Thursday, 20 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

9. குட்டிப் புத்தகம் போதுமா?
                    
           
         தாம் பல்கலைக்கழகப் பட்டத் தேர்வுக்கு எடுத்த பாடங்களையே, உயர்தர வகுப்புகளில் அற்பளவு திருப்தியாகக்கூடக் கற்பிக்க முடியாத ஆசிரியர்களும் கடமை புரிந்தார்கள். அவ்வாறானவர்கள் தமது இயலாமையை ஏற்றுக்கொண்டு வேறு கீழ் வகுப்புகளில் பாடங்கள் எடுத்திருக்கலாம். சிலர் அப்படிச் செய்யாது, வகுப்புக்களுள் புகுந்து, கடமை புரிவதாக நடித்துக் கொண்டிருந்தார்கள். எத்தொழில் புரிபவருக்கும் மனச்சாட்சி இருக்க வேண்டும். இளைய சமுதாயத்துக்குப் பாம்பாட்டி வித்தை காட்டக்கூடாது. ஒரு பதம்:

க.பொ.த. உயர்தர வகுப்பில் விலங்கியல் கற்பித்தார் ஓர் ஆசிரியை. இந்தியப் பட்டதாரி. அவர் பட்டத் தேர்வுக்கு எடுத்த பாடந்தான். எனினும் பாட ஞானம் போதாது. அவர் விலங்கியல் பாட நேரம் எவரோ ஒரு ஐயர் எழுதிய ‘விலங்கியல் குறிப்புகளை’ வாசிப்பார். அதுதான் அவருடைய படிப்பித்தல். விளக்க உரையோ கலந்துரையாடலோ எதுவும் கிடையாது. அது ஒரு சிறிய மூன்று ரூபாய்ப் புத்தகம். மாணவர்கள் அதைக் கொப்பியில் எழுதவேண்டும். அவ்வளவையும் எழுத எட்டு ரூபாய்க் கொப்பி தேவைப்பட்டது. அருமை பெருமையாக அவர் அந்தக் குறிப்புப் புத்தகத்தில் உள்ள படத்தைக் கரும் பலகையில் வரைவார். அதனைப் பார்த்து மாணவர்கள் தங்கள் கொப்பிகளில் வரைய வேண்டும். அந்தச் சிறிய மூன்று ரூபாய்க் குறிப்புப் புத்தகம் சகல மாணவர்களிடமும் இருந்தது. இது என்ன வகைக் கற்பித்தல்? மாணவிகள் எழுதாவிட்டால், வரையாவிட்டால் - காது விளிம்பில் ஒரு பக்கத்தில் பென்சில் அடிப் பக்கத்தையும், மறுபக்கத்தில் பெருவிரலையும் அழுத்தித் திருகிக் கண்டித்துள்ளார். ஒரு முறையல்ல. பல தடவைகள். அந்த வகுப்புப் பெண் பிள்ளைகள் பொறுக்க முடியாமல் சொல்லி அழுதார்கள். அப்படியிருந்தும் அந்த மாணவிகள் நிதானம் இழக்கவில்லை. அந்த ஆசிரியையை மேலும் கல்லூரியில் விட்டு வைத்திருக்க முடியவில்லை. அவரை வெளியே அனுப்பிவிட்டு வசதிக் கட்டணத்தில் திரு.ஸ்ரீகரன் அவர்களை விலங்கியல் பாடம் கற்பிக்க நியமிக்க வேண்டியதாயிற்று. 

     இந்திய பட்டதாரிகள் மட்டுமல்ல இலங்கைப் பட்டதாரிகள் பலரும் தாம் பட்டத்துக்கு எடுத்த பாடங்களையே உயர் வகுப்புகளில் படிப்பிக்க முடியாமல் - அதனை மாணவர்களுக்குக் கரும்பலகை உதவியோடு விளங்கவைக்க முடியாமல், மூன்று ரூபாய்க் குறிப்புப் புத்தகங்களை வாசிப்பதை அவதானித்தேன். சிலர் பட்டப் பரீட்சை எடுத்து நீண்ட காலமாகினால் செயற்திறன் குன்றுவர். இலங்கைப் பல்கலைக்கழகப் புதிய பட்டதாரி ஆசிரியர்களே, தாம் தேர்வுக்கு எடுத்த பாடத்தை மாணவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாமல், யாரோ எழுதிய மூன்று ரூபாய்க் குறிப்பை வாசித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளேன். கரும்பலகைப் பக்கமே போகமாட்டார்கள். மாணவர்கள் அதனை எழுதுவர். முன்னரே குறிப்பிட்டபடி அந்தப் புத்தகம் மாணவர்களிடமும் இருந்தது. இங்கு ஒன்றை ஆசிரிய சமூகம் உணரவேண்டும். அந்த மாணவர்கள் “எங்களிடமும் அந்த மூன்று ரூபாய்ப் புத்தகம் இருக்கிறது. சேர், நீங்கள் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?” என்று புரட்சி செய்யவில்லை. ஆசிரிய சமூகத்தில் மாணவர்கள் அவ்வளவு நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள். அப்படியான பாரம்பரிய பணிவில் ஊறிப்போன மாணவ சமூகத்தைப் ‘பேய்க்காட்டுவது’ தர்மமா? 


உயர் வகுப்பில் மட்டுமல்லாது கனிட்ட வகுப்புகளில் பாடம் எடுப்பவர்களும், பாடத்தில் போதிய ஞான முடையவர்களாக இருக்க வேண்டும். வாசித்தல் மூலம் தமது ஞானத்தை வளர்ப்பவர்களாக இருக்க வேண்டும். இதனை இன்னொருவர் சொல்லிச் செய்விக்க முடியாது. ஆசிரியர் தான் சமூகப்பணி தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருப்பதைப் புரிந்து உணர்ந்து செயலாற்ற வேண்டும். 

No comments:

Post a Comment