கிணற்றடியில்
குளிக்கும் சத்தம் கேட்டது. சுந்தரலிங்கம்
எழும்பி விட்டார். அந்த வீட்டிற்கு அலாரம்
என்றும் அவர்தான். அதிகாலை ஐந்து மணியளவில்
ஆரம்பிக்கும் இந்தச் சத்தம் பதினொரு
மணியளவில்தான் அடங்கும்.
எந்தவித
அவலங்களுமற்று பொழுது புலர்ந்திருந்தது. அங்கு
நின்றபடியே கிழக்கே விரிந்து கிடக்கும்
வயல் வெளியையும், வடக்கேயுள்ள தென்னந் தோப்பையும் பார்த்தார்
அதிபர் சுந்தரலிங்கம்.
அதிபர் நாலாம்வாய்க்காலிலே பெரிய புள்ளி.
ஏராளமான நிலபுலங்களுக்குச் சொந்தக்காரர். அவரது வயலிலே வேலை
செய்வதற்கென்றே ஏராளமான மக்கள் அவரது
வீட்டைச் சுற்றி குடிகொண்டுள்ளார்கள். பாடசாலை
முடிவடைந்ததும் வயல் வேலைகளில் இறங்கி
விடுவார் அவர்.
"என்ன
ஐயா! யோசித்துக் கொண்டு நிக்கிறியள்?" என்றபடியே
வாளியொன் றையும் தூக்கிக் கொண்டு
வந்தான் சிவபாலன்.
"சிவா!
தேங்காய் பிடுங்கி சந்தைக்கு குடுக்கிற
காலமும் வந்திட்டுது. பாபுவும் எழும்பின பாடில்லை.
ஆரையாவது புது ஆளைத்தான் தேடிப்
பிடிக்க வேணும்."
"பாபு
இன்னமும் ஹொஸ்பிட்டிலிலையோ ஐயா?"
"கவனமில்லாமல்
மழை தண்ணியுக்கை நனைஞ்சு போனான். நாய்
கடிச்ச புண்ணும் பெருத்திட்டுது."
"ஸ்ரோர்
றூமுக்கை இருக்கிற இராசையாண்ணையின்ரை மகனை
ஒருக்கா கேட்டுப் பார்ப்பம். போன
கிழமை இளநி பிடுங்க எண்டு
மரத்திலை ஏறினவன்."
"அப்படியெண்டா
தேங்காய் பொறுப்பை உம்மோடை விட்டு
விடுறன். ஐம்பதை வீட்டுத் தேவைக்கு
வைச்சுக் கொண்டு, மிச்சத்தை வித்துவிடும்."
சுந்தரலிக்கத்தின்
மனைவி இறந்த பிற்பாடு வீடு
வெறிச்சோடிக் கிடந்தது. அந்த வேளையில்தான், சிவபாலன்
வேலை மாற்றலாகி, மனைவி - இரண்டு பிள்ளைகளுடன்
கிளிநொச்சி வந்து சேர்ந்தான். கிட்டத்து
உறவுதான். தனது அலுவலக அறையை
ஒதுக்கி அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அதன் பின்பு அவரது
பள்ளிக்கூடத்தில் சங்கீத ஆசிரியையாகவிருக்கும் சித்திரா
வந்து சேர்ந்தாள். அவளுக்கும் கொஞ்ச வயதுதான். பாவம்
என்று இடம் கொடுத் திருந்தார்.
இதெல்லாம் நடந்து ஐந்து வருடமிருக்கும்.
எடுத்து
வந்த நீரைக் குசினி வாளிக்குள்
நிரப்பி விட்டு, விளக்குமாற்றை எடுத்துக்
கொண்டு முற்றத்துக்கு விரைந்தார். பெரும்பாலும் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போதே அவரது காலைத்
தேநீர் வந்து விடும். அந்த
நோக்கோடு இருக்கையில், தெய்வானை 'ஐயா' என்று இராகமிழுத்துக்
கொண்டே வீட்டிற்குள் புகுந்தாள்.
"தெய்வானை!
பாபுவுக்கு இப்ப எப்படி?"
"வீட்டை
கொண்டு போகச் சொல்லிப் போட்டினம்
ஐயா! விசர்நாய் கடிச்சிருக்கலாம் எண்டு இப்ப சந்தேகப்
படுகினம். ஹொஸ்பிட்டலிலை அதுக்குரிய மருந்துகளும் இல்லையாம். றெட் குறொஸ் மூலம்
தான் எடுக்க வேணுமாம்."
சுந்தரலிங்கம்
ஒன்றும் பேசாமல் அவள் சொல்வதையே
கேட்டுக் கொண்டிருந்தார்.
பாதைப் பிரச்சனை இல்லாட்டி வவனியா
கூட்டிக் கொண்டு போகலாம். ஒண்டுமே
சரிவந்த பாடில்லை. எப்பிடி ஒடியாடி வேலை
செய்து கொண்டிருந்தவன். வயல்வேலை, அருவிவெட்டு, சூடடிப்பு - எந்த தொட்டாட்டு வேலையையுமே
முகம் சுழிக்காமல் செய்வான். இன்று முடங்கிப் போய்
விட்டான்.
"ஐயா!
நான் போய் ரீ போட்டுக்
கொண்டு வாறன்."
"இஞ்சை
வா தெய்வானை! வீட்டிலை
இருக்கிற ஆராவது ரீ போடட்டும்.
நீ போய் பாபுவைப்
பார்."
"இல்லை
ஐயா. நான் போட்டுத் தாறன்."
"இல்லைத்
தெய்வானை....."
"என்ன
ஐயா! ஒருநாளும் இல்லாத மாதிரி 'போ
போ' எண்டு கலைக்கிறியள்."
இனியும்
புரிந்து கொள்ளாவிடில் அவர் மனிசரே அல்லத்தான்.
தெய்வானை வீட்டில் அடுப்பு எரியவில்லை
என்பதைப் புரிந்து கொண்டார்.
ரீ வந்தது.
"தெய்வானை!
போகேக்கை மறக்காமல் பாபுவுக்கும் நளாயினிக்கும் ரீ எடுத்துக் கொண்டு
போ" அவர் சொல்லாவிட்டாலும் அது
நடக்கிற காரியந்தான். இருந்தும் சொல்லி வைத்துக் கொண்டால்
தன்பக்கத்துக்கு திருப்தி அல்லவா? வீட்டிலிருப்பவர்களுக்கு
காலைத் தேநீரும் மாலைச் சாப்பாடும்
அவரது செலவில் இலவசம்.
சைக்கிளுக்குக்
காற்றுப் பார்த்து முற்றத்தில் நிறுத்தினார்.
மாட்டுத்தொழுவம் சென்று இரண்டு கத்தை
வைக்கோல் போட்டார். அனேகமாக எட்டு இருபதுக்கு
பாடசாலை புறப்பட்டு விடுவார்.
வீட்டுக்கு
முன்னால் ஓடும் வாய்க்காலிற்குள் நீர்
சலசலத்துப் பாய்ந்து ஓடியது. பத்துப்பதினைந்து
தாராக்கள் நீந்தி விளையாடின. இரண்டு
வருடங்களுக்கு முன்பு பாபு வாங்கிக்
கொடுத்த ஒரு சோடி தாராக்களின்
கைங்கரியாமாக அவை பல்கிப் பெருகி
யிருந்தன. அவைக்கு தரையிலும் ஆட்டம்தான்.
தண்ணியிலும் ஆட்டம்தான்.
ஒரு சோடியை விட்டு விட்டு
மிகுதியை சந்தையில் விற்றால், பாபுவுக்கு ஏதேனும் பிரயோசனப்படும். உள்ளே
ஓடிச் சென்று அந்த விசயத்தையும்
சிவபாலனின் காதிற்குள் போட்டு வைத்தார்.
சைக்கிளை
உருட்டிக் கொண்டு வீட்டையும் றோட்டையும்
இணைக்கும் பாலத்தின் மீது நடந்து, தெருவில்
கால் பதித்தார் சுந்தரலிங்கம். அவரின் சைக்கிள் தானாகவே
தெய்வானையின் வீட்டிற்கு முன்னால் நின்றது. ஸ்ராண்டைப்
போட்டு நிறுத்திவிட்டு குடிசைக்குள் நுழைந்தார். பனை ஓலை வீடென்றாலும்
அழகாக துப்பரவாக இருந்தது. தாழ்வாரத்தினுள் சாக்குக் கட்டிலில் பாபு
படுத்திருந்தான். பக்கத்தில் கதிரையில் தெய்வானை நாடிக்கு கை
ஊன்றியபடி பாபுவைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள். அவளின் காலைக் கட்டிப்
பிடித்தபடியே சம்மாணமிட்டு மகள் நளாயினி இருந்தாள்.
அவரைக் கண்டதும் தெய்வானை கதிரையை
விட்டு எழும்பினாள்.
"பாபு!
பாபு!! ஐயா வந்து நிக்கிறார்.
ஒருக்கா முழிச்சுப் பாரப்பு."
அவனை எழுப்ப வேண்டாமென்று சைகை
செய்தார் சுந்தரலிங்கம். அவனின் கட்டிலிற்குக் கிட்டப்
போனார். நாற்றம் குபுக்கென்று அடித்தது.
நளாயினி உள்ளே ஓடிச்சென்று கதிரை
ஒன்றை எடுத்து வந்து ஐயாவுக்குப்
போட்டாள். ஐயா இருக்கவில்லை. இருப்பதற்கு
அவருக்கு ஏது நேரம்? பாபு
முழித்துப் பார்த்து ஏதோ கதைக்க
எத்தனித்தான். குரல் பிசிறி வந்தது.
அந்த ஒலி அவருக்கு வித்தியாசமாக
இருந்தது.
"ஐயா!
மருந்து றெட்குறொஸ் கொண்டு வருமா?
இப்பிடியே பாத்துக் கொண்டிருக்க என்னாலை
ஏலாமல் கிடக்கு!"
"பள்ளிக்கூடம்
போனதும் முதல் வேலையா நான்
ஒருக்கா ஹொஸ்பிட்டல் பக்கம் போட்டு வாறன்.
நளாயினி! நீ ஸ்கூலுக்கு வரேல்லையா?"
"அம்மா...."
"சரி!
போட்டு வா நளாயினி."
சுந்தரலிங்கம்
பள்ளிகூடம் போக ஒன்பது மணியாகிவிட்டது.
முதல் பெல் அடித்தது. ஒவ்வொரு
வகுப்பாக சென்று பார்த்துக் கொண்டு
வந்தார்.
பொன்னுச்சாமி
ஆசிரியரின் வகுப்பு மாத்திரம் அவர்
இல்லாமல் அமர்க்களமாக இருந்தது. அந்த மனிதரால் அதிபருக்கு
என்றுமே தொல்லை. அவர் விஞ்ஞானப்பட்டதாரி. விஞ்ஞானம் படிப்பிக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு,
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது,
அந்தப் பாடசாலையில் இணைந்து கொண்டார். பாடசாலைக்கொரு
பட்டதாரி ஆசிரியர் கிடைத்ததையிட்டு அதிபர்
பெருமிதம் கொண்டார். "விஞ்ஞானம் படிப்பிப்பதென்றால் குறிப்பெடுக்கவேண்டும், ஒவ்வொரு நாளும் பாடத்தைப்
பற்றி நிறைய தயார் செய்ய
வேண்டும்" என்று எதேதோ காரணங்களைச்
சொல்லி விஞ்ஞானப்பாடம் படிப்பிப்பதிலிருந்து நழுவிக் கொண்டார் பொன்னுச்சாமி.
xxx
அதிபர் போய் பதினைந்து நிமிடங்களின்
பின், "நா.போ" என்று
தொண்டை கிழியக் கத்திக் கொண்டு
வந்தார் பொன்னுச்சாமி ஆசிரியர்.
சித்திரம்,
கைவேலை, உடற்பயிற்சி, விவசாயம் - இவற்றுள் ஏதாவதொரு பாடத்துடன்தான்
பொன்னுச்சாமி ஆசிரியரின் வகுப்பு தொடங்கும். அவருக்கு
இந்தப் பாடங்கள்தான் கைராசியானவை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.
அவருக்கு மட்டும் இந்தப் பாடங்களைப்
படிப்பிக்கும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது? என்பது
சக ஆசிரியர்களுக்குப் புதிராகவே
இருந்தது.
நான்கு வாழைக்குலைகளை சைக்கிள் கரியரில் கட்டி
கிளிநொச்சிச் சந்தை வரைக்கும் மாய்ந்து
மாய்ந்து உழக்கி, அங்கு விற்றுவிட்டு
வரும்போது பாடசாலை தொடங்கி 15 நிமிடங்கள்
கழிந்திருக்கும். இப்போதுகூட இந்த 'நா.போ'
என்ற திருவாசகம் விழுந்தது படிக்கிற மாணவர்களுக்கல்ல. ஒரு
மணித்தியாலத்திற்கு முன்பு சந்தையிலை வாழைக்குலைகளை
வாங்கிப் போயிருந்த யாரோ ஒரு கடன்காரனுக்காகத்தான்
இருக்கும்.
'திருவாசகத்துக்கு
உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'
என்பதுமாப் போல் வகுப்பறை கதிகலங்கிக்
கிடந்தது.
கோழிமுட்டை
கீறுதல், தாரா, வாத்து, பல்லி,
தவளை முட்டை என்ற நுண்ணிய
சங்கதிகளிலிருந்து வழக்கத்துக்கும் மாறாக, தன்னையே பார்த்துக்
கீறுங்கோ என்று சொல்லிவிட்டார் ஆசிரியர்.
வாசலில் ஒரு சிறுபெண்ணின் உருவம்
நிழலாடியது.
"சேர்!
வகுப்புக்கு வரலாமோ?" தயங்கியபடியே கேட்டாள் அவள்.
"ஆரது!
நளாயினியா? வா வா வந்து
உட்கார். எப்பதான் நீ நேரத்துக்கு
படிக்க வந்திருக்கிறாய்? எப்பதான் நான் நேரத்துக்கு
படிப்பிக்க வந்திருக்கிறன்."
உள்ளதைச்
சொல்வதிலும் உருகிப் போவதிலும் அவருக்கு
நிகர் அவர்தான். இடாப்புக் கூப்பிடுவதை எப்போதுமே ஆசிரியர் முதலாவது வகுப்பு
முடியும் தறுவாயில்தான் வைத்துக் கொள்ளுவார். ஆரம்பத்தில்
கூப்பிடுவது என்றால் இடாப்பை யார்தான்
கூப்பிடுவது? சக ஆசிரியர்கள் இடாப்புக்
கூப்பிடும்போது ஆசிரியர்
சந்தையில் 'வாழைக்காய் வாழைக்காய்' என்று கூவிக்கொண்டிருப்பார். என்ன 'ஷெல்லடி'
என்றாலும் சந்தைக்குப் போய் விடுவார்.
"சரி
நளாயினி! உனக்கு இண்டைக்கு என்னைப்
பார்த்துக் கீறுவதற்கு குடுப்பனவு கிடைக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே
வகுப்பறைக்குள் மாணவர்கள் என்னத்தைக் கீறித் தொலைத்தார்கள் என்று
பார்த்தார்.
"எடேய்!
நீங்கள் எல்லாம் எருமை மாட்டு
மூளையா சாப்பிடுறியள்? என்னைப் பார்த்துக் கீறுங்கோ
எண்டால் எலியையும் பூனையையும் பார்த்துக் கீறியிருக்கிறியள்!" என்று கர்ச்சித்தார்.
"சரி!
இப்ப ஒரு அழகான காட்சி.
அதிலை உங்கடை குடும்பம் இருக்கக்கூடிய
மாதிரிக் கீறவேணும். அடுத்த அரை மணித்தியாலத்துக்கு
இதுதான் வேலை."
ஒவ்வொரு
மாணவர்களின் சித்திரங்களையும் பார்த்து வந்த ஆசிரியர்,
நளாயினியின் பக்கம் வந்ததும் ஸ்தம்பித்து
நின்றுகொண்டார்.
"என்ன
சேர்! ஏதேனும் பிழையாக் கீறிட்டேனா
சேர்?"
"இல்லைப்
பிள்ளை!"
நளாயினி
படிப்பில் சுட்டி. எப்படியும் வகுப்பில்
முதல் மூன்றிற்குள் வந்து விடுவாள். அவளின்
படத்தைப் பார்த்து எல்லாவற்றையும் புரிந்து
கொண்டார். அது அவளின் உணர்வுகளின்
வெளிப்பாடுகள். அவளின் முகம் கலங்கியிருப்பதை
அவதானித்த ஆசிரியர், அவளின் மனநிலையை வேறு
புறம் திருப்ப நினைத்தார்.
தலையிலே
ஒரு விறகுக் கட்டை சுமந்து
கொண்டு, சுமையின் பாரம் தாங்க
மாட்டாமல் ஒரு பெண் நிற்கின்றாள்.
அவளின் வயிற்றுக்குள் மாம்பழம் இருக்கின்றது. அருகே
சுவரினில் மீசை முறுக்கிய ஆணின்
படம் ஒன்று தொங்கு கின்றது.
பெண்ணின் மேலே 'ஹெலி' ஒன்று
பறக்கின்றது. சாக்குக் கட்டிலில் யாரோ
ஒரு சிறு பையன் படுத்திருக்கிறான்.
"அப்பா
எங்கே? போயிட்டாரா?"
"ஆம்.
அப்பா சாமியிட்டைப் போயிட்டார். வயலுக்கை வேலை செய்யேக்கை 'ஹெலியிலை'
இருந்து சுட்டுப் போட்டான்கள்."
"காலையிலை
என்ன சாப்பிட்டாய் ?" - "மாம்பழம்."
"தனிய
மாம்பழம்?" - "ஓம்."
"கட்டிலிலை
படுத்திருக்கிறது?" -
"அண்ணா! நாய் கடிச்சுப்போட்டுது."
ஆசிரியருக்கு
அதிர்ச்சியாக இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.
"இத்துடன்
பாடம் முடிவடைந்தது" என்று அழாக்குறையாகச் சொல்லி
வகுப்பை முடித்துக் கொண்டார்.
xxx
சுந்தரலிங்கம்
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்
கொண்டிருந்தார். பாடசாலையில் இருந்து மேற்கு நோக்கி
சென்றால் கண்டி வீதி. கிழக்கு
நோக்கித் திரும்பி, சிறிது தூரம் சென்று
- வரும் முதலாவது வலது ஒழுங்கைக்குள்
திரும்பினார்.
மைதானம்
களை கட்டியிருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்களும் ஊரிலுள்ளவர்களுமாக பந்து விளையாட்டு. கனத்த
மனத்துடன் தொடர்ந்தார். எதிரே கலை பண்பாட்டுக்
கழக கட்டிடத்திலிருந்து, மிருதங்க ஒலியுடன் கூடிய
இன எழுச்சிப்பாடல் ஒன்று
காற்றினில். ஐய்யனார்
கோவில் படிக்கட்டில் தெய்வானை தவம் இருந்தாள்.
எதிரே இருந்த பெட்டிக்கடைகளில் ஒன்றன்
முன்பாக சைக்கிளை நிற்பாட்டினார்.
"தம்பி!
அரைக்கிலோ žனி தாரும்."
கடைக்கு
முன்பாகவிருந்த வாங்கில் குந்தினார். கடையின்
பக்கமாகவிருந்த ஓடைக்குள்ளிருந்து சைக்கிளுடன் வெளிப்பட்டார் பொன்னுச்சாமி. ஒரு போத்தல் கள்ளுடன்,
ஆனால் நிதானமாக வந்தவர், அதிபரை
ஒருமுறை குனிந்து வெறித்துப் பார்த்துவிட்டு
வெளியேறினார். கள்ளு நெடி அவருடன்
கூடவே சென்றது.
"ஏனப்பா
குடிச்சுக் குடிச்சு சாகிறாய்?"
"குடிச்சுப்
போட்டுப் போய் இரவிலை படுத்தேனெண்டால்,
ஆனையிறவிலை இருந்து அடிக்கிற 'ஷெல்'
சத்தம் கேட்காது. இரவிலை நல்லா நித்திரை
வரும். நீங்களும் குடிச்சுப் பாருங்கோ."
பொன்னுச்சாமி
ஒருநாளும் பள்ளிக்கூடத்தில் வைத்து கள்ளுக் குடிப்பதில்லை.
ஆனால் இடையிடையே காணாமல் போய் விடுவார்.
குதிரைக்குக் கடிவாளம் போடலாம். அவருக்குப்
போட முடியாது.
ஐயனார் கோவிலடியில் ஒரு பாலம். அதில்தான்
வாய்க்காலும் திசை திரும்புகிறது. அதனடியில்
சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
வீட்டை அண்மிக்கும் போது சாப்பாடு வாசனை
மூக்கைத் துளைத்தது. சந்தைக்குப் போயிருந்த படியால் குறைந்தது இரண்டு
மூன்று கறி வகைகளாவது இருக்கும்.
மற்றும்படி சோறும் சாம்பாரும்தானே!
கிணற்றடியில்
ஊன்றியிருந்த அலவாங்கில் தேங்காயொன்று தொங்கியது. முகத்தை அலம்பிவிட்டு, குசினி
அறைக்குப் பக்கத்திலுள்ள வெளி விறாந்தையில் குந்தினார்.
வாங்கில் அன்றைய தினசரிப் பேப்பர்
இருந்தது. சிவபாலனின் மனைவி தேநீர் கொண்டு
வந்து வைத்துவிட்டுப் போனாள்.
"நேற்று
முந்தினம் கிளாலிக்
கடலேரியில் இரண்டு படகுகள் சிறீலங்கா
கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டன" அவரால் தலைப்புகளை மட்டும்தான்
வாசிக்கமுடியும். நேரமிருந்தால் மூக்குக் கண்ணாடியின் உதவியுடன்
மிகுதியையும் வாசிப்பார்.
"சுந்தரலிங்கம்
அண்ணை! அறுவடைக்கு இன்னும் எவ்வளவு காலமிருக்கு?"
என்றபடி யோகன் ஸ்ரோர் றூமுக்குள்ளிருந்து
வந்தான். ஸ்ரோர் றூமின் இரண்டாவது
அறைக்குள் யோகன், மனைவி, மூன்று
பெண்பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.
"ஏன்
கேட்டனான் எண்டால் முன்னுக்கிருக்கிற பாலத்தை
அறுவடைக்கு முந்தி திருத்தினால் டிரக்டர்
வந்து போக வசதியாக இருக்கும்."
"நானும்
யோசிச்சனான்தான். அருவிவெட்டுக்கு இன்னும் ஒருமாதம் கிடக்கு.
அதுக்கிடையிலை திருத்திப் போட வேணும். காசுதான் பிரச்சனையாக்
கிடக்கு."
"இந்த
வீட்டிலை இவ்வளவு பேர் இருக்கேக்கை,
வேறை ஆக்களைப் பிடிச்சு செய்ய
வேணுமா?"
அதிபர் சிரித்தார். அதற்கு ஒரு அர்த்தம்
இருந்தாக வேண்டும்.
உண்மைதான்.
ஐந்து அறைகள் கொண்ட அந்த
மாளிகைக்குள் இருபது பேர் மட்டில்
இருந்தார்கள். சுந்தரலிங்கம், சிவபாலன், சித்திரா இவர்களைத் தவிர
இன்னும் இரண்டு குடும்பங்கள் இருந்தன.
குரும்பசிட்டியைச் சேர்ந்த இளம்தம்பதிகள், சாவகச்சேரியிலிருந்து
வந்த நான்கு பேர் கொண்ட
குடும்பம். அவர்கள் எப்படிப்பட்ட பெரிய
வீடு வளவுகளிற்குள் வசதியாக
வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த இடம் போதாதுதான்.
என்றாலும் இப்போது இதுவே அவர்களுக்கு
சொர்க்கம்.
இராசையா
இடையில் எட்டிப் பார்த்து பூஜைக்கு
ஆயத்தம் என்றார். கோயில் ஒன்று
வீட்டிலிருந்து பிரிந்து தனியாகக் கட்டப்பட்டிருந்தது. கிணற்றுக்கு
அப்பால் வேலியை ஒட்டியிருந்தது. அதைக்
கழுவித் துடைத்து பூஜைக்கு ஆயத்தம்
செய்யும் பொறுப்பை இராசையா எடுத்துக்
கொண்டார். ஆறுமணி மட்டில்தான் பூஜை
நடக்கும். ஐயர் சுந்தரலிங்கம்தான். சும்மா
தீபாராதனை காட்டுவார். மந்திரங்கள் ஒன்றுமில்லை. வீட்டில் ஆக்கள் இருந்தால்
மறக்காமல் வந்து விட்டுப் போவார்கள்.
இருட்ட முன்பு சாப்பாடு துவங்கியது.
நளாயினி சகிதம் கையில் தட்டு
ஒன்றையும் எடுத்துக் கொண்டு தெய்வானை வந்தாள்.
"என்ன
ஐயா! இப்பிடிப் பண்ணிப் போட்டியள்? இல்லை
ஐயா! தாராக்களை வித்து என்னட்டை காசைத்
தந்திட்டியள்?" - தெய்வானை.
"நியாயமா
பாத்தால் அது பாபுவின்ரைதான். அவனுக்கேதும்
நல்ல சத்துள்ள சாப்பாடா பாத்து
வாங்கிக் குடு. தேறிவிடுவான்." - சுந்தரலிங்கம்.
பாபுவுக்கும்
நளாயினிக்குமாக தட்டில் சாப்பாட்டைப் போட்டு,
நளாயினியிடம் கொடுத்து, அவளைக் கலைத்து விட்டாள்.
எல்லாரும் சாப்பிட்ட பின்பு, இருந்தால் மட்டும்
தெய்வானை சாப்பிடுவாள். எல்லாரும் சாப்பிடும் போதே சாப்பிடும்படி
எத்தனையோ தடவைகள் சுந்தரலிங்கம் சொல்லி
விட்டார். அவள்தான் கேட்பதாகவில்லை.
சாப்பாடு
முடிவடைந்ததும் ஹோலிற்குள் ஒரு விளக்கு கொழுத்தி
வைக்கப்படும். படிக்க விரும்பும் சிறுவர்கள்
அதிலிருந்து படித்துக் கொள்வார்கள். ஒரு கூட்டம், ஒபிஸ்
றூமுக்கு முன்னாலுள்ள விறாந்தையில் இருந்து காட்ஸ் விளையாடிக்
கொண்டிருக்கும். சில வேளைகளில் சோகி,
தாயமும் நடக்கும். இன்னொரு கூட்டம் குசினிப்பக்கமுள்ள
விறாந்தையில் அரட்டை, அரசியல் தர்பார்
நடத்தும்.
சித்திரா
தனது அறைக்குள் பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பாள்.
வீடு ஆரவாரத்தில் இருக்கும். அதன் ஓசையில் சங்கீதம்
முடங்கிவிடும். இன்றும் அப்பிடித்தான். ஆனால்
இரண்டு, மூன்று பாடல்களின் பின்பு
சத்தம் மெதுவாக அடங்கி வீடு
அமைதியாகிற்று.
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணி லழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித்
தரவேண்டும் - அங்கு
கேணி யருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்
அனேகமாக
அங்கிருப்பவர்களில், பாடிக்கொண்டிருக்கின்ற சித்திராவைத் தவிர, எல்லோருமே காணி,
பூமி, வீடு வளவுகளை தொலைத்தவர்கள்தான்.
இராசையா ஒருவர்தான் அதற்கும் மேலாக மனைவி,
மகள், மருமகன், இரண்டு பேரப்பிள்ளையும்
ஒரே நாளில் இழந்து கொண்டவர்.
தப்பிய ஒரு மகனுடன் காங்கேசந்துறையிலிருந்து
புறப்பட்டவர், கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலில் வந்து நின்றார்.
எல்லாரும் தங்களது சோகங்களை நினைந்து
ஏக்கப் பெருமூச்சு விட்டார்கள்.
பாட்டுக்
கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப்
பெண்வேணும்
சுந்தரலிங்கத்தினால்
தாங்க முடியவில்லை. வாங்கிலிருந்து எழும்பி முற்றத்துக்கு வந்தார்.
முற்றத்தில் நாலைந்து பேர் வரிசையாக
நின்று உரத்த குரலில் வாக்கு
வாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
"பட்டிப்பளை,
கந்தளாயில் தொடங்கிய இந்தக் காணி
பறிப்பு, மணலாறு அது இதுவென்று
வந்து, இப்ப பலாலி வரை
வந்திருக்கு" என்றான் யோகன்.
"நான்
அப்ப žமென்ற் பக்டரியிலை வேலை
செய்யேக்கை, சுண்ணாம்புக்கல்லு அகழ்ந்து எடுக்கிறோமென்டு
சொல்லி எத்தினையோ காணியளை பள்ளமாக்கிச்சினம். எங்கடை
எம்பிமார், கடல்தண்ணி வந்து காணியளை அழிக்கப்
போகுது எண்டு பாராளுமன்றத்திலை கூக்குரல்
போட்டுச்சினம். அதுக்கு அப்ப இருந்த
கைதொழில் அமைச்சர் சிறில் மத்தியூ
என்ன சொன்னவர் எண்டு தெரியுந்தானே!
பரவாயில்லை. ஒரு காலத்திலை எங்கடை
தேசப்படத்திலை இருந்து அந்தந்தப் பகுதிகளை
அழிச்சுவிடலாமெண்டு" இராசையா தனது அனுபவத்தைச்
சொன்னார்.
"நிலத்தைப்
பற்றி அக்கறை இல்லாதவர்களுக்கு, அதன்
மேல் இருக்கிற மனிதர்களைப் பற்றியா
கரிசனை வந்துவிடப் போகிறது."
"ஏன்?
எழுபத்திஏழாம் ஆண்டு இனக்கலவரத்துக்கை எவ்வளவு
மலயகத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டினம். பிறகு அவையை டொலர்பாம்,
கென்ற்பாமெண்டு பெருந்தோட்டங்களிலை குடியேற்றிப் போட்டு, பிறகு எண்பத்தி
மூண்டிலை அடிச்சும் சாக்காட்டியும் கலைச்சும் விட்டவையல்லே!"
சுந்தரலிங்கம்
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது
வயோதிகம், அவரை உரையாடலில் ஈடுபடுத்த
இடம் கொடுக்கவில்லை.
"என்ரை
கையை அண்ணா கடிச்சுப் போட்டான்"
என்று கத்திக் கொண்டே நளாயினி
ஓடி வந்தாள். சத்தம் கேட்டு தெய்வானை
வந்தாள்.
"நீயேன்
அவனுக்குக் கிட்டப் போனனி." - "சாப்பாடு
குடுக்கப் போனனான்."
"எங்கை
கையைக் காட்டு?" - "நல்ல காலம் காயம்
வரேல்ல."
அவளது மணிக்கட்டு நரம்பை பாபு கடித்திருந்தான்.
தெய்வானை நளாயினியைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு
ஓடினாள். பின்னாலே யோகனும் சுந்தரலிங்கமும்
கதைத்தபடியே நடந்து போனார்கள். பாபுவைப்
பார்த்ததும் புரிந்துகொண்டார்கள். அவன் மனிதனும் மிருகமும்
கலந்த குரலில் கத்தினான். இதுவரை
காலமும் கேள்விப்பட்டதை, இப்போது நேரில் பார்த்தார்கள்.
அவசர அவசரமாக அவனை மாட்டு
வண்டிலில் கிடத்தி ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு
போனார்கள்.
இரவு முழுவதும் ஆனையிறவுக் காம்பிலிருந்து இருளைக் கிழித்துக் கொண்டு
ஷெல்கள் பறந்து கடலினுள் விழுந்தன.
நாய்கள் இடை விடாது குரைத்தன.
வேவு விமானமொன்று தன் வேலையை அமைதியாகச்
செய்து கொண்டிருந்தது. விடியும்போது பாபு இறந்து விட்ட
செய்தி வைகறைச் செய்தியாகியது.
நளாயினி
பாடசாலை செல்வதை நிறுத்திக் கொண்டாள்.
தெய்வானை
வீட்டிற்கு முன்னால் விறகைப் போட்டு
பிளந்து கொண்டு நின்றாள். பக்கத்திலே
பிளந்து விட்ட விறகுகளை அடிக்கிக்
கொண்டு நின்றாள் நளாயினி.
"அம்மா!
எங்கடை சேர் வாறார் அம்மா"
"இதென்ன
சேர்! எங்கடை வீடு தேடி
வாறியள்?"
"அதொண்டுமில்லை
நளாயினியை ஒருக்கா பாத்து விட்டுப்
போகலாமெண்டு வந்தனான்."
கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல்
இருந்தார் பொன்னுச்சாமி.
"நளாயினி
படிப்பிலை சரியான கெட்டிக்காரி. அவளை
நீங்க பள்ளிக்கூடத் துக்கு விடாமை வச்சிருக்கிறது
அவ்வளவு நல்லா இல்லை."
"சேர்!
உள்ளதைச் சொன்னா என்ன! வறுமைதான்
முக்கிய காரணம்."
"நீங்கள்
நளாயினியை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கோ. படிப்புச் செலவு முழுவதையும் நான்
பொறுப்பேற்கிறன். உங்களுக்கு என்னட்டையிருந்து சும்மா காசு வாங்க
விருப்பமில்லை எண்டால், அவ்வப்போது வந்து என்ரை தோட்டத்திலை
வேலை செய்யலாம். களை புடுங்கலாம். என்னுடைய
மனைவிக்கு வீட்டு வேலைகள் செய்யிற
திலை ஒத்தாசை புரியலாம்."
"இவ்வளவு
நாளும் அதிபரின்ரை வயலிலைதான் வேலை செய்து வந்தனான்.
அவரிட்டையும் ஒருக்கா கேட்டிட்டு முடிவு
சொல்லுறன்."
தெய்வானைக்கு
விருப்பமில்லை. ஒப்புக்கு ஓமென்று சொல்லி வைத்தாள்.
xxx
சுந்தரலிங்கம்
ஒருமுறை வயலை தரிசனம் செய்துவிட்டு
வந்து கொண்டி ருந்தார். கோவிலிற்குள்
தேவார பாராயணம் கேட்டது. இராசையாதான்
பாடினார்.
பச்சை மாமலை போல் மேனி
- பவள வாய்க் கமலச் செங்கண்
சுந்தரலிங்கம்
மெய் மறந்து, உள்ளம் உருகி
அப்படியே நின்றார்.
ஊரிலேன்
காணி யில்லை - உறவு மற்றொரு
வரில்லை
பாரில் நின் பாத மூலம்
- பற்றிலேன் பரம் மூர்த்தி
காரொளி வண்ணனே என் - கண்ணனே
கதறுகின்றேனே .....
பாடல் இடையில் தடைப்பட, இராசையா
விம்மும் ஒலி எழுந்தது. சுந்தரலிங்கம்
மனம் குழம்பிய நிலையில் வீட்டிற்கு
வந்தார். தெய்வானை, ஐயாவுக்காக குசினியருகில் காத்திருந்தாள். ஒரு வாரத்தின் பின்பு
வந்திருக்கிறாள். வரும்போது பாலம் திருத்தப்பட்டிருந்ததையும், கழிவறை பெருப்பித்து
கட்டப்பட்டிருந்ததையும் அவதானித்தாள். குசினிக்கு முன்னால் இருந்த žமெந்து
நிலம் கழுவப் பட்டிருந்தது. அறுவடைக்கு
ஆயத்தம் என்பதை இவை கட்டியம்
கூறின.
"ஐயா!
பொன்னுச்சாமி வாத்தியாரைத் தெரியுந்தானே! நளாயினியின்ரை வகுப்பு வாத்தியார்" என்ற
பீடிகையுடன் தொடங்கினாள். சற்றுமுன் வீட்டிலே நடந்தவற்றை ஒன்றும்
விடாமல் கூறினாள்.
அதிபருக்கு
தெய்வானை அங்கு போய் வேலை
செய்வதில் விருப்பமில்லா விட்டாலும் - அவர்களின் வறுமையையிட்டு ஒத்துக் கொண்டார்.
xxx
மறுநாள்
மாலை தெய்வானையும் நளாயினியும், பொன்னுச்சாமி ஆசிரியரின் வீட்டிற்கு நடைப் பயணம் மேற்கொண்டார்கள்.
முதன் முதலாக நிலமை அறிவதற்காக
வருகின்றாள். அவர்களுக்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கி,
அதிபர் சைக்கிளில் தொடர்ந்தார். அவருக்கு பொன்னுச்சாமியின் நடவடிக்கைகளில்
அவ்வளவு திருப்தியில்லை.
பொன்னுச்சாமி
ஆசிரியர் நளாயினியை வெளியே இருத்திவிட்டு,
தெய்வா னையை மாத்திரம் உள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்.
அதிபருக்கு சந்தேகம் வலுத்தது. உடன்
வீட்டிற்குள் நுழைந்து வாசற்பக்கம் மறைந்து
கொண்டார். நளாயினிக்கு எல்லாம் புதிராக இருந்தது.
பொன்னுச்சாமி
ஆசிரியர் பட்டதாரி ஆகி வெளியேறும்போது
பெற்ற சான்றிதழ் சுவரில் தொங்கியது. அதற்குப்
பக்கத்தில் பொன்னுச்சாமி ஆசிரியரின் திருமணப்படம். அழகான அவரின் மனைவி
சிரித்த முகத்துடன் தோற்றமளித்தாள்.
"உந்த
வெறிக்குட்டிக்கு அழகான மனைவியா?" என்று
ஆச்சரியப்பட்டார் அதிபர்.
"ஐயோ!"
என்று தெய்வானையின் அவலக்குரல் உள்ளேயிருந்து கேட்டது. கதவை இடித்துத்
தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தார்
அதிபர். உள்ளே அவர் கண்ட
காட்சி அவரை நிலை குலைய
வைத்தது.
கட்டிலில்,
பொன்னுச்சாமி ஆசிரியரின் அழகிய மனைவி
- 'கோமா' நிலையில் கிடந்தாள்.
"95 ஆம்
ஆண்டு இடம்பெயர்வு எனக்குத் தந்த பரிசு
இது. 'ஷெல்' அடிச்சு.." என்று
அழாக்குறையாகச் சொன்னார் பொன்னுச்சாமி.
பொன்னுச்சாமி
ஆசிரியர் மது அருந்துவதற்குச் சொன்ன
விளக்கத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை அதிபர் இப்போது புரிந்து
கொண்டார். அடுத்தமுறை பாடசாலை நேர அட்டவணை
தயார் செய்யும்போது பொன்னுச்சாமி ஆசிரியருக்கு விஞ்ஞானப்பாடம் போடுவதென்ற முடிவுடன் அதிபர் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆகாயத்தில்
'ஹெலி' ஒன்று வட்டமிட்டு தாழப்
பறந்து கொண்டிருந்தது. திடீரென்று அவருக்கு மேலால் விமானம்
ஒன்று ஊடறுத்துப் பாய்ந்தது. பதட்டத்துடன் சைக்கிளை விரைவு படுத்தினார்.
குசினிப்
பக்கமாக பானையில் சோறு பொங்கிக்
கொண்டிருந்தார்கள். நெற் கதிர்கள் காற்றினில்
ஒன்றுடன் ஒன்று உரசி சலசலக்கும்
ஓசை காதினுள் கேட்ட வண்ணமிருந்தது.
அவருக்கு மனதில் ஏதோ சந்தேகம்
எழுந்தது. வீட்டிற்குள்ளே ஓடிச் சென்றார்.
"எல்லாரும்
வயல் பக்கமா ஓடிப் போய்
வயலுக்கை படுத்திருங்கோ. நான் கூப்பிட்டால் மாத்திரம்
எழும்பி வாங்கோ. குண்டு போடப்
போறான்கள்" என்று பதட்டத்துடன் கத்தினார். உள்ளுக்கிருந்தவர்கள்
எல்லாரும் பதறியடித்தபடி திக்குத் திசை தெரியாது
ஓடினார்கள். வீட்டிற்கு வெளியே ஓடி வந்து
மீண்டும் கத்திக் கொண்டே வயலிற்குள்
ஓடினார் சுந்தரலிங்கம்.
ஒரு விமானம் அவர்களுக்கு மேலால்
பயங்கர ஓசை எழுப்பியபடி பறந்தது.
சில நிமிடங்களின் பின்பு வந்த 'அவ்ரோ'
விமானமொன்று இரண்டு குண்டுகளை வீசிச்
செல்கிறது. தீப்பிழம்புடன் குண்டு அவர்கள் வீட்டிற்கு
மேல் விழுந்தது. வயலிற்குள்ளிருந்தவர்கள் ஓலமிட்டார்கள். கொஞ்ச நேரத்தில் எல்லாம்
சாம்பராகிப் போனது. முற்றத்தில் பாரிய
கிடங்கொன்று வாய் பிளந்து கிடந்தது.
சுந்தரலிங்கம்
வயலுக்குள் இருந்தபடியே எல்லாரையும் கணக்கெடுத்தார். சிவபாலனைத் தவிர எல்லாரும் இருந்தார்கள்.
எல்லா மனிதர்களும் தப்பித்துக் கொண்டதை நினைத்துப் பார்த்தார்.
அந்தளவில் அவருக்கு மகிழ்ச்சி.
நேரம் இருட்டிவிட்டது. வயலிற்குள் இருந்தவர்கள் எல்லாரும் வீட்டிற்கு முன்பாக கூடினார்கள். தெருவில்
சிவபாலனும் பொன்னுச்சாமி ஆசியரும் அடுத்து ஆகவேண்டிய
காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சுந்தரலிங்கத்தினால் எதுவுமே முடியவில்லை. அவர்
காலடியில் வாய்க்கால் நீர் சலசலத்து ஓடிக்கொண்
டிருந்தது. அவர் "காணி நிலம் வேண்டும்"
என்று பராசக்தியிடம் வேண்டினார். அந்த வேண்டுதல் எல்லாருக்கும்
பொதுவானது.
பனி மூட்டம் அவர்களின் மீது
கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் எல்லாரும். வண்டிலில்
சிறுவர்களும் தாய்மார்களும் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
சக்கரத்தில்
அச்சாணி உரசும் சங்கீதமும், மேடு
பள்ளங்களில் சில்லு ஏறி இறங்கும்
ஓசையும் இருளில் கேட்ட வண்ணமிருந்தன.
மரத்தடி இணையம், 2004
அருமை. சோந்த காணிக்காக போராடும் ஈழத் தமிழ் மக்கள்
ReplyDelete