Tuesday, 25 April 2017

தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)

 

கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின் மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.

உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.
 

ஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார்.

களுத்துறையில் வெளிவந்த ‘ஈழதேவி’ இதழின் வளர்ச்சிக்கும், அது பின்னர் இடம் மாறி - சிற்பி சி. சிவசரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 1958 முதல் 1966 வரை வெளிவந்த ’கலைச்செல்வி’ சஞ்சிகையின் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர். இவரது நண்பர் பாலசுப்பிரமணியம் களுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் ’ஈழதேவி’ இதழை நடத்தி வந்தார். 1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ்ச்சஞ்சிகையை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது, இவர்கள் இருவரும் சிற்பியைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பே ‘கலைச்செல்வி’ இதழ் வெளிவர அத்திவாரமானது.

இவர் தனது எழுத்துலகிற்கு வித்திட்டவர்களாக யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி தமிழாசிரியர் இ.கேதீஸ்வரநாதன், மற்றும் வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு.ஞானப்பிரகாசம் என்பவர்களை நினைவு கூருகின்றார்.

1983 இல் இருந்து 25 வருடங்கள் பின்லாந்தில் வசித்துவந்த உதயணன், தற்போது கனடாவில் வசிக்கின்றார் என்ற செய்தியை நண்பர் சொன்னார். அவரது ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ நூலை வாசிக்கத் தொடங்கியதும் பின்லாந்து நாட்டினுள் நான் பயணமாகத் தொடங்கினேன். வாசிக்கத் தூண்டும் விதத்தில் நகைச்சுவை உணர்வுடன் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது.

உலகிலே சிறந்த கல்விக் கட்டமைப்பைக் கொண்டு விளங்கும் நாடுகளில் பின்லாந்து முதன்மையான இடத்தை வகிக்கின்றது. அத்தகைய நாட்டில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் 1986 இல் நியமனம் பெற்றார். பழந்தமிழ் இலக்கியங்களைப் பின்னிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் பணி இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம் என்னும் படைப்புகளில் இவர் பங்களிப்புச் செய்திருந்தார். அத்துடன் பின்லாந்தின் தேசிய காவியமான செய்யுள் வடிவில் அமைந்த ‘கலேவலா’ (KALEVALA) என்பதை மூலமொழியான பின்னிஷ் மொழியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்தார். மூன்று ஆண்டுகால கடும் பணியின் நிமித்தம், 1994 ஆம் ஆண்டு பின்னிஷ் மொழியிலிருந்து தமிழிற்கு வந்த முதல் நூல் என்னும் பெருமை கொள்கின்றது ‘கலேவலா’.

 


’கலேவா’ இனத்தவர் வாழ்ந்த இடம் ‘கலேவலா’. வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றை எலியாஸ் லொண்ரொத் (Elias Lonnrot) என்பவர் தொகுத்தார். பின்லாந்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ஜெயன் சிபெல்லியுஸ் (Jean Sibelius) என்பவர் இப்பாடல்களில் சிலவற்றிற்கு இசை வடிவம் கொடுத்துள்ளார். கலேவலா பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனைகதைகளையும், கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட முதல் ஆயிரம் ஆண்டுப்பகுதியில் நிகழ்ந்த ஸ்கண்டினேவியக் கடல்வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட கலேவலாவின் போர் நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது. இறுதிப்பாடல், பின்லாந்து நாட்டை வெற்றி கொண்ட சுவீடிஷ்காரர் கி.பி 1155ல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறிஸ்துவத்தின் வெற்றியை கருவாகக் கொண்டது.

செய்யுள் நடையில் / மரபுக்கவிதை வடிவில் தமிழில் வந்த ‘கலேவலா’வை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால் ’உரைநடையில் கலேவலா’ 1999 இல் வெளிவந்தது. இது இலங்கை அரசின் 1999 ஆம் ஆண்டுக்கான சாகித்திய இலக்கிய விருதைப் பெற்றது.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்லாந்தில் தமிழ் ஆர்வமும், இலக்கிய அறிவும் உள்ளவர்கள் இல்லாதபோது - ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உதயணனிற்கு பின்புலமாக நின்று எல்லாவற்றையும் இயக்கியவர் உலகத் தமிழ் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் அஸ்கோ பார்பொலா (Dr Asko Parpola). இவர் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித்திணைக்களத்தின் இந்தியவியல் அம்பந்தப்பட்ட கல்விக்குப் பொறுப்பாக இருந்தவர். உதயணன் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் 19 வருடங்கள் தமிழ் கற்பித்தார்.

உதயணன் சமீப காலங்களில் வெளியீடு செய்த புத்தகங்கள் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ கட்டுரைத் தொகுப்பு, ‘பிரிந்தவர் பேசினால்’, ‘உங்கள் தீர்ப்பு என்ன?’ சிறுகதைத்தொகுப்புகள். இந்த இரண்டு தொகுதிகளிலும் அடங்கும் சிறுகதைகள் 1957 - 80 ஆண்டு காலப்பகுதிகளில் வெளிவந்தவை.

 


கடந்த வருட இறுதியில் எனக்கு கனடா போகச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கு முன்பதாக உதயணன் அவர்களுக்கு நான் கனடா வருவதாகவும், சந்திக்க விரும்புவதாகவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரும் ஆவலாக என்னைக் காணக் காத்திருந்தார். அப்போது கனடாவில் வெளிவரும் ‘தாய்வீடு’ என்னும் மாதப்பத்திரிகையில் அவர் எழுதிக் கொண்டிருந்தார். ‘நண்பரே, போய் வாருங்கள்!’ என்று ஒரு கட்டுரையை எழுதிக் கொடுத்துவிட்டு, கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல்நாள் வைத்தியசாலையில் போய் ஒளிந்து கொண்டுவிட்டார். நான் வைத்தியசாலை சென்று அவரைச் சந்தித்தேன். அவர் புத்தகத்தில் மாத்திரமன்றி நிஜத்திலும் நகைச்சுவை உணர்வுடனே பேசிக் கொண்டிருந்தார்.

உதயணன், இலங்கையில் ஆங்கில மொழியில் தேர்வு எழுதி அரச சேவையில் பணியாற்றியவர். இருப்பினும் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலுமே ஆர்வமாக இருந்துள்ளார். இந்நிலையில் பின்லாந்திற்குள் அடியெடுத்து வைத்தபோது மனதில் ஒரு பயமும் வருத்தமும் இருந்ததாகக் கூறினார். ஆனால் பின்லாந்தில் தமிழ் இவரால் வாழ்ந்தது. இவர் தமிழால் வாழ்ந்தார்.

நீண்ட நேரம் உரையாடிவிட்டு பிரிய மனமின்றி விடைபெற்றேன்.

தற்போதைய ஈழத்து எழுத்தாளர்களில் நகைச்சுவை / அங்கதச் சுவை கொண்ட எழுத்தாளர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றார்கள். உதயணன் மீண்டும் சுகம் பெற்று நகைச்சுவை உணர்வுடன் கட்டுரைகள் எழுத வேண்டும்.



2 comments:

  1. உதயணன் பற்றிய அறிமுகம் நன்று. அவரது மொழி பெயர்ப்பில், பின்லாந்து அமர காவியம் கலேவலா படித்திருக்கிறேன். மிக சிறப்பான மொழியாக்கம். அவரது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா. இருந்தால், malaramuthan@gmail.com என்ற முகவரிக்கு தாருங்கள். நன்றி

    ReplyDelete
  2. உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள்.

    ReplyDelete