கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில்
வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான
எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக்
கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.
தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய
எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி
நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும்
இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயின், அவர்களாலும் நல்ல கதைகளைப்
படைக்க முடியும் என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகள் காட்டி நிற்கின்றன. இனி
தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் பார்ப்போம்.
வறுமையின்
தியாகம் (அன்னலிங்கம் கிருஷ்ணவடிவு) கதை என்னை எந்தோ காலத்திற்கு
பின்னோக்கி அழைத்துச் சென்றது. எழுத்து நடையிலும் தான். நீண்டகால இடைவெளிக்குள்
நடக்கும் கதை. ஒரு நாவலுக்குரிய கரு.
புளி மாங்காய்
(மாலினி அரவிந்தன்) பூடகமாக பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. கழித்த
கல்லும் ஒருநாள் உதவும் என்பதுமாப் போல், புளிமாங்காயும் ஒரு கட்டத்தில்
தேவைப்படுகின்றது. எட்டாத பழம் புளிக்குமென்பார்கள். இங்கு எட்டிய பழமும்
புளிக்கின்றது. ஒருவேளை பிஞ்சிலே பழுத்த பழமோ? கதையில் நட்பு தன் வேலையைச்
செய்வதினின்றும் தவறிவிடுகின்றது.
நட்பின்
சந்திப்பு (தமிழ்மகள்) பள்ளித் தோழிகள் இருவர் நீண்ட நாட்களின் பின்னர் பூங்கா
ஒன்றில் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றார்கள். தமது
குடும்பம், முதுமை, கனடா வாழ்க்கை என அவர்களிடையே நடைபெறும் ஊடாட்டத்தைக் கதை
சொல்லிச் செல்கின்றது.
மூச்சுக்காற்று
(ஜெயசீலி இன்பநாயகம்) சின்னஞ்சிறிய கதை. கதையுடன், சுற்றுப்புறச்சூழலைப் பேண
வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. ஆசிரியர் தனது இரண்டாவது பந்தியில்
இருந்தே வாசகரை உள்ளே இழுத்து விடுகின்றார் சற்றே ’த்றில்’ உடன்.
அந்த இரண்டு
நாட்கள் (சறோ செல்வம்) எடுத்த எடுப்பிலேயே வாசகரை உள் இழுத்து விடுகின்றது.
தாயகத்தில் ஊரடங்கு, ஆமியின் தொந்தரவுகளைச் சொல்லும் கதை.
காவோலை (கனகம்மா)
முதுமையில் புலம்பெயர் வாழ்வைச் சித்தரிக்கின்றது.
என் நினைவு
அலைகள் (அழகேஸ்வரி குணதீசன்) கணவரை யுத்தத்தில் பறி கொடுக்கும் ஒரு மனைவியின்
கவலைகள் ஏக்கங்கள். அதன் பின்னர் கனடா வாழ்க்கை – ஆன்மீகம் தேடல்கள் என தனது
கதையைச் சொல்லிச் செல்கின்றார். கதையை இன்னும் சுவைபடச் சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.
தாயின் இறுதிமடல்
(இராஜேஸ்வரி லோகேஸ்வரன்) பிள்ளைகளின் நலனுக்காக எல்லாம் செய்து, வெளிநாடு
அனுப்பிப் படிப்பித்து அவர்களை நல்லாக ஆக்கியபின்னர் – அவர்களால் உதாசீனம்
செய்யப்படும் ஒரு தாயின் உள்ளக்குமுறல் இங்கே கடிதமாகின்றது.
என் கதை (திவாணி
நாராயணமூர்த்தி) கற்பனை வேறு, நிஜம் வேறு என்பதைச் சொல்லும் கட்டுரைப்
பாங்கிலான கதை. புலம்பெயர் நாட்டில் இருக்கும் இளைஞர் யுவதிகள் புரிந்துகொள்ள
வேண்டிய சங்கதிகளை புட்டு வைக்கின்றார். கலாச்சார சமூகத்திற்கும் நண்பர்களுக்கும்
இடையில் இளம்பெண் வாழ்வது என்பது இந்த மண்ணில் சற்றுக் கடினமானது, பெற்றோர்களுக்கு
உண்மையாகவும் அதே நேரம் நண்பர்களுடன் நட்புச் சிதைந்து போகாமலும் பார்க்க வேண்டும்
என்கின்றார் ஆசிரியர்.
உண்மை அன்பு
உறைவதில்லை (ஜோஜினி நிக்கலஸ்) நனவோடை உத்தியில் தன் வாழ்க்கையைத்
திரும்பிப் பார்க்கும் கதை. ஏற்றத்தாழ்வுகளினால் தடைப்பட்ட காதல் பின்னர் முகனூல்
மூலம் தொடர்புபட்டு நிறைவாகத் திருமணத்தில் முடிவடைகின்றது. மகிழ்ச்சியான முடிவு.
ஒரு
குடும்பத்தின் பாரம்பரிய சொத்து (மங்கை பத்மசேகர்) விவசாய நிலங்கள்
எல்லாம் வீடுகளாகின்றன. மூத்த இரண்டு பிள்ளைகள் விவசாய நிலத்தை நல்ல விலைக்கு
விற்று பங்குபோடத் துடிக்கும்போது தடுமாறுகின்றார் தந்தை. அவரே முடிவு
செய்யாதபோதும், பலபேர்கள் காணியை வாங்க முன் வருகின்றார்கள். நல்ல காலத்திற்கு
கடைசி மகன், தான் அந்த நிலத்தில் விவசாயம் செய்யப் போகின்றேன் எனத் தந்தையின்
வயிற்றில் பாலை வார்க்கின்றான். கதையில், தரிப்பிடக் குறிகள் இடம் மாறி
வாசிப்போட்டத்தைத் தடை செய்கின்றது.
வாழ்க்கைப்பயணம்
(கலைவாணி சிவகுமாரன்) கார் மீது கொண்ட பற்றுதலை நனவோடை முறையில் சொல்கின்றது.
கார் மீது சிறு சேதம் ஏற்பட்டதற்காக தந்தையை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்
என்று கதாசிரியர் சொல்வதை ஏற்க முடியவில்லை.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. தொகுதியில்
பல கதைகள் தமது குடும்பக் கதைகளையே சொல்கின்றன. ‘விறகு வெட்டியும் தேவதையும்’,
‘புத்திமான் பலவான்’ போன்ற அந்தக் காலத்துப் பாணியில் அமைந்த சில அரிச்சுவடிக் கதைகளும்
உண்டு, கைதேர்ந்த கதைகளுமுண்டு.
பல்லவியின் தேடல்
( சறோஜினிதேவி சிவபாதசுந்தரம்) கதையில் பல்லவிக்கு ஏன் இப்படியான
தேடல்கள் அமைய வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
மலரும் மீனாவும்
(சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன்) ஒரு தாயும் மகளும் மாறிமாறி தங்கள்
கதையைச் சொல்லும் ஒரு வித்தியாசமான கதை. தாயாருக்கோ ரெலிவிஷன் நாடகம், பிள்ளைக்கோ
பள்ளிக்கூடம், பரீட்சை. இருவருமே தங்கள் விடயங்களில் பிஷியாகிப் போகின்றார்கள்.
இன்னொரு குடும்பமான கமலா, அவளின் மகன் கார்த்திக்கும் இடையிடையே வருகின்றார்கள்.
பத்து வருடங்களுக்கும் மேலாக ரிவி தொடர் போகின்றது. இதற்குள் மீனா
பள்ளிப்படிப்பும் முடித்து டாக்டராகவும் வந்துவிடுகின்றாள். மிகவும் சிறப்பாகப்
பின்னப்பட்டுள்ள கதை இது.
தவறான உதாரணம்
(காயத்ரி வெங்கடேஸ்) தொகுப்பின் இறுதிக் கதை. பொதுவாக நாம் செய்யும் தவறுகள்
நமக்குத் தெரிவதில்லை. இன்னொருவர் சுட்டிக் காட்டும்போதுதான் விழிப்படைகின்றோம்.
நல்லதொரு படிப்பினை கதை.
கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்களின் எண்ணக்கருக்களை எழுத்து
வடிவில் கொண்டு வருவதற்காக குரு அரவிந்தன் மேற்கொண்ட முயற்சியின் பலன் இந்தச்
சிறுகதைத்தொகுப்பு.
எழுத்தாற்றல் மிக்க பெண்களில் சிலர் இன்னமும் தாம் கொண்ட
வட்டத்தை விட்டு வெளியே வரத் தயங்குகின்றார்கள் என தொகுப்பாசிரியர் ஆதங்கப்படுவது
புரிகின்றது. எனினும் தடைகளை மீறி இந்த வரவு புத்தொளி பாய்ச்சுகின்றது. பழமைக்கும்
புதுமைக்கும் பாலம் இடும் இப்படைப்புகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. இத்தொகுப்புடன்
நின்றுவிடாது தொடர்ந்தும் அவர்களின் படைப்புகள் வெளிவரல் வேண்டும்.
சொப்கா (SOPCA – Screen of Peel Community Association) மன்றத்தினரின் ஆதரவுடன் வெளிவந்திருக்கும்
இச்சிறுகதைத் தொகுதிக்கு முனைவர் பார்வதி கந்தசாமி வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment