Friday, 13 May 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (12)

 

மிளகாய்த்தூள் + 13 = அல்சர்

13ஆம் நம்பருக்கும் அல்சருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

உண்டு என்கின்றேன் நான்.

என்னடா இது மொட்டந்தலைக்கும் முழங்கைக்கும் முடிச்சு?

அப்போது அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்காலிகமாக உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். வீடு ஒன்று றென்றிற்கு பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி ரி.வி யில் ஒரு திகில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது,

”இஞ்சாருங்கோப்பா…. 13ஆம் நம்பர் வீட்டைத் தயவுசெய்து பாத்திடாதையுங்கோ” என்றார் மனைவி.

வந்ததே பெரியதொரு பிரச்சினை. வீட்டு எஜமானி பத்திரகாளியாகிவிட்டார்.

“உங்களுக்குப் 13 ஆம் நம்பர் என்றால் அவ்வளவு இளக்காரமா?”

அனல் துண்டங்கள் அங்கும் இங்கும் பாய்ந்தன. நாங்கள் வாய் மூடி மெளனமானோம்.

அன்று மூடிய வாய், இப்போது 15 வருடங்களாக மூடிக் கிடக்கின்றது.

திரும்பவும் மர்ம முடிச்சா? சொல்கின்றேன் கேளுக்கள்.

அந்த வீட்டுக்காரர் சைவம் சாப்பிடுபவர்கள். நாங்கள் மச்சப் பிரியர். எங்களுக்காக மச்சம் செய்து தருவார். எங்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பது அதன் அர்த்தம் அல்ல. குசினிக்குள் எங்களை அண்ட விடமாட்டார். உதவி செய்து குடுப்பது மட்டும்தான் எங்கள் வேலை. மச்சக்கறிக்குள் தூள் பத்தும். அந்தமாதிரி எரிவு. அந்த மாதிரிச் சிகப்பு.

மூன்று மாதங்கள் அங்கே தங்கியிருந்தோம்.

வீட்டை விட்டுப் பிரியும்போது அந்தத் தூள்ப் போத்தலைத் தூக்கிக் காட்டினார். அது முடியும் தறுவாயில் இருந்தது. அந்தத் தூள்ப்போத்தலின் பிறாண்ட் நேமை இங்கு சொல்வது சரியல்ல.

“இந்தத் தூள்ப் போத்தலை வாங்கி ஒரு நாள் சமைச்சதுதான். அந்தமாதிரி எரிவு. என்னத்தை உள்ளுக்குப் போட்டான்களோ… செங்கட்டித்தூள் எண்டும் கதைக்கினம். ரொயிலற் கழுவுறதுக்குப் பாவிக்கிற அந்தத் திரவத்துக்குள்ளை போடுற கெமிக்ககல் எண்டும் கதைக்கினம். என்ன நாசமோ?” என்றார் சர்வ சாதாரணமாக. கூடவே இன்னுமொரு செய்தியை எங்களுக்குச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.
“இனிமேல் 13 ஆம் நம்பர் கூடாது எண்டு ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ!”



No comments:

Post a Comment