Wednesday, 19 April 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 9 - இலையுதிர்காலம்

மரங்கள் எல்லாம் இலையை உதிர்த்துவிட்ட பின்னர் கிராமத்தைப் பார்க்க கவலையாக இருந்தது. எங்குமே சருகுகள் கொட்டி ஒரு பாழடைந்த பூமியாக இருந்தது.

ஆலின் மீண்டும் வேலைக்கு வந்தபோது அவளது வயிறு சிறிது உப்பி இருந்தது. வயிறு வளர, அவளின் தேய் பிறைக்காலம் ஆரம்பமாகியது. முன்பு போல அவளால் பூசி மினுக்கி வெளிக்கிட்டுவர முடிவதில்லை. அணியும் ஆடைகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. நறுமணம் வீசாத உடல், கர்ப்பிணி என்ற முகப்பூச்சுகளற்ற ஒன்றால் மாத்திரமே மினுங்கியது. பிரா கூட அவள் அணிவதில்லை. அது சுயமாக அங்குமிங்கும் ஊஞ்சல் ஆடியது.

அவளால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. களைக்கத் தொடங்கினாள். துள்ளித் துள்ளி அடிக்கடி ரொயிலற் போய் வந்தாள். குறூப் லீடரின் அறைக்குள் போய் மக்காறியோவுடன் சண்டை பிடிப்பதும், விம்மி அழுவதுமாக இருந்தாள். ஆலின்மீது அபிமானம் கொண்ட நந்தனும் மிக்கெய்லும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

"வா... குறூப் லீடரிடம் போவோம்! இதற்கொரு முடிவு காணவேண்டும்" என்றான் நந்தன்.

"அவன் கிடக்கிறான். றபிஸ்" என்றாள் ஆலின்.

"அப்ப என்னதான் செய்யப் போகிறாய்?"

"எனக்கு நியாயம் வேண்டும்."

"என்ன நியாயம்?"

"உனக்கு ஒண்டுமே தெரியாது. ஏன் தான் இங்கு வேலை செய்கின்றாயோ! அநியாயம் செய்தவனிடமே போய் நியாயம் கேட்க நிற்கின்றாய்."

"நீ என்ன சொல்கிறாய்?"

"சொல்கிறேன். ஆனால் ஒருவருக்கும் சொல்லாதே! எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம்."

நந்தனின் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது. ஒரு பெரியவன் செய்கிற காரியமா இது? ஒரு குறூப் லீடர், அவனுக்குக் கீழே மூன்று ரீம் லீடர்ஸ். அவர்களுக்கும் கீழே முப்பது நாற்பது தொழிலாளர்கள். வேலியே பயிரை மேய்வதா? மக்காறியோவை காராசாரமாக விமர்சித்தார்கள்.

"அவனுடன் கதைத்துப் பார்த்தாயா? என்னதான் சொல்கின்றான்?"

"தனக்கு மனைவி பிள்ளைகள் இருக்கின்றார்கள், கருவை அழித்துவிடு என்கின்றான். எனக்குப் பிள்ளை வேண்டும். எனக்கொரு ஆண்குழந்தை வேண்டும்."

நந்தனுக்கு சிரிப்பு வந்தது. என்ன முட்டாள்தனமான பெண்ணாக இருக்கின்றாளே!

"மனேஜரிட்டை அல்லது யூனியனிட்டை சொன்னால் என்ன?"

"முறையிட்டால் இரண்டு பேரும்தான் வீட்டை போக வேண்டி வரும்."

இரண்டு மூன்று நாட்களாக சில நலன்விரும்பிகள் காதும் காதும் வைத்த மாதிரி இருவருடனும் கதைத்துப் பார்த்தார்கள். மிக்கெய்லின் போதனைகள் இந்த விடயத்தில் எடுபவில்லை. "எனக்கொரு ஆண் குழந்தை வேண்டும். மக்காறியோவின் குழந்தை எனக்கு வேண்டும்" என அடம் பிடித்தாள் ஆலின். நந்தன் இந்த விடயத்தில் மெதுவாக நழுவிக் கொண்டான். இந்த விடயம் மக்காறியோவின் மனைவிக்குத் தெரிய வந்தது. அவர்கள் வீட்டில் பூகம்பம் வெடித்தது. மக்காறியோவின் மனைவி அவனைவிட உயர்ந்த பதவியில் இருப்பவள். நிறையச் சம்பாதிக்கின்றாள். இந்தவிடயத்தை அவர்கள் இருவரும் பிள்ளைகளுக்கு மறைத்து வைத்தார்கள். நீண்ட சச்சரவின் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆலினிற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிற்குப் போய் வருவதற்கான ஃபிளையிட் ரிக்கற்றும் பத்தாயிரம் அவுஸ்திரேலியன் டொலரும் தருவதாக ஒப்புக் கொண்டான் மக்காறியோ. ஆலினும் அதற்குச் சம்மதித்தாள்.

'கருவைக் கலைக்காதே! மதத்துக்கு விரோதமானது' என மிக்கெய்ல் ஆலினைக் குழப்பிக் கொண்டிருந்தான்.

"ஜீசஸ்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"எனக்கு ஜீசசை நினைத்துப் பார்க்கவே நேரம் இருந்திருக்கவில்லை. துள்ளித் திரிந்த என் இளமைப் பருவத்திலே, என் துடுக்கை அடக்க வந்த அந்தப் படுபாவியினால் என் வாழ்க்கையே திசை மாறியது. அதன் பிறகு எனது வாழ்க்கை சகதிக்குள் விழுந்துவிட்டது" என்று கண்ணீர் விட்டாள் ஆலின்.

"நான் இத்தனை வருஷமாக என் குழந்தையுடன் வாழ முடியாமல் தவிக்கின்றேனே! என்னுடைய வேதனை யாருக்காவது புரிகின்றதா? நான் வேண்டுமென்றே தேடிக்கொண்ட வாழ்க்கையா இது! இந்த வாழ்க்கைக்குத் தள்ளுப்பட்டவள்.

என் பத்தொன்பது வயதில் அவன் எனக்கு பிள்ளையைக் கொடுத்துவிட்டான்.
என் பதினெட்டு வயதில் நாங்கள் இருவருமே போதை வஸ்துக்கு அடிமையாகிவிட்டோம். என்னை விட்டு கணவன் பிரிந்தபோது, இருவரினதும் தீயபழக்கங்களைக் காரணம்காட்டி நீதிமன்றம் குழந்தையை இருவரிடமும் இருந்து பிரித்துவிட்டது. அந்த நேரத்தில்தான் என் தங்கை என் பெண்குழந்தையை தான் வளர்ப்பதாகச் சொன்னாள். என் மாயாவைப் பிரிந்து இப்போது ஒன்பது வருடங்களாகிவிட்டன."

முன்பு இருந்த வீட்டை வைத்திருந்தால் இப்போது வசதியாக இருந்திருக்கும். தந்திரமாக அதை வித்து காசைச் சுருட்டிக் கொண்டு போய் விட்டானே!. வீட்டை விற்ற காசையெல்லாம் போதையில் கரைத்தும் விட்டான் அவன்.

அவளை ஒவ்வொரு இக்கட்டிலிருந்தும் கை தூக்கி விடுபவனாக, தேறுதல் சொல்பவனாக மிக்கெய்ல் இருந்தான்.

அவனுடைய கருத்துக்களை எல்லாவற்றையும் அவள் பொறுமையாகக் கேட்கின்றாள் என்பதில் மிக்கெய்லுக்கு பெருமை பிடிபட்டது. தான் மிகுந்த பொறுப்புணர்வுடனும் பரிவுடனும் நடந்து கொள்வதாக அவன் நினைத்தான். ஆனால் அவள் எல்லாரும் சொல்லுவதையும் கரிசனையாகக் கேட்டுக் கொள்வாள். முடிவைத் தானே தீர்மானித்துக் கொள்ளுவாள்.

துடிப்பும் சாமர்த்தியமும் கொண்ட ஆலின் எல்லார் முன்னிலையிலும் நடித்தாள். ஒருவருமே புரிந்து கொள்ளமுடியாத ஒரு பெண் ஆனாள்.

அவளைத் தேடி ‘குவாலிற்றி கொன்ரோலில் வேலை செய்யும் ஒரு இலங்கைத் தமிழ் பெடியன் -குலம்- வந்து போகத் தொடங்கினான்.

“உவன் ஏன் உன்னிடம் வந்து போகின்றான்?

“அவனும் என்னுடைய ஃபிரண்ட் என்றாள் ஆலின்.

குலம் ஆலினிற்கு வட்டிக்குக் காசு கொடுக்கின்றான் என்ற செய்தி அதன் பின்னர் தெரிய வந்தது. குலம் வந்து போன மறுநாள் ஆலின் மூக்குத்தி குத்தியிருந்தாள். அவள் தனது வாழ்க்கையை ஆண் வர்க்கத்திற்கு பலியாக்கிக் கொண்டிருந்தாள்.

ஆலின் கடைசியில் பணத்திற்கு ஆசைப்பட்டாள். மூன்று வாரங்கள் வேலைக்கு வராமல் விடுப்புப் போட்டுவிட்டு வைத்தியசாலைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.



இன்னும் வரும் ...

No comments:

Post a Comment