செங்கை ஆழியான் (க.குணராசா)
வாங்கில் படுத்திருந்த ஏகாம்பரத்தார் கண் விழித்தபோது
கால்மாட்டில் காயத்திரி அமர்ந்திருந்தாள். இன்று மட்டும் தான் வாங்கில் உறங்கப்
போகிறார். நாளை எத்தரையிலோ? இடம் பெயரப் போகிறார்கள். அந்த நேரம் பார்த்து
காயத்திரி வந்திருக்கிறாள். காயத்திரி அவரின் மூத்தமகனின் இரண்டாவது மகள். தானாக
விரும்பி இயக்கத்தில் சேர்ந்தாள். அவளைத் திரும்பி அழைத்துவர அவர் எடுத்த
முயற்சிகள் பயனற்றுப் போயின. அவள் வர மறுத்துவிட்டாள்.
“காயத்திரி எப்ப வந்தாய்? கன நேரமா?” என்றபடி வாங்கைவிட்டு
எழும்ப முயன்றார். காயத்திரி தடுத்தாள்.
“நீங்க படுங்க அப்பப்பா. நானிருக்கிறன். உங்களை எல்லாம்
ஒருக்கா பார்த்துவிட்டுப் போக வந்தன்.”
ஏகாம்பரத்தார் போர்வையை நீக்கிவிட்டு டக்கென்று
எழுந்திருந்தார். அவள் வந்ததன் நோக்கம் புரிந்தது. ஏழாண்டுகளின் பின்னர்
வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவர் அவளை ஆழமாகப் பார்த்தார். அப்பார்வையின்
காங்கையை அவளால் தாங்க முடியவில்லை. கிழவனுக்குப் புரிந்துவிட்டது.
வாசலில்
நிழலாடியது. காயத்திரியின் தாயார் சரஸ்வதி மகள் வீடு வந்ததன் நோக்கம் புரியாமல்
நின்றிருந்தாள். உலகம் புரியாது இருந்துவிட்டாள்.
“காயத்திரி வந்திருக்கிறாள் அம்மான்.”
“ம்… தெரியுது. ஏன் வந்திருக்கிறாள் தெரியுமே? எங்களைக்
கடைசியாய் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறாள்.”
“நீங்கள் கனகாலம் இருப்பியள் அம்மான்.” என்றாள் சரஸ்வதி.
அவளுக்குப் புரியவில்லை. பலி கொடுப்பதற்கு முன்னர் கடாயைக் கொளுக்க வைப்பதுபோல
விரும்பியவர்களைப் பார்த்துவருமாறு காயத்திரியை அனுப்பியிருக்கிறார்கள். அவளுடைய
மரண நாள் குறித்தாகிவிட்டது. பேதை சரஸ்வதிக்குப் புரியவில்லை. இப்படித்தான்
சின்னப்பரின் மகள் ஒருநாள் தன் வீட்டுக்கு வந்தாள். மூன்றாம்நாள் தன்னை சிதற
அடித்துக் கொண்டாள். அவர் துயரதில் ஆழ்ந்தார்.
“நீங்க பேசிக் கொண்டிருங்கோ… நான் காலமைச் சாப்பாடு
அலுவலைப் பார்க்கிறன். காலமை சாப்பிட்டுவிட்டுப் போ…” என்றபடி சரஸ்வதி நகர்ந்தாள்.
“அவள் உன்ரை கையால சாப்பிடத்தான் வந்திருக்கிறாள்.
மத்தியானமும் நிப்பாள். அவசரப்படாதை… மத்தியானம் சாவலை வெட்டு…” என்றார் அவர்.
கிழவனாரை கேள்வியோடு ஏறிட்ட காயத்திரி பின்னர் தலையைக் குனிந்து கொண்டாள்.
“கவலைப் படாதையுங்க அப்பப்பா. விரும்பித்தான் போறன்.
சந்தோசமாகப் போறன்.விசயத்தைச் சொல்லி அவயின்ர அற்ப சந்தோசத்தைக் குலைத்திடாதையுங்க
அப்பப்பா.”
“சரி. என்னாலை தாங்க முடியவில்லை பிள்ளை. இப்படி
இராணுவத்தை வரவிட்டியளே? அவங்கள் பூ நகரி கடந்திட்டாங்கள். மன்னாரிலிருந்து பூ
நகரி வரை என்ன டம்பிப் பொயின்ருகளா வச்சிருந்தீங்க?”
“எங்களிட்ட ஆயுதம் போதியளவு இருக்கு. ஆட்கள் காணாது.
அவங்கள் விட்டில் பூச்சி மாதிரி வாறான்கள். பெருந்தொகைகளாக நவீன ஆயுதங்களுடன்
வாறாங்கள். முந்திமாதிரி மரணத்தைக் கண்டு ஓடவில்லை. உடனுக்குடன் மரணமடைந்தவன்களின்
இடத்தை நிரப்புறான்கள். மல்ரி பரல்களை மழை போலப் பொழிந்து ஏரியாவை முதலிலை கிளியர்
பண்ணுறான்கள். விமானங்கள் குண்டுமாரி வேறு பொழிகின்றன. எதிர்கொள்வது கஷ்டமாக
இருக்குதுதான். அது சரி நீங்கள் இன்னமும் வெளிக்கிடேல்லையே? கோழி இறைச்சியோடு,
சாப்பிட நிக்கிறியள். புறப்படுங்கோ… அவங்கள் நாலு பக்கங்களாலையும் கணேசபுரத்தை
நோக்கி வாறான்கள். நாளைக்கு பரந்தன் சந்தியை அடைஞ்சிடுவான்கள். விசர் வேலை
பார்க்காமல் வெளிக்கிடுங்கோ. நேர கல்மடு போய் விசுவமடு போங்கோ… விசுவமடுவில
முழுப்பலத்தோட தாக்கப் போறம். விசுவமடுப்பிரதேசத்தையும் அது விசுவமடு –
சிதந்திரபுரம் – புதுக்குடியிருப்புச் சந்தி வரை. அம்பலவன்பொக்கனை – புதுமாத்தளன்
பகுதியையும் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசங்களாகப் பிரகானப்படுத்தி
இருக்கிறான்கள். இப்பிரதேசங்களில் வான் தாக்குதல் இருக்காது. விசுவமடுவுக்குப்
போங்கோ… பார்க்கலாம். மத்தியானம் சாப்பிட்டுவிட்டு என்னோட வாருங்கோ அப்பப்பா.”
என்றாள் காயத்திரி.
w
சோமாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை. இந்த யுத்தமே
வெறுப்பைத் தந்தது. கைகளில் ஏ.கே.47 ஐ ஏந்திக் கொண்டு எல்ரிரீஈ ஐத் தேடி நடக்க
வேண்டியுள்ளது. இராணுவத்தைக் கண்டதும் திரள் திரளாக சாதாரண மக்கள் தங்கள்
வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தார்கள், பரந்தன் சந்தியில் திடீரெனத் தோன்றிய
குண்டுவீச்சு விமானங்கள் வீசிய குண்டுகளுக்குப் பலியாகி கும்பலாக தரையில்
இறைச்சிக் குவியல்களாகச் சரிந்தார்கள். கைக்குழந்தைகளில் இருந்து தள்ளாத வயோதிபர்
வரை அதிலிருந்தார்கள். சோமாவுக்கு இது பிடிக்கவில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதை
அவள் வெறுத்தாள்.
அவளுடைய தாத்தே (ஐயா)
கித்துள் மரத்தின் ஓலையில் கூடு கட்டியிருந்த குளவிக்கூட்டை அமாவாசை
இருட்டில் தீப்பந்தம் கொண்டு கொளுத்துவார். எரியுற்ற குளவிகள் திரள் திரளாக கருகி
நிலத்தில் விழும். அதுமாதிரி குண்டுவீச்சு விமானங்கள் தமிழரை அழித்தன. யார் பெற்ற
பிள்ளைகளோ? அவளுக்கும் சியா (தாத்தா), நங்கி (தங்கைச்சி), ஐயா (சகோதரன்) என்போர் இருந்தார்கள். அவர்களின் வயிற்றைக்
கழுவ அவள் இராணுவத்தில் இணைந்தாள். பிடிக்கவே இல்லை. மனிதரை மனிதர் கொல்வதா?
இலங்கை இராணுவத்துக்கும் எல்ரிரீஈ யினருக்கும்
விசுவமடுவில் கடும் யுத்தம் மூண்டுது. மூன்று நாட்கள் வரை நடந்தது. இருதரப்பிலும்
சூடு வாங்கியோர் சுருண்டு விழும்போது சோமா துடிதுடித்தாள். தனது துப்பாக்கியை
மெளனமாக்கியிருந்தாள். மூன்றாம்நாள் இராணுவம் வெற்றியடைந்தது. மரணத்திடையே மக்கள்
அலையலையாக வந்தார்கள். விசுவமடுவும் அதைச் சூழ்ந்த பிரதேசங்களும் அவர்களால்
நிரம்பி வழிந்தது. அவர்களை அகற்றியாக வேண்டும்.
விசுவமடுவிலுள்ள உடையார்கட்டு மகாவித்தியாலயம் தற்காலிக
தங்குமிடமாகியது. அங்கு வைத்து அகதிகளைப் பதிந்தார்கள். அங்கு பதிந்துவிட்டு
அவர்களை பஸ்களில் ஏற்றி வவனியா முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள். அகதிகளைப்
பதிகின்ற பணி சோமாவுக்கு கிடைத்தது. அவளுக்கு அப்பணி ஆத்ம திருப்தியாக இருந்தது.
w
கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கால்முகம் கழுவிய
ஏகாம்பரத்தார் கிணற்றின் கட்டைவிட்டுக் கீழே இறங்கினார். சில நாட்களாக அவர்
கால்கள் சமநிலையில் செயற்பட மறுத்தன. சிறுகல் தடுக்கினாலும் சரிந்து
விழுந்துவிடுவார் போலப் பட்டது. வாய்க்காலொன்றைக் கடக்கும்போது அது நிகழ்ந்தது.
கால்களிடறி மல்லாக்காக நிலத்தில் சரிந்தார்.
“ஐயோ…”
அப்பாடசாலையின் முகப்பு அறையொன்றில் அமர்ந்திருந்த சோமா
இதனைப் பார்த்தாள். வேகமாக ஓடிவந்து அவரைத் தூக்கினாள்.
“சியா… அப்பு… இப்படி தனிய வரப்படாது…”
ஏகாம்பரத்தாரை வெட்கம் பிடுங்கியது.
“எனக்கு ஒண்டுமில்லைப் பிள்ளை. கல் தடுக்கிவிட்டது.
அவ்வளவுதான். எனக்கு இப்ப சரி”
ஏகாம்பரத்தாரின் மகன் ஓடி வந்தான்.
“அப்புவைத் தனிய விடாதையுங்கோ… பாவம்… “ என்றாள் சோமா.
அந்த நிகழ்ச்சியின் பின்னர் ஏகாம்பரத்தாரும் சோமாவும்
நெருங்கிவிட்டார்கள்.
“அப்பு எனக்கும் ஒங்களைப் போல ஒரு சியா இருக்கார்.”
என்றாள் சோமா.
“எனக்கும் உன்னைப் போல ஒரு பேத்தி இருக்கார். இப்ப
எங்களோட இல்லை.”
“அப்ப இயக்கத்திலா? எல்லா வீட்டிலையும் இப்படித்தான்…
நாங்க மீட்டுத் தருவம் அப்பு… நீங்க நாளைக்குக் காலமை நேரத்தோடு வாருங்கோ… விடியவே
கியூவிலை நில்லுங்க… நம்பர் துண்டு கொடுப்பம். நாளைக்கு ஆறு பஸ் வருகுது… முந்நூறு
பேர் போகலாம். முதலிலை வவனியாவுக்குப் போங்கோ அப்பு…”
”நந்திக்கடலுக்கு அங்கால நீங்க… இங்கால இவங்கள்… சனம்
உங்க பக்கமாக வரப் பார்க்குதுகள்… தப்பி வாற சனத்த்ஹைச் சுட்டுவிட்டியளாம்.”
“அது பொய். நாங்க சுடேல்ல அப்பு. நந்திக்கடல் லகூன் ஒரு
கிலோமீற்றர் அகலமானது. ஆழமும் கழுத்தளவு தண்ணி. உண்மையில நந்திக்கடலிலிருந்து
சுண்டிக்குளம் சோலைவரை 100 மீற்றர் அகலமான ஒடுங்கிய லகூன் ஒன்றுள்ளது. இடுப்பளவு தண்ணி.
அதுக்குப் பக்கத்திலதான் புதுமாத்தளன் இருக்குது. அவ்விடத்தில் இங்கால உள்ள சனம்
அங்கால வரலாம். அப்படி வந்த சனத்தைத் தான் சுட்டவங்கள்…”
“அப்ப சோலையிலிருந்து நந்திக்கடல்வரை லகூன் என்கிறாய்
பிள்ளை. நாங்க காலமை வாறம் கியூவில நிக்கிறம்… சரியே பிள்ளை… வவனியா காம்பிற்கு
அனுப்பிவிடு.”
கியு காலமையே கூடிவிட்டது. நல்ல காலம். நம்பர் துண்டு
ஏகாம்பரத்தார் குடும்பத்திற்கு கிடைத்தது. பலர் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
கியுவில் தங்கள் முறைக்காகக் காத்திருந்தார்கள்.
“இப்ப பார்த்தியளே அம்மான். கியுவில உவள் காயத்திரி
நிக்கிறாள். அங்கால வாறாள் போல. எங்களோட வாறாள். விலகி விட்டாளாக்கும். ஏதாவது
பிரச்சனை எண்டால் உங்கட சோமாவோட பேசிப் பாருங்க அம்மான். அங்க பெண்டுகளை அவள் தான்
பொடி செக் பண்ணுறாள்.”
அவளுக்குத் திக்கென்றது. காயத்திரி இங்கு இன்றைக்கு ஏன்
வந்தாள்? அவர் நினைப்பதற்கிடையில் அவ்விடத்தைக் கலக்குமாற்போல் ஒரு குண்டுச்
சத்தம் எழுந்தது. கியு ஒரு கணம் கலங்கியது. கியுவில் நின்ற யாரோ தன்னுடலில் இருந்த
குண்டை வெடிக்க வைத்துவிட்டார்கள். இராணுவம் உட்பட பதினாறுபேர் கணப்பொழுதில்
சடலமாகச் சரிந்தார்கள். கியுவில் நின்றவர்கள் பலருட்பட 64 பேர்கள் காயமுற்றனர்.
பழி வாங்கல் நடக்கப் போவதாக ஏகாம்பரத்தார் எண்ணினார். எங்கு ஓடுவது?
“கியுவில நின்ற காயத்திரியைக் காணவில்லை அம்மான்”
என்றாள் சரஸ்வதி கலக்கத்துடன்.
இராணுவத்தினர் நிதானமாக நடந்து கொண்டனர். வியப்பாக
இருந்தது.
சம்பவம் நடந்த இடத்தை நோக்கி ஏகாம்பரத்தார் சென்றார்.
சடலக் குவியல். உற்றுப் பார்த்தார்.
“ஆரைத் தேடுறியள் அப்பு?”
“என்ரை இரண்டு பேர்த்திமாரைத் தேடுறன்” என்றார். கூறாது
விட்டமை இருந்தது. அவை, “ஒருத்தி கியுவில் நின்றாள். மற்றவள் பொடி செக் செய்தாள்.”
(அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கிய கலைச்சங்கம், 10வது எழுத்தாளர்விழாவை முன்னிட்டு நடத்திய
சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றது.)
No comments:
Post a Comment