”மச்சான் நான் சிட்னி வந்திருக்கிறன். உன்னைப் பாக்க
ஆசையாக இருக்கடா” நண்பன் தவராஜா சொல்ல, மறுமுனையில்
“எனக்கும்தானடா. ஒரு நாளைக்கு வா. சந்திப்போம்” என்றான்
புவி.
25 வருடங்களுக்கு முன்னர், இருவரும் இலங்கையில்
பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
புவி அவுஸ்திரேலியா வந்து பத்து வருடங்கள். பெரிய வீடு
வசதிகளுடன் இருக்கின்றான். தவராஜா வேலை நிமிர்த்தம் சிட்னி வந்திருந்தான்.
குறிப்பிட்ட நாளில் தனது வீட்டிற்கு அண்மையாகவுள்ள
ஸ்ரேசனிற்கு வரும்படி சொன்னான் புவி.
குளிர்காலம் மாலை ஆறு மணிக்குள் இருட்டிவிட்டது. எப்படி
அடையாளம் காண்பது? இருவரும் தமது புகைப்படங்களை ‘வட்ஸ் அப்பில்’ பரிமாறிக்
கொண்டார்கள்.
புவி சொன்ன நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே புகையிரதம்
வந்து சேர்ந்துவிட்டது. தவராஜா ஸ்ரேசனில் காத்திருந்தான். நல்ல குளிர். காற்று
வேறு பலமாக வீசி குளிரை அவன் முகத்தில் வாரி இறைத்தது.
அவுஸ்திரேலியாவில் மாடும் பன்றியும் பிரசித்தம். இவன்
புவி என்னத்தைச் சமைத்து வைத்திருக்கின்றானோ? மாடும் பன்றியும் தான்
சாப்பிடுவதில்லை என முன்கூட்டியே தான் சொல்லவில்லையே என தவராஜா வருத்தப்பட்டுக்
கொண்டான்.
இருவரும் சந்தித்தவுடன் ஆரத் தழுவிக் கொண்டார்கள். நின்ற
நிலையில் வேறு இருபது நிமிடங்கள் வரையில் கதைத்துக் கொண்டார்கள்.
“மச்சான்… இதிலை இருந்து ஒரு ஐஞ்சு நிமிஷம் தான் என்ரை
வீடு” புவி சொனான்.
புவி தன்னை வீட்டிற்குக் கூட்டிச் செல்வான் என எதிர்பார்த்தான்
தவராஜா. அதை புவி அல்லவா இவனிடம் கேட்க வேண்டும்!
“இனி என்னடா மச்சான். நிறையக் கதைச்சிட்டம் என்ன… அடுத்த
முறை வரேக்கையும் சொல்லு. சந்திப்போம்” என்றான் புவி.
No comments:
Post a Comment