ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா
மவுன்ற் கம்பியர் (Mount Gambier) பிரதேசத்தில் பல
நூற்றுக்கணக்கான குகைகளும் புதைகுழிகளும் காணப்படுகின்றன. சுண்ணாம்புக் கற்பாறைகள்
காலத்துக்குக் காலம் கடல்நீரினாலும் மழை நீரினாலும் அரிக்கப்படுவதினால் இவை
தோன்றுகின்றன.
இப்படிப்பட்ட புதைகுழியில் அமைந்த அதிசயமான நிலக்கீழ்
தோட்டம் சண்கென் தோட்டம் (Sunken Garden). இதை அம்பேஸ்ரன் சிங்ஹோல் (Umpherston
Sinkhole) என்றும் சொல்வார்கள்.
1864 ஆம் ஆண்டு ஜேம்ஸ் அம்பேஸ்ரன் என்பவர் மவுன்ற்
கம்பியரில் ஒரு நிலப்பரப்பை வாங்கினார். அந்த நிலப்பரப்பில் இருந்த புதைகுழியை 1884
ஆம் ஆண்டு ஒரு அழகிய தோட்டமாக வடிவமைத்தார். ஆரம்பத்தில் இங்கே ஒரு குளமும்
இருந்தது. 1900 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் அம்பேஸ்ரன் இறந்துவிட கவனிப்பாரற்றுக்
கிடந்தது. 1949 வாக்கில் தெற்கு அவுஸ்திரேலியாவிற்கான மரம் மற்றும் காடு சார்ந்த
திணைக்களம் அந்த நிலப்பரப்பை வாங்கி அதன் அருகில் ஒரு மரம் அரியும்
தொழிற்சாலையையும் நிறுவியது. விவசாய நடவடிக்கைக்களால் நீர் வற்றிப்போக குளமும் மறைந்துவிட்டது.
இந்தப் புதைகுழி தற்போது வைகறைப் பொழுதிலிருந்து அந்தி
சாயும் வேளைவரை, மக்கள் பார்வையிடும் ஒரு
பூந்தோட்டமாக உள்ளது. இரவுப்பொழுதுகளில் இந்த அமைதியான தோட்டம் பொசங்களின்
உறைவிடம் ஆகின்றது. சிறுபிள்ளைகள் ‘hide & seek’ விளையாடுவதற்கு ஏற்ற இடம்.
மேலேயிருந்து அற்புதமான காட்சியைப் பார்த்துவிட்டு,
உள்ளே சரிவு வடிவிலான படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்கினால் நிஜமான தரிசனத்தைப்
பெற்றுக் கொள்ளலாம். உள்ளே நீர் ஊற்று, ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்ட ஹைட்ராஞ்ஜியா - hydrangeas பூக்கள், பன்னை (fern) போன்ற தாவரங்களைக்
காணலாம்.
இப்படியான அற்புதமான கண்களுக்கு விருந்தாகும் புதைகுழித்தோட்டத்தை
நான் என் வாழ்நாளில் முன்னொருபோதும் கண்டதில்லை.
No comments:
Post a Comment