யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
10. புகையிரதத்தில் பறிபோன
மகாதேவன்.
புதிதாகக்
கல்லூரிக்குக் கொண்டு வந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் திருப்தியாகவே கடமை
புரிந்தனர். எனினும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் இருக்கவே செய்தது. இது பெரிதும்
க.பொ.த. உயர்தர வகுப்பு ஆசிரியர்களுக்கே பொருந்தும்.
உயர்தர
வகுப்புப் பாடத்துக்கு ஓர் ஆசிரியரை நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார். அவர் நகரப்
பாடசாலையிலிருந்து எமது கல்லூரிக்கு மாற்றுவிக்கப்பட்டார். அந்த ஆசிரியருக்கு
அந்தப் பாடத்தில் தேவையான ஞானம் இல்லை. பாட ஆயத்தம் செய்தும் அவரால் தேவையான
அறிவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கரும்பலகையில் எழுதுவதில் அடிக்கடி தவறுகள்
தலைகாட்டின. மாணவர்களுக்கும் ஆசிரியருக்கு மிடையில் தர்க்கம். நாட்கள் நகர நகர
வகுப்பறையில் ஒரே கூச்சல். மாணவர்கள் வினாக்கள் எழுப்பும் பொழுது, ஆசிரியர்
நிதானத்தை இழந்து நின்றார். பக்கத்து வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்கள்
முறைப்பாடுகள் செய்தனர். அந்தப் பிரச்சினையை எப்படிச் சுமுகமாகத் தீர்ப்பது?
இது
சற்று வித்தியாசமான கதை. கல்வித் திணைக்களம் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள், உயர்
வகுப்புகளில் தமது பட்டப் பாடத்தைப் படிப்பிக்க வேண்டும் என்று கூறி, ஒரு
ஆசிரியையை யூனியன் கல்லூரிக்கு மாற்றியிருந்தது. அவருக்கு உயர்தர வகுப்பில்
விலங்கியல் படிப்பித்த அனுபவம் இல்லை. இந்தியப்பட்டதாரி வேறு. அப்பொழுது
திரு.ஸ்ரீகரன் அவர்கள் வசதிக் கட்டணத்தில் விலங்கியல் கற்பித்துக் கொண்டிருந்தார்.
மாற்றக் கடிதத்தோடு வந்த ஆசிரியை, தான் உயர்
வகுப்பில் விலங்கியல் பாடம் படிப்பிக்க அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். சரி என்று
அவருக்கு நேரசூசியைக் கொடுத்தேன். திரு.ஸ்ரீகரனிடம் வகுப்பிற்குச் செல்ல வேண்டாம்.
இரண்டொரு தினங்கள் பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.
நேரசூசியை வாங்கிய அந்த ஆசிரியையை
வகுப்பிற்கு அனுப்பிவிட்டு, கால்மணி நேரத்தால் கவனிப்பதற்காகச் சென்றேன். இரண்டு தரம் சுற்றி வருகிற பொழுது ஆசிரியரையும்
மாணவர் களையும் அவதானித்தாலே புரிந்துவிடும். ஆசிரியர் சரியில்லை என்றால் சுற்றில்
வரும் போது மாணவர்கள் பார்க்கிற பார்வை “நல்ல ஆளைத் தேடிப்பிடித்திருக்கிறீர்கள்”
என்று செய்தி சொல்வது போலவிருக்கும். சிறந்த ஆசிரியர்களாகவிருந்தால் அவர்களது தாமரையாக
மலர்ந்த முகங்கள் காட்டிவிடும். ஒரு நல்லாசிரியனைக் கண்டுபிடிக்க நாட்கள் பல
தேவைப்படா. சிலவேளை ஒரு பாடவேளைகூட முழுமையாகத் தேவைப்படாது. சுற்றுவரும் பொழுது
-– விலங்கியலுக்கு அனுப்பிய - அந்தப் புதிய ஆசிரியை கதிரையில் அமைதியாக இருந்தார்.
மாணவர்கள் முகங்களில் வினாக் குறிகள் எழுந்து நின்றன. பாடமுடிவில் மணியடித்ததும்
அலுவலக உத்தியோகத்தரை அனுப்பி, அந்த ஆசிரியையை அலுவலகத்துக்கு அழைப்பித்தேன்.
“நீங்கள் வகுப்பிற்குப் போனீர்கள். பாடம்
கற்பிக்காமல் இருந்தீர்கள்” என்றேன்.
“பாட ஆயத்தம் செய்யாமல் உங்களால் படிப்பிக்க
முடியுமா?” சூடாகக் கேட்டார். பெரிய இடத்துத் தொனியில்.
“ஆம் என்னால் எனது பாடத்தைப் படிப்பிக்க
முடியும். உங்களுக்குப் பாட ஆயத்தம் செய்ய வேண்டும் என்றால், நூல் நிலையம் சென்று
பாட ஆயத்தம் செய்யவும். எப்போது உங்களுக்குப் பாடத்தை எடுக்க முடியுமோ, அப்பொழுது
வாருங்கள். இன்றைக்கு மாணவர்களின் ஒரு பாட நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்” என்று
கூறி நூல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன்.
அத்தோடு கதை முடியவில்லை. அடுத்த நாள் வந்த
ஆசிரியை நூல் நிலையத்தில் இருந்தார். நண்பகலளவில் அவரது கணவர் என்னிடம் வந்தார்.
நான் கடினமாக நடந்ததை, அவரது முகம் பேசியது.
“எனது
மனைவியைப் பார்க்க வேண்டும்.”
அலுவலக
உத்தியோகத்தர் சென்று தகவல் கொடுத்தார். அம்மையார் வந்து கணவனோடு கதைத்தார். அந்த
அம்மையார் அதன் பின்னர் கல்லூரிக்கு வரவில்லை. வேறு பாடசாலைக்குத் தானே மாற்றம்
பெற்றுச் சென்றுவிட்டார்.
அந்த
அம்மையார்கூடக் கீழ்வகுப்பில் ஏதாவது ஒரு பாடத்தைச் சிறப்பாகச் செய்யக்கூடும்.
நான் அதற்கு ஆயத்தமாக இருந்தேன். அதற்கு அவர் மட்டுமல்லக் கல்வித் திணைக்களமும்
ஒருப்படவேண்டும்.
பேருதவிக்கு நன்றிகள்
பறிகொடுத்த புதிய சிறந்த ஆசிரியர்
பற்றியது இக்கதை. புதிய ஆசிரியர்களைக் கொண்டுவருவதில் பெரிதாக இடர்கள்
இருக்கவில்லை. எனினும், அப்படியான நல்ல ஆசிரியர்களைக் கொத்திக்கொண்டு போக வேறு
கல்லூரிகள் தருணம் பார்த்திருந்தன. அது ஒரு தடவை மகாபாரதப் போராக மாறியது.
யாழ் குடாநாட்டில் திரு. ஆ.மகாதேவன் என்றால்
தெரியாத விஞ்ஞான உயர்தர மாணவன் இல்லை. இரசாயனவியல் பாடம் கற்பிப்பதில் கொடிகட்டிப்
பறந்தவர். அவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விடுவிக்கப்பட்டார். எமது
கல்லூரியில் சிரேட்ட பாடசாலைப் பத்திர வகுப்புவரை படித்த பழைய மாணவர். அவரின் சம்மதத்துடன்
அவரை யூனியன் கல்லூரிக்கு எடுக்க ஆவன செய்யப்பட்டது. எமது கல்லூரிக்கு வரச்
சம்மதக் கடிதம் தந்திருந்தார். யாழ் கல்வித்திணைக்களம் இன்னும் அவருக்கு இடம்
ஒதுக்கவில்லை. திரு.மகாதேவன் அவர்களின் யாழ் வருகையை அறிந்த அருணோதயக் கல்லூரியைச்
சேர்ந்தோர், நள்ளிரவு காரில் பிரயாணம் செய்து பளைப் புகையிரத நிலையத்தில்
காத்திருந்தனர். கொழும்பிலிருந்து புகையிரதம் வந்ததும், அதனுள் ஏறித் தேடினர்.
எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ அமிர்தலிங்கம் அவர்களைச் சந்தித்தனர்.
திரு.மகாதேவனைத் தமது கல்லூரிக்கு மாற்றும்படி, வடமாநில கல்விப் பணிப்பாளருக்குக்
கடிதம் பெற்றுக் கொண்டு, அன்று காலையே தமது கல்லூரிக்கு மாற்றுவிக்கும் கடிதத்தைக்
கல்வித் திணைக்களத்தில் கையோடு பெற்றுக் கொண்டனர். திரு.மகாதேவன் என்னிடம் ஓடி
வந்தார். பாடசாலை நேரம். உடன் ‘லாப்’ நடராசா அவர்களின் காரில் புறப்பட்டேன். கௌரவ
அமிர்தலிங்கம் அவர்கள் கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் வாக்கு மாறமாட்டார்
என்பது எனக்குத் தெரியும். நியாயம் எம் பக்கம் உள்ளது. ஆகவே ஆவரங்காலுக்குப் போய்
எனது சகோதரர் சின்னத்துரை அவர்களையும் அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் கண்டி
வீதியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தை அடைந்தேன்.
“மகாதேவன் எனக்குச் சம்மதக் கடிதம் தந்தவர்.
ஆகவே அவர் எமது கல்லூரிக்கே உரியவர்.” சொன்னேன்.
“காலையில் சொன்னதை எப்படி மாற்றுகிறது?” கௌரவ
அமிர்தலிங்கம்.
“அவர்கள் உங்களை ஏமாற்றிப் பெற்றுள்ளார்கள்.
இல்லாவிட்டால் காரில் பளைக்கு வந்து, பாதையில் வைத்து உங்களிடம் கடிதம்
வாங்கியிருக்கத் தேவையில்லை.”
“அதுவல்லப் பிரச்சினை. நான் கொடுத்த வாக்கை
மாற மாட்டேன். காலையில் கொடுத்துவிட்டு இப்பொழுது மாறுவதா?”
நான் அவர் சொல்லுக்கு என்றும் எதிர்க்
கருத்துச் சொன்னதில்லை. அன்று நாங்கள் இருவரும் மாறி மாறி நியாயம் பேசினோம். அவர்
கொடுத்த வாக்கை மீற முடியாதென்று வாதிட்டார். திரும்பி வந்துவிட்டேன். மனசு
மிகவும் கனத்தது.
அன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு
திரும்பிக் கொண்டிருந்தேன். வீமன்காமம் வாசிகசாலையில் அன்று ஒரு கூட்டம். என்னை
விலத்திப் போட்டுச் சென்ற கௌரவ அமிர்தலிங்கம் அவர்களது கார், வாசிக சாலையின்
முன்னின்றது. இறங்கியதும் அவர் என்னை அழைத்தார்.
“நான் சொல்லியிருக்கிறேன். மகாதேவன் உங்கள்
கல்லூரிக்குத்தான் வருகிறார்.” கௌரவ அமிர்தலிங்கம் அவர்கள்.
அவர் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அதிபருடன்
பேசிய பின்னர்தான் அந்த முடிவை எனக்குச் சொன்னார். திரு.மகாதேவன் அவர்களின் கதை
மேலும் நீடித்தது. அவர் சில வருடங்கள் யூனியனில் சேவை செய்த பின்னர், ஒரு வருட
டிப்புளோமா படிப்பிற்காகக் கொழும்பு சென்றார். படிப்பு முடிந்ததும் யாழ் இந்துக்
கல்லூரியின் பழைய மாணவர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, திரு.மகாதேவனைத் தமது
கல்லூரிக்கு எடுத்தனர். நீதிபதி திரு.சிவாபசுபதி கல்வி அமைச்சரைக் கண்டு
செய்வித்ததாகக் கேள்விப்பட்டேன். கௌரவ அமிர்தலிங்கம் அவர்கள் அப்பொழுது
இந்தியாவில் வாழ்ந்தார்கள். எமது பக்கத்தில் வேறு எவருக்கும் தட்டிப் பறித்ததை
மேவிச்செல்லக்கூடிய அரசியல் செல்வாக்கில்லை.
ஒரு தலைசிறந்த
ஆசிரியரை எடுப்பதில் எத்தனை குத்துவெட்டுப்பாடுகள்! அந்த இழப்பு நீண்ட காலம் என்
மனதில் வெந்தது. திரு.மகாதேவன் அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். அவர் உயர்ந்த
பல நற்குணங்களின் பொக்கிசம். ஆடம்பரம் இல்லாத, பெருமைகாட்டாத பெருமகன். முகத்திலே
அறிவின் தேஜஸ். எல்லோருடனும் இனிமையாகப் பழகும் சுபாவம். பேசினால் இன்னொருமுறை
பேசத்தோன்றும். அற்புதமான இரசாயன வியல் ஆசிரியர். கடமையில் தவறாதவர். அன்னாரின்
ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்.
புதிய நல்ல
ஆசிரியர்களைப் பாடசாலைக்குக் கொண்டு வருவதில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ
அ.அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. புதிய ஆசிரியர்களின் வருகையே
யூனியன் கல்லூரி எழுச்சியின் அத்திவாரமாகவும், வளர்ச்சியின் படிக்கல்லாகவும்
அமைந்திருந்தது. இன்னும், நெடுஞ்சாலை ஓரம் உள்ள மாடிக் கட்டத்தின் முதன் மாடியைக்
கட்டவும் அவரே பணம் ஒதுக்கித் தந்தார். அதன் நிலத்தளம் அதிபர் திரு.த.நடராசா
அவர்களின் காலத்தில் கட்டப்பட்டதாகும். கல்லூரி சம்பந்தப்பட்ட எந்த உதவி கோரிப்போன
சமயத்திலும், கௌரவ அமிர்தலிங்கம் அவர்கள் அதனை மகிழ்ச்சியோடு நிறைவேற்றித்
தந்தார். பதமாக ஒரு கதை.
வீமன்காமத்தைச்
சேர்ந்த செல்வன் கந்தவனம் செல்லத்துரை சுகுமார் என்பவர் பல்கலைக்கழக
அனுமதியின்போது பொறியியல் துறைக்குத் தேவையான புள்ளிகளைப் பெற்றிருந்தார். சில
சுத்துமாத்துக்களின் பின்னர், அவரது இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்படடிருந்தமை,
இரண்டு மாதங்களின் பின்னர்தான் தெரியவந்தது. கௌரவ அமிர்தலிங்கம் அவர்களை
நாடினோம். கௌரவ அமிர்தலிங்கம் அவர்கள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருடன் வாதிட்டு, செல்வன் சுகுமாருக்குரிய
உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். அவர் மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் துறைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இப்பொழுது திரு.சுகுமார் ஒஸ்ரேலியாவில் பிரிஸ்பனில் கடமை புரிகிறார்.
நாம் நாடிய
உதவிகளை எல்லாம் செய்துதந்து, யூனியன் கல்லூரியைக் கட்டியெழுப்பி முதன்மைப்படுத்த
உதவியவர் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்களே. அவரது ஆதரவே
யூனியன் கல்லூரி எழுச்சியின் அடிநாதமாக விருந்தது. அவரது பேருதவி இல்லாதிருந்தால்
நாம் சாம்பலை உதறிவிட்டுப் பீனிக்ஸ் பறவையாக எழுந்து உயர உயரப் பறந்திருக்க
முடியாது. குறிப்பாக அவரது உதவியினாலேயே கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற முடிந்தது.
எனது பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருந்ததோடு, யூனியன் கல்லூரியை முதல்நிலைக்கு
எடுத்துவரவும் பேருதவி புரிந்த எதிர்க் கட்சித் தலைவர் அமரர் கௌரவ அமிர்தலிங்கம்
அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு,– மறைந்த அன்னாரது
ஆத்ம சாந்திக்காவும் பிரார்த்திக்கிறேன்
1983 ஆம் ஆண்டு
தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி இந்தியா
சென்றனர். அதன் பிறகு எனது அரசியல் செல்வாக்கு மறைந்து போய்விட்டது. எனினும்
கல்வித் திணைக்களத்தின் பூரண ஆதரவோடு கல்லூரி எழுச்சியை முன்னெடுத்துச் செல்ல
முடிந்தது.
*
“நன்றி யறிதல் பொறையுடைமை
இன்சொல்லொடு
இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற
அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு
நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார
வித்து.”
நினைவூட்டல் பதிவு
ReplyDelete