Thursday 20 July 2017

ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்



ஞானம் - அட்டைப்பட அதிதி கட்டுரை


குரு.அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான மாவிட்டபுரம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர். இவரது தந்தையார் குருநாதபிள்ளை நடேஸ்வராக்கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராகவும், உள்ளுராட்சி மன்ற முதல்வராகவும் கடமையாற்றியவர்.

குரு.அரவிந்தன் இலங்கையில் இருக்கும் காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் உயர்கல்வி பயின்று, ’மகாராஜா’ நிறுவனத்தில் கணக்காளராகவும் பின் நிதிக்கட்டுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். 1988 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். தற்போது கனடா / அமெரிக்காவில் கணக்காளராகவும், ரொறன்ரோ கல்விச் சபையில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.


புலத்திலுள்ள எழுத்தாளர்களில் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் மிகச் சிலர். அவர்களில் குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ‘அணையாதீபம்’ என்ற சிறுகதையுடன் ஈழநாடு வாரமலரில் எழுத்துலகில் புகுந்த இவர் - சிறுகதை, கட்டுரை, நாவல், பயணக்கட்டுரை, ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் அகலவும் ஆழவும் வேரூன்றி தொடர்ந்தும் படைப்புகளைத் தந்தவண்ணம் உள்ளார். இவர் தன்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ.கனகசபாபதி எனக் குறிப்பிடுகின்றார்.

இவரது படைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் - ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி, குமுதம், யுகமாயினி போன்றவற்றிலும், கனடாவிலிருந்து வெளிவரும் - தாய்வீடு, கனடா உதயன், ஈழநாடு, கூர்கனடா, தமிழர் தகவல் போன்றவற்றிலும் தினக்குரல், வீரகேசரி, வெற்றிமணி(யேர்மனி), புதினம்(லண்டன்), உயிர்நிழல்(பாரிஸ்), வல்லினம் (மலேசியா), காற்றுவெளி (லண்டன்), பதிவுகள்(இணையம்), திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்) என்பவற்றிலும் வருகின்றன.

இவர் சமகாலத்து நிகழ்ச்சிகள் சிலவற்றை படைப்புகளாக்கி வெற்றி கண்டுள்ளார். ‘நீர் மூழ்கி, நீரில் மூழ்கி’, ‘உறைபனியில் உயிர் துடித்தபோது’, ’ஹரம்பி’ போன்ற படைப்புகள் அத்தகையவை. இதில் ‘நீர் மூழ்கி, நீரில் மூழ்கி’, ‘உறைபனியில் உயிர் துடித்தபோது’ போன்ற படைப்புகளில் பல அரிய தகவல்களைக் காணலாம். இவரது படைப்புகள் பலராலும் பரவலாகப் படிக்கப்பட்டு, விரிந்த வாசகர் பரப்பைக் கொண்டுள்ளன. ‘விழுதல் என்பது எழுகையே’ என்னும் பெரும் தொடரில் எம்முடன் இணைந்து எட்டாவது அத்தியாயத்தை எழுதியுள்ளார். ஒரே நேரத்தில் இந்தியா, இலங்கை, கனடா, ஜேர்மனி, லண்டன் போன்ற நாடுகளில் இவரது ‘காதலர்தின’ சிறுகதைகள் வந்துள்ளன.

இந்நாளில் அறிவியல் சார்ந்த, தாம் பணிபுரியும் தொழில் சார்ந்த படைப்புகளை வெளிக் கொண்டுவரும் ஈழத்து எழுத்தாளர்கள் மிகக்குறைவு. இவரின் ’ஆனந்த விகடனில்’ பவளவிழா ஆண்டு மலரில் வெளிவந்த ’நீர் மூழ்கி, நீரில் மூழ்கி’ என்ற குறுநாவல் பல்லாயிரம் இரசிகர்களைக் கொள்ளை கொண்டது. இதற்கு ஜெயராஜ், மாருதி, ராமு, அர்ஸ், பாண்டியன் என்ற தமிழகத்தின் ஐந்து பிரபல ஓவியர்கள் ஓவியம் வரைந்துள்ளார்கள்.

 

யுகமாயினி, கலைமகள், ஆனந்த விகடன் நடத்திய குறுநாவல் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘கந்தர்வன்’ நினைவுச் சிறுகதைப்போட்டி மற்றும் ஞானம் சஞ்சிகை, கனடா உதயன், கனேடிய தமிழ் வானொலி நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்று குவித்தவர். இவர் கனடாவின் ஒன்ராறியோ முதல்வர் விருதை இரு தடவைகளும் (2010, 2013), கனடா தமிழர் தகவல் இலக்கிய விருதையும் (2012) பெற்றுள்ளார்.

கனடா எழுத்தாளர் இணையத்தின் முக்கிய செயற்பாட்டாளராக இயங்கும் இவர் அதன் செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார்.

இவரது படைப்புகளில் ’அம்மாவின் பிள்ளைகள்’ (யுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது), ‘தாயுமானவர்’ (கலைமகள் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது) நாவல்கள் - ‘சுமை’, ‘அப்பாவின் கண்ணம்மா’, 1983 இனக்கலவரத்தைப் பின்னணியாகக் கொண்ட ‘நங்கூரி’, ‘சார்… ஐ லவ் யு!’, ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’, ‘போதிமரம்’ போன்ற சிறுகதைகள் என்றும் எனது மனதில் நிழலாடுபவை.

’இதுதான் பாசம் என்பதா?’, ’என் காதலி ஒரு கண்ணகி’, ’நின்னையே நிழல் என்று’ என்பவை இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள். ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’, ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ என்பவை நாவல்கள். தவிர ‘என்ன சொல்லப் போகின்றாய்?’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ?’, ‘குமுதினி’ போன்ற தொடர்களையும் எழுதியுள்ளார்.

இவரது நாவல்களில் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ (2004) ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவ அடக்குமுறை, பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி, மண் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகவும், ‘உன்னருகே நான் இருந்தால்’(2004), ‘எங்கே அந்த வெண்ணிலா?’(2006) என்ற நாவல்கள் புலம்பெயர் சூழலில் வாழும் ஈழத்தமிழ்ச் சமூகம் படும் பண்பாட்டுப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. இவரின் ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’, ’உறைபனியில் உயிர் துடித்தபோது’ என்பவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் துன்பதுயரங்களும் ஆசாபாசங்களும் ஒரு பொருட்டல்ல என்பதையும், தமது ஆட்சி அதிகாரங்களைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் குறுநாவல்கள் ஆகும். இந்த இரண்டு குறுநாவல்களும் அறிவியல் புனைகதை வகைப்பாட்டிற்குள் அடங்கும் தன்மை கொண்டவை. ‘இதுதான் பாசம் என்பதா?” என்ற தொகுதியில் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளும் - ‘என் காதலி ஒரு கண்ணகி’ என்ற தொகுப்பில் காதலர் தினக் கதைகளும் – ‘நின்னையே நிழல் என்று’ தொகுப்பில் போராட்டச் சூழலில் எழுதிய கதைகளும் அடங்கியுள்ளன.

இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும், சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படங்களாகி உள்ளன. இவற்றின் திரைக்கதை, வசனத்தையும் இவரே எழுதியிருக்கின்றார்.

இவர் சிறந்ததொரு நாடகக் கலைஞரும் ஆவார். நாடகத்துறையில் பெருமளவு பங்களிப்புச் செய்துள்ள இவர் சிறுவர்களுக்கான ’பொங்கலோ பொங்கல்’, ’தமிழா தமிழா’, ‘பேராசை’ போன்ற நாடங்களுக்கு கதை, வசனம் நெறியாள்கை செய்துள்ளார். இவர் கதை வசனம் நெறியாள்கை செய்த - ஈழத்தமிழரின் தொடக்ககால வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட ’அன்னைக்கொரு வடிவம்’, மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டுவிழாவிற்காக எழுதப்பட்ட ’மனசுக்குள் மனசு’ என்பவை மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட நாடகங்கள்.

தவிர, சிறுவர் இலக்கியம், சிறுவர் தமிழ்க்கல்வி என்பவற்றிலும் ஈடுபாடு காட்டுகின்றார். புலம்பெயர் சூழலுக்கு ஏற்ப தமிழைக் கற்பித்து, அடுத்த தலைமுறையினரிடம் தமிழைத் தக்கவைப்பதற்கு அரும் பணி புரிகின்றார்.. இந்த வகையில் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் சிறுவர்க்கான கட்டுரைகள், பாடல்கள், இலக்கணம், பயிற்சிகள் கொண்ட புத்தகங்கள் காணொளிக் குறுவட்டுகள், ஒலிவட்டுகளை வெளியிட்டுள்ளார்.

இவரது படைப்புகள் பல ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கல்கியில் வெளியான ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’ என்ற சிறுகதை இதுவரை ஏழு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.



இந்த வருடம் தை மாதம் இவரை நான் கனடாவில் சந்தித்தேன். சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்ற, இவரின் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட இலக்கியச்சேவையைப் பாராட்டி, ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ கடந்த வருடம் கொண்டாடி இருக்கின்றனர். அந்தப் பாராட்டில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.









No comments:

Post a Comment