Thursday, 22 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்


யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

19.   மாலையில்கண்விழிக்கும் மைதானம் 

     விளையாட்டுத் துறைக்குத் திரு.வி.பாலசிங்கம் அவர்கள் பொறுப்பாக இருந்தார். பழைய மாணவராகிய, வீமன்காமத்தைச் சேர்ந்த அவர், கல்லூரிப் பற்றோடு காலநேரம் பாராமல் உழைத்தவர். பயிற்றப்பட்ட உடற் கல்வி ஆசிரியர். கடுமையான உழைப்பாளி. தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த அவர் எடுத்த முயற்சியைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவர். நன்றி மறவாத நேர்மையாளர். எனது நலன்களில் மிகவும் கரிசனை காட்டிய பல உயரிய மாண்புகள் நிறைவுறப் பெற்றவர். மாணவர்கள் மிக்க மரியாதை கொடுத்த ஆசிரியர். பாடசாலை ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு மிக்க உதவியாக இருந்தவர். அவரின் தலை தெரிந்தாலே மாணவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள். தலையைக் குனிந்து கொண்டு நழுவுவார்கள்.
தனது மாணவ வாழ்க்கையில் திரு. பாலசிங்கம் அவர்கள், யாழ் குடாநாட்டில் சிறந்த உதைபந்தாட்ட, கிரிக்கட் வீரராகப் பிரகாசித்தவர். அவரது துடுப்பாட்டத் திறமையைப் பழைய மாணவர்கள் சிலாகித்துப் பேசியதைக் கேட்டுள்ளேன். விளையாட்டுத் துறையில் மிக்க ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தை வெளியில் காட்டமாட்டார். யாழ் குடாநாட்டில் அவர் போன்று விளையாட்டுத்துறை பற்றிய ஞானமுடையவர்கள் அரிது.      


           உதைபந்தாட்டம்

மாலை வேளைகளில் திரு. பாலசிங்கம் அவர்கள் உதைபந்தாட்டப் பயிற்சி அளிப்பதைப் பார்த்தால், அவரது ஞானம் தெற்றெனத் தெரியும். கண்டிப்புடன்தான் நடை பெறும். தவறு விடுபவர்களை, மைதானத்தைச் சுற்றி ஓடவிடுவார். அந்தப் பயத்தில் எல்லாம் ஒழுங்காக நடக்கும். ஆனாலும் ஏனைய வேளைகளில் விளையாட்டு வீரர்களை அவர் மிகவும் அரவணைத்து நடத்துவதை அவதானித்துள்ளேன். விளையாட்டு வீரர்கள் அவருடன் மிக நெருக்கமாகப் பயபக்தியாகப் பழகுவதைக் காணலாம். திரு. பாலசிங்கம் அவர்களது உழைப்பால், JSSA நடாத்திய வருடாந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய உதை பந்தாட்ட முதலாம் பிரிவு 1978, 1979, 1980 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பியன் கேடயத்தைக் கைப்பற்றி ஒரு சாதனையை ஏற்படுத்தியது. சாம்பியன் கிண்ணத்தை வென்ற போட்டிகளில் விளையாடிய பலரது திருமுகங்கள், என் கண்களில் இப்பொழுதும் நிழலாடுகின்றன.

            விளையாட்டு வீரர்களில் இன்றும் கண்களில் நிழலாடுபவர் மாவிட்டபுரம் செல்வன் பஞ்சலிங்கம் பத்மநாதன். பந்தை இலாவகமாக எடுத்துச் சென்று, வெட்டி நகர்த்தும் சாதுரியத்தைப் பார்த்தவர்கள் மறக்க மாட்டார்கள். அப்படியே பார்வையாளன் மனதில் அமர்ந்துவிடுவார். ஓரளவுக்கு வெள்ளை. ஓரளவிற்குச் சுருண்ட கறுத்த தலைமயிர். பேசும் போது குரலில் தனித்துவம் தொனிக்கும். உயர் வகுப்பில் என்னிடம் புவியியல் பயின்றவர். பல்கலைக் கழகத்தில் வர்த்தகம் படித்துக்கொண்டிருந்த வேளை, தெல்லிப்பழை டச்சு றோட் வழியாக வீடு சென்று கொண்டிருந்த பொழுது, இந்திய சமாதானப் படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறைபதம் அடைந்துவிட்டார். அமரராகிவிட்ட அவரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றேன்.

மற்றும் மனதில் நிலைத்து நிற்கும் விளையாட்டு வீரர்கள்: செல்வன்கள் இன்பவடிவேல், கலாமோகன், சகாதேவன், சுதாகர் (கீப்பர்),  ஸ்ரீநாதன், தயாளன், நந்தன், மகேந்திரன், ராகவன் . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . .  .. . . . . . .  . . . . .      
               கிரிக்கட்

     கிறிகட் மிக்க செலவை ஏற்படுத்தும் விளையாட்டு. வசதிக் கட்டணத்தில் கணிசமான பகுதியைச் செலவிட வேண்டியிருந்தது. நூல் நிலையத்துக்குச் செலவிடப்படும் பணத்தைக்கூட ஒறுத்துச் செலவு செய்ய வேண்டிய விளையாட்டு. விளையாடும் மாணவனிடம் ‘பற்’ ‘போல்’ கொண்டுவா என்றால் ஒன்று இரண்டு பேரால்தான் முடியும். ஒரு ஆடுகளப் பாய்க்கு மட்டும் ஆயிரக்கணக்கில் செலவாகும். செலவு காரணமாகவே அநேக பாடசாலைகள் அவ்விளையாட்டில் நாட்டம் செலுத்துவதில்லை. அது ஒரு தேசிய விளையாட்டாக உள்ளது. ஒரு விளையாட்டுக்காகப் பெருந்தொகைப் பணம் இழக்கப்படுவதைத் தவிர்க்க, அரசு மானியம் கொடுத்து உதவவேண்டும்.

     கிறிகட் விளையாட்டுக்கும் திரு. பாலசிங்கம் அவர்களே பொறுப்பாக இருந்தார். அதிலும் சிறந்த ஞான முடையவராக விளங்கினார். கண்டிப்பான கிரமமான பயிற்சிகளை வழங்கினார். அதனால் பாடசாலைகளுக் கிடையிலான போட்டிகளில் யூனியன் கல்லூரி கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றது. 

கிறிகட் விளையாடிய வீரர்களில் நினைவில் நிற்கும் பெயர்கள்:
இரமணன், இரவீந்திரன், கமலநாதன், கிரிதரன், குகன், சதானந்தன், சத்தியசீலன் செ.சிவரூபன், சிறீகரன், செந்தில்நாதன், ஜனகராஜ், தனராஜ், தயாபரன், பொன்வில்லியஸ்,  மகேந்திரன், லெஸ்லி சஞ்சீவன், ந.விநோதன், றன்சித், . . . . . . . . . . . .. . .

இவர்களில் சத்தியபாலன், செந்தில்நாதன், வினோதன் ஆகியோர் சதம் அடித்தவர்களாகும்.
      
விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாக இருந்து யூனியனின் பெயரை உயர உயரப் பறக்க வைத்த திரு. வி. பாலசிங்கம் அவர்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கும், பலன் கருதாது எனக்குச் செய்த உதவிகளுக்கும் என் உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். வலிகாமம் கல்வி வலைய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ள அவருக்கு, மேலும் பெருமைகளும் அதிஷ்டங்களும், பதவி உயர்வுகளும் சேரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன். அவரது குடும்பத்துக்கு இறைவன் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
    
சில பழைய மாணவர்கள் மாலை வேளைகளில் கல்லூரிக்குக் கிரமமாகச் சமூகமளித்துத் திரு. பாலசிங்கம் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தனர். விளையாட்டுப் போட்டிகளின் பொழுது அணிநடைக்குப் பயிற்சி அளிக்க வேலையிலிருந்து ஓடிவரும் திரு. கந்தையா அருந்தவராசா அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். உதைபந்தாட்ட மூன்றாம் பிரிவினருக்குப் பயிற்சி வழங்கிய திரு. சத்தியநாதன் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். கனடாவில் அவரைப் பார்த்தேன். இருவருக்கும் இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது. யூனியன் கல்லூரி ஞாபகங்கள் முகிழ்த்து மலர்ந்தன. பக்கபலமாக இருந்தவர்கள் வரிசையில் குறிப்பிட வேண்டிய ஏனையவர்கள் எஸ்.சிவராசா, செ.சுந்தரேஸ்வரன், எஸ்.தர்மராசா ஆகியோர்கள். அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக் களையும் தெரிவிக்கின்றேன்.

பழைய மாணவர்களில் விசேடமாகக் குறிப்பிட வேண்டியவர் திரு.செ.சுந்தரேஸ்வரன் (வரன்) அவர்கள். மாலை வேளைகளில் வளாகத்தில் காணாத நாட்கள் அருமை. அவரும் திரு. பாலசிங்கமும் எப்பொழுதும் ஒட்டாத இரட்டையர்கள் போலவே வளாகத்தில் காணப்பட்டனர். தோற்றத்தில் வீமனையும் அருச்சுனனையும் நினைவூட்டினர். திரு.சுந்தரேஸ்வரன் அவர்கள் என்றும் அக்கறையுடன் எனக்கு உதவி நின்றவர். நற்சிந்தனை நிறைந்த பெருந் தன்மைகள் பல இயல்பாக வாய்க்கப் பெற்றவர். அவர் எவ்வளவுக்கு எனக்குப் பக்கபலமாக விருந்தார் என்பதற்கு ஒரு சிறு சம்பவ உதாரணம்.

1983 - ஒரு முன்னிரவு 7.00 மணியளவில் எனது துணைவியாரைப் பாம்பு தீண்டிவிட்டது. அதனை அறிந்து நான் அவ்விடம் ஒடிச் சென்ற பொழுது, அவர் உணர்விழந்துவிட்டார். உறவினர் பாலசுப்பிரமணியம் பிளேட்டால் பெருவிரலில் உள்ள கடிவாயை வெட்டி இரத்தத்தை உறிஞ்சித் துப்பிக் கொண்டிருந்தார். அதே வேளை யாரோ இரண்டு கோழிகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவர் ஒன்றன் ஆசனத்தைக் கடிவாயில் ஒரு நிமிடம் வரை வைத்து அழுத்தினார். அந்தக் கோழி இறந்து விட்டது. அடுத்த கோழியையும் அவ்வாறே செய்ய அது மயங்கியது. காரில் தெல்லிப்பழை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போனோம். அங்கு பாம்புக் கடி மருந்து இல்லை. பின்னர் யாழ் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம். என்ன பாம்பு என்று தெரிந்தால், அதற்குரிய மருந்தைக் கொடுத்து வைத்தியம் செய்வது இலகுவாகவிருக்கும். எம்மால் கூறமுடியவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தோம். இன்னும் உணர்வு மீளவில்லை. அங்கு முதலாவதாக வந்தவர்கள் திருவாளர்கள் வரனும், பாலசிங்கமுமே. அவர்கள் இரவு பதினொரு மணியளவில் திரும்பிப் போய்விட்டார்கள். இரவு மூன்று மணியளவில் திரு.சுந்தரேஸ்வரனும், திரு.பாலசிங்கமும் திரும்பி ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். தீண்டிய விடலைப்பருவ நாக பாம்பை ஒரு போத்தலில் கொண்டு வந்திருந்தார்கள். அதனைக் கடித்த இடத்துக்கு அண்மையில் மயங்கிய நிலையில் தேடிக் கண்டுபிடித்ததாகக் கூறினார்கள். அடுத்த தினம் பகல் பத்து மணியளவில் பாரியார் கண்விழிக்கு மட்டும் அவர்கள் அங்கேயே சுற்றிக் கொண்டு நின்றார்கள். அதற்கு நான் அவர்களுக்கு எந்தக் கைமாறும் செய்ததில்லை. வேறும் பல உதவிகளைப் பலன் கருதாது செய்தனர். அப்படியான நல்ல நினைவுகள் எண்ணங்கள் செயல்களே அவர்கள் இருவரும் வாழ்க்கையில் உயர்ந்து உயர்ந்து செல்லக் காரணம். திரு. சுந்தரேஸ்வரன் அவர்கள் பிரபல பல மில்லியன்கள் ஒப்பந்தக்காரராக உயர்ந்து நிற்கின்றார். அவருக்கு நன்றி சொல்வதோடு அவர் தனது தொழிலில் மேலும் மேலும் சிறப்படைந்து பேரும் புகழுமாக வாழ வாழ்த்துகிறேன். அவர்கள் குடும்பத்துக்கு அதிஷ்டங்கள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.    

             ஹொக்கி அறிமுகம் 

     யூனியன் கல்லூரி விளையாட்டுத்துறைக்குச் சிறந்த பணியாற்றிய BSc. பட்டதாரியான திரு. அல்பேட் இராசையா அவர்களது நாமம் கல்லூரி வரலாற்றில் என்றும் நின்று நிலைக்கும். சினிமா ஹீரோக்களைவிட அழகான உயர்ந்த குங்கும வெள்ளை நிறமான அவரின் குணச்சித்திரமும், அவரைப் போலவே உயர்வானது. அவரது ஒழுக்க விழுமியங்களும் தனித்துவமானவை. இப்படித்தான் வாழவேண்டும் என்று எல்லைக் கோடு அமைத்து வாழ்ந்தவர். எல்லாவற்றிலும் ஒரு கிரமம் இருக்கும். மேலான பல நல்ல குணங்கள் பிரகாசிக்கும் உத்தமர். மாணவப் பருவத்தில் உதைபந்தாட்டம், ரெனிஸ், ஹொக்கி, தடியூன்றிப் பாய்தல், தடைதாண்டடிப் பாய்;தல் விளையாட்டுக்களில் யாழ் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தியவர். All Ceylon Open A.A போட்டியில் தடியூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் புரிந்த சாதனையை அவதானித்த - உலகளாவிய தடியூன்றிப் பாய்தல் போட்டியில்; சாதனை புரிந்த Bbob Richard என்பவரால் - ஒழிவிச்சு நிறைந்த எதிர் காலம் உடைய விளையாட்டுவீரர் என்று போற்றப்பட்டவர்.  யூனியன் கல்லூரியில் ஹொக்கி விளையாட்டை - அதிபர் திரு. த.நடராசா அவர்களது காலத்தில் - அறிமுகஞ் செய்து வைத்துப் பயிற்சியளித்துச் சாதனைகள் புரிந்தவர். திரு.இராசையா அவர்கள் ஓய்வு பெற்று வெளிநாடு சென்ற பின்னர், அதனைத் தொடரத் தகுந்த பயிற்றுவிப்பாளர் இல்லாது போய்விட்டது. 

     திரு. இராசையா அவர்களது அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளால் வருடாந்தம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக் கிடையில் நடாத்தப்பட்ட 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹொக்கி போட்டிகளில் யூனியன் கல்லூரி தொடர்ந்து 1977, 1978, 1979 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் கேடயத்தை வென்றது. 19 வயதிற்குக் உட்பட்ட பிரிவினர் இரு தடவைகள் சாம்பியன் கேடயத்தை வென்றனர்.

      திரு.இராசையா அவர்கள் மெய்வல்லுநர் போட்டியாளருக்கும் பயிற்சி அளித்தவர். அவரது உழைப்பின் காரணமாக - 17 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான, அகில இலங்கை மட்டத்திலான பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் தடியூண்டிப் பாய்தல் நிகழ்ச்சியில், செல்வன் மகேந்திரன் முதலாம் இடத்தைப் பெற்று ஒரு புதிய அகில இலங்கைச் சாதனையை நிலைநாட்டிக் கல்லூரிக்குப் புகழ் சேர்த்தார். 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சிறீநாதன் தடியூண்டிப் பாய்தலில் முதலாமிடத்தைப் பெற்றார். வேறும் யாழ் பாடசாலைகளுக் கிடையிலான JSSA மெய்வல்லுநர்கள் போட்டிகளில் பல முதலாமிடங்களை அவரது மாணர்கள் பெற்றனர். அத்தோடு சிரேட்ட பிரிவு மாணவருக்கான பிரிவின் சாம்பியனாக சிறீநாதனும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான சாம்பியனாக  மகேந்திரனும் தெரிவு செய்யப்பட்டனர். கட்டுவனைச் சேர்ந்த இரவீந்திரன் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாம்பியனாகத் தெரிவுசெய்யப்பெற்றார். தடைதாண்டி போட்டியில் கலாமோகன், மல்லாகத்தைச் சேர்ந்த தனராஜ் இருவரும் சாதனைகள் புரிந்து கல்லூரிக்குப் புகழ் சேர்த்தனர். திரு.இராசையா அவர்களின் சேவையை விபரிப்பின் அது நீண்டு நீண்டு செல்லும். 

இவ்வேளை, ஒஸ்ரேலியாவில் வாழும் திரு.அல்பேட் இராசையா அவர்கள் யூனியன் கல்லூரியின் விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய புகழ்பூத்த பெரும் பணிக்காகவும், விலங்கியல் பாடத்தைச் சிறப்புறப் போதித்தமைக்காகவும், விஞ்ஞானத்துறைப் பகுதித் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு, சீரும் சிறப்பும் மகிழ்ச்சியுமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
                           
        வலைப்பந்தாட்டம்

பெண்களுக்கான வலைப்பந்து விளையாட்டுக்குப் பொறுப்பாக ஆரம்பத்தில் கட்டுவனைச் சேர்ந்த திருமதி மங்களபூபதி செல்வரத்தினம் இருந்தார். இவர் உடற் கல்விப் பயிற்சிபெற்ற ஆசிரியை. ஒரு கல்லூரிக்கு இரு உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்கப்படாது என்ற காரணத்தைக் காட்டிக் கல்வித் திணைக்களம் அவரை வெளியேற்றியது. கல்வித் திணைக்கள அதிகாரிகள் மாணவர்களை மையமாக வைத்துச் செயல்படுவது கல்வி மேம்பாட்டிற்கு நல்லது. திருமதி செல்வரத்தினம் மாற்றப்பட்டதால் ஆசிரியைகள் திருமதிகள் பராசக்தி கனகராசேஸ்வரன், பத்மா வரராஜசிங்கம், இராணி கந்தசாமி ஆகியோர் பொறுப்பை ஏற்றனர். திருமதி பராசக்தி கனகராசேஸ்வரன் எட்ட வரும் பொழுதே அநாயசமாகச் சிரித்துக் கதை சொல்லிக்கொண்டு வருவார். அந்தச் சிரிப்புக்குள் எதுவும் இருக்காது. வாய் திறக்கவிடாமல் நிரம்பக் கதைப்பார். அதற்கு எதிர்மாறாகத் திருமதி பத்மா வரராஜசிங்கம் நிரம்பப் பேசமாட்டார். கிராமத்துக் குமர்ப் பெண்பிள்ளைகள் போல ஒதுங்கி ஒதுங்கி நிற்பார். திருமதி இராணி கந்தசாமி இவர்கள் இருவரையும்விட வேறுப்பட்டவர். நிதானமாகத்தான் பேசுவார். தானுண்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கிவிடுவார். மூவரும்  வலைப் பந்தாட்ட பயிற்சி முயற்சிகளை முன்னெடுத்தனர். மகாஜனக் கல்லூரி, இளவாலை கொன்வென்ற், நடேஸ்வராக் கல்லூரி என்பனவற்றுடன் வலைப் பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றனர். பயிற்சி அளித்த மூன்று ஆசிரியைகளுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.


நினைவில் வந்து போகிற சிறந்த வலைப்பந்து விளையாட்டு வீராங்கனைகள்: கவிதா சபாரத்தினம், காஞ்சனா சபாரத்தினம், காமினி முருகையா, சாந்தி (கட்டுவன்), சாமினி முருகையா. வசந்தினி முருகையா,  வாசுகி . ஜயந்தி (ஸ்ரீகரன்). இவர்களில் காமினி, சாமினி சகோதரிகளின் அபார ஆட்டத்தை மெய்மறந்து பார்க்கலாம். அத்தனை இலாவகமாகப் பந்தை நகர்த்தி, அநாயாசமாக வளையத்துள் ‘சூற்’ பண்ணுவார்கள். இவர்கள் இருவரும் மானிப்பாய் மகளிர் கல்லூரியிலிருந்து எமது கல்லூரியில் இணைந்தவர்களாகும். இவர்களின் ஆட்டத்தைக் கண்டு கல்லூரி முழுவதும் வியந்தது. 

நிறைவுற்றது.

No comments:

Post a Comment