Thursday, 1 June 2017

நாய்க்கு சாப்பாடு வேணும் (கங்காருப் பாய்ச்சல்கள் - 21)


சமீப காலங்களாக இங்கே ஒரு கூத்து ஒன்று நடைபெறுவதை அவதானித்து வருகின்றேன்.

‘சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும்’

ஆறு  மாதங்களுக்கு முன்னர் ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவர் உணவருந்தி முடிந்ததும்,

“சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும். பாவம் அவள், நான் வீட்டை போனதும் என்ரை கையைக் கையையே பாப்பாள்” என்று சொல்லியபடி பிளாஸ்ரிக் பெட்டிகளில் சாப்பாட்டை எடுத்துச் சென்றார்.

அவர் தன்னுடைய மனைவியில் இவ்வளவு பாசமா?
இருக்கட்டும். இருப்பினும் மற்றவர்களும் சாப்பிட்டு முடிந்த பின்னர் எடுத்துச் சென்றால் அழகாக இருக்கும் என நினைத்தேன்.

இப்படியே அந்த விளையாட்டு வேறு இடங்களிலும் தொடர்ந்தது. பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டார்கள்.

இன்னொரு வீட்டில்,
“புளூட்டோவுக்குச் சாப்பாடு வேணும். எடுத்துக் கொண்டு போறன்” சொல்லியபடி ஒருவர் சாப்பாடு கட்டத் தொடங்கினார்.

அவர் என்ன செய்கின்றார் என்பதை அவதானித்தபடி, வீட்டுக்காரரைக் கூப்பிட்டு அவரின் காதிற்குள், “புளூட்டோ எண்டது ஒன்பது கிரகங்களிலை ஒண்டு எண்டுதான் இதுவரை எனக்குத் தெரியும். இந்த புளூட்டோ யார்?” என மெதுவாகக் கேட்டேன்.

அதற்கு அவர், “புளூட்டோ எண்டது அவருடைய நாய்” என்று சொல்லியபடி சிரித்தார்.

அப்போ எல்லாரும் நாய்க்குத்தானா சாப்பாடு எடுத்துக் கொண்டு போகின்றார்கள்.

அப்ப சந்திரிக்கா எண்டதுகூட நாய் தானோ?

அந்த மனிதர், நானும் வீட்டுக்காரரும் கதைத்ததைக் கண்டுவிட்டார். பொதி கட்டி முடிந்ததும் நேரே என்னிடம் வந்தார்.

“ஏன் தம்பி புளூட்டோ எண்ட பேர் சரியில்லையோ? அதுவும் ஒரு கிரகம்தான் தம்பி. வீட்டுக்குப் போனதும் விருந்துச்சாப்பாட்டு மணத்தை என்னிலை நுகர்ந்து பிடிச்சிடும். பிறகு குடுக்காட்டி என்னைக் குதறிப் போடும்” நகைச்சுவையாகச் சொன்னார்.

“அப்ப உங்கடை வீட்டு நாய்-  சொதி, அப்பளம், ரசம், சம்பல், பாயாசம், கேக், ஃபுறுற் சலாட் எல்லாம் சாப்பிடுமோ?” நான் கேட்க அசடு வழியச் சிரித்தார்.

அவர் போனபின் வீட்டுக்காரர் சொன்னார்:

“இவர்கள் எல்லாம் நாயைக் காட்டி தங்களுக்குத் தேவையான அடுத்தநாள் சாப்பாட்டை எடுத்துச் செல்கின்றார்கள்.”

No comments:

Post a Comment