Wednesday, 8 March 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் நான்கு - மெல்பேர்ண் வானிலை 

கோடைகாலம் தொடங்கிவிட்டது. நேற்று அனலாகக் காற்று வீசியது. வெப்பநிலை நாற்பது பாகை செல்சியசிற்கும் மேலே போய்விட்டது. இன்றும் பகல் அனல்தான்.

நேரம் இரவு இரண்டு முப்பது. வேலை முடித்து வீடு வந்து கராஜ்ஜிற்கு முன்னால் காரை நிறுத்தினான் நந்தன்.  வேலைத் தலத்திலிருந்து நந்தனின் வீடு வர இருபது நிமிடங்கள் போதுமானது. காரைவிட்டு இறங்கும்போது கடும் குளிராக இருந்தது. மெல்பேர்ண் வானிலை பற்றி தீர்க்கமாக எதுவும் கூறமுடியாது. நேரத்திற்கு நேரம் மாறுபடும். நம்பி எதுவும் செய்ய முடியாது.

வீட்டைத் திறந்து கொண்டிருக்கும்போது - பின்னாலே இரண்டு வாகனங்கள் பிரதானவீதியிலிருந்து திரும்பி ஒளி வெள்ளம் பாய்ச்சியபடியே இவன் வீட்டுப் பக்கமாக வந்தன. இவன் தன்னை யாராவது நோட்டம் விடுவதற்காக வந்தார்களா என அறிவதற்காக, வீட்டிற்குள் சென்று யன்னல் சீலையை விலக்கி மறைந்து நின்று பார்த்தான். ஒன்று கார், மற்றது குளூகர். இரண்டும் வீதியில் மெதுவாக நின்றன. இயந்திரங்கள் நின்று, ஒளியும் அணைந்தன. நல்ல நிலவு வெளிச்சம். குளூகரிற்குள் இருந்த பெண் இவன் வேலை செய்யும் இடத்தில் இன்னொரு பகுதியில் வேலை செய்யும் கிறீக் நாட்டுப்பெண் ஆச்சிமா. மற்றக் காரிற்குள் இருந்தவன் அல்பேற்றோ. சிறிது நேரம் சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது. பின்பு அல்பேற்றோ தனது காரில் இருந்து இறங்கி ஆச்சிமாவின் குளூகரிற்குள் ஏறினான். சற்று நேரத்தில் கார் இயங்கத் தொடங்கியது.

அப்பொழுதுதான் இரவில் இன்னொரு உலகம் இங்கு இருப்பது நந்தனுக்குத் தெரிந்தது.

 இதற்கு முன்னர் நந்தன் அவர்களை இங்கு கண்டதில்லை. நேரத்திற்கு நேரம் இடத்தை மாற்றுபவர்களாக இருக்கலாம்.

திருமணம் முடித்த ஆச்சிமா இரண்டு பெண்பிள்ளைகளின் தாய். அல்பேற்றோவிற்கு மூன்று பிள்ளைகள்.

தொழிற்சாலையில் வேலை செய்பவர்களில் பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள். அவர்களும் ஆண்களுக்குச் சமானமாக சளைக்காமல் வேலை செய்கின்றார்கள். வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆண் துணையை வைத்திருக்கின்றார்கள். வீட்டில் கணவன் பிள்ளைகள் என்று இருக்கும்போது மனச்சாட்சி என்று ஒன்று இல்லாமல் ஏன் இப்படி இவர்கள் நடந்து கொள்கின்றார்கள். அப்படி ஒரு ஆண் துணை இருப்பதால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், சில பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாகவும் அவர்கள் சொல்கின்றார்கள்.

உலகத்தில் ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயமா? ஆண்கள் எதுவும் செய்யலாம். பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்புடன் தான் இருக்க வேண்டுமா?

வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்ததும், புதிருமான ஒரு பெரும் காடு. அங்கே சிங்கங்கள் இருக்கலாம், புலிகள் இருக்கலாம், நன்றியுள்ள நாய்கூட இருக்கலாம். ஒரு புறம் புகுந்து மறுபுறத்தால் வெளியேறும்போது தெளிவு பெற்றவர்கள் ஆகி விடுகிறோம்.

சில இளம் ஆண்களும் பெண்களும் இரவு நேரத்தில் வேலை செய்வதை விரும்புவதில்லை. அதுதான் குடும்பத்தில் குழப்பத்திற்குக் காரணம் என அவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கின்றான்.

சவரில் ஆசை தீரக் குளித்துவிட்டு வந்து மீண்டும் யன்னல் சீலையை விலத்திப் பார்த்தான் நந்தன். குளூகரும் காரும் அங்கிருக்கவில்லை. மனைவியும் பிள்ளைகளும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். நந்தனுக்கு உறக்கம் வரவில்லை.

வேலை செய்யும் இடம் பற்றிச் சிந்தித்தான். அங்கே பெண்கள் வேலை செய்யும் விகிதம் ஆண்களைவிடக் குறைவானதுதான். பத்துக்கு ஒன்று என்று சொல்லலாம். வேண்டுமென்றால் பகலில் வேலை செய்பவர்களை விட இரவில் கூட என்று சொல்லலாம். எல்லாரும் துணிவாக வேலைக்கு வந்து போகின்றார்கள். நந்தனின் செக்‌ஷனில் நான்கு பெண்கள் வேலை செய்கின்றார்கள்.

பெயின்ற் சொப்பில் வேலை செய்யும் பெண்களில் ஃபுங் என்னும் வியட்நாமியப் பெண் நந்தனுக்கு ஆச்சரியத்தைத் தருபவள். ஃபுங் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வாள்.  அவளின் பேச்சு – குருவிகள் அவசர அவசரமாகத் தானியங்களைக் கொத்தி விழுங்குவது போன்று இருக்கும். இரவு வேலை செய்யும் பெண்களில் அவள் மிகவும் அழகானவள். அவளை ‘மெல்பேர்ண் வெதர் என்று சொல்லுவார்கள். மெல்பேர்ண் வெதரைப் போல நேரத்திற்கு நேரம் அவள் தன் இயல்புகளை மாற்றிக் கொள்வாள். வேலை செய்யும் இடத்திலேயே நகத்தை வெட்டித் துப்பரவாக்கி nail polish போடுவாள். தலை வாருவாள். லிப்ஸ்ரிக் போடுவாள்.

சிறிய காந்தம் போலும் விழிகள், ஒடுங்கிய கன்னங்கள், முகத்திற்கு என்ன பூசுகின்றாளோ எப்பொழுதும் மினுங்கியபடி இருக்கும். நாற்பத்தைந்து கிலோ எடை கொண்ட அவளிடம், முகத்துக்கு போடுற பவுண்டேஷன் ஒரு ஐந்து கிலோ இருக்குமா? என்று கேட்டால் சிரிப்பாள்.

இந்த நாட்களில் ஒரு ஆண் துணையை மாத்திரம் நம்பி ஒன்றும் செய்ய முடியாது என்பாள் புங்.

ஒருமுறை புங்கிடம் நந்தன் உன்னிடம் ‘Three seasons’ மூவி சிடி இருக்கின்றதா என்று கேட்டான். அதற்கு அவள் “உனக்கு Four  seasons”  வேண்டுமா என்று திருப்பிக் கேட்டாள். நந்தன் கேட்டது ஒரு வியட்நாமியத் திரைப்படம். இப்படி சமயத்தில் செக்ஸ் அள்ளி வீசிவிடுவாள் அவள்.

அவளின் கணவன் ஒரு பொறியியலாளராக வேலை செய்கின்றான். காலை சூரியன் உதமாவதற்கு முன்னால் புறப்பட்டால் வீடு வர இரவு நட்சத்திரங்கள் வந்துவிடும். இவள் மாலை புறப்பட்டால் வீடு வர விடிந்துவிடும். இடையில் பிள்ளைகளின் பாடு திண்டாட்டம்தான். படிப்பு, சாப்பாடு.... உரிய வேளையில் செய்யப்படவேண்டியவை செய்ய முடியாமல் போய்விடும்.

எப்பொழுதும் அந்தஸ்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு அதுபற்றிய கரிசனை துளியும் கிடையாது.

சிறிது நேரம் ரிவி பார்த்துவிட்டு உறங்கப் போனான்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நந்தனை தொலைபேசி கிணுகிணுத்து எழுப்பியது. அப்போது நேரம் காலை ஆறுமணி. அவனுடன் சிறுவயதில் படித்த நண்பன் ஒருவன் தனது குடும்பத்துடன் புதிதாக அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து வந்திருந்தான். அவன் தங்களுக்கு ஒரு கார் வாங்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டான். நந்தன் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்வதால் கார் பற்றி ஏதாவது விபரங்கள் தேவைப்படும்போது இப்படி நந்தனுடன் சிலர் தொடர்பு கொள்ளுவார்கள்.

படுக்கையிலிருந்து எழுந்ததும் தான் வளர்க்கும் கினிப்பிக்சை (guinea pigs) பார்க்கப் போய்விடுவான் நந்தன். மகளிற்கு செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசை என்பதால் அந்த வீட்டிற்கு எத்தனையோ பெற்ஸ் வந்து போய்விட்டன. இப்போது அம்மா, அப்பா, மூன்று பிள்ளைகள் கொண்ட கினிப்பிக்ஸ் குடும்பம். நந்தனுக்கு அதிர்ச்சி காத்துக் கிடந்தது. அத்தனை கினிப்பிக்சும் குளிரினால் விறைத்து இறந்து கிடந்தன.

காலநிலைக்குத் தக்கவாறு, குளிர் காலங்களில் அவற்றை ஒரு படங்குத் துணியினால் மூடி வைப்பது வழக்கம். ஆனால் இன்று மெல்பேர்ண் காலநிலை அவனின் காலை வாரிவிட்டது. மகனும் மகளும் எழுந்துவிடுவதற்கு முன்பாக, நிலத்தைக் கிண்டி அவற்றை மூடினான். கவலையுடன் மீண்டும் படுக்கைக்குச் சென்றான்.

மெல்பேர்ணில் மூன்று டபிள்யுக்களை  நம்பக்கூடாது என்பார்கள். work weather and  women--- வேலை, காலநிலை  அடுத்தது பெண். மூன்றுமே காலை வாரிவிடும் என்பார்கள்.



தொடரும் ...

No comments:

Post a Comment