திரு. லெ.முருகபூபதியுடன் நேர்காணல்
பகுதி 2
13. இலங்கையில் சர்வதேச
எழுத்தாளர்
மாநாட்டை
முன்னின்று
நடத்தியவர்களில் நீங்களும்
ஒருவர். அப்பொழுது இலங்கையில்
அந்த
மாநாடு நடைபெறுவதையிட்டு
பலரும்
கருத்து
வேறுபாடுகள்
கொண்டிருந்தார்கள். இப்பொழுது
யோசித்துப்
பார்க்கும்போது
– அப்பொழுது இருந்த நிலைப்பாட்டில்தான்
இப்பொழுதும்
இருக்கின்றீர்களா...?
அல்லது மாறுபட்டு உள்ளீர்களா...?
முருகபூபதி : தொடர்ந்தும்
விநோதமான
கேள்விதான்
கேட்கிறீர்கள்.
மாநாடு இலங்கையில்
பலரதும்
விருப்பத்தின்
பேரில் நடந்தது. திடுதிப்பென்று
ஒழுங்கு
செய்யப்பட்ட மாநாடு அல்ல.
2005
ஆம்
ஆண்டளவில் இலங்கை
சென்றபொழுது
மல்லிகைப்பந்தலின்
சார்பாக
என்னை வரவேற்று
உபசரித்த
மல்லிகை
ஜீவா, நாம் அவுஸ்திரேலியாவில் 2001
ஆம்
ஆண்டு
முதல்
நடத்திவரும்
தமிழ்
எழுத்தாளர் விழாவை
உதாரணம்
காண்பித்து, அவ்வாறு முருகபூபதி
இலங்கையில் எழுத்தாளர்
ஒன்றுகூடலை
நடத்தவேண்டும்.
எல்லோராலும் அவுஸ்திரேலியா
விழாவுக்கு
வரமுடியாது. இலங்கையில் நடத்தினால் பல
நாடுகளிலிருந்தும்
எமது
இலக்கிய
நண்பர்கள்
வந்து
கலந்து கொள்ளமுடியும். அதற்கு
உலகில்
பலபாகங்களிலும்
வதியும்
எழுத்தாளர்களுடன் தொடர்புள்ள
முருகபூபதி
ஆவன
செய்யவேண்டும்
எனக்கேட்டுக்கொண்டார்.
ஆனால், இலங்கையில்
தொடர்ச்சியாக
போர்
நீடித்தமையினால்
அவரது
எண்ணத்தை என்னால்
ஈடேற்ற
முடியாதிருந்தது. 2009 ஆம் ஆண்டு
போர்
முடிவுற்றதும்
உலகின்
பல
பாகங்களிலிருந்தும்
சுமார்
மூன்று
இலட்சம் தமிழர்கள்
இலங்கை
சென்று
திரும்பியதை
அவதானித்தேன்.
இந்நிலையில் 2010 ஜனவரி
மாதம்
இலங்கை
சென்று
கொழும்பு
தமிழ்ச்சங்கத்தில் மாநாடு
தொடர்பான
ஆலோசனைக்கூட்டத்தை
நடத்தினேன். நூறுக்கும்
அதிகமான
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள்
கலந்துகொண்டனர்.
குறிப்பிட்ட சந்திப்புக்கு
முதல்வாரம்
இலங்கை
தலைநகரிலிருந்து
வெளியாகும் வீரகேசரி,
தினகரன், தினக்குரல் முதலான
பத்திரிகைகளில்
நடத்தவுள்ள மாநாடு
பற்றியும்
அதன்
நோக்கங்கள்
பற்றியும்
நான்
எழுதிய கட்டுரைகள்
ஒரே
நாளில்
வெளியானது. அதனைப்படித்த பலர்
இலங்கையின் நாலா
திசையிலிருந்தும்
ஆர்வமுடன்
வந்து
கலந்துகொண்டு தமது
கருத்துக்களைச்
சொன்னார்கள். அவுஸ்திரேலியா இங்கிலாந்திலிருந்து அச்சமயம்
வருகை
தந்து
கொழும்பில்
நின்ற
சிலரும் கலந்துகொண்டார்கள்.
தினக்குரல்
பத்திரிகை
மாநாட்டை
வரவேற்று
ஆசிரியத்தலையங்கமும்
எழுதியது.
இதுபற்றிய செய்தி
தமிழ்
நாட்டில் யுகமாயினி இதழிலும்
வெளியானது.
நான் மெல்பன்
திரும்பியதும்
வானமுதம் வானொலியில்
பாடும்மீன் சிறிகந்தராசாவும் நடத்தவுள்ள
மாநாடு
பற்றிய
எனது
கருத்துக்களை
நேர்காணலாக பதிவுசெய்து
நேரடி
ஒலிபரப்புச்செய்தார்.
ஞானம் ஆசிரியர்
டொக்டர் ஞானசேகரன் தலைமையில்
ஒரு
குழுவும்
அன்றைய
கூட்டத்தில்
தெரிவானது. இவ்வாறு திட்டமிட்டு
கட்டம் கட்டமாக
நாம்
இயங்கினோம்.
2010 ஜனவரியில் நடந்த
ஒன்றுகூடலில்
2011 ஜனவரியில்
மாநாட்டை
நடத்துவது எனத்தீர்மானிக்கப்பட்டது. பேராசிரியர்
சிவத்தம்பியும் கலந்துகொண்டு தமது
ஆதரவை
தெரிவித்து
உரையாற்றினார்.
இலங்கையில் அந்த
மாநாட்டின்
தேவை
உணரப்பட்டிருந்தமையால்
ஏற்பாடுகளில் ஈடுபட்டோம்.
அவ்வேளையில் தமிழகத்தில்
தங்கியிருந்த
மூத்த
எழுத்தாளர்
எஸ்.பொன்னுத்துரை
ஆலோசகராக
விளங்கிய
யுகமாயினி இதழில்
மாநாடு தொடர்பான
எனது
கட்டுரையை
பார்த்துவிட்டு
"
முருகபூபதி
நல்லதொரு பணியை
தொடங்கியுள்ளார்
" என்றுதான் யுகமாயினி
ஆசிரியர் சித்தனிடம் சொன்னார்.
ஆனால் - டென்மார்க்
ஜீவகுமாரன்
என்பவர்
எமது
பணிகளில்
இணைய விரும்பி தாம்
தொகுத்து
வெளியிடவிரும்பும்
புகலிட
படைப்பாளிகளின்
சிறுகதைத்தொகுப்பில் ஆயிரம்
பிரதிகள்
அச்சிட்டு
இலவசமாக
வழங்கவிருக்கும் ஆலோசனையை
சொன்னபொழுது
அவருக்கும்
எஸ்.பொ.வுக்கும்
இடையில்
மித்ர பதிப்பகம் தொடர்பான
முறுகல்
நிலைமை தெரியாத
நாம்
ஜீவகுமரானின்
நோக்கத்தை
வரவேற்றோம்;.
வந்தது வினை.
பொன்னுத்துரை
எமது
மாநாட்டுக்கு
எதிராக
சன்னதம்
ஆடப்போகிறார் என்பதை
அறிந்து
அவருடன்
கலந்து
ஆலோசிப்பதற்காக
பல தடவை
சென்னையிலிருந்த
அவருடன்
தொலைபேசியில் தொடர்புகொள்ள
முயன்றேன்.
அவர்
சாமர்த்தியமாக
என்னை
தவிர்த்துவிட்டு, கீற்று இணையத்தளத்தில் மாநாட்டுக்கு
எதிராக
எதிர்வினையாற்றினார். கருத்துச்சொல்வது
வேறு
அவதூறு
பரப்புவது
வேறு.
சுமார் ஏழு
மாதங்களின்
பின்னர்
எம்முடன்
எதுவித
கலந்துரையாடலும்
நடத்தாமல் எமது
தொலைபேசித்தொடர்புகளை
புறக்கணித்துவிட்டு,
நாம்
இலங்கை அரசிடம்
லஞ்சம்
வாங்கிக்கொண்டு
நடத்தும்
மாநாடு
என்று
அறிக்கை விட்டார். பின்னர் ஒன்றுக்குப்பின்
ஒன்று
முரண்பாடான
கருத்துக்களுடன் குமுதம் தீராநதியிலும் எழுதி
மாநாட்டுக்கு
முதல்
கொள்ளிவைத்தார்.
இதுபற்றியெல்லாம்
விரிவாக எனது
உள்ளும் புறமும் நூலில்
எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டில்
சென்னையில்
எழுத்தாளர்கள்,
அரசியல்வாதிகள், சினிமா
பிரபலங்களையெல்லாம்
அழைத்து
கண்டனக்கூட்டம் நடத்தினார். குமுதம், ஆனந்தவிகடன்
இதழ்களிலிருந்தெல்லாம் காலம்
நேரம்
தெரியாமல்
என்னுடன்
தொலைபேசியில் நிருபர்கள்
தொடர்புகொண்டு
கருத்துக்கேட்டனர்.
புலம்பெயர் எழுத்தாளர்கள்
சிலரும்
உடனே
கண்டன
அறிக்கை
விட்டு
மாநாட்டுக்கு எதிராக
கையொப்பம்
திரட்டி
மாநாடு
பற்றி
பாரிய
அளவில் விளம்பரம்
தேடித்தந்தனர்.
ஆனால்,
இலங்கையில்
மாநாட்டுக்கு
ஆதரவு தொடர்ந்து
நீடித்தது. எமக்கு நிதிவளம்
குறைவாக
இருந்தாலும்
வெளிநாடுகளிலும் இலங்கையிலும்
பல
அன்பர்கள்
உதவினார்கள்.
வீரகேசரி, தினக்குரல்
நிருவாகங்களும்
உதவி
வழங்கின.
நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள்,
கலைஞர்கள்,
பேராசிரியர்கள்
பேராளர்களாக பதிவுசெய்துகொண்டு
வருகை
தந்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஐம்பதிற்கும்
அதிகமான
பிரதிநிதிகளும்
அவுஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து
முதலான
நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள்
வருகை
தந்தார்கள்.
நான்கு
நாட்கள்
சிறப்பாகவும் தரமாகவும்
நடந்த
இம்மாநாட்டில்
எந்தவொரு
அரசியல்வாதியும் மேடை
ஏறவில்லை. பொன்னாடைகள், பூமாலைகள்,
வெற்றுப்புகழாரங்கள் இல்லாத
மாநாடாக
அமைந்தது.
அன்று அந்த
மாநாட்டுக்கு
எதிராக
எதிர்வினையாற்றியவர்கள்
முன்வைத்த குற்றச்சாட்டு
போர்க்குற்றம்
நிகழ்ந்த
மண்ணில்
தமிழ்
எழுத்தாளர் மாநாடு
தேவையா...?
என்பதாகவே
இருந்தது.
போர்க்குற்றத்தில் இரண்டு
தரப்பும்
பங்கேற்றன.
ஆனால்,
ஒரு
தரப்பு
இலங்கை - இந்தியா
- அமெரிக்கா
உள்ளிட்ட
சில
நாடுகளினால்
அழித்தொழிக்கப்பட்டது. எஞ்சியிருந்த
அரச
தரப்புக்கு
ஆயுத உதவி
வழங்கிய நாடுகளே
போர்க்குற்றம்
சுமத்தி
ஆறு
ஆண்டுகாலமாக
சதுரங்கம் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
இலங்கையில் எந்தவொரு
நிகழ்ச்சிக்கும்
செல்லக்கூடாது
என்று
சினிமா கலைஞர்கள்,
எழுத்தாளர்களை
தமிழகத்திலிருந்து
அச்சுறுத்திவரும் தமிழ்
உணர்வாளர்கள்
எனச்சொல்லிக்கொள்பவர்கள்
இலங்கையில் திரையிடப்படும்
உலகநாயகன், சூப்பர் ஸ்டார்,
இளைய
தளபதி, தல
அஜித்
ஆகியோரின்
படங்களை
தடுப்பதில்லை.
தமிழகத்திற்கு அனைத்து
விடயங்களிலும்
நாம்
குறிப்பாக
இலங்கையர் தொங்குதசைகளாகவே
இருக்கவேண்டும்
என
விரும்புகின்றனர்.
எமது மாநாட்டுக்கு
எதிர்வினையாற்றிய
எழுத்தாளர்கள்
தற்பொழுது
இலங்கை சென்று தமது
நூல்களுக்கு
விழா
எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொன்னாடை
அணிந்துகொள்கிறார்கள். தமது
தனிப்பட்ட
அலுவல்களுக்காக
அடிக்கடி
இலங்கை
செல்கிறார்கள்.
அப்படியாயின் அங்கு
போர்க்குற்றத்தில்
ஈடுபட்டவர்களுக்கு
ஐ.நா. சபையும் சர்வதேச சமூகமும்
தண்டனை
வழங்கிவிட்டது
எனக்கருதித்தான் பயணிக்கின்றார்களா....?
தற்போதைய
ஜனாதிபதியுடன் நல்லிணக்கம்
கொண்டிருப்பதாகச்சொல்லும் தமிழ்த்
தேசியவாதிகள், இவர்தான்
இறுதிக்கட்ட போரின்
பொழுது பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக
இருந்தார்
என்பதை மறந்துவிட்டார்களா...?
ஒபாமாவுக்கான
தமிழர்
அமைப்பும்
எமக்கு
எதிராக
கண்டன
அறிக்கை
வெளியிட்டது. ஒபாமா
விரைவில்
வீட்டுக்குச்
செல்கிறார். இனி
ஹிலரி
கிளிண்டனுக்கான தமிழர்
அமைப்பு
உருவாக்குவார்கள்.
ஆனால் - நாம்
தமிழுக்காக
இலக்கியத்திற்காக
ஒன்றுகூடியபொழுது
கண்டித்தார்கள், அவதூறு
பொழிந்தார்கள். முருகபூபதி கொழும்பில்
மாநாடு நடத்திவிட்டு
திரும்பிச்
செல்வதையும்தான் பார்ப்போமே...! என்றும்
அச்சுறுத்தினார்கள்.
ஆனால்,
எமது
மாநாடு
பலருக்கும்
கதவு
திறந்துவிட்டுள்ளது.
எமது மாநாட்டின்
பின்னர்
யாழ்ப்பாணத்தில்
வெளிநாடுகளிலிருந்து
வந்தவர்கள் கலந்துகொண்ட
பிரசித்தி
பெற்ற
இலக்கிய சந்திப்பு நடந்தது.
இந்த ஆண்டு
இறுதியில்
புகலிடத்தமிழர்களின்
கலை,
இலக்கிய
விழா
இலங்கையில் நடக்கவிருப்பதாக
வெளிவிவகார
அமைச்சர்
மங்கள
சமரவீர சொல்கிறார்.
அரசியல்வாதிகள் நடத்தும்
மாநாட்டில்
அரசியல்
ஆதாயம்தான்
இருக்கும். இலக்கியவாதிகளின் மாநாட்டில்
இலக்கிய
ஆதாயம்
இருக்கும்.
நிலைப்பாடு பற்றிக்
கேட்கிறீர்கள். நாம் எமது
நிலைப்பாட்டில்
தெளிவாகவே இருந்தோம். இருக்கின்றோம். சர்வதேச
தமிழ் எழுத்தாளர் மாநாடு எழுத்தாளர்கள்,
கலைஞர்களுக்காவும்
ஊடகவியலாளர்கள், இலக்கிய
பிரதி
மொழிபெயர்ப்பாளர்களுக்காகவும்
நடத்தப்பட்டது. மீண்டும்
நடக்கும். தொடர்ந்து நடக்கும்.
எதற்கும்
நிதிவளம்
தேவை. பச்சைத்தண்ணீரில் பலகாரம்
பொரிக்க
முடியாது. மாநாட்டுக்கான
தேவை
இன்றும்
இலங்கையில்
உணரப்படுகிறது. நான் 2011 இன் பின்னர்
இலங்கை
சென்ற
வேளைகளில் பலரும்
மீண்டும்
நடத்துங்கள்
என்றுதான்
சொன்னார்கள்.
அதற்கான காலம்
கனியும்
வரையில் மாநாட்டின் அமைப்பாளர் என்ற
முறையில் காத்திருக்கின்றேன். எவரும் மாநாடு
நடத்த
முடியும்.
தமிழ்
யாருடையதும் முதிசம்
அல்ல.
ஆனால்,
எப்படி
நடத்துகிறார்கள்
என்பதுதான் முக்கியம்.
எம்மை எதிர்த்தவர்களினால்
இதுவரையில்
ஒரு
மாநாடு
நடத்த
முடிந்ததா...? பிரான்ஸிலும்
சிங்கப்பூரிலும்
மலேசியாவிலும்
நடந்த
மாநாடுகளின் இலட்சணம்
நான் அறிவேன். வெளியிடப்பட்ட மலர்களில்
வாழ்த்துச் செய்திகள் நிரம்பியிருந்தன. பொன்னாடைகள் நிரம்பி
வழிந்தன. அதேசமயம்
எமது
மாநாட்டில்
வெளியிடப்பட்ட
மலர்
மற்றும்
கட்டுரைக்கோவை - யாழ்ப்பாணம் இலக்கிய
சந்திப்பில்
வெளியான
குவார்ணிக்கா தொகுப்புகளை
பார்த்திருப்பீர்கள்.
14. 2009
ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது. 2010 ஜனவரி மாதம் சர்வதேச எழுத்தாளர் மாநாடு
நடந்தது. மாநாடு நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. மேலும் ஒரு
மாநாடு நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. நிதிவளத்தையும்
காரணம் காட்டுகின்றீர்கள். பெயரிலேயே ‘சர்வதேச’ மாநாடு என்று வைத்துக்
கொண்டு போர் நடைபெற்று முடிந்தவுடன், போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு முன்னுரிமை
தராது அவசர அவசரமாக இலங்கையிலேயே அதை நடாத்தியது இலங்கையிலே போர்
முடிவடைந்து சமாதானம் வந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காக எனக் கருத
இடமுண்டல்லவா?
முருகபூபதி: உங்கள் கேள்வியே தவறு. மாநாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் நடந்தது 2010 ஜனவரியில். மாநாடு நடந்தது 2011 இல். மேலும் ஒரு மாநாடு நடப்பதற்கு சாத்தியமில்லை என்று எதனைவைத்துச்சொல்கிறீர்கள். 2011 இல் மாநாடு நடந்தபொழுதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடந்தபொழுதும், அதற்கு முன்னர் பல ஆண்டுகள் எவருமே அதுபற்றி சிந்திக்கவில்லையே....? மல்லிகை ஜீவா சிந்தித்தார். நாம் செயல்படுத்தினோம். விதைத்தோம். அறுவடையை யார் யாரோ செய்கின்றார்கள். அங்கு செல்லத் தயங்கிய கலை, இலக்கியவாதிகளுக்கும் கதவு திறந்தது.
தனிநாயகம் அடிகள் தொடக்கிய உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கு நேர்ந்தது தாங்கள் அறிந்ததே. அதே போன்று கலைஞர் கருணாநிதி முதல்வராக
இருந்த காலத்தில் நடந்த செம்மொழி மாநாடு அதன் பிறகு இன்னமும் நடக்கவில்லை. அதனால் எதிர்காலத்தில் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற முடிவுக்கு முன் தீர்மானம் எடுக்கவேண்டியதில்லையே. சர்வதேச என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத சொல்லாக கருதுகிறீர்களா...?
போர் நடந்த காலத்திலும் போர் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கையில் எத்தனையோ சர்வதேச மாநாடுகள் நடந்தன. கல்வி, மருத்துவம், ஆன்மீகம், பொருளாதாரம் முதலான துறைகளிலெல்லாம் நடந்தன. ஆனால், அதுகுறித்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் தங்களின் கருத்தியல்கள், கலை, இலக்கிய வளர்ச்சி, படைப்பு மொழி, மொழிபெயர்ப்பு முதலான பல்வேறு இலக்கியம் ஊடகம் சார்ந்த
பயிலரங்கை நடத்த முனைந்தவுடன் எதிர்ப்பு. அதற்கு போர் ஒரு சாட்டு.
போர் முடிந்தவுடன் நல்லூர் கந்தசாமி கோயிலும், மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலும் வற்றாப்பளை அம்மன் கோயிலும் இழுத்து மூடப்பட்டுவிட்டதா...? திருமணங்கள் நின்றுவிட்டனவா...? யாழ்ப்பாணத்தில் தியேட்டர்கள் இயங்கவில்லையா...? தென்னிந்திய நட்சத்திரங்களின் படங்கள் ஓடவில்லையா...?
திலீபன் உண்ணாவிரதம் இருந்து மரணித்த காலத்தில் அவுஸ்திரேலியா மெல்பனில் ஈழத்தமிழ்ச்சங்கம்
டின்னர் டான்ஸ் நடத்தினார்கள்.
போர் முடிந்து சில மாதங்களில் புலி ஆதரவாளர்கள், ஒரு வழக்குச்செலவுக்காக சென்னையிலிருந்து சினிமா பாடகர்களை அழைத்து , சிரிச்சா சிறுக்கி மகள் சீனா தானாடோய்.. பாடவைத்தார்கள். ஊரே சிரித்தது.
2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னின்று நடத்தினேன். அப்பொழுதும் அதனை எதிர்த்து பகிஷ்கரித்தவர்கள்
பலரைத் தெரியும். தொடர்ந்து நான்கு வருடங்கள் மெல்பன், சிட்னி, கன்பராவில் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம். பின்னாளில் முன்னர் எதிர்த்தவர்களுக்கும்
இந்த அமைப்பு மேடையில் களம் வழங்கியிருப்பது உங்களுக்கும் தெரியும். அன்று அவுஸ்திரேலியாவில் எதிர்த்தார்கள். பின்னர் இலங்கையில் சர்வதேச ரீதியாக கூடியபொழுது
எதிர்த்தார்கள்.
எந்த நல்ல விடயத்தையும் எதிர்ப்பவர்களுக்கு
எதிர்க்க மாத்திரமே தெரியும். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். அந்தப்பதிலை 2004
இற்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் காண்கின்றேன். 2011
இற்குப்பின்னரும் பார்க்கின்றேன்.
நான் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள்
பக்கமே நிற்பவன் என்பதை இந்த நேர்காணலின் தொடக்கத்திலேயே
சொல்லியிருக்கின்றேன். போர் ஏதோ 200 9 இல்தானா நடந்தது...?
1970
முதலே இலங்கையில் நடந்தது. நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது 1987 இல். அப்பொழுதே போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். அது தொடருகின்றது. எனது மற்றப்பக்கம் இலக்கியம். இரண்டையும் இயக்கமாகவே கருதி இயங்கிவருகின்றேன்.
15. எழுத்தாளர்கள், கலைஞர்கள். சமூக சேவையாளர்கள்
வாழும்போதே
கெளரவிக்கபட
வேண்டும் என்பதற்கமைய
பல
கட்டுரைகளை தேனி,
தமிழ்முரசு, பதிவுகள் போன்ற
இணையத்தளங்களில் தொடர்ச்சியாக
எழுதி
வருகின்றீர்கள். இதற்கான வரவேற்பு எப்படி
உள்ளது..?
நீங்கள் அறிமுகம்
செய்யும்
படைப்பாளிகளில், அனேகமாக முற்போக்கானவர்களையே
முன்னிலைப்படுத்துவதாக நான்
உணர்கின்றேன்.
பரந்து
விரிந்த
எழுத்துலகில் ஏனையோரைப்
பற்றிக்
குறிப்பிடுவதில்
தவறிவிடுகின்றீர்களே...!
முருகபூபதி : எழுத்தாளர்கள்
பற்றிய
எனது
தொடர்
இன்று
தொடங்கப்பட்டதல்ல. 1994 ஆம் ஆண்டில்
பிரான்ஸிலிருந்து
வெளியான
பாரிஸ் ஈழநாடு
வார
இதழில்
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில்
12 மறைந்த
படைப்பாளிகள்
பற்றி
எழுதியிருக்கின்றேன்.
அவர்கள் அனைவரும்
முற்போக்கு
இலக்கிய
முகாமைச்
சேர்ந்தவர்கள் அல்ல. நான்
உளமார
நேசித்தவர்கள். இரசிகமணி கனக
செந்தி
நாதன், மு.தளையசிங்கம், காவலூர் ஜெகநாதன்,
நவசோதி, அமரதாஸ, என்.எஸ். எம். ராமையா, கவிஞர்
ஈழவாணன்
ஆகியோரெல்லாம்
முற்போக்கு
இலக்கிய முகாமைச்
சேர்ந்தவர்கள் அல்ல.
பின்னர் நான்
எழுதத்
தொடங்கிய காலமும் கணங்களும் திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்களிலும்
முற்போக்கு
இலக்கிய
முகாமைச்சாராத பலர்
பற்றி
எழுதியிருக்கின்றேன். அதற்கும் ஒரு
பட்டியல் உண்டு. கவிஞர் அம்பி, வயலின் வி.கே.குமராசாமி,
திக்கவயல்
தருமகுலசிங்கம், அன்புமணி, சண்முகம் சிவலிங்கம்,
துரை
விசுவநாதன், வ.இராசையா, இலக்ஷ்மண அய்யர்,
வி.எஸ். துரைராஜா, வீரகேசரி பாலச்சந்திரன், ஆசிரியர்
சிவப்பிரகாசம்,
மூத்த
பத்திரிகையாளர்கள்
கார்மேகம், டேவிட்ராஜூ, நடராஜா,
ராஜகோபால்,
தேவராஜா,
கனக.
அரசரத்தினம், விநியோக - விளம்பரப்பிரிவு சிவப்பிரகாசம்,
இலங்கை
வானொலி திருஞானசுந்தரம், கே.எஸ்
சிவகுமாரன், அ.முத்துலிங்கம்,
வண.
பண்டித ரத்னவன்ஸ
தேரோ,
எஸ்.பொன்னுத்துரை, வ.அ.இராசரத்தினம்,
கவிஞர் வில்வரத்தினம்,
தினகரன்
ஆசிரியர்
சிவகுருநாதன்
இவ்வாறு
பலரையும் பற்றி
எழுதியிருக்கின்றேன்.
தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு
அப்பால்
நான்
நேசிக்கும்
மனிதர்கள்
எந்த முகாமைச்
சேர்ந்தவர்கள் என்று பார்த்து
அவர்களின்
நினைவுகளை
நான் பதிவு
செய்ததில்லை. இனியும் அப்படித்தான்.
எனது குறிப்பிட்ட
கட்டுரைகளை
படித்த
பலர்
உடனுக்குடன்
தமது
கருத்துக்களை எனக்கு
எழுதிவருகிறார்கள். அவர்களின் மதிப்பீடுகளையும்
தொகுத்து பாதுகாப்பாக
வைத்துள்ளேன்.
16. மூத்த பரந்துபட்ட எழுத்தாளராகிய நீங்கள்,
உங்கள் எழுத்துகளில் (தேனீ, தமிழ்முரசு) அதன் போக்கில் இருந்து விலகி, சிலரைக்
‘கிள்ளி’ வேடிக்கை பார்க்கின்றீர்களே! உங்களுடைய இலக்கிய
முதிர்ச்சிக்கு இது அழகாகத் தென்படுகின்றதா?
முருகபூபதி:
அதென்ன கிள்ளி.... வேடிக்கை பார்ப்பது...? எழுத்தில் கிண்டல் கேலி அங்கதம் பற்றி அறிவீர்கள். பாரதி முதல் பலரும் அப்படித்தான் எழுதுகின்றனர். தொப்பி யாருக்குப் பொருந்துகிறது என்பது எனக்குத்தெரியாது. உண்மை சுடும்.
அதனை நீங்கள் கிள்ளி என அர்த்தப்படுத்துகிறீர்கள். எப்பொழுதும் நான் என்னையும் சுயவிமர்சனம் செய்துகொண்டே வாழ்கின்றேன். எழுதுகின்றேன்.
எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கு நான் நடிகன் இல்லை. எல்லோருக்கும் நான் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் நான் இந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்காமல் இருக்கவேண்டும். அல்லது நான் இந்த உலகத்தில் பிறக்காதிருக்கவேண்டும்.
17. உங்கள் படைப்புக்களால்
சமுதாயமோ
அல்லது
ஒரு
தனி
நபரோ திருந்தி இருக்கின்றார்கள் என
நீங்கள்
நினைக்கின்றீர்களா..?
உங்கள்
படைப்புக்களைப் பற்றி
யாராவது
ஆராய்ந்து
உள்ளார்களா..?
முருகபூபதி : படைப்பாளி
போதகன்
அல்ல.
அறநெறி
சொல்லும்
பிரசங்கியும் அல்ல.
அதனைத்தான்
உலகெங்கும்
மதபோதகர்களும்
சமய
பீடத்தைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள்.
அதனால்
உலகில்
குற்றச்செயல்கள் நின்றுவிட்டதா...?
குறைந்துவிட்டதா...?
படைப்பாளியின்
வேலை
வாசகனின்
சிந்தனையில்
ஊடுருவுவதுதான்.
வாசகன் தீர்மானித்துக்கொள்வான்.
எதனையாவது
படித்துவிட்டு
உங்கள்
எழுத்துக்களினால் நான் திருந்திவிட்டேன்.
மாறிவிட்டேன்
என்று
எவரும் சொன்னால்
அதனைக்கேட்டு
மகிழ்ச்சியடையலாம்.
எமது
மகிழ்ச்சியை பறைதட்டி
முழக்கி
சொல்லவேண்டிய
அவசியம்
இல்லை.
எனது பறவைகள் நாவலை
தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தமது MPhl பட்டத்திற்காக ஆய்வுசெய்தார். என்னுடன் பல தடவை தொடர்புகொண்டு சில விளக்கங்களும்
கேட்டார். ஆனால் அந்த ஆய்வுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது
தெரியாது. நானும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
18. போர்க்கால இலக்கியம்,
புலம்பெயர்
இலக்கியம்
– இலக்கிய
கர்த்தா
என்ற முறையில்
இவற்றில்
உங்களின்
பங்களிப்பு
என்ன?
முருகபூபதி : போர்க்கால
இலக்கியங்களை இலங்கையில்
இருந்த
காலத்திலேயே நிறைய
படித்துவிட்டேன். புலம்பெயர் இலக்கியம்
என்பது
ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளுக்கு
புலம்பெயர்ந்து
இலக்கியம்
படைத்த
பின்னர்தான் பேசுபொருளானது.
போர் குறித்து
எழுதினால்
அது
போர்க்கால இலக்கியம். புலம்பெயர்ந்தவர்கள் எழுதினால்
அது
புலம்பெயர் இலக்கியம் என்று
வகைப்படுத்திவிட்டார்கள். அவற்றை
வாசிக்கும்
வாசகர்களும்
விமர்சகர்களும்தான் போர்க்கால
இலக்கியம்
, புலம்பெயர்
இலக்கியம்
முதலான சிமிழுக்குள்
அடைக்கிறார்கள்.
ஒருவர்
வெளிநாட்டுக்கு
புலம்பெயராமலேயே புலம்பெயர்ந்தோர்
இலக்கியம்
படைக்கலாம்.
பாரதியார் பிஜித்தீவுக்குச்
சென்றுதான் கேட்டிருப்பாய் காற்றே
எழுதினரா...?
புதுமைப்பித்தன் இலங்கை
மலையகம்
வந்துதான்
துன்பக்கேணி
எழுதினாரா...? இன்று வெளிநாடுகளில்
முள்ளிவாய்க்கால்
எந்தத்திசையில்
இருக்கிறது என்பது
தெரியாமலேயே
முள்ளிவாய்க்கால்
பற்றி
கவிதை
எழுதுகிறார்களே. வருங்காலத்தில்
தமிழ்
அழியாமல்
இருந்தால்
தமிழ்
இலக்கியம் மற்றுமொரு
வடிவம்
பெற்றுவிடும். அப்பொழுதும் அதற்கென
ஒரு பெயர்
சூட்டுவதற்கு யாரும் பிறந்திருப்பார்கள்.
எனது படைப்புகள்
சில
இந்த
போர்க்காலத்தையும்
புலம்பெயர்
வாழ்வையும் சித்திரித்திருக்கின்றன. ஆனால் நான்
அவற்றை
இந்தச்சிமிழ்களுக்குள் அடைத்துப்
பார்க்கவில்லை. வாசகர்களும் விமர்சகர்களும்தான் அதனைத்
தீர்மானிக்கின்றனர். நானும்
முன்தீர்மானங்களுடன் எதனையும் எழுதுவதில்லை.
19. புலம் பெயர் சிறுகதை
– நாவல் பற்றிய
விமர்சன
முயற்சிகள்
பற்றிச்
சொல்லுங்கள். வளர்ச்சி
போதுமா...?
முருகபூபதி : புகலிடத்திலிருந்து
பலரும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் வருடாந்தம்
நடைபெறும்
புத்தகசந்தையிலும்
இலங்கையிலும் புகலிடத்திலும்
தொடர்ந்து
புகலிட
எழுத்தாளர்களின்
சிறுகதைத்தொகுதிகள் , நாவல்கள்
வெளியாகின்றன.
ஆனால் - சக
எழுத்தாளனின் நூலை
எத்தனை
எழுத்தாளர்கள்
படிக்கிறார்கள்....? படித்துவிட்டு
கருத்துச்சொல்கிறார்கள்...?
விதிவிலக்காக
சிலர் மாத்திரம்
நூல்
விமர்சனம்
எழுதுகிறார்கள். அதனையாவது பார்த்து
படித்துவிட்டு
ஏதும்
சொல்கிறார்களா...?
நூலாசிரியர் மாத்திரம்
தமது
படைப்பு
பற்றி
விமர்சித்து
எழுதியவருக்கு
நன்றி தெரிவிக்கின்றார். எனக்கும் தற்பொழுது
ஒரு
நெருக்கடி
தோன்றியுள்ளது.
கடந்த சில
மாதங்களாக
நான்
படித்து,
எனக்குப்பிடித்தமான
நூல்கள்
பற்றி எழுதத்தொடங்கியதும்
உலகில்
பல
பாகங்களிலிருந்தும்
நூல்கள்
தபாலில் வருகின்றன. முடிந்தவரையில் நேரம்
ஒதுக்கி
படித்து
மதிப்பீடுகளை எழுதிவருகின்றேன். எனது கணினியில்
விசைப்பலகையில் எழுத்துக்களும்
தேய்ந்துவிட்டன. இலங்கையில் நண்பர்
கே.எஸ்.
சிவகுமாரன் ஆங்கில
இதழ்களில்
எம்மவர்
படைப்புகள் பற்றி
பத்தி
எழுத்துக்கள்
எழுதிவருகிறார்.
அவருக்குப்பின்னர்
யார்
எழுதுவார்கள்...?
என்ற
கவலை
எனக்கு
வந்துவிட்டது.
இலக்கியத்தொகுப்புகளும்
வெளியாகின்றன. ஆனால், அவற்றில்
தமது
படைப்புகள் இருக்கின்றனவா
என்பதை
தேடுபவர்கள், அப்படி இருந்தாலும்
குறிப்பிட்ட
தொகுப்பு
பற்றி
மூச்சே
விடுவதில்லை.
தமது
பெயர் வந்தால்
போதும்
என்ற
திருப்தியுடன்
அமைதிகாக்கின்றனர்.
அதனால் விமர்சன
வளர்ச்சி
தேங்கிவிட்டது
என்றுதான்
சொல்வேன்.
இலக்கிய அமைப்புகள்
வாசிப்பு
அனுபவப்
பகிர்வுகளை நடத்தவேண்டும். எமது அவுஸ்திரேலியா
தமிழ்
இலக்கிய
கலைச்சங்கத்தின்
சார்பில்
சிறுகதை நாவல், கவிதை, சமூகத்தின்
கதை
சொல்லல்
முதலான
நிகழ்ச்சிகளை ஒரு
வருடகாலம்
நடத்தியிருக்கின்றோம். அவ்வாறு வாசிப்பு அனுபவப்பகிர்வுகள் காலத்துக்கு
காலம்
முன்னெடுத்தல்
வேண்டும். புதிய
தலைமுறையினரையும்
இதில்
உள்வாங்கவேண்டும்.
20. ஈழத்து இலக்கிய
வானில் சில எழுத்தாளர்கள் தூக்கி
நிறுத்தப்பட்டு
ஓஹோ என்று
புகழப்படுகின்றார்கள்
என்று
சொல்வதில்
உண்மையுண்டா?
முருகபூபதி : இன்று
ஈழத்தில்
மட்டுமல்ல
தமிழகத்திலும்
தமிழ்
இலக்கியம் எழுதப்படும்
பேசப்படும்
நாடுகளிலும்
ஆரோக்கியம்
குறைந்துவிட்டது. பல இடங்களில்
பணம்
விளையாடுகிறது. இதழ்களுக்கு பணம்
கொடுத்து
தமது
படைப்புகளை
வெளியிடத் தூண்டுபவர்களும், முன்னேற்பாடாக
பணம்
கொடுத்து
விருதுகள்
பெறுவோரும், யாரோ
எழுதிய
ஆய்வை,
மொழி
பெயர்ப்பை பணம்கொடுத்து
வாங்கி தமது
பெயரில்
வெளியிடுபவர்களையும்
பற்றிய
செய்திகள் வெளியாகின்றன.
பதிப்பகங்களுக்கும் நூலாசிரியர்களுக்கும்
இடையில்
ஆரோக்கியம்
கெட்டு
சீரழிந்துள்ளது. முகநூல்களில் எழுத்தாளரை
ஏமாற்றிய
பதிப்பகத்தாரும் பதிப்பாளரை
ஏமாற்றிய
எழுத்தாளர்களும்
வலம்
வருகிறார்கள். ஒவ்வொரு
நூல்
வெளியீட்டிலும்
யாராவது
ஒருவர்
பொன்னாடை சகிதம்
வந்து
பிரசன்னமாகின்றார். பிரமுகர்கள் மேடையில் தமக்கு
ஆசனம்
ஒதுக்கப்படல்
வேண்டும்
என்று
எதிர்பார்க்கின்றார். இந்த
இலட்சணத்தில்
சில
எழுத்தாளர்கள்
மாத்திரம்
தூக்கி நிறுத்தப்பட்டு
ஓஹோ
என்று
புகழப்படுதல்
சர்வசாதாரணம்.
புகழைத்தேடி
ஓடவேண்டியதில்லை. புகழ் தானாக
வரும்.
அந்தப்புகழ்தான் நிலைத்திருக்கும்.
எதற்கும்
காலம்
பதில்
சொல்லும்.
21. ஒரு நாவல் குறைந்தது 75,000 வார்த்தைகள்
கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மேற்குலக ஆங்கில இலக்கியத்தில் உள்ள நியதி.
ஈழத்தில் 35,000 வார்த்தைகள் கூடத் தேறாத குறுநாவல்களை நாவல்கள் என்று பரிசுகள்
கொடுக்கின்றார்கள். இது பற்றிய உங்கள் கருத்தை அறியலாமா?
முருகபூபதி:
ஒரு சிறுகதையை ஒரு பக்கத்திலும் எழுத முடியும். குமுதம் ஒரு பக்கக்கதைகளை நான் சொல்லவில்லை. பூரணி முதலாவது இதழில் ( 1972 இல்) என்.கே. மகாலிங்கம் எழுதிய கோபம் என்ற சிறுகதையை படித்திருக்கிறீர்களா? அதுவும் ஒரு பக்கக்கதைதான். வார்த்தைகளை எண்ணி படைப்பிலக்கியம் படைப்பதில் எனக்கு
நம்பிக்கை இல்லை. ஒரு நாவலில் எத்தனை வார்த்தைகள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பழக்கம் கணினி வந்த பின்னர் தொற்றியிருக்கவேண்டும். இந்த எண்ணிக்கை நியதிகளை யார் உருவாக்கினார்கள்...? படைப்புகளுக்கு களம் தந்த இதழ் ஆசிரியர்களும் இலக்கியப்போட்டிகள் நடத்துபவர்களும்தான். இன்று தொலைக்காட்சி சீரியல்களுக்கும் இந்த நியதி வருத்தம் வந்துள்ளது.
ஜி. நாகராஜனின் நாளை மற்றும்
ஒரு
நாளே என்ற நாவல் சிறியது. குறிப்பிடத்தகுந்தது. ஜெயாகாந்தனும் நாவல்கள் எழுதினார். அதில் சிறியவற்றை குறுநாவல் என்றும் பெரியவற்றை நாவல் என்றும் வகைப்படுத்தி மதுரை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது.
அவருடைய பல சிறிய நாவல்கள் இரண்டு இரண்டாக இணைத்து தொகுக்கபட்டு வெளிவந்தன.
வார்த்தை எண்ணிக்கையை வைத்து பரிசுகொடுப்பவர்கள் பற்றி எனக்கு
எதுவும் தெரியாது. பரிசுக்காகவும் போட்டிகளுக்காகவும் எழுதிவரும் தங்களைப்போன்றவர்கள் அதுபற்றி ஆராய்ந்தால் நல்லது.
22. இலக்கியம், பொதுவாழ்க்கை
என்று
ஓயாமல்
ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்.
ஏதாவது
வகையில்
இது
உங்களின்
வாழ்க்கையைப் பாதித்ததுண்டா...?
முருகபூபதி : எழுத்து
எனது
தொழில். பாரதியும் என்ன
சொன்னார்..?
கவிதை தமக்குத்
தொழில் என்றார். இலங்கையில்
எனக்கு
சோறுதந்த
தொழில். அதனால்
அதனைவிட்டு
நான்
அகலமாட்டேன். புகலிடத்தில் வேறு
தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்திற்காக
உழைத்தபோதிலும்
நான் ஊதியம்
எதுவும்
பெறாமலேயே
எழுத்துத்துறையில்
தொடர்ந்து
ஈடுபட்டுள்ளேன். பொதுவாழ்க்கை
எனக்கு
புதியதல்ல. தாயகத்திலும் பல்வேறு
பொதுப்பணிகளில் ஈடுபட்டேன்.
இன்றும்
அவுஸ்திரேலியாவிலும் இலங்கை
செல்லும்
வேளைகளில்
அங்கும்
ஏதாவது பொது
வேலைகளில்
ஈடுபடுகின்றேன். இலக்கியம், எழுத்து
பொதுவாழ்க்கை என்பனதான்
எனது
வாழ்க்கை. இந்நிலையில் பாதிப்புக்கு எங்கே
இடம்.
வாழ்க்கை - வாகனப்பயணம்
போன்றது. விபத்துக்கள் நேரலாம்.
உயிர்
தப்பியும் வரலாம். நான் வாழ்க்கையில்
விபத்துக்களை
கடந்து
வந்தவன். விழுந்தால்
விழுந்தே
கிடக்க
வேண்டுமா. எழுந்து நிற்க
வேண்டாமா...?
23. உங்களுடைய எழுத்துக்களை
முன்னெடுத்துச்
செல்ல
உதவிய
பத்திரிகைகள், சஞ்சிகைகள்
, இணையங்கள்
பற்றிச்
சொல்லுங்கள்.
முருகபூபதி : இலங்கையில்
வீரகேசரி,
தினகரன்,
தினக்குரல்,
மல்லிகை,
ஞானம், ஜீவநதி, புதுயுகம், பூரணி, இலங்கை
வானொலி,
அவுஸ்திரேலியா
உதயம், தமிழ்நாடு யுகமாயினி,
பாரிஸ்
ஈழநாடு,
தமிழ்நாடு தளம் - இலண்டன் தமிழன், கனடா நான்காவது
பரிமாணம்,
இணையத்தின்
வரவுக்குப்பின்னர் அவுஸ்திரேலியா
தமிழ்
முரசு,
கனடா
பதிவுகள்,
ஜெர்மனி தேனீ, தமிழ்நாடு திண்ணை,
எதுவரை மற்றும்
நண்பர்
நடேசனின்
வலைப்பூ
மற்றும் தங்களின்
சுருதி
வலைப்பூ
எனது
முகம்
தெரியாத
பல
நண்பர்களின் முகநூல்களிலெல்லாம்
எனது
எழுத்துக்கள்
வெளியாகின்றன. சில
பதிவுகள்
நான்கு
தடவைக்கும்
மேலும்
மறுபதிவேற்றம் பெறுகின்றன. சில வானொலிகளும்,
தொலைக்காட்சி
சேவைகளும் எனது எழுத்தையும்
வாழ்வையும்
முன்னெடுத்துச்செல்ல
உதவியிருக்கின்றன. கடந்த
சில
வருடங்களாக
நான்
பேனையும்
காகிதமும் பாவிப்பது குறைந்துவிட்டது.
காலம்தான்
எப்படி
மாறிவிட்டது
என்ற ஆச்சரியத்துடன்
வாழ்கின்றேன்.
24. நீங்கள் இலங்கை
அரசியலை
மய்யமாக
வைத்து
ஒரு
நாவலை
எழுதி வருவதாக
முன்னர்
கூறியிருந்தீர்கள்.
அது
பூரணப்படுத்தப்
பட்டுவிட்டதா..? அதைப்
பற்றிக் கொஞ்சம்
சொல்லுங்கள்.
முருகபூபதி : இலங்கை
அரசியலைவைத்து
ஒரு
தொடர்கதையை
லண்டன் தமிழன்
இதழில்
முன்னர்
எழுதினேன். ஒரு பத்திரிகையாளனின் வாழ்வு
பற்றி
கதைகள்
அதிகம்
வெளியாகவில்லை.
பத்திரிகையாளனுக்கும்
அரசியலுக்கும்
நெருக்கம்
அதிகம் . அதனால் நான்
எழுதவிருக்கும் நாவலில் இவை
இரண்டும் கலந்திருக்கும்.
25. இறுதியாக, எஸ்.பொ. எழுதிய
‘வரலாற்றில் வாழ்தல்’ போன்று
ஒரு தொகுதியை
எழுதக்கூடிய
வல்லமை
பொருந்தியவர்
நீங்கள்.
அப்படி
ஏதும் சுயசரிதைப்
பாங்கிலான
படைப்பு
எதையாவது
எழுதும்
எண்ணம்
உள்ளதா...?
முருகபூபதி : நிச்சயமாக
இல்லை.
ஏற்கனவே
எனது
கதைகள்
நாவல்,
பத்தி எழுத்துக்கள், நூல்கள் முதலானவற்றில்
எனது
வாழ்வு
பதிவாகிவிட்டது. இந்த நேர்காணலுக்கான
தங்கள்
கேள்விகளும்
எனது
சுயவரலாற்றை தெரிந்துகொண்டு
எழுப்பப்பட்டிருக்கிறது. நான் திறந்த
புத்தகம். சுயசரிதை
அவசியம்
இல்லை.
என்னைத் தொடர்புகொண்டு இந்த
நேர்காணலை
பதிவு
செய்ததற்கு
எனது மனமார்ந்த
நன்றி
சுதாகரன்.
---0---
No comments:
Post a Comment