம்? காடு வா வா
என்று சொல்கிறது. வீடு போ போ
என்று துரத்துகிறது. என்றாலும் அன்ரியைப் பார்த்தால் இருபது வயது குறைவு
போலக் காட்டுகிறது. அன்ரி சின்னனிலே நல்ல
வடிவாக இருந்திருப்பா போல."
ஆவரங்கால் அன்ரி கொடுப்புக்குள் சிரித்தார்.
பூமா கடைசியாகச் சொன்ன வார்த்தை பூமாமீது
வந்த அவவின் கோபத்தைத் தணித்தது.
அப்பொழுது அமிர் ஒரு குண்டைத்
தூக்கிப் போட்டான்
“அன்ரி எங்கே உங்கள் உண்டியல்?
கூந்தலுக்கு சாயம் அடித்ததோடு அதையும்
தூக்கி வீசிவிட்டீர்களோ?"
“தம்பி டே நான் இப்ப
பிரிடிஷ் ‘லேடி’. இனிமேல் நான்
ஏன் அந்தத் தகர டப்பாவைக்
காவவேணும்?"
பூமாவும்
அமிரும் அன்ரியை உற்றுப் பார்த்தார்கள்.
அன்ரி சொன்னது அவர்களுக்கு ஒன்றுமே
விளங்கவில்லை.
“என்ன இரண்டு பேரும்
புதுமையாகப் பார்க்கிறீர்கள்? நான் சொன்னது விளங்கவில்லையோ?"
“இல்லை அன்ரி." பூமா கூறினாள்.
“எனக்குப்
பிரிடிஷ் ‘பாஸ்போட்’ இன்றைக்குக் காலையில்தான் வந்தது. எனக்கு மட்டுமில்லை.
என்னுடைய கடைசிப் பெட்டை குடும்பத்துக்கும்
இன்றைக்குத்தான் பிரிடிஷ் ‘பாஸ்போட்’ வந்தது. மற்றப் பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள் எல்லோருக்கும் முந்தியே பிரிட்டிஷ் பிரசாவுரிமை
வந்திட்டுது. இன்னும் ஏன் நான்
உண்டியல் குலுக்க வேண்டும்?"
“என்ன ஆவரங்கால் அன்ரி
சொல்கிறியள்!" அன்ரியின் கதையின் வால்கூட அமிருக்குப்
பிடிபடவில்லை.
“உனக்கு இன்னும் நான்
சொல்கிறது விளங்கவில்லைத் தம்பி. இத்தனை காலமும்
சிங்கள இராணுவத்தோடு கறுப்பு நரிகள் சண்டை
பிடித்தபடியால்தானே எங்களாலே பொருள் பண்டம்
சேர்க்கவும், கார் வீடு வாசல்
வாங்கவும் முடிந்தது. சண்டையை நிற்பாட்டி இருந்தால்
எங்களைத் திருப்பி அனுப்பி இருப்பார்கள்.
சண்டை நீடிக்கத்தான் உண்டியல் குலுக்கினனான். என்னுடைய
இரண்டாவது பெட்டை இரண்டு வீடு
வாங்கிப்போட்டாள். மற்றவை ஒவ்வொரு வீடுதான்.
எல்லோரிடமும் இவ்விரண்டு கார் இருக்கிறது. நாங்கள்
எல்லோரும் இப்ப பிரிடிஷ் பிரசைகள்.
எங்களை இனித்திருப்பி யாழ்ப்பாணம் அனுப்பேலாது. அதுதான் தம்பி பிரிடிஷ்
சட்டம். அது உமக்குத் தெரியாதே?
அதுக்குப் பிறகு நான் ஏன்
சிங்கள படையோடு சண்டை போடுகிற
கறுப்பு நரிகளுக்காக உண்டியல் குலுக்க வேண்டும்?"
அன்ரியின் சித்தாந்தத்தைக் கேட்ட அமிர் சிந்திக்க
முடியாமல் விறைத்தான். இத்தனை நாட்களும் யுத்தத்தை
நீடிக்கத்தான் அன்ரி உண்டியல் குலுக்கினாரா?
அந்த வினா அவனைத் திருகிப் பிழிந்தது.
பிறந்த மண்ணை விட்டு ஓட
வழிதெரியாது யாழ் குடாவுள் முடங்கித்
தவிக்கும் ஏழைச் சனங்களை யுத்தகளத்தில்
அன்ரி பலிவைப்பதையும், ஒரு புனித கைங்கரியத்துக்குக்
கரும்புள்ளி குத்துவதையும் அவனால் சகிக்க முடியவில்லை.
அருவருப்போடு அன்ரியைப் பார்த்தான்.
“சண்டை நீடிக்கத்தான் குலுக்கினேன். தம்பி என்ன சமாதான
தீர்வு வரும் அல்லது வெற்றி
வரும், யாழ்ப்பாணம் திரும்பிப் போகத்தான் என் தருமசேவை என்று
நினைத்தீரோ?"
அமிரினால் சிந்திக்கவும் முடியவில்லை. வாய் திறந்து நியாயம்
கேட்கவும் அவன் விரும்பவில்லை. ஏன்
என்றால் அன்ரியின் உலகியல் ஞானம் குண்டுச்
சட்டிக்கு வெளியால் இல்லை என்பது
அவனுக்குத் தெரியும். அன்ரியை வெறித்துப் பார்த்தான்.
“தம்பி,
நீர் பார்க்கிற பார்வை சரியில்லை. உங்கை
யார் யாழ்ப்பாணத்திலே சண்டை முடிந்து சமாதானம்
வந்தவுடனே லண்டனை விட்டுத் திரும்பிப்
போக ஆயத்தம்? ஒருத்தரைச் சொல்லும்
பார்ப்பம்."
“ஆவரங்கால்
அன்ரி. நான் சண்டை முடியமுதலே
யாழ்ப்பாணம் போகவிருக்கிறேன்."
“உன்கென்னடா
தம்பி விசரே? இந்தச் சொகுசான
வாழ்க்கையை விட்டு எந்தப் பேயன்
என்றாலும் யாழ்;ப்பாணம் திரும்பிப்
போவானே? என்னுடைய பேரப் பிள்ளைகளுக்குத்
தமிழே வராது. அதுகள் அங்கே
போய் உந்த எழிய தமிழ்
பேச ஓமாமோ? அங்கே சிங்கள
இராணுவம் செல்லடிப்பான். குண்டு போடுவான். துரத்தித்
துரத்தி வளைத்துப் பிடித்துச் சுட்டுப் புதைப்பான். பெண்பிரசை
வாழவிடுவானே? டே தம்பி,; ஊரிலே
என் கால் காரில் பட்டதே
இல்லை. காரை நான் தொட்டுக்கூடப்
பார்க்கவில்லை. லண்டனைப் பார். என்
பிள்ளையள் ஒவ்வொன்றும் கார் வைத்திருக்குதுகள். என்னுடைய
பெம்பிளைப் பிள்ளையள் லண்டன் தெருவிலே காரிலே
பறக்குதுகள். அதை விடு. போனால்
சிங்களவன் அரசாங்கத்திலே வேலை தருவானே? தரவையிலே
மாடு மேய்த்து அல்லது கோவண்
குண்டியோடு மண்ணைத் திருப்பித் திருப்பிக்
கிண்டச் சொல்லுறியளோ?"
“காசைக்
கொண்டு போய்க் கடைபோடலாம் அன்ரி"
என்றாள் பூமா.
“என்னடி
பிள்ளை நீயும் யாழ்ப்பாணப் படியாத
சனம் மாதிரிக் கதைக்கிறாய். போறவை
எல்லாம் கடை போட்டால் சாமான்
வாங்க யார் இருப்பினம்?"
ஆவரங்கால் அன்ரியின் தர்க்கம் பூமாவையும் அமிரையும்
வாயடைக்கச் செய்தது. அதற்குள் மறைந்து
நிற்கும் யதார்த்தத்தை அவர்கள் அலசிப் பார்க்கவில்லை.
இருவரும் ஆளையாள் மாறிமாறிப் பார்த்;தனர். அவர்கள் அன்ரிக்குக்
காத்திராமல் வீடு நோக்கி வேகமாக
நடந்தனர்.
பிரிடிஷ் லேடி ஆவரங்கால்
அன்ரி வெளி வளைந்த கால்களை
அகல விரித்து மேலே தூக்கி
மெதுவாகச் சீமெந்து நடை பாதையிலே
பதித்து வைத்து இருபக்கமும் சாய்ந்தாடி
வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
இன்னும் வரும் ...
No comments:
Post a Comment