முதலாவது
நாள்
“பாக்கியம், பாக்கியம். பிள்ளைக்கு ஒரு ரீச்சிங் றெயினிங்
கண்டியிலை இருக்காம். தம்பியும் நாளைக்குப் போறானாம் எண்டு கேள்விப்பட்டன்.
ஒருக்கால் கூட்டிக் கொண்டு போய்ச்
சிற்றம்பலம் வீட்டை விட்டிட்டான் எண்டால்,
அவள் மிச்சம் எல்லாத்தையும் வெண்டு
விடுவாள்.”
“போறதெண்டுதான் சொல்லிக் கொண்டு நிக்கிறான்.
உந்தக் கோதாரிப் படிப்பை விடெண்டாலும்
விடுகிறானில்லை. உந்தப் பிரச்சினையளைத் துளைச்சுக்
கொண்டு எப்பிடித்தான் போகப் போறானோ? இனி
விடிய இருக்கிற நிலமையையும் பாத்துத்தான்...“
“.........“
“போகேல்லை யெண்டு போய்ச்
சொல்லு. படிக்கிற பெடியன்களும் வாறான்கள்.
பிறகு பகிடி பண்ணுவான்கள். பட்டமும்
தெளிப்பான்கள். எணை எங்கையணை உள்ளுக்குப்
போறாய்?”
“மாமா! உங்களுக்குத் தானே
தெரியும். இப்ப ரண்டு மூண்டு
நாள்கூட பிரயாணம் செய்ய எடுக்குது.
இப்ப பிரயாணம் எண்டதுகூட ஒரு
கலைதான் மாமா. நான் பெடியன்.
இரவிலை எங்கையெண்டாலும் தங்குவன். சித்திரா பெட்டை. பாவம்
அல்லே!”
“பரவாயில்லைத் தம்பி பிரபா. அவளும்
உன்னோடையே கூடத் தங்கட்டுமன். என்ன
செய்யிறது?”
xxx
“ரஷ்சியாக்காரன் ரொக்கெற் அனுப்பி ஒரு
கிழமைக்குள்ளை திரும்பியும் வந்திடுது. இங்கை எண்ணண்டால் பத்து
நாளைக்குள்ளை எண்டாலும் ஒரு தபால் போய்ச்
சேருதில்லை. தங்கைச்சி உம்மை நான் கொண்டு
போய் நேரே குடுக்கச் சொல்லேல்லை.
உம்முடைய இடத்திலை போட்டிட்டீர் எண்டால்,
அது தன்ரை பாட்டிலை அடுத்தநாள்
கொழும்பு போய்ச் சேரும்.”
“என்ன அக்கா முத்திரையும்
ஒட்டேல்லைப் போல கிடக்கு?”
“என்ன செல்வி! ஒரு
எழுபத்தைந்து சத முத்திரை தானே!
ஒட்டிப் போடுமன்”
xxx
“அம்மா, எனக்குப் போகப்
பயமாயிருக்கு. கொலைக்களத்துக்குப் போறது போல கிடக்கு”
“அதுக்குத் தானே பிள்ளை பிரயாணக்
கஷ்டம் ஒண்டும் வரப்படாதெண்டு, உந்த
வைரவர் கோயில் ஐயரிட்டைக் கொண்டு
மந்திரிச்சு ஓதுவிச்சுக் கொண்டு திருநீறு வாங்கி
வாறன். பொல்லாத இடமடி பிள்ளை.
உதைக் கவனமாகக் கொண்டு போயடி
பிள்ளை வைச்சு வைச்சுப் பூசு.
வியாழனும் வேறை முழுசிப் பாக்குது.
வைரவர்தானே எங்களுக்குத் துணை”
இரண்டாவது
நாள்
பஸ்சை எடுங்கோ எடுங்கோ எண்டால்
கேட்டால் தானே! இப்ப ஏதோ
பிரச்சி னையாம். மூக்குப்பொடி கூடப்
போட விடமாட்டன் என்கிறான்கள்.
நேரமும்
எட்டுமணியாப் போச்சு. நாங்கள் எப்பதான்
வவனியா போறது? என்ன ண்டுதான்
ரெயிலைப் பிடிக்கிறது?
இஞ்சைபாரும்
அப்பு, புறுபுறுக்காதையும். றைவர் இண்டைக்கு நேற்றே
இந்த மினிபஸ்சை ஓட்டிறார். எத்தினை மாசமா கொண்டு
இழுக்கிறார். இது கடைசி பஸ்
எண்டபடியாலை எல்லோரையும் பார்த்துக் கீத்துதானே வெளிக்கிடுவினம்.
இஞ்சாரும்,
நீர் றைவருக்காக வக்காலத்து வாங்காதையும். உமக்கு எங்கே காணும்
தெரியப் போகுது எங்கடை அவசரம்.
கண்டறியாத மினிபஸ் ஓடினம். சரி,
சரி எல்லாரும் ஏறுங்கோ. பஸ் வெளிக்கிடப்
போகுது.
வாணி, வசந்தி...
ஏய்! நாங்கள் இஞ்சை உள்ளுக்கு
இருக்கிறம்.
தயவு செய்து ‘புட்போட்டிலை’ ஒருத்தரும்
நிக்கவேண்டாம். இடமில்லாட்டி மிச் செல்லாரும் மேலுக்கு
ஏறுங்கோ. பயப்பிடாதையுங்கோ. ஆ, பாலாண்ணை நீங்கள்
எடுங்கோ பஸ்சை.
xxx
என்ன கொண்டக்டர் தம்பி! ஆனையிறவுக்கு இஞ்சாலையும்
வாகனங்கள் கனக்க நிக்குது. அனுமான்ர
வால் போல அங்காலையும் நிக்குது.
எண்ணண்டு ஒருக்கால் ஆரையேன் கேளுங்கோ?
ஆமி நடையிலை வருகுதாம்.
பொறுங்கோ!
வவனியாவிலை இருந்து வந்த ஒரு
பஸ்சை விடுகிறான்கள். அவையளிட்டைக் கேட்டால் எண்ணண்டு தெரியவரும்.
என்னண்ணை, என்ன நடந்தது?
கொழும்பு
பஸ்களை மறிச்சு வைச்சிருக்கிறான்கள். வவனியாவிலை
ஏறின ஒரு ஆள் வாழை
இலைகளை முன்னுக்கு வைச்சதை றைவரும் கண்டவராம்.
பிறகு வாழை இலைக்காற ஆளை
ஆனையிறவு வரேக்கை காணேல்லையாம். வாழை
இலைக்குள்ளை எதோ நோட்டீசுகளாம். எல்லாக்
‘காம்’புகளையும் தாண்டி, கடைசியிலை எம்பிட்டுப்
போச்சு.
கோதாரி வருவான், வவனியாவிலை ஏனாம்
ஆக்களை ஏத்தினவன்?
பஸ்சுக்குள்ளையிருந்து
ஆறுபேரைக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறான்கள். அது சரி உங்காலை
ஏதேனும் பிரச்சினைகள்?
இல்லை, எதுக்கும் பாத்துப் போங்கோ!
நேரமும்
ஒருமணியாப் போச்சு. இண்டைக்கு ரயிலைத்
தவறவிட்டு விடுவோம் சித்திரா.
அப்ப இண்டைக்கு இரவைக்கு?
வவனியாவிலைதான்
எங்கேயேன், பள்ளிக்கூடம் அல்லது சேர்ச்!
ச்சீ! அப்ப என்ன மண்
நிலத்திலேயே படுக்கிறது. சாப்பாடு, கை கழுவிறது, குளிக்கிறது?
என்னாலை ஏலாது.
அட நாசங்கட்டு. ஆமிக்காரனிட்டைத் தப்பி இந்தப் பள்ளங்களுக்கை
விழுந்து செத்துப் போவம் போலை
கிடக்கு.
இதென்ன கப்பலிலை போறது மாதிரி
ரண்டு பக்கமும் ஆடுது. பிறகு
தொபுக் கெண்டு விழுகுது. தம்பீ,
தலைகீழாக் கவிட்டுப் போடாதையடா.
எணை ஆச்சீ, உனக்கெத்தினை தரமணை
நேரம் சொன்னாச்சு. வேணு மெண்டால் மணிக்கூடு
ஒண்டைக் கயித்திலை கட்டிக் கழுத்திலை போட்டுக்
கொண்டு வராதையுங்கோவன்.
xxx
என்ன இண்டைக்கு றெயின் வராதோ? ஏன்
என்ன நடந்ததாம்? காத்துக் கீத்து எண்டு
ஏதாவது
கொழும்பிலை
வெளிக்கிடேக்கை குண்டு ஒண்டு வெடிச்சதாம்.
கனபேர் செத்துப் போச்சினம் எண்டு
கதைக்கினம். இனிமேலும் ஓடாது எண்டு கேள்வி.
அப்ப நாங்கள் எங்கை தங்கிறது?
என்னண்டு போறது? கிருஷ்ணா என்ன
செய்வம்? நான் இதுவரை காலமும்
ஒருநாளும் அனுராதபுரம் கடந்து பஸ்சிலை போகேல்லை.
நான் திரும்பி வீட்டை போகப்
போறன். இனிமேல் வவனியாவுக்கு அங்காலை
காலடி எடுத்து வைக்கிறதில்லை.
பிரபா அண்ணை, நான் கட்டாயம்
போகவேணும். போகாட்டில் இரண்டு கிழமையில் ‘றெயினிங்’
போச்சு. வேலையும் போய் விடும்.
எங்கை நிண்டு பஸ் ஏறுறதெண்டும்
தெரியாது. சிங்களமும் தெரியாது.
முதலிலை
இரவுக்கு நிக்கிறதுக்கு ஒரு வழி பாத்திட்டுப்
பிறகு யோசிப்பம். போறதோ விடுறதோ எண்டு.
என்ன செல்வி!
தம்பி தங்கைச்சியவை, நீங்கள் எங்க போகவேணும்?
கண்டிக்குப்
பெரியவர்!
நீங்கள்
காலமை எட்டுமணிக்கு இந்த இடத்துக்கு வாங்கோ.
நானும் கண்டிக் குத்தான் போகவேணும்.
‘அன்பிலார்
எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு’ பாக்கப் பாவமாய்க் கிடக்கு.
நீங்கள் வாங்கோவன்
நீங்கள்?
நான் வவனியாதான். கண்டியிலை ‘பிஸ்னஸ்’ செய்யுறனான். எனக்கு
எல்லா இடமும் தண்ணி பட்ட
பாடு. ‘பீஸ் பீஸ்’ ஆகத்
தெரியும். பயப்படத் தேவையில்லை. சிங்களமும்
பிய்ச்சு எறிஞ்சுடுவன். சரியா எட்டு மணிக்கு
வாங்கோவன்.
ப்ராமிஸ்.
நீங்க வாங்கோவன்.
மூன்றாவது
நாள்
வழமையா வவனியாவுக்கு அங்காலை நாங்கள் ஒருத்தரும்
தமிழிலை கதைக் கிறதில்லை. அப்படியெண்டால்
வாய் திறந்து ஒண்டும் கதைக்கிறதேயில்லை.
ஊமைப் பாஷை தான்.
ஏன் அண்ணை?
உம்! பிரபாவின்ர தங்கைச்சி ஏனாம்? அதுக்கிடையிலை உங்களுக்கு
ஒரு கதை சொல்லப் போறன்.
நேற்றிரவு நடந்தது. உண்மைக் கதை.
கும்ம்ம்ம்மிருட்டு.
என்ன சிறீ, காதலிக்க நேரமில்லை
படமா?
கும்மிருட்டு.
சரியா பன்னிரண்டு மணி. நாய்கள் குரைத்தன.
பூனைகள் அங்கும் இங்கும் தாண்டவமாடின.
நான் படுத்திருந்த படியே மெல்லமாகத் தலை
நிமித்திப் பாக்கிறன். எங்கடை பக்கத்திலையிருந்து ஒரு
உருவம் எழும்பிப் போகுது. அங்காலை பெம்பிளையள்
பக்கமிருந்து இன்னொரு உருவமும் எழும்பிப்
போகுது. ஒரு ‘சண் கிளாசும்’
ஒரு ‘குதி’ உயர்ந்ததுமாக அப்படியே
சாமான்கள் வைச்சிருந்த அறைப் பக்கமாகப் போகுது.
அப்படியே!
முகத்துக்கு
நேரே முகம் பதியுது. ஓசைப்படாமல்
ஒரு...
ஓசைப்படாமல்
ஒரு?
உங்கை பார்! எங்களைக் கூட்டிக்
கொண்டு போறதெண்டு சொன்னவர் வருகிறார். வாங்கோ
போவம்.
வவனியா முத்துலிங்கம் எண்டால் எல்லாருக்கும் தெரியும்.
அவ்வளவு ‘பேமஸ்’. உந்த எண்பத்தி
மூண்டுக் கலவரத்துக்கை கூட வவனியாவுக்கும் கண்டிக்குமிடையிலை
பாஞ்சு பாஞ்சு வியாபாரம் செய்த
ஒரே ஒரு ஆள் இந்த
முத்துலிங்கம் தான். பயம் கிடையாது.
என்ன பயம் தம்பி? ஏன்
பயப்பிட வேணும்? எந்த விஷயத்தையும்
எதிர் கொள்ளப் பழக வேண்டும்
பிள்ளையள். எத்தினை பேரைப் பவுத்திரமாகக்
கூட்டியந்து கரை சேர்ப்பித்திருப்பன்.
ஆ! உங்கை திருக்கோணமலை போற
பஸ் போல. அனுராதபுரம் வரையும்
போகலாம்.
முன்னுக்கு
மூண்டு இடம். பின்னுக்கு நாலு.
நடுவிலையும் ஒன்றிரண்டு இடமிருக்கு. அப்ப ஏறுவோமே முத்துலிங்கண்ணை?
உம். உம். சத்தம் போடாமல்
ஏறுங்கோ! பிறகு இறங்கேக்கை கை
காட்டுவன். அப்ப எல்லாரும் இறங்குங்கோ.
சரிதானே!
ஆரோ ஏழெட்டுப் பேர் கையைக் காட்டுறான்கள்.
பிறகு கொண்டக்டரையும் ஏதோ கேக்கிறான்கள். பிறேம்,
கவனிச்சியா நீ? அவங்களை.. ஓம்,
ஓம் சிறீ, இப்ப ஏறிட்டான்கள்.
கையிலை அலவாங்கு, கத்தி, வாள் போல
ஏதோ வெல்லாம் வைச்சிருக்கிறான்கள். நாங்கள்
தமிழ் ஆக்கள் வருகிறோம் எண்டு
தெரிஞ்சிட்டுது போலை”
டேய் மெதுவாக் கதையடா! உதென்ன
முன்னுக்குப் பின்னுக்கு ஓடுறான்கள். உங்கார் முன்னுக்குப் போய்
பிரபாவிட்டை ஏதோ சிங்களத்திலை கேட்கிறான்கள்.
பிரபாவும் முழுசுறான். சித்திரா அழுகிறாள் போல
கிடக்கு. இண்டைக்கு வெட்டப் போறான்கள்.
சிறீ, ஒருக்கால் மெதுவா முன்னுக்குப் போய்
முத்துலிங்கண்ணையிட்டை விஷயத்தைச் சொல்லன்.
எனக்குப்
பயமாயிருக்கு. கைகால் எல்லாம் உதறுது.
என்ர ‘பாக்’கும் அறுந்து
போச்சு. ஒற்றைக்கால் செருப்பையும் காணேல்லை.
இஞ்சை வாறான்களடா. ஏதோ வசந்தியவையிட்டையும் கேக்கிறான்கள்.
கேக்கிறதைப் பாத்தா, ‘இறங்கி வரப்
போறியளோ அல்லது இருக்கத்தான் போறியளோ’
எண்டது மாதிரியும் கிடக்கு. பொறு பொறு
இனிச் சரிவராது. ஒருக்கால் முன்னுக்குப் போய்...
இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்கு.
பிறேம், முத்துலிங்கண்ணையோடை ஏதோ கதைச்சுப் போட்டு
வாறான்.
முத்துலிங்கண்ணை
எல்லாம் பிய்ச்சு எறிஞ்சு போடுவார்.
எவ்வளவு
‘எக்ஸ்பீரியன்ஸ்’ இருக்கு அவருக்கு.
உதென்ன முத்துலிங்கண்ணை ‘பெல்’லை அடிச்சுப்போட்டு,
சாமான்கள் எல்லாத் தையும் நடுவழியிலை
இறக்கிறார்?
பங்கை பஸ்சும் வெளிக்கிட்டுட்டுது.
நாங்கள்?
xxx
நல்ல காலம். நாங்கள் சரியாப்
பயந்திட்டம். அவங்கள் திருக்கோணமலைப் பள்ளிக்கூடத்திலை
படிக்கிற பெடியன்கள். மரத்தளபாடங்களோடை நிக்கப் பஞ்சிப் பட்டு
இருக்க ‘சீற்’ கேட்டிருக்கிறான்கள்.
நாங்கள்
அனுராதபுரத்திலை இறங்குவோம் எண்டு எப்பிடி மோப்பம்
பிடிச்சாங்களோ தெரியாது. எங்களிட்டை ‘சீற்’ ‘புக்’ பண்ணியிருக்கிறான்கள்.
இறங்கேக்கை பிரபாவிட்டை ‘தாங்ஸ்’ கூடச் சொல்லிப்
போட்டுப் போறான்கள். நல்ல பெடி... இனி
என்ன ‘டக்’கெண்டு அடுத்த
பஸ்சும் கிடைச்சிட்டுது. இனி பன்னிரண்டு மணி
மட்டிலை போய் விடுவோம்.
உங்கை பாருங்கோ செல்வி! ஆர்
வாறதெண்டு.
முத்துலிங்கண்ணை,
தலையிலை சாமான்களோடை! தாண்டித் தாண்டி.. கையைக்
காட்டுவோமே? அவராவது இறங்கேக்கை கையைக்
காட்டேல்லை. நாங்கள் காட்டுவோம். காட்டு
செல்வி! வாணி நீயும் காட்டு.
xxx
“சிற்றம்பலம்
அண்ணை! அண்ணை!”
“உங்கை பிள்ளை சித்திராவும்
உந்தப் பிரச்சனையளுக்கை எத்தினை ‘காம்’புகள்
ஏறி இறங்கி, ஒரு மாதிரி
உயிர் தப்பி சுகமா வந்து
சேந்திட்டுது. நாலைஞ்சு பெடி பெட்டையளும்
வந்து நிக்கினம். இஞ்சாரும் பாக்கியலச்சுமி இஞ்சாரப்பா! இஞ்சை வந்து உந்தக்
குரங்குகளைக் கலைச்சு விடும். குரங்குகள்
தொல்லை பெருந்தொல்லை. சறுக்கீஸ் விளையாடினம்.”
“பொறுங்கோ, நியூஸ் கேட்டிட்டு வாறன்”
“அடக்கடவுளே! நீங்கள் வந்து கொஞ்ச
நேரத்திலை இவ்வளவும் நடந்திருக்கு. அனுராதபுரத்தில பிரச்சினையாம். ஊரடங்குச் சட்டம் போட்டிருக் கிறான்கள்”
“அப்பிடியெண்டால் அந்தப் பிரச்சினையளுக்கை முத்துலிங்கண்ணைக்கு
ஏதாவது...“
“காலைக்கையை அடிச்சு முறிச்சிருந்தாங்களெண்டால் அதைப் போல
உபத்திரவம் வேறை இல்லை”
“என்ன வசந்தி என்னடி
நாங்கள் எல்லாரும் சீரியசா நடந்த விஷயங்களைப்
பற்றிக் கதைக்கிறம். பிரபாவின்ர சித்திரா, சொறி! சித்திரா தலையிலை
கையை வைச்சபடி திகைச்சுப் போய்
இருக்கிறாள்?”
“நீங்கள் இன்னும் திரும்பிப்
போக இரண்டு மூண்டு மாசம்
எடுக்கும். தான் இன்னும் இரண்டு
கிழமையிலை எப்பிடிப் போறதெண்டு பிள்ளை யோசிக்குது போலை”
“பிள்ளை இரண்டு கிழமைக்குள்ளை
உதைப் போல இன்னும் எத்தினையோ
சம்பவங்கள் நடந்து முடிஞ்சிடும் பிள்ளை”
“சித்திராவின்ர காசையும் வேறை சாமான்களையும்
காணேல்லையாம்”
“என்ன பிரபா?”
“க்றீச் க்றீச்”
“எடியேய் பாக்கியலச்சுமி இஞ்சை
வா. முதலிலை உந்த மூக்கைச்
சொறிஞ்சு கொண்டு சத்தம் போடுற
குரங்குகளைக் கலைச்சுவிடு. என்ன பிள்ளை நீ
என்ன சொல்லுறாய்? என்னென்னெ சாமான்களைக் காணேல்லை?”
“ஆயிரம் ரூபா காசு,
‘பேர்த் சேட்டிபிக்கற்’, ‘றிசல்ட் சீற்’, ‘இண்டர்வியூ
போம்’. அதோடை மாமா என்ரை
‘ஐடென்டிக் கார்ட்டும்’“
“’ஐடெண்டிக் கார்ட்’ இல்லாட்டிப் பிள்ளை
இஞ்சை ஆளே தொலைஞ்ச மாதிரி!
என்னண்டு வழியிலை செக்கிங் இல்லாமலே
வந்தனியள்? அடக்கடவுளே!”
“திருநீற்றுச் சரையுந்தான் மாமா துலைஞ்சிட்டுது”
“இப்ப நான் ஒரு
கதை சொல்லப் போறன் சிறீ!”
“மண்ணாங்கட்டி!”
“எங்கடை பக்கத்திலை இருந்து
ஒரு உருவம் எழும்பிப் போகுது.
பெம்பி ளையள் பக்கமிருந்து இன்னொரு
உருவம் எழும்பிப் போகுது. இரண்டுமாச்
சேர்ந்து அப்படியே சாமான்கள் வைச்சிருந்த
இடம் நோக்கிப் போகுது. ஓசைப்படாமல்
மூடியிருந்த ‘பாக்’கைத் திறந்து,
ஓசைப்படாமலேயே...”
“ஓய் நிறுத்தும்! பிள்ளை
சாமான்கள் பறி போயிட்டுது எண்டு
இருக்குது. அவர் கதை சொல்லுறாராம்
கதை. கதையை நிப்பாட்டிப் போட்டு
நடையைக் கட்டும் காணும்.”
சங்கமம்,
1990
Nalla kathai Sutha.
ReplyDelete