அதிகாரம் 07 - புரியாத புதிர்
ஆலினைப் பற்றிய தகவல்கள் எல்லாம் தொழிற்சாலை
முழுவதும் வெளியான பின்னர், மிக்கெய்ல் என்னும் சுவீடன் நாட்டவன் ஒருவன் அவளுடன் மிக நெருக்கமாகப் பழகத்தொடங்கினான்.
அவனது மனைவி ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி என்பதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
அவுஸ்திரேலியாவில் இலங்கை இந்திய நாட்டுக்காரர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களை திருமணம்
புரிந்துள்ளார்கள். அதுவும் கூடுதலாக ஆண்கள்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களைத் திருமணம்
செய்துள்ளார்கள். ஆனால் வியட்நாமியர்களையோ சீனர்களையோ கலப்புத்திருமணம் செய்வது ஒப்பீட்டு
ரீதியில் குறைவாகவே இருக்கிறது.
மிக்கெய்லும் ஆலினும் கதைக்கும் போதும், ஒன்று சேர்ந்து நடக்கும்போதும் வேடிக்கையாக
இருக்கும். மிக்கெய்ல் ஆலினைவிட இரண்டரை
மடங்கு உயரமும் பருமனும் கொண்டவன். பொதுவாக அவன் அவளுடன் கதைப்பதெல்லாம் கிறிஸ்தவ மதம்
பற்றித்தான். அவளுக்கு அதில் நாட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருதடவை 'ரென் கொமன்மென்ற்ஸ்' என்று எழுதிய பேனை ஒன்றை மிக்கெய்ல் அவளிற்கு
பரிசாகக் கொடுத்தான். அவளுக்கு மிக்கெய்லினது செய்கைகளும் மதம் பற்றிய போதனைகளும் சலிப்பைக்
கொடுத்தன. இருந்தும் காட்டிக் கொள்ளாதவளாக நடந்து கொண்டாள்.