Anybody
there?
வீடு ஒன்று வாங்குவதற்காக மெல்பேர்ணின்
மேற்குப்பகுதிகளில் அலைந்து திரிந்தேன். எனக்குப் புதுவீடு கட்டுவதில் இஸ்டமில்லை.
என்னால் முடியாது. நான் ஒரு சோம்பேறி. யாராவது கட்டிய வீட்டை வாங்கி அதை
அழகுபடுத்துவதில்தான் பிரியம் எனக்கு.
பார்க்காத வீடுகள் இல்லை. போகாத இடங்கள் இல்லை.
ஓரளவிற்குப் பிடித்துக் கொண்டுவிட்டால், மகனையும் கூட்டிக் கொண்டுபோய்க்
காட்டுவோம். பாடசாலையில் இருந்து மகனைக் கூட்டிக்கொண்டு வரும்போது அந்த வேலையைச்
செய்வோம். அப்போது மகனுக்கு 13 வயதிருக்கும்.
ஒரு றியல் எஸ்றேற்றில் வேலை செய்யும் வியட்நாமியனுடன்
கொஞ்ச நாட்கள் அலைந்து திரிந்தேன். ஒருநாள் அவனுடன் Burnside Heights என்னும்
இடத்தில் உள்ள வீட்டைப் பார்ப்பதற்காகச் சென்றோம். பாதை வளைந்து வளைந்து ஓடியது.
வீடுகள் பெட்டிகள் போல கட்டம் கட்டி நின்றன.
அந்த வீட்டிற்கு முன்னால் ஒரு கார் நின்றது. எங்களைக்
கூட்டிச் சென்ற வியட்நாமியன் அந்த வீட்டுக் கராஜைத் சடசடவெனத் தட்டி,
Anybody there?
என்று அழகாகக் கத்தினான். வீட்டிற்குள் மனிதர்கள்
இருப்பதற்கான அரவம் இல்லை.
எங்களைக் காரிற்குள் இருக்கும்படி சொல்லிவிட்டு,
தன்னிடமுள்ள திறப்பினால் வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் வந்து
எங்களை உள்ளே வரும்படி சொன்னான். நாங்கள் அவனின் பின்னால் உள்ளே நுழைந்தோம்.
உள்ளே ஒருவன் குசினிக்குள் நின்று அடுப்பை சரி செய்வது
போல பாவனை செய்தான். ஒருவேளை காது கேளாதவனாக இருப்பானோ? றியல் எஸ்றேற்காரன்
அவனுடன் வியட்நாம் பாஷையில் கதைத்துவிட்டு, வீட்டை சுற்றிக் காட்டினான்.
இன்னொரு அறைக்குள் நிலத்தில் விரிப்பு இருந்தது,
அதன்மேல் மற்றஸ் போட்டு இரண்டு தலையணைகளுடன் ஒரு பெண் இருந்தாள். அவள் பேய்
அறைந்தது போன்று எங்களை விழித்து விழித்துப் பார்த்தாள். பின் தலையைக் குனிந்து
படுக்கையைச் சரி செய்தாள்.
றியல் எஸ்றேற்காரனுக்கு
அது சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எனக்கும் மனைவிக்கும் அது புதிசு.
மகனுக்கு அது விளங்காத புதிராக இருந்திருக்கும்.
வீட்டைக் கட்டி, அதை விற்கும் காலத்திற்கு இடைப்பட்ட
காலத்தில் இப்படி ஒரு சின்னத்தனமான வியாபாரமா?
இரண்டு நாட்கள் கழிந்து இரவு சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்போது என்னுடைய மகன் திடிரென்று சொன்னான்,
“அந்த அங்கிளும் அன்ரியும் அண்டைக்கு சண்டை பிடித்து
இருக்க வேண்டும்!”
“எந்த அன்ரியும் அங்கிளும்?” மனைவி கேட்டாள்.
“அண்டைக்கு வீடு பாக்கப் போகேக்கை அங்கையிருந்த
அங்கிளும் அன்ரியும்தான்” என்றான் குழந்தைத்தனமாக அவன்.
No comments:
Post a Comment