Friday, 13 May 2016

கண் திறந்தது


ஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்னு கோவிலுக்குச் சென்றோம். சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.

அன்னதானத்திற்கு கோவில்மண்டபத்தைச் சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வரிசை மெதுவாக ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது. எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் குடை ஒன்றின் கீழ்.

கன்ரீனிலை காசு குடுத்துச் சாப்பிடலாம்சொல்லியபடி ஒருசிலர் வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

வைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில் உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில் கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.
“நீங்கள் சுவாமியைச் சந்திக்கவா இதிலை நிற்கின்றீர்கள்?”  என ஒருவர் வந்து திடீரென்று என்னைக் கேட்டார். அருகே நின்றவர்கள் உதட்டிற்குள் சிரித்தார்கள். என்ன கேட்கின்றார்? சுவாமியைச் சந்திக்கவா? ஒருவாறு ஊகித்து ‘இல்லை. இது அன்னதானத்திற்கான கியூஎன்றேன்.

எங்களுக்குப் பின்னால் ஒரு பெண் தன் சுட்டிப்பையனுடன் நின்றாள். அவர்களுக்கும் பின்னால் ஆறேழு வயது மதிக்கத்தக்க மூன்று வாண்டுகள். உனக்கு என்ன வயது? என்றான் ஒரு சிறுவன்
- பத்து வயது என்றான் அவன்.
- பத்து வயது மாதிரித் தெரியேல்லையே!
-ஏன் பத்து வயது ஆள் குட்டியாக இருக்கக்கூடாதோ?
-இண்டைக்கு இரவு கோயிலிலை தேர் ஓடும்
- தேர் எண்டா என்ன?
- உனக்கு இன்னும் தேர் தெரியாதா?
அவர்களின் கலகலப்பான உரையாடலிலும் வேடிக்கைகளிலும் வரிசை நகர்ந்து தெரியவில்லை.

சுட்டிப்பையன் வரிசையை விட்டு வெளியே போய் விளையாடுவதும் பின்னர் அம்மாவுடன் சேர்வதுமாக இருந்தான். அந்தப்பெண் எங்களைப் பார்த்து புன்முறுவல் செய்தாள். அதில் ஒரு சோகம் கலந்திருந்தது. அவளை முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறேன்மனம் சொன்னது.
அந்தப் பெண்ணிற்கு ஒரு ரெலிபோன் வந்தது.
“கோயிலில் தான் நிற்கின்றேன்அவளின் முகம் கறுத்தது. பரபரபுடன் அங்கும் இங்கும் பார்த்தாள்.

நான் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தச்சிறுபையன் வந்து என் கால்களைக் கட்டிப் பிடித்தான். வாஞ்சையுடன் கால்களைப்பற்றியபடி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடினான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனைவி என்னைப் பார்த்தாள்.
“உன்னைத் தூக்க வேணுமா... வாஎன்று சொல்லிக் கொண்டே அந்தப்பெண் அவனை என்னிடமிருந்து விடுவித்துத் தூக்கிக் கொண்டாள்.

அன்னதானம் குடுக்குமிடம் நெருங்கிவிட்டோம். நான்கு மனிதர்களின் இடைவெளி தூரம். அந்தச் சிறுபையன் அன்னதானம் குடுக்குமிடத்திற்கு முன்பாக நின்று அன்னதானம் குடுப்பவர்களைப் பார்த்தபடி நின்றான். அவனுக்குப் பசியை அடக்க முடியவில்லை.

அப்பொழுதுதான் அவன் வந்தான். கிழிந்த சட்டை, அழுக்கான ஜீன்ஸ், கலைந்த கேசம். அந்தப் பெண்ணிடம் நெருங்கி ஏதோ கதைத்தான். அவள் வாயிற்குள் முணுமுணுத்தாள். அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டான். எல்லாரும் திகைத்துப் போனோம். அவளை வரிசையிலிருந்தும் கரகரவென்று இழுத்துப் போனான். பையன் அம்மாவின் சட்டையைப் பற்றியபடி நிலத்துடன் இழுபட்டுக் கொண்டிருந்தான்.

எல்லாரும் அந்தக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது. மேடும் பள்ளமுமான அந்த நிலத்தில் கால் இடறுப்பட்டு அவன் விழுந்தான். விழுந்தவன் பின்னர் எழுந்திருக்கவில்லை. அந்தப்பெண் ‘ஹெல்ப் ஹெல்ப்என்று கத்தினாள்.

சிலர் ஓடிச்சென்று அவனைத் தூக்கினார்கள். கோவில் மண்டபத்திற்கு முன்னால் இருந்த, சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு அவனைத் தூக்கிச் சென்றார்கள். அங்கேயிருந்த வாங்கொன்றின்மீது அவனைப் படுக்க வைத்தார்கள். அங்கு நின்றவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

நானும் மனைவியும் அங்கே போனபோது அவனுக்கு யாரோ நீர் பருக்கிக் கொண்டு நின்றார்கள். அவனின் மனைவி கொப்பி ஒன்றினால் அவனிற்கு விசுக்கிக் கொண்டு நின்றாள். அவளின் அருகே எங்கள் நண்பரும் அவரின் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் கூட்டத்திலிருந்து வெளியே வந்தாள் நண்பரின் மனைவி.
“யார் இவர்கள்?என்றாள் என் மனைவி.
“எங்கள் வீட்டு பேர்த்டே பார்டிகளில் அந்தப்பெண்ணைக் கண்டிருப்பீர்களே! அவன் ஒரு குடிகாரன். வேலைக்கும் ஒழுங்காகப் போவதில்லை. மனைவியையும் ஒரு இடத்திற்கும் கூட்டிச் செல்வதில்லை. எந்த நேரமும் அவளுக்கும் பிள்ளைக்கும் அடித்தபடி இருப்பான்.

“பேசாமல் டிவோர்ஸ் செய்திட்டுப் போறதுதானே!என்றேன் நான்.

“அவள் ஒரு கிறாட்யுவட். அவளுக்குக் கீழை இரண்டு தங்கைச்சிமார் கலியாணம் செய்யாமல் யாழ்ப்பாணத்திலை இருக்கினம். அதுதான் பொறுமையா இருக்கிறாள். பிறகு எல்லாம் வடிவாச் சொல்லுறனே!சொல்லிவிட்டு கூட்டத்தை விலத்தியபடி உள்ளே சென்றாள்.

உள்ளே அந்த மனிதன் வாங்கிலே எழுந்திருந்தான். அவன் நெற்றியில் விபூதி சந்தணம். காதிலே பூ. அவனுக்கு கோயில் அன்னதானத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. சிறுபையன் அவன் மடிமீது இருந்தான். அவன் மலங்க மலங்க சுற்றுமுற்றும் உள்ளவர்களைப் பார்த்தான்.

அவனின் ‘கண் திறந்தது’.











No comments:

Post a Comment