Sunday, 13 March 2016

ததிங்கிணதோம் - சிறுகதை


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."
நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும்  என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார்.

மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

"மாமா, இஞ்சாலை 'ஹாவ் எ கிலோமீற்றர்' பக்கமாப் போனா 'புறுவேவா' எண்டொரு 'சிமெற்றி' இருக்கு. உங்கை பாருங்கோ பாருங்கோ ஒரு தாய் இரண்டு பிள்ளையளை அணைச்சுக் கொண்டிருக்கிற மாதிரித் தெரியுதல்லே, அதுதான் 'மிசன்பேய்'(Mission Bay)"

"என்ன பேயோ? அட உதையேன் பிள்ளை முந்தி கடிதத்திலை எழுதேல்ல. விஷயத்தோடை விஷயமா சாடை மாடையாப் போட்டிருந்தியள் எண்டா இஞ்சை வந்தல்லே இருக்க மாட்டன். உம்! கனடாவிலை அவள் செல்வி வெளியிலை போக விடமாட்டாள். வீட்டுக்குள்ளை 'சென்றல் கீற்றிங்கிலை' அவியுங்கோ எண்டு விடுவாள். அதெண்டாலும் பரவாயில்லைப் போலதான் கிடக்கு."

"அதுதான் பிள்ளை உங்கை வீடு 'சீப்' எண்டு நீங்கள் சொல்லேக்கையே யோசிச்சனான், உதிலை ஏதோ சூட்சுமம் இருக்கெண்டு. அங்கையெண்டாலும் கொத்தியால் சுடலை எவ்வளவு தூரத்திலை இருக்கு. கடல் கடந்து இஞ்சை வந்தா வீட்டுக்குப் பக்கத்திலை அதுவும் கூப்பிடுதூரத்திலை ஒரு புறுபுறுக்கிற சுடலை" என்று சுப்புலஷ்சுமி சுருதி சேர்த்தாள்.

"சுடலைக்குருவி கத்தினா சாவு நிச்சயம்" சிவநாயகம் பதறினார்.

"உந்தக் குருட்டு நம்பிக்கையளை முதலிலை விடுங்கோ. 'பிறஷர்' ஏறப்போகுதல்லே அப்பா" என்று சமாதானம் செய்தான் பன்னீர்ச்செல்வன்.
"சாய் ராம்" என்று மெதுவாக முனகிவிட்டு சாய் நாற்காலியில் சரிந்தாள் சுப்புலஷ்சுமி.

"இஞ்சை பாருங்கோ! உங்கடை பேர், லிஸ்ற்றிலை எனக்குப் பிறகாலைதான் கிடக்கெண்டு மயில்வாகனச்சாத்திரி சொன்னதை மறந்து போனியளே? எனக்கும் முன்னாலையும் இஞ்சை நிறையப் பேர் இருக்கினம். ஏன், உவள் சுந்தரி இப்பவும் திடுமன் மாடு மாதிரியல்லே இன்னமும் லேடீஸ் கிளப்புக்குப் போய் வாறாள். கிறுதண்ட வாயு பிடிச்ச மாதிரியல்லே நீங்கள் நிக்கிறியள். போங்கோவன், போய்ப் பேசாமல் படுங்கோவன்" என்று சமாதானம் சொன்னாள் சுப்புலஷ்சுமி.

"இஞ்சாரும் இதைக் கேட்டீரே! மயில்வாகனச் சாத்திரிக்கு இப்ப கனடாவிலை ஓகோவெண்டு பிஷினஸ். 'ஓல்ட் பீப்பிள் ஒண்லி' எண்டு போட்டும் போட்டுக்கொண்டு கைரேகை சாத்திரம் பாக்கிறான். அவையளுக்குத்தான் தான் பாக்கிற சாத்திரம் பலிக்குதாம்."

நீண்ட நேரமாக சிவநாயகத்திற்கு உறக்கம் வரவில்லை. இப்படியே அஞ்சி அஞ்சி இரவு முழுவதும் இருக்க வேண்டுமா? மனைவி பிள்ளைகளின் பேய்த்தூக்கத்தைக் காண அவரால் சகிக்க முடியவில்லை. குசினிக்குள் பானை சட்டிகளை உருட்டினார். 'ஹோல் லைற்'றை அடிக்கடி கிளிக் செய்து விளையாடினார். குருவி கீச்சிட்டுக் கீச்சிட்டுக் கத்தியது. பன்னீர்ச்செல்வனைத் தட்டி எழுப்பினார்.

"தம்பீ, உவன் அந்தோனி எங்கை இருக்கிறான் எண்டு விசாரிச்சனியேடா?"
"அவர் அப்பா முந்தி ஹமில்ட்டனிலை இருந்தவர். இப்ப எங்கை இருக்கிராரோ தெரியேல்லை. எல்லாரிட்டையும் ரெலிபோன் நம்பர் குடுத்திருக்கிறன். அனேகமா கண்டுபிடிச்சிடலாம் அப்பா"

சிவநாயகத்திற்கு பதிலில் திருப்தி இல்லை. "சூ சூ" என்று குருவியைத் துரத்தினார். போதாக் குறைக்கு அடுத்த ·பிளற்றினில் இருந்து பூனையொன்று கூட்டணி அமைத்து மனித வடிவில் நாதமெழுப்பியது. கையிற்கு கிடைத்த மாத்திரம் வீசி எறிந்தார்.

"ஐயோ மாமா, இஞ்சை பூனை 'பெற்' மாமா. நீங்கள் எறிஞ்சு பூனை செத்துப் போச்செண்டா பிறகு 'கோட்' கீட் எண்டு அலைய வேண்டி வரும்."

மருமகளின் முணுமுணுப்பையும் கவனியாமல் ·பிளற்றுக்குப் ·பிளற் தாவி எறிந்தார் சிவநாயகம். தாயுமானவர், அப்பர் சுவாமிகளின் பாடல்களை ஒரு மூலையில் முடங்கிக் கிடந்து பாடத் தொடங்கினார். பிரார்த்தனை பலித்தது. சுடலைக்குருவியை எட்டியது. அது இன்னமும் பலத்துச் சத்தம் போட்டது.  நடுங்கியபடியே வெளியே எட்டிப் பார்த்தார். பொடுக்கென்று காலிலே பல்லி விழ, அதைச் சுழட்டித் தூர உதறிவிட்டார். ஒரு தேவாரம் பாடியிருக்க மாட்டார். சுப்புலஷ்சுமி எழும்பி வந்தாள். நாலைந்து மிளகாய், கொஞ்சம் மிளகு எடுத்து எல்லாரையும் ஒரு சுத்துச் சுத்தி பின் தன்னையும் சுத்தி "சனியனே துலைஞ்சு போ" என்று குசினித் தொட்டிக்குள் எரித்தாள். நெடி குபுக்கென்று எழுந்து வீடு முழுக்க சனியன் பரவியது.

இந்தக் கலாட்டாவைக் குழப்பி, அம்புலன்ஸ் ஒன்று அலறியடித்துக் கொண்டு எதிர்ப்புற வீட்டைச் சேர்ந்தது. நேரத்தைப் பார்த்தார். இரவு மணி ஒன்று. ஒருவன் ஸ்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு அடுத்த வீட்டுச் சரிவு மீது ஓடினான். முன் வீடு வெளிச்சம் போட்டது. வயது போன  'கிவி' லேடி ஒருத்தியைத் தள்ளிக் கொண்டு அம்புலன்ஸ்சில் ஏற்ற, அது திரும்ப அலறிக் கொண்டு புறப்பட்டது. சிவநாயகத்திற்கு மெல்லத் தெம்பு வந்தது. கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். "கிவி லேடியோ? போகப் போறா போல கிடக்கு. நாளைக்கு ஒருக்கா 'பல்மோறல்' கோயிலுக்குப் போக வேணும். இருபத்தைஞ்சு டொலருக்கு ஒரு அரிச்சனை செய்ய வேணும்."

விடியப்புறம் மூன்று அல்லது மூன்றரை இருக்கலாம் சிவநாயகம் சுப்புலஷ்சுமியைத் தட்டி எழுப்பினார்.
"இஞ்சாருமப்பா, ஒருக்கா முன்வீட்டிலைபோய் லேடி உயிரோடை இருக்கிறாவா அல்லது போயிட்டாவா எண்டு ஒருக்கா பாத்திட்டு வரட்டே?"

"சீ! இந்த மனிசன் நித்திரையும் கொள்ள விடுகுதில்லை. ஐயோ! சாய் ராம்! சாய் ராம்!!" திரும்பிப் படுத்துக்கொண்டாள் சுப்புலஷ்சுமி.

சிவநாயகம் வீட்டிற்குள் மாறி மாறி நடந்தார். மழை தூறத் தொடங்கியது. ஜன்னல் சீலையை விலக்கிப் பார்த்தார். ஊர் ஞாபகம் வந்தது. ஏதோ நினைத்துக் கொண்டவர் திரும்பி அறைக்குள் போய் படுத்துக் கொண்டார். பூனையொன்று சுடலைக்குருவியைத் துரத்திக் கலைக்க அது அழுது அழுது நிலா முற்றத்தில் விழுந்தது.

"லுக் பன்னீர்! இந்த மனிசன் என்னண்டா வீட்டை இரண்டாக்கிப் போடும் போல கிடக்கு. சீ! ஐயோ" சுமதி பன்னீர்ச்செல்வனுக்கு தலையணை மந்திரம் ஓதினாள்.
"இனி என்ன செய்யிறது? வந்திட்டினம். ஏதோ ஒரு மூலையிலை இருந்திட்டுப் போகட்டும்."

கதவு தட்டும் சத்தம் கேட்டு ஏதோ வெறுப்புடன் எழுந்து போனார் சிவநாயகம். போன வேகத்தில் திரும்பி வந்தார்.
"ஆரோ வெள்ளைக்காரன் போல கிடக்கு. 'டோன்ற் சவுற்' எண்டிட்டுப் போறான். என்னடா புதினமிது. தேவாரம் பாடினால் 'டோன்ற் சவுற்'றாம். சும்மா கிடந்த எங்களைக் கதவைத் தட்டித் திறப்பிச்சு, டோன்ற் சவுற் எண்டிட்டுப் போறான். நாய்க்கு  நடுக்கடலிலை போனாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான். தமிழன்ர பாடு இப்பிடியாப் போச்சு" புறுபுறுத்தபடியே போய்ச் சரிந்தார்.

பன்னீர்ச்செல்வனுக்கு குபுக்கென்று சிரிப்பு வந்தது.

"பன்னீர், ·ப்போர் ஒக் குளொக்கிற்கு எழும்பி சன்னதம் ஆடினா ஆர்தான் விடுவினம். இது ·பிளற் எண்டதை ஞாபகம் வைச்சிருக்க வேணும். பிறகு எங்களை ·பிளற் ஆக்கிப் போடுவான்கள். இந்த மனிசனுக்கு? ஐ டோன்ற் நோ வட் கி இஸ் டூயிங்."

அவளின் தொணதொணப்பு சிவநாயகத்தின் காதில் விழுந்தது. மெளனமாக இருந்து கொண்டார். மழை பலக்கத் தொடங்கியது. "ஏதோ நடக்கத்தான் போகுது!" வாழ்க்கையின் இருண்ட கண்டம் இது என நினைத்துக் கொண்டார். பின்னர் வருவது வரட்டும் என்ற நினைப்பில் தூங்கி விட்டார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிவநாயகத்தை அம்புலன்ஸ் சத்தம் எழுப்பிது. "ஐயோ! கிழவி செத்திட்டாள்" என்று பதறியடித்துக் கொண்டு எழுப்பினார். ஏதாவது உதவி செய்யலாம் என்ற நினைப்பில் மாடிப்படிகளில் இருந்து விறுவிறெண்டு கீழே இறங்கினார். காலிற்குள் ஏதோ பிசுபிசுத்தது. கவனித்துப் பார்க்கும் நிலையில் அவர் இல்லை. மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க அம்புலன்ஸ்சிற்குக் கிட்டப் போய் விட்டார். அம்புலன்ஸ்சிலிருந்து தொபுக்கென்று குதித்தாள் கிழவி. ஒருவருடைய துணையுமின்றி கிழவி அந்தச் சரிவு மீது கிடுகிடுவென்று ஏறினாள். வீட்டு வாசல் வரை போனதும், திரும்பி இவர்களை நோக்கி 'தங் யூ. பாய்! பாய்' என்று இராகமிழுத்தாள்.

திடீரெனத் தன்னைச் சுற்றி ஒப்பாரியும் அழுகுரலும் கேட்பது போல உணர்ந்தார் சிவநாயகம். பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பித் தனது வீட்டைப் பார்த்தார். அங்கே மகனும் மருமகளுமாக பூச்சாடிக்குள்ளிருந்து ஏதோ ஒன்றைத் தூக்கி 'டஸ்ற் பின்'னுக்குள் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். மெதுவாக நடந்து வந்து மாடிப்படிகளின் கம்பியில் கைகளை ஊன்றி 'டஸ்ற் பின்'னைத் திறந்து பார்த்தார். அங்கே அந்தச் சுடலைக்குருவி செத்துக் கிடந்தது.

"இதுக்காகவா இரவு முழுக்கக் கத்தினாய். செத்துப் போனியே!" அடக்க முடியாமல் சிரித்தார்.

"மாமா, மாமா கம் குவிக். கிறைச்சேர்ச்சிலை(Christchurch)யிருந்து உங்களுக்கு ஒரு கோல். ஆரோ அந்தோனியாம்" என்று மருமகள் சுமதி கதவைத் திறந்து சிவநாயகத்தைக் கூப்பிட்டாள்.

"ஆர் பிள்ளை அது?"
"அந்தோனியாம் மாமா"

"சேர்ச்சிலையிருந்தோ?"
"ஐயோ! கிறைச்சேர்ச் எண்டால் மாமா ஒரு இடம்" என்று சுமதி சொல்வதையும் பொருட்படுத்தாமல், அந்தோனியைக் கண்டு பிடித்துவிட்ட புளுகத்தில் ரெலிபோனை நோக்கி ஓடினார் சிவநாயகம்.

"சரி, சரி, இந்தா வந்திட்டன்.
 ஹலோ! அந்தோனியா கதைக்கிறது?"
".........."

"ஓ! நான் நல்லா இருக்கிறன். இப்பதான் ஒரு கண்டம் கழிஞ்சு இருக்கிறன். எப்பவடா சேர்ச்சிலை போய்ச் சேந்தனி? எவ்வளவு திருக்கூத்து ஆடியிருப்பாய். கடைசியிலை பார், ·பாதராகப் போயிட்டாய். ஆரோ நீ கடை வைச்சிருக்கிறாய் எண்டெல்லே எனக்குப் பொய் சொல்லிப் போட்டான்கள்.

நீ எந்தச் சேர்ச்சிலை இருந்தாலும் பரவாயில்லை. என்ர காசை மாத்திரம் உடனை அனுப்பிப் போடடா."

".........."


No comments:

Post a Comment