Friday, 5 February 2016

எதிர்பாராதது! - 2 (சிறுகதை)


நாங்கள் இங்கு வந்த விஷயம் - நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி. மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.
"இதென்ன தம்பி! பாய்" மூன்றாவது தடவை சொன்னபோது அவன் சிணுங்கினான்.
"அம்மா! அன்ரி நெடுகலும் என்னைப் பாயச் சொல்லுறா. கால் நோகுது"

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்திக்கு அப்போதும் புரியவில்லை. இவன் என்ன மூலைக்கு மூலை தாவுகிறான் என நினைத்துக் கொண்டாள்.

"மனேசுக்கு தமிழ் அவ்வளவு விளங்காது" மாதுமை சிரித்தபடியே குசினிக்குள்ளிருந்து வெளியே வந்தாள். தானே போய் பாயொன்றை எடுத்து வந்து வசந்தியிடம் கொடுத்தாள்.

அன்று இரவுக்குள் வசந்திக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. அப்பொழுதும் மனேஸ் 'கேம் போய்' (Game Boy) விளையாடிக் கொண்டிருந்தான். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா வேளைகளிலும் அந்த 'கேம்' அவனது கையிலிருந்தது. வசந்தி கனடாவில் இருந்து கொண்டு வந்த 'மிக்‌ஷ'ரில் எல்லாரிற்கும் பகிர்ந்து கொடுத்தாள். ஒரு சிறிய 'கப்'பிற்குள் போட்டு மனேசிடம் நீட்டினாள்.

"இந்தா மனேஸ்! கொட்டாமைச் சாப்பிடு"

அவன் அதை என்னவென்றுகூடப் பார்க்கவில்லை. 'கேம்' விளையாடியபடியே, "அன்ரி, எனக்குக் 'கொட்டாமை' வேண்டாம். நான் ஒருநாளும் அது சாப்பிடேல்லை" என்றான்.

"என்ன மாதுமை உங்கடை பிள்ளையளுக்கு தமிழ் படிப்பிக்கேல்லையா?" ஆச்சரியத்தில் வசந்தியின் குரல் இராகமாகியது.
"எங்கை வசந்தி நேரம். மூத்தவளையைக் கவனிச்சதிலை இவனை விட்டிட்டம்" சமாதானம் சொன்னாள் மாதுமை.

எங்கட சொந்த நாட்டிலை, கூடுதலான பெற்றோர் தங்கடை பிள்ளைகளுக்கு நாட்டியமோ மிருதங்கமோ பழக்கவில்லை. ஆனா எல்லாரும்  பிள்ளையளுக்கு தமிழ் படிப்பிச்சவை.

ஈசனும் மாதுமையும் தமது நெடுநாளைய கனவை இரவென்றும் பகலென்றும் பாராமல் நன்கு திட்டமிட்டிருந்தார்கள். ஈசன் அந்த வாரம் முழுவதும் லீவு போட்டிருந்தான். எப்படி அரங்கேற்றத்தை நடத்தி முடிப்பது என்ற சிந்தனையில் அலைந்து திரிந்தான்.

xxx  

அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பிரதம விருந்தினராக வந்தவரின் உரையிலிருந்து மாதிரிக்கு சில வைர வரிகள்:

"ஒரே நாளில் - ஒரே மேடையில் - ஒரே வேளையில் - நான்கு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம்.

அவுஸ்திரேலியாவில்,

கடுங்காற்றுடன் மழை பெய்து - பாலங்களைத் தகர்த்து, வீட்டுக்கூரைகளைப்பெயர்த்தால் - இப்படி பதினேழு வருடங்களுக்கு முன்பும் ஒரு தடவை நடந்தது என்பார்கள்.

பூமி வரண்டு, காடு பற்றி எரிந்து, மழை பெய்யாமல் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் போது - இப்படி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பும் ஒரு தடவை வந்தது என்பார்கள்.

ஒருபோதும் 'இதுவே முதல் தடவை' என்று சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட இடத்தில் - மெல்பேர்ண் மாநகரில் - ஒரே நாளில் - ஒரே மேடையில் - ஒரே வேளையில் - நான்கு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம்.

இவற்றிற்கெல்லாம் காரணம் - நாட்டிய தாரகை, நர்த்தன வித்தகி ரேவதி விக்னேஸ்வரன். அவரே அந்தப் பெருமைக்குரியவர். ஆசிரியரின்  சிரேஷ்ட புத்திரி அகல்யா - தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாசன் தம்பதிகளின் மகள் ரேகா - ஈசனின் இரண்டு பிள்ளைகள் சைந்தவி, வைஷ்ணவி.  மொத்தம் நான்கு பெண்கள். இவர்களின் கால்கள் பம்பரங்கள்"

அன்று இரவு இரண்டு மணி வரை தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அரங்கேற்றத்தை புகழ்ந்து தள்ளினார்கள். வெற்றிக்களிப்பில் ஈசன் திளைத்துப் போனான். அதிகாலை மூன்று மணிக்குத்தான் உறக்கத்திற்குப் போனான். அந்த உறக்கமும் - இன்னொரு புலம்பெயர்ந்த நாட்டின் தொலைபேசி அழைப்பினால் ஐந்து மணியளவில் கலைந்தது. இனி ரெலிபோன் வயரைக் கழற்றிப் போட்டு படுத்தால்தான் உறங்கலாம் என்று முடிவெடுத்தான் ஈசன். மறுபடி காலை ஒன்பது மணிக்கு மீண்டும் ரெலிபோன் இணைப்பை தொடுத்தபோது, அலாரம் வைத்தால் போல் மீண்டும் புகழாரம் ஆரம்பித்தது.

ஈசனுக்கு அளவுக்கு மிஞ்சிய புகழாரம் சலிப்பைத் தந்தது. வசந்தியைக் கொஞ்ச நேரம்  தொலைபேசி அழைப்புகளைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு அடுத்த வேலைக்குத் தாவினான் ஈசன். கொப்பி ஒன்றை எடுத்து பெயரைப் பதிந்து காசுகளை எண்ணினான். நானும் அவனுக்கு ஒத்தாசை புரிந்தேன். ஏழாயிரத்துச் சொச்சம் தேறியது.

"ஈசா, அரங்கேற்றம் நடந்து முடிய எவ்வளவு செலவாயிற்று?" நான் கேட்டேன்.
"ஐம்பதுக்கு மேலை முடிஞ்சுது. இரண்டு பிள்ளையள் எண்டா அப்பிடித்தான் வரும்."
"சரி பரவாயில்லை. வளர்ந்த பிள்ளையள்தானே! உழைச்சுத் தந்திடுங்கள்."

சூடான தேநீர் வந்தது. சைந்தவி கொண்டுவந்து தந்துவிட்டு பக்கத்தில் நின்றாள்.

"பிள்ளை சைந்தவி, எங்கை தங்கைச்சி. அவளையும் கூட்டிக் கொண்டு ஒருக்கால் வாரும்."

சிட்டாகப் பறந்து சென்ற அவள் வைஷ்ணவியுடன் திரும்பினாள்.

"பிள்ளையள், அப்பா அரங்கேற்றம் வைச்சு கஸ்டப்பட்டுப் போனார். நீங்கள் இரண்டுபேரும்தான் அவருடைய கடனை அடைக்க வேணும்."

"என்ன சொல்லுறியள் அங்கிள்? நாங்கள் கேட்டனாங்களா எங்களுக்கு டான்ஸ் பழக்கி விடுங்க எண்டு. எங்களுக்கு டான்ஸ் விருப்பமில்லை. அம்மா அப்பாவை தங்கட விருப்பத்துக்காகத்தான் எங்களைப் பழகச் சொன்னவை. அவையள்தான் அதின்ரை செலவைப் பாக்கவேணும்" இரண்டு பிள்ளைகளும் தடுக்கித் தடுக்கி தமிழில் தாவினார்கள்.

கதவு வாசலில் நின்ற வசந்தி, அந்தப் பதிலினால் வெளிப்படையாகவே தனது வாயைத் திறந்து சிரித்தாள். அவளால் எதையுமே அடக்கிப் பழக்கமில்லை. என்னுடைய இந்தக் கேள்வியினால் ஈசனின் மனம் புண்பட்டிருக்க வேண்டும். அவன் தனது பிள்ளைகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் சிறிது ஆட்டம் கண்டிருக்க வேண்டும். மெளனமாக இருந்தான்.

"பிள்ளையள் நாங்கள் எங்கடை கடமையைத்தான் செய்யிறம். நீங்கள் இலங்கையிலை இருக்கேக்கை எவ்வளவு விருப்பத்தோடை டான்ஸ் படிச்சனியள். அதைத் தொடர வேண்டும் எண்டதுதான் எங்கடை விருப்பம்" மாதுமை சொன்னாள்.

"அவுஸ்திரேலியா அரசு இந்த நாட்டில் வாழும் சகல இனமக்களுக்கும் அவரவர் கலை இலக்கியம் பண்பாடுகளைப் பேணிப் பாதுகாக்க எத்தனையோ வழிகளில் உதவி செய்யுது. எங்கடை சமுதாயத்திலை எங்கையோ ஒரு தவறு ஏற்பட்டிருக்க வேண்டும். நாங்கள் அரசு தாற  உதவிகளைச் சரியாகப் பாவித்தோமெண்டால், நாங்களும் எங்கடை மண்வாசத்தோடை இங்கை வாழலாம்"

அதன் பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு சினத்துடன் பதில் அளித்தான் ஈசன்.

"இனிமேல் இஞ்சை ஆற்றையேன் ரெலிபோன் கோல் வந்தால் எல்லாத்தையும் அடிச்சுடைச்சுப் போடுவன்" சத்தமிட்டான் ஈசன்.
"அரங்கேற்றம் வைச்சால் நாலு பேர் ரெலிபோன் எடுப்பினம்தானே! அதுக்கேன் கொதிச்சுக் கூத்தாடுகிறியள். நீங்கள்தான் குடும்பத்தலைவன் எண்ட முறையிலை அவையோடை கதைக்க வேணும்" என்று சொன்ன மாதுமைக்கு "வேலைக்குப் போட்டன் எண்டு சொல்லிச் சமாளியும்" என்றான் ஈசன்.

"என்ன கதை இது. உங்களுக்கு கொலஸ்ரோல், சுகர் எல்லாம் இருக்கு. இரண்டு வேலைக்குப் போறியள் எண்டா ஆர்தான் நம்புவினம்?"
"என்னவெண்டாதல் சொல்லிச் சமாளியும். கடைக்குப் போட்டன் எண்டு சொல்லும்."

அவர்களுக்கிடையில் பிரச்சினையைக் கிழப்பி விட்டிட்டேனோ? மனம் சங்கடப்பட்டது.

"எங்களோடை படிச்சான் சண்முகேஸ்வரன், அவன் இப்ப உதவி அரசாங்க அதிபராக எடுபட்டு யாழ்ப்பாணத்திலை வேலை செய்கிறானாமே!" கதையைத் திசை திருப்பினேன் நான். மேசை லாச்சிக்குள் எதையோ தடவினான் ஈசன். பின்னர் கடிதங்கள் அடங்கிய ஒரு கட்டை எடுத்தான்.
"பேப்பரிலை நியூஸ் பாத்த உடனை அவன்ரை அட்ரஷைத் தேடிப் பிடிச்சு அவனுக்கொரு வாழ்த்துக் கடிதம் அனுப்பினனான். இந்தாரும் சண்முகேஸ்வரன் எழுதின மறுமொழியை. வாசிச்சுப் பார்" கடிதத்தை எடுத்து நீட்டினான் ஈசன்.

கடிதத்தை மேலோட்டமாகப் படித்துக் கொண்டே, "ஏன் நல்லாத்தானே எழுதியிருக்கிறான்" என்றேன்.

"நல்லாத்தான் இருக்கு. ஆனா எப்பிடிக் கடிதத்தை முடிச்சிருக்கிறான் எண்டதைப் பார்."
"நீங்கள் எல்லாரும், உங்கே இப்பொழுது அப்பிள் தோட்டத்தில் வேலை செய்வீர்கள் என நம்புகின்றேன்"

கடித்தத்தின் கடைசி வசனம் என்னைத் திடுக்கிடச் செய்தது.

               xxx             xxx             xxx

அதன்பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு மாதுமையே பதில் சொன்னாள். இரவு வேளைகளிலும் ஈசன் வேலைக்குப் போய்விட்டதாக மனமறிந்து பொய் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டாள். ஈசன் படுக்கை அறையினுள் புதைந்து கிடந்தார். அரங்கேற்றம் செய்த உடற் சோர்வாக இருக்குமோ? வழமைக்கு மாறாக அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டின.

ஈசன் தனது பிள்ளைகளின் சுடு சொல்லினால் ஊமையாகிக் கிடந்தான். மறுநாள் எங்களை கனடாவிற்கு வழியனுப்பி வைக்கும் போது கூட 'எயர்போர்ட்'டில் ஈசன் சுறுசுறுப்பின்றியே இருந்தான்.

கனடா வந்து சேர இரண்டு நாட்கள் எடுத்தன. வந்திறங்கிய செய்தியைச் சொல்வதற்காக ஈசனுக்கு ரெலிபோன் செய்தேன். மாதுமைதான் எடுத்தாள்.
"நாங்கள் சுகமாக வந்து சேர்ந்து விட்டோம். உங்களின் அன்புக்கும் உதவிகளுக்கும் நன்றி. ஒருக்கா ஈசனிட்டைக் குடுங்கோ கதைக்கவேணும்."
"ஈசன் வேலைக்குப் போய் விட்டார்."

"என்ன?  எனக்குமா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்? இப்ப உங்கை இரவு பதினொரு மணியல்லவா?"
"பதினொரு மணிதான். ஆனா உண்மையிலேயே ஈசன் வேலைக்குப் போய்விட்டார். இரண்டாவது வேலை."

பூமராங் - 2010


No comments:

Post a Comment