Tuesday, 4 April 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 8 -  குண்டுப் பையனும் (Bomb boy), டாக்டர் பாமும்

பாம் போய் (குண்டுப் பையன்) பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பான். கொழுகொழுவென்ற முகமும் வெள்ளை வெளேரென்ற நிறமும் கொண்டவன். என்ன ஒரு குறை. அவனை அறியாமலே வாணம் விட்டுவிடுவான். Skunk  (பூனை போன்ற ஒரு விலங்கு) விட்டுத் தள்ளும் வீரியம் கொண்ட நாற்றம் போன்றது அது. அது அவனைச் சுற்றிப் பரவும்போது, வேலையை நிறுத்திவிட்டு  எல்லோரும் ஓடி விடுவார்கள்.

வேலை கடுமையான இடங்களில், வேலை செய்யப் பிடிக்காத இடங்களில் அவன் இப்படிப்பட்ட குண்டைப் போட்டுவிடுவதாக ஒரு வதந்தி உருவாகியிருந்தது. ஸ்மாட்டாகக் குண்டைப் போட்டு தப்பித்துக் கொள்கின்றான் என்றே எல்லாரும் நம்பினார்கள்.

அவன் அணியும் தொப்பியே வித்தியாசமானது. காது கழுத்து என்பவறையும் மூடிக் கட்டக்கூடியது அது. அவன் பொம் போடும்போது யாராவது சிரித்தார்களோ அல்லது ஏசினார்களோ எதுவுமே அவனுக்குக் கேட்பதில்லை.

அவன் அணியும் எல்லா மேற்சட்டைகளிலும் இரண்டு பொக்கற்றுகள் இருக்கும். நாற்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டான். திருமணமாகாத அவனின் சேமிப்பு வங்கியில் நிரம்பி வழிந்தது போக, மிகுதியை தனது நான்கு பொக்கற்றுகளுக்குள்ளும் நிரப்பி வைத்திருப்பான். அவனுக்கு நான்கு வீடுகள் உள்ளன. புற்ஸ்கிறே சந்தையில் எல்லாரும் கலைந்து செல்லும் வேளையில் போய் நின்று அங்குள்ள கடைகளை எட்டிப் பார்ப்பான். நாறிய மீன், அழுகிப்போன பழங்கள், நாட்பட்ட பொருட்கள் வாங்குவதில் வல்லவன்.

அவன் பாத்றூமிற்குள் நின்று, தண்ணீர்ப்பைப்பைத் திறந்துவிட்டு, நீரினால் முகத்தை அடித்து அடித்துக் கழுவுவான். தண்ணீர் – அது பாட்டிற்கு சலசலத்து ஓடும். பெயின்ற் ஒவ்வாத தன்மையால், குறைந்தது முக்கால் மணி நேரத்திற்கு ஒருதடவை அவனை அங்கே காணலாம். அங்கும் சிலவேளைகளில் வாணத்தை விட்டுப் புரளியைக் கிழப்பி விடுவான்.
தொழிற்சாலையில் நடைபெறும் விருந்துகளின்போதும், வெள்ளிக்கிழமைகளில் வாங்கும் பிஸ்ஸா கே.எவ்.சி போன்றவை மிஞ்சும்போதும் அச்சமில்லாமல் வயிற்றை நிரப்புவான். வேலை செய்பவர்களின் வீணாகப் போகும் உணவு அவன் வயிற்றிற்குள் இருக்கும்.
இவன் வேலைக்கு வராமல் நிற்கும் நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

டாக்டர் பாம் பகல் வேலை செய்பவன். எண்ட் ஒஃப் லைன்பகுதியில் வேலை செய்கின்றான். பகல் வேலை காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து மூன்று முப்பதிற்கு முடிவடையும். மாலை வேலை ஐந்து முப்பதிற்கு ஆரம்பித்து இரவு இரண்டு மணிக்கு முடிவடையும். பெரும்பாலான நாட்களில் பாம் காலையில் வேலையை ஆரம்பித்து இரவு பத்து மணிவரை வேலை செய்வான். எப்படிப் பார்த்தாலும் ஒருநாளின் மூன்றில் இரண்டு பகுதி நேரத்தை அவன் வேலைக்காகச் செலவழித்துவிடுவான். அவன் கடின உழைப்பாளியும் கூட. அவனுக்கு ஏன் அந்த டாக்டர் பட்டம் தொற்றிக் கொண்டது என்பது  தெரியவில்லை. ஒருவேளை வியட்நாமில் இருக்கும்போது டாக்டராக இருந்திருக்கக் கூடும்.

குளிர் காலங்களில் வீட்டிற்குச் செல்லும்போது கழுத்தைச் சுற்றி ஸ்காவ் அணிந்திருப்பான். கிளீன் சேவ் செய்து அழகாக இருப்பான். அவனுக்கு ரீன் ஏஜ் பருவம் தாண்டிய இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

வீட்டிற்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் அவனுக்கு புளுகம் வந்துவிடும். காலாலும் கையாலும் அருகே இருக்கும் தகரங்களைத் தட்டித்தட்டி பலத்த சத்தத்துடன் பாடுவான். அவனுக்கு கணீரென்ற சாரீரம். வேலைத் ஸ்தலத்தை அந்த சங்கீதம் அதிர வைக்கும். தூங்குபவர்களத் தட்டி எழுப்பும். சிலவேளைகளில் பெரியவர்கள் வந்து எட்டிப் பார்ப்பார்கள். சிரித்தபடியே அவனை ரசிப்பார்கள். ஏசுவதற்கு வருபவர்களும் அவனது தோற்றத்தையும் அனது செயலையும் பார்த்து கிறங்கிப் போவார்கள். அவன் எவரையும் பொருட்படுத்தாது பாடிக்கொண்டே இருப்பான். நேரம் போவது தெரியாமல் எல்லாரும் வேலை செய்வார்கள்.

ஒருமுறை பாடத்  தயாராகுவதற்கு சற்று முன்னதாக அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கைகள் உதறத் தொடங்க, மறுமுனையில் இருப்பவருடன் தொண்டை கிழியக் கத்திக் கதைத்தான். கதைத்துக் கொண்டிருக்கும்போதே மொபைல்போனை நிலத்திலே போட்டு அடித்து நொருக்கினான். துள்ளல் நடை நடந்து நேரே குறூப்லீடரின் அறைக்குச் சென்றான். பின் திரும்பி வந்து நொருங்கிய மொபைல்போன் துண்டுகளைப் பொறுக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ‘சிம்கார்டை மாத்திரம் எடுத்துக் கொண்டான். வீட்டிற்குப் போய்விட்டான். என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. குறூப் லீடருக்கும் தெரியவில்லை.

நடந்தது இதுதான்.

அவன் வேலைக்குச் சென்றதும், மாலை ஆறு மணியளவில் அவனது மனைவி யாரோ ஒருவனுடன் சினிமா பார்க்கப் போய் விட்டாள். இந்த நாடகம் பல நாட்களாக நடந்திருக்க வேண்டும். தியேட்டரில் நேரில் கண்ட அவனது நண்பன் ஒருவன்தான் பாமிற்கு தொலைபேசியில் சொல்லியிருந்தான். வேலையிலிருந்து நேரே தியேட்டருக்குச் சென்றான் பாம். கையில் ஐஸ் கிரீம் கோணுடனும் சோளப்பொரியுடனும் இருந்து, ஆங்கிலப் படம் பார்த்தபடி சாகஸங்கள் செய்து கொண்டிருந்த மனைவியின் தலைமுடியைப் பிடித்தான். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு படத்தைவிட இந்தக் காட்சி சுவாரஸ்யமாக இருந்ததால் வேடிக்கை பார்க்கலாயினர்.  வேடிக்கைக்கு இடம் கொடாமல் அவளை வெளியே இழுத்து வந்து பலரும் பார்த்து நிற்க நையப் புடைத்தான் பாம்.

பொலிஸ் வந்து பாமை விலங்கிட்டு அழைத்துப் போனார்கள். இவ்வளவும் நடக்கும் மட்டும் ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கள்ளக் காதலன் அவளிடம் வந்து கண்ணீரைத் துடைத்தான். தன் கைகளை அவளின் முழங்கைகளுக்குள்ளால் கோர்த்து அணைத்தான். அவள் தூ என்று அவன் முகத்தில் துப்பிவிட்டு அங்கொரு கால் இங்கொரு கால் வைத்துப் பாய்ந்து போனாள். அவன் அவள் பின்னாலே அவளைக் கூப்பிட்டபடியே கலைத்துக் கொண்டு போனான்.

அந்தச் சம்பவம் பின்னர் விவாகரத்தில் முடிவடைந்தது. பாமின் மனைவியும் தான் துப்பிய காதலனுடன் சென்று, அவர்கள் குடும்பத்திலும் ஒரு பூகம்பத்தை உருவாக்கி அவனுடன் குடும்பம் நடத்தினாள். பிள்ளைகள் இருவரும் இதுதான் தருணம் என்று தங்களுக்குப் பிடித்தவர்களுடன் ஓடித் தப்பிக் கொண்டார்கள்.

●●

இன்னும் வரும் ...

No comments:

Post a Comment