Wednesday, 14 June 2017

கனவு காணும் உலகம் – சிறுகதை

தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது –

மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. வெளியே கடும் குளிர். நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”

ரக்சி நின்றது.

அவள் பதறியடித்தபடி ரக்சியை நோக்கி ஓடி வந்தாள். அவளின் ஓட்டத்தைப் பார்க்க தர்முவிற்கு சிரிப்பாகவும் இருந்தது.

வாயில் நுழையாத பூர்வீகக்குடிகள் வாழும் இருப்பொன்றின் பெயரைச் சொல்லி, அங்கு போக வேண்டும் என்றாள்.

“இந்த நேரத்திலா?” நெருப்பில் கால் வைத்தது போலப் பதறினான் தர்மு.

”ஆம். தாத்தாவிற்கு கடுமை என்று தகவல் வந்தது. எவ்வளவு என்றாலும் தருகின்றேன்” மூச்சிரைக்கச் சொன்னாள் அவள்.

எவ்வளவு என்றாலும் தருகின்றேன்!

அந்தக் குளிர் பனியிலும் அவள் முகம் வியர்த்திருந்தது. அழகான அந்த இளம்பெண்ணின் கையில் குளிருக்கு இதமாக ஒரு ‘வோட்கா குறூசர்’ இருந்தது.

“சரி. ஏறிக்கொள்”

அவள் காரிற்குள் ஏறுவதற்குள் அவள் உடலில் பூசியிருந்த சென்ற் காரை குபுக்கென்று நிரப்பியது. மடிப்புக் குலையாத சுத்தமான ஆடை. நீண்ட தன் ஒளி வீசும் கூந்தலைத் தூக்கி முன்னாலே எறிந்தாள். காரிற்குள் இருந்த கண்ணாடியில் தன் முகத்தைச் சரி பார்த்துக் கொண்டாள்.

’கையெடுத்துக் கும்பிட்டு மண்டாடேக்கை ’அந்தப் போத்தலை’ எங்கே ஒளித்து வைத்திருந்திருப்பாள்’ என தர்முவின் மனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

“இருபது நிமிடங்களுக்குள் போய் விடலாம்” தர்மு சொல்லவேண்டியதை அவளே சொன்னாள். அவர்களிடையே பேச்சு வளர்ந்தது. 

“என்னுடைய பாட்னர் இரவு வேலைக்குப் போய்விட்டார். விடிந்ததும் அங்கே வந்துவிடுவார்.”

“உனது பெயர்?”

“தர்னி”

“தர்னியா? தாரினியா?”

அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“T A R N I” என்று எழுத்துக் கூட்டி தனது பெயரைச் சொன்னாள். தொடர்ந்து தான் ஒரு றிப்போட்டராக வேலை செய்வதாகக் கூறினாள்.

தர்மு அவளை உற்றுப் பாத்தான். அவள் அவனின் நிறத்திற்கு சற்றுச் சிவப்பாக, பழங்குடியினப் பெண் அல்லாமல் காட்சி தந்தாள். ஒருவேளை கலப்பினப் பெண்ணாக இருப்பாளோ?

தர்னி ஆதிவாசிகளின் வரலாறு, பழக்கவழக்கங்கள், குகை ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிக் கதைத்தபடி வந்தாள்.

கார் மலையில் வளைந்து வளைந்து ஏறிக் கொண்டிருந்தது. இடையிடையே அவளை தர்மு கடைக்கண்ணால் நோட்டமிட்டான். இரண்டுதடவைகள் மலையைச் சுற்றியதும் ’ஜிபிஎஸ்’ தலை கிறுகிறுத்து செயலிழந்து போனது. அதன் பிறகு அவனுக்கு அவளே ’ஜிபிஎஸ்’ ஆனாள்.

”இந்த மலையடிவாரத்தில் இருக்கின்ற பூர்வீகக்குடிகளின் குகைஓவியங்கள் சிற்பங்களை எப்பொழுதாவது பார்த்திருக்கின்றீர்களா?”

”கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆதிவாசிகளின் படைப்புகள். ஆனால் பார்த்ததில்லை.”

“அதற்குச் சமீபமாகத்தான் இதுவும் உள்ளது. இங்கு உள்ளவை எனது தாத்தாவின் படைப்புகள். அவர் இப்போழுது நோயில் மரணப் படுக்கையில் இருக்கின்றார்.”

“தாத்தா என்றால்?”

“எனது அம்மாவின் அப்பாவின் தம்பி. தாத்தா திருமணம் செய்யவில்லை.”

“ஏன் உனது தாத்தா இப்பிடியான இடத்தில் வாழ்கின்றார்?”

“அது ஒரு பெரிய கதை.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் நாங்கள் இயற்கையை வணங்குபவர்கள் என்று. சூரியன் சந்திரன் மழை மரங்கள் ஆறுகள் இவையெல்லாம் எனது தாத்தாவின் ஓவியங்கள் சிற்பங்களில் வரும். பச்சை அவருக்குப் பிடித்தமான கலர். அவரின் சிற்பங்கள் - மரப்பட்டைகள் இலைகள் சருகுகள் கொண்டு செய்யப்பட்டவை.

முன்பெல்லாம் அவர் அவற்றைக் காட்சிப்படுத்துவார். அவரது படைப்புக்களை விரும்பாத சிலர், ஒருமுறை கண்காட்சிக்கு வந்தபோது அவற்றைச் சிதைத்துவிட்டார்கள். அது முதற்கொண்டு தாத்தா இங்கேயே இருக்க வேண்டும் என விரும்பினார். இங்கிருந்து ஐந்து நிமிட ஓட்டத்தில் அந்தக் காட்சியகம் இருக்கின்றது.

பின்னர் அவற்றைப் பராமரிக்க வசதியில்லாததால் எங்களின் நலம் பேணும் அரச அமைப்பொன்றிடம் குடுத்துவிட்டார். இருப்பினும் அடிக்கடி அங்கே சென்று பார்த்து வருவதால் மகிழ்ச்சி கொள்ளுவார்” பதட்டத்துடன் சொல்லி முடித்தாள்.

”யார் இதைச் செய்கின்றார்கள் என நீ நினைக்கின்றாய்?”

“சொல்லமுடியாது! வெள்ளை இனத்தவர்களில் எம்மை வெறுக்கும் மனிதர்கள் செய்திருக்கலாம். எங்களிடையேயும் பல இனக்குழுமங்கள் உண்டு.”

இலங்கையில் சிகிரியா ஓவியத்தில் ஒரு மனநிலை சரியில்லாத பெண் கிறுக்கிவிட்டாள் என்பதற்காக அவளைச் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்த இலங்கை அரசை தர்முவின் மனம் ஒப்பீடு செய்தது.

ஒருவாறு வீட்டை அடைந்துவிட்டார்கள். நாய் ஒன்று துள்ளிக் கொண்டு ‘இதோ சீவனை விட்டுவிடப் போகின்றேன்’ என்ற தொனியில் குரைத்தபடி இவர்களை வரவேற்றது. பெரியதொரு வளவிற்குள் ஒரு குடில் போல இருந்த அந்த வீடு, தர்முவிற்கு ஒரு ஆச்சிரமத்தின் தோற்றத்தைக் கொடுத்தது. இறங்கும்போது,

“நான் உனது தாத்தாவைப் பார்க்க விரும்புகின்றேன். பார்க்க முடியுமா?” என்றான் தர்மு.

“அதற்கென்ன! நிட்சயமாக.”

இருவரும் இறங்கி குடிலிற்குச் சென்றார்கள். தர்முவை வெளியே இருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் தர்னி. சற்று நேரத்தில் திரும்பி வந்து அவனை உள்ளே வரும்படி சொன்னாள்.

வீட்டிற்குள் எதுவித தளபாடங்களும் இருக்கவில்லை. விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. கனல் அடுப்பு ஒன்று வீட்டைக் கதகதப்பாக்கிக் கொண்டிருந்தது. தர்னியின் வரவிற்காக அவர்கள் காத்து இருந்திருக்க வேண்டும்..

உள்ளே கட்டிலில் முதியவர் பேச்சு மூச்சற்றுப் படுத்திருந்தார். முதியவர் அருகே இரண்டு ஆதிவாசிகள் முதியவரின் முகத்தை மூடியபடி அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போர்வைக்குள்ளால் முதியவரின் கால்கள் வெளியே நீட்டியபடி இருந்தன. அந்தக் கால்களைக் காணாவிட்டால் அங்கே அவர் படுத்திருப்பது தெரிந்திருக்காது. அவ்வளவு மெல்லிய உருவம். கட்டிலோடு ஒன்றிப் போயிருந்தார். இருளிற்குள் தர்முவால் முதியவரைப் பார்க்க முடியவில்லை.

அவர்கள் இருவரும் தர்முவை வரவேற்றார்கள். தர்னி அவரை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

தர்மு நெடுநேரம் அங்கே அவர்களுக்குத் தடையாக நிற்க விரும்பவில்லை. ஏற்கனவே நேரமும் போய்விட்டது. வீட்டிற்குப் போக வேண்டும்.

”வருகின்றேன்” சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றான் தர்மு. தர்னி அவனுடன் ரக்சி வரைக்கும் கூடவே சென்றாள். அவளிடம் பணம் வாங்குவதற்கு தர்முவிற்கு விருப்பம் இருக்கவில்லை.

“நீங்கள் என்னை இங்கு விரைவாகக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி” தன் இருகரங்களையும் கூப்பி நன்றி தெரிவித்தாள். பின்னர் சிறிதளவு காசை அவனது கையில் திணித்துவிட்டு பறந்தோடினாள்.

”நில்லுங்கள்! எனக்குப் பணம் வேண்டாம்” என்று கத்தினான் தர்மு. தர்னி ஓடுவதை நிறுத்தி “பரவாயில்லை. வைத்திருங்கள்” என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ தெரியவில்லை திரும்ப தர்முவிடம் ஓடி வந்தாள்.

“என்ன காசு குறைகின்றதா? இவ்வளவும்தான் என்னிடம் உள்ளது.”

“அப்படியில்லை. இதை உங்கள் தாத்தாவிற்கு என் அன்புப் பரிசாகக் கொடுங்கள்” பலாத்காரமாக அவள் கைகளைப் பிடித்து அவளிடம் காசைத் திணித்தான். அதைப் பெற்றுக் கொண்ட தர்னி, அவர் நினைத்திரா வண்ணம் அவரைக் கட்டி அணைத்து தனது அன்பைத் தெரிவித்தாள்.

“வந்தவழியே கவனமாகப் பார்த்துப் போங்கள். நன்றி” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தோடினாள்.

இலவசமாக அவளைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ஒரு முத்தம் வாங்கிய நிலையில் திகைத்துப் போய் காரிற்குள் சில நிமிடங்கள் இருந்தான் தர்மு. பின்னர் காரை ஸ்ராட் செய்தாரன். இனி எந்தத் திசையில் போவது?

ஒரு குறிப்பிட்ட திசைவழியே சென்ற தர்மு பாதை பிழைத்துவிட்டது என்பதை அறிந்து கொண்டான். இன்னும் கொஞ்ச தூரம் ஓடிப் பார்க்கலாம் என்ற நினைப்பில் மேலும் ஓடினான். இருந்த ஜிபிஎஸ் இயங்க மறுத்தது. வந்த ஜிபிஎஸ் போய்விட்டது.

தர்முவால் பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து வந்த வளைவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அதனடியில் செய்வதறியாது சில நிமிடங்கள் நின்றான். மீண்டும் தர்னியின் வீட்டிற்குப் போய் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம் என ஜோசித்தான். அது சரியாக அவனுக்குத் தோன்றாததால் தன் நடுவிரலையும் சுட்டுவிரலையும் நீட்டி ‘இரண்டில் ஒன்றைத் தொடு’ என மனதுக்குக் கட்டளையிட்டான். மனது தொட்ட வழியில் காரை வேகமாகச் செலுத்தினான். சற்றே பிசகினாலும் விதியின் வழி வீதியிலிருந்து பள்ளத்திற்குள்தான். வழியில் ‘சீனிக் பிளேஸ்’ என வயிற்றைத் தள்ளியபடி பூமிமாதா கர்ப்பிணியாகப் படுத்திருந்தாள். அதன் மேல் வாகனத்தை ஓரம் கட்டினான் தர்மு.

“பிருந்தா…. நான் வரக் கொஞ்ச நேரமாகும். பாதை மாறிவிட்டேன். ஜிபிஎஸ் இங்கே வேலை செய்யவில்லை” காரிற்குள் இருந்தபடி மனைவி பிருந்தாவிற்கு ரெலிபோன் செய்தான்.

”சரி… பரவாயில்லை. கவனமாப் பார்த்து வாங்கோ” நித்திரைத் தூக்கத்தில் மனைவி ஏதோ சொன்னாள்.

சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தபடி காரிலிருந்து கீழிறங்கினான். சிகரெட் புகையுடன் போட்டியிட்டவாறு அதலபதாளத்திற்குள்ளிருந்து பனிப்புகார் மேல் நோக்கிக் கிழம்பிக் கொண்டிருந்தது. இயற்கையை ஒருவராலும் வெல்ல முடியாது என்பது உண்மைதான். மொபைல் போனில் நேரத்தைப் பார்த்தான். மணி நான்கு பத்து.

அன்றைய இரவு அந்த மலைப்பிரதேசத்தில் வேறு எந்தவிதமான வாகனங்களையோ மனித நடமாட்டங்களையோ அவன் சந்திக்கவில்லை. இனி வாகனம் ஓடுவதில் பயனில்லை எனக் கண்டுகொண்ட அவன் விடியும்வரை காரிற்குள் இருப்பதென முடிவு செய்தான். சீக்கிரமாகவே தர்மு தன்னையுமறியாமல் உறக்கத்திற்குப் போய்விட்டான்.

விடியற்காலை வாகனங்கள் வரிசைகட்டி விரைந்து செல்லும்சத்தம் அவனைத் துயிலெழ வைத்தது. பதைபதைத்து எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தே வெளிச்சப்புள்ளிகள் நகர்ந்து செல்லும் காட்சி மரங்களினூடாகத் தெரிந்தது.

“அனேகமாக அது ஒரு நெடுஞ்சாலையாகத்தான் இருக்க வேண்டும்” முடிவு செய்தபடி வாகனத்தை ஸ்ராட் செய்து, அதன் திசை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான்.

வீட்டிற்கு வந்தபோது மணி ஆறாகிவிட்டது. வானம் வெளிச்சமிடத் தொடங்கிவிட்டது. இரவு என்ற ஒன்று அவனுக்கு வராமலேயே மறு உதயம். இன்னும் சிலமணி நேரங்களில் பிள்ளைகள் துயில் கலைத்து பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகி விடுவார்கள். மனைவியும் எழுந்து விடுவாள். ஒருவரையும் குழப்பாமல், முன் ஹோலிற்குள்ளிருந்த செற்றிக்குள் உடுப்புகளையும் மாற்றாமல் புதைந்து கொண்டார். மனைவி போட்டுத் தரும் கோப்பியின் சுவைப்பிற்காகக் காத்திருந்தார்.

ஒரு கோழித்தூக்க முடிவில் மனைவி கையில் கோப்பியுடன் நின்றார். கோப்பியை வாங்கி தர்மு உறுஞ்சிக் குடிப்பதை அவர் மனைவி ரசித்தபடி பார்த்தார்.

“எங்கையப்பா போனனியள்? என்ன நடந்தது” கோப்பி முடிந்ததும் தனது விசாரணையைத் தொடர்ந்தார் மனைவி.

தர்மு தனக்கு நேர்ந்த சம்பவத்தை மனைவியிடம் சொல்லத் தொடங்கினான்.

”உலகத்து மக்களிடையே கைகூப்பி நன்றி தெரிவிக்கும் பழக்கம் யாரிடம் இருக்கின்றது? அதை அவள் செய்தாள். தர்னி எங்கடை இனத்துப் பிள்ளையப்பா… அவள் என்ரை மகள் மாதிரி” அவள் தர்மு சொல்லும் தர்னி என்னும் அபோர்ஜின்ஸ் இனத்துப் பெண்ணின் கதையை உன்னிப்பாகக் கேட்டபடி இருந்தாள்.

“சரி… இரவு முழுக்க தூக்கமில்லாமல் இருந்திட்டியள். கொஞ்ச நேரம் போய்ப் படுங்கோ”

சிறிது நேரம் கண்ணயர்ந்தான் தர்மு. பின்னர் பிள்ளையளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு காலை உணவு முடித்து மீண்டும் சிறிது கண்ணயர்ந்தான்.

பன்னிரண்டு மணியளவில் ரெலிவிஷன் பார்த்தான். சலிப்புடன் சனலை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவன்,

“பிருந்தா… பிருந்தா… ஓடிவா. வந்து இந்த நியூசைப் பார்” சத்தமிட்டான் தர்மு. அவள் மெதுவாக வந்து இவருக்கு அருகில் அமர்ந்தாள்.

“சத்தம் போடாமல் வடிவாப் பார்.”

நேற்று அவன் சந்தித்த அதே பெண்… தர்னி. ரெலிவிஷனில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தாள்.

”உவள்தான்… உவள்தான்..” என்று கண்ணாலே ஜாடை காட்டினான் தர்மு. நேற்றுப் பார்த்ததைவிட தொலைக்காட்சியில் இன்னும் அழகாகத் தோன்றுவது போல அவனுக்கு இருந்தது.

”நான் எத்தனையோ ரக்சிக்காரர்களை மன்றாடினேன். ஆனால் அவர்கள் ஒருவரும் என்னை ஏற்றிக் கொண்டு போகச் சம்மதிக்கவில்லை. இரவில் எம்முடைய இருப்பிடம் வரப் பயப்பட்டார்கள். ஆசியா நாட்டைச் சேர்ந்த தர்மு என்பவர்தான் என்னை அங்கே கூட்டிச் சென்றார்.”

தர்முவின் பெயரை ரெலிவிஷனில் கேட்டதும் பிருந்தாவிற்குப் பெருமையாக இருந்தது. வைத்தகண் வாங்காமல் ரிவியைப் பார்த்தபடி இருந்தாள்.

“அந்த நல்ல மனிதரின் காருண்யத்தால் நான் எனது தாத்தாவை இறுதியாகப் பார்த்தேன்.”

இறுதியாகப் பார்தேன் என்று தர்னி சொன்னதும் அவளது தாத்தா இறந்துவிட்டார் என்பதை அறிந்தான் தர்மு. 

செய்தியின் முன்பகுதியைத் தவறவிட்ட தர்மு, மீண்டும் அந்தச் செய்தி ரிவி யில் வரக்கூடும் என நினைத்து, ரிவி சனலைத் திருப்பித் திருப்பி பார்த்தபடி இருந்தான்.. எல்லாச் சனல்களிலும் அவரைப்பற்றிய செய்திதான் போய்க் கொண்டிருந்தது.

சனல் 24 இல் அந்தக் கலைஞனைப் பற்றிய விவரணம் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அவர் வரைந்த படங்கள், செதுக்கிய சிற்பங்கள் என அது போய்க் கொண்டிருந்தது. அந்த மனிதரின் புகைப்படத்தைப் பார்த்தபோது தர்முவின் சப்தநாடிகளும் ஒடுங்கிப் போய்விட்டன. அவரின் பெயர் பில் றிக்கெற்ஸ் என்றும், அவர் ஒரு வெள்ளைக்காரர் எனவும் அறிந்தபோது விழி பிதுங்கினான் தர்மு.

என்ன பூர்வீகக்குடிகளைப் பற்றி ஓவியமாக சிற்பங்களாக வடித்த தர்னியின் தாத்தா ஒரு வெள்ளையினத்தவரா?

”உங்கள் வியப்பு எனக்குப் புரிகின்றது. ஆம் எனது தாத்தா வெள்ளை இனத்தவர். பூர்வீகக் குடிகளின் வாழ்க்கை முறையினால் ஈர்க்கபட்டு எம் மக்கள் மத்தியில் வாழ்ந்தார். என்னில் வெள்ளை இனத்தோலின் அடையாளத்தை நீங்கள் காண்பீர்கள்” என்று விவரணத்தில் தர்னி சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒன்றுமே பேசாது அதிசயத்துடன் ரெலிவிஷனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் தர்மு. மனம் குழம்பிய நிலையில் ஏதோ கேட்க நினைத்து பின் “ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு குசினிக்குள் தன் வேலைக்குத் தாவினாள் பிருந்தா.

“என்ன இண்டைக்கு வேலைக்குப் போகேல்லையோ?” குசினிக்குள்ளிருந்து பிருந்தா கேட்டாள்.

“இல்லை. இண்டைக்கு களைப்பா இருக்கு. நாளைக்குப் போவம்.”

வெளியே வந்து மீண்டும் அவருக்குப் பக்கத்தில் இருந்து ரிவி பார்த்தாள் பிருந்தா.

“அப்போதே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். உதே வெள்ளையள்தானே முந்தி ஆதிவாசிகளை குருவி சுடுகிறது போல சுட்டுத் தள்ளினவங்கள். இப்ப ஆதிவாசிகளின்ரை வாழ்க்கைமுறையை சிலையா ஓவியமா செய்யுறதும் வெள்ளைக்காரன் தானே!” என்றாள் வியப்பாக பிருந்தா.

“ஆனா அவங்கள்தான் அதற்காக பிறகு ஆதிவாசிகளிடம் மன்னிப்பும் கேட்டார்கள். பறித்த நிலங்களையும் இப்ப ஒவ்வொண்டாகக் குடுத்துக் கொண்டு வாறாங்கள்.

உந்த நிலை ஆருக்கும் வரலாம். எந்த இனத்திற்கும் வரலாம்.

அதாலைதான் இந்தப் பூமி இன்னமும் எங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கின்றது!” என்றான் தர்மு.


3 comments:

  1. வெளிநாட்டுவாழ் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகள் எனக்கு பிடித்தமான ஒன்று. சமையலறை - குசினி , சன்னல் - யன்னல் ,விஷயம் - விடயம் போன்ற சொற்களஞ்சியம் அவர்களின் எழுத்திலிருந்துதான் கற்றுக்கொண்டேன். திரைக்கடல் கடந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், இளைய அப்துல்லா, ஜீவகுமாரன் , வித்யாசாகர்,கதிர்.பாலசுந்தரம்,மாலினிமாலா, அருண் விஜயராணி,பொன்.குலேந்திரன், அரவிந்தன், எஸ்.பொ, தி.ஞானசேகரன், கோ.சந்திரசேகரம்,நவீன், சுபாஷினி ஸ்ரீரஞ்சன்,நார்வே நக்கீரன்,சங்கரசுப்பிரமணியன், மகேந்திரன் குலராஜ், தெய்வேந்திரம் இக.கிருஷ்ணமூர்த்தி,ஏலையா முருகதாதன், ரோஜி , கே.எஸ்.சுதாகர் இவர்கள் மிக முக்கியமானவர்கள்.

    சமீபகாலமாக கணையாழி, காக்கைச் சிறகினிலே, இனிய நந்தவனம் போன்ற இதழ்கள் வெளிவாழ் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளையும் ஞானம், வல்லினம், புதினம், உதயன், அக்னிக்குஞ்சு போன்ற வெளிநாட்டு தமிழ்ப்பத்திரிகை தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளையும் பிரசுரம்செய்வது ஆரோக்கியமானதாகப்படுகிறது.
    ஏப்ரல் கணையாழி இதழில் கே.எஸ்.சுதாகர் ' கனவு காணும் உலகம்' என்கிற கதையை எழுதியிருந்தார். அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தொடர்ந்து அக்னிக்குஞ்சு இதழில் இயங்குபவர்.

    இக்கதை நாளைய தலைமுறை ஏக்கம் சார்ந்தது.இக்கதையின் முடிவு வலியுடன் கூடிய கனவு. வெள்ளையன்கள் முன்பு ஆதிவாசிகளை குருவிச்சுடுவதைப்போல சுட்டுக்கொன்றார்கள். பிறகு அவர்களது வாழ்க்கை முறையை சிலையாக வடித்தார்கள். இன்றொரு காலக்கட்டத்தில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்டு நிலத்தை திருப்பிக்கொடுத்தார்கள். இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.எந்த இனத்திற்கு வேண்டுமானாலும் வரலாம்....

    கதையின் முடிவு எத்தனை வலியானது.

    இதுபோன்ற கதைகளையும் எழுத்தாளர்களையும் நாம் அங்கீகரிக்காமல் வேறு யார்தான் அங்கீகரிப்பார்கள்!

    அண்டனூர் சுரா
    மகாத்மா நகர்
    கந்தர்வகோட்டை
    புதுக்கோட்டை மாவட்டம்

    "rajamanickam manickam" rajamanickam29583@gmail.com

    09.04.2017

    கணையாழி – ஏப்ரல் 2017

    ReplyDelete
  2. கதையை நன்றாக ரசித்தேன்.

    ReplyDelete