Saturday, 10 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
17.   “வரச்சொல்லுங்கள்! விசாரியுங்கள்!”

     கல்விசார் ஆளணியினர் சரிவரக் கடமை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிபருக்கு, அவர்கள் சார்ந்த பொறுப்பும் கடமையும் உண்டு. பாடசாலை நேரத்தில் அவர்களுக்கு வரும் இடைஞ்சல் சமயங்களில், அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவியளிக்கவும் பின்நிற்கக் கூடாது. பொதுவாகப் பெற்றார்கள் சிலர் மிக்க உணர்ச்சியுடன் வருவார்கள். குறிப்பாக மாணவர்களை அரவணைத்துச் செல்ல முடியாத ஆசிரியர்கள் பற்றியதாகவேயிருக்கும். அவ்வேளைகளில் ஆசிரியரைப் பாதுகாக்க வேண்டியது அதிபரது கடமை. நடுநிலையென்று ஏனோதானே என்று விடயத்தைக் கையாள்வது விபரீதமாக முடியவும் வாய்ப்பாகிவிடும். ஒரு பதம்.
ஓர் ஆங்கில ஆசிரியர் தேகப் பயிற்சி வகுப்பு நேரம், ஒரு சிறு பையனுக்குக் கையால் அடித்துவிட்டார். மூவர் அடுத்த தினம் கோபத்தோடு எனது அலுவலகத்துக்கு வந்தனர். பையனை வைத்தியசாலையில் இருந்து அழைத்து வந்திருந்தனர். காதின் ஓரம் வீங்கிச் சிவத்திருந்தது. கேட்கிற சக்திகூடப் பிரச்சினை. “எங்கே அவன். வரச்சொல்லுங்கள். அவனை வரச்சொல்லுங்கள். எங்களுக்கு முன்னே வைத்து விசாரியுங்கள்” என்று வாதாடினார்கள். நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, அந்த ஆசிரியருக்காக மன்னிப்புக் கேட்டுத் திருப்பி அனுப்பினேன். அவர்களின் முன் வைத்து விசாரிக்க நேர்ந்தால், எனது ஆசிரியரை அவர்களுக்கு முன்னே வைத்துக் கண்டிக்க நேர்ந்திருக்கும். அதை நான் விரும்பவில்லை. மனிதர்களில் பல ரகம். ஒரு வேளை அவர்கள் ஆத்திரம் பொறுக்காமல் கையை நீட்டியிருந்தால்? அவ்வாறான சமயங்களில், உதவி ஆசிரியர்களைப் பாதுகாப்பது எனது கடமை என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தேன். நான் அவர்கள் கேள்விகளுக்கு எடுபடவில்லை. இடம் கொடுக்கவில்லை. அவர்களை அனுப்பிவிட்டே குறித்த ஆசிரியரை அழைத்து விசாரித்தேன். எந்த ஆசிரியரும் வேண்டு மென்று அடிப்பதில்லை. அவர் தவறுதலாக நடந்தது என்று மனவருத்தப்பட்டார். ஆனாலும் அடிப்பது நல்லாசிரியனுக்கு அழகல்ல. அந்த ஆசிரியர் ஒழுங்காகத்  தனது தேகப் பயிற்சி வகுப்பை நடாத்தி இருந்தால் அடித்திருக்கச் சந்தர்ப்பமே வந்திருக்காது. அவர் வேப்பமர வேரில் இருந்து சஞ்சிகை வாசித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அதிலும் கையால் அடிப்பது மிகக் கண்டிக்க வேண்டியது. அவருக்கு விளங்கப்படுத்தி ஆலோசனை கூறி அனுப்பினேன்.

இன்னொரு சம்பவம்: அவர் ஒரு கணித ஆசிரியர். அளவுக்கு அதிகம் வீட்டு வேலை கொடுப்பவர். வேறு பாடங்கள் ஆயத்தஞ் செய்யவே நேரம் இருக்காது. வீட்டுவேலை செய்துவராவிட்டால் பூசை போடுகிறவர். பெரிதாக அதட்டுவார். அடுத்த வகுப்புகளில் எதிரொலிக்கும். முழந்தாளில் இருத்துவார். பச்சை இரும்பு அடிப்பது போன்ற கற்பித்தல். அவர் ஒரு பையனுக்குச் சற்று இறுக்கமாகப் பிரம்பால் அடித்து வகுப்பு நேரம் முழுவதும் முழந்தாளில் இருத்திவிட்டார். அடுத்த தினம் கல்லூரி விடுகிற சமயம் ஒரு கூட்டம் இளைஞர்கள் - எனக்குத் தெரிந்தவர்கள் - கல்லூரி வாசலில் நின்றார்கள். குறித்த ஆசிரியரை எதிர்பார்த்து. அந்த ஆசிரியர் வளவுக்குள் சைக்கிலைப் பிடித்தபடி வீதியைப் பார்த்துக்கொண்டு நின்றார். ஏனைய ஆசிரியர்கள் வெளியேறி விட்டார்கள். செய்தி அறிந்து வீதிக்குப் போனேன். அவர்களுடன் கதைத்து உறுதி மொழி வாங்கிக்கொண்டு, ஆசிரியர் செல்லுமட்டும் வீதியில் காவல் நின்றேன். அந்த ஆசிரியர் செய்நன்றி மறக்காது வாழ்ந்த நன்மகன். இவற்றைப் போல மேலும் சில சம்பவங்கள். 

பெற்றார் கொண்டு வரும் முறைப்பாடுகளைக் கவனத்தில் எடுத்தால், சிறியளவிலோ பெரியளவிலோ தவறு நடந்திருப்பதைக் காணலாம். அதற்காக ஆசிரியர்களையும் பெற்றாரையும் எதிர் எதிரே வைத்து விசாரிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தேன்.

இது வேறு வகையான  நிகழ்வு. ஓர் ஆசிரியை எனது அனுமதியுடன் குழந்தைக்குப் பால் கொடுக்க 11.00 அளவில் கல்லூரி வளவுக்கு வெளியே எனது அனுமதியுடன் போய்வருபவர். ஒரு தினம் திரும்பி வந்து கல்லூரி வளவுள் நுழையும் போது வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் கண்டுவிட்டார். அந்த ஆசிரியை பயத்தில் ஓடி வந்து சொன்னார். “பயப்படாமல் போங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று அனுப்பி வைத்தேன். என்னைப் புரிந்திருந்த கல்விப் பணிப்பாளர் அது பற்றிக் கேட்கவில்லை. அவர் உதவி ஆசிரியரை அழைக்கும்படி கேட்டிருந்தாற்கூட, நான் அழைத்திருக்க மாட்டேன். “நான்தான் மனித அபிமான அடிப்படையில் அனுமதித்தேன்” என்று கூறியிருப்பேன். என்னிடம் அனுமதிபெறாமல் போயிருந்தாற்கூட நான் உதவி ஆசிரியரை அழைத்திருக்க மாட்டேன். அதனை உள்வீட்டுப் பிரச்சினையாகக் கையாளவேண்டும்.

யூனியன் கல்லூரிக்குப் புகழ் சேர்த்த மேதைகள்
யாழ் பல்கலைக்கழத்தில் - உபவேந்தராக விருந்த உலகறிந்த தமிழ்ப்
பேராசிரியர் சு.வித்தியானந்தன்,



உபவேந்தராகவிருந்த பௌதிகவியல் பேராசிரியர் க.குணரத்தினம்,



ஹேலியின் வால்வெள்ளி தோன்றும் காலத்தை நுணுக்கமாகக் கணித்ததால் உலகப் புகழ் பெற்ற விண்ணியல் அறிஞரான அலன் ஏபிரகாம், 



தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம்,


மகாஜனக் கல்லூரி ஸ்தாபகரும் ஈழத் தமிழ் கவிதையின் முன்னோடியுமான பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை,


தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் தமிழ் இலக்கண வித்தகர் 
இ. நமசிவாயதேசிகர் என்போர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் புகழ்பூத்த பழைய மாணவர்களாகும்.

இன்னும் வரும்...

No comments:

Post a Comment