Monday, 28 May 2018

மூடியிருக்கும் கதவுக்குப் பின்னால்…….


சிசு.நாகேந்திரன்      

     அறைக்கதவு மூடியிருக்கிறது.  அறைக்குள் யார் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியும்.  ஆனால் என்ன செய்கிறார்களென்று அறியமுடியவில்லை.  கதவில் தட்டி அதைத் திறக்கச் சொல்ல எனக்கு உரிமையில்லை.  உள்ளே நடப்பதை நான் அறிய வேணுமென்ற ஆவல் என்னுள்ளே நின்று உழத்துகிறது.  ஆனால் அறியவேணுமென்ற அவசியமில்லை. தேவையுமில்லை. பின் எதற்காக ஆத்திரப்படுகிறாய் என்று கேட்காதீர்கள்.

     அறைக்குள் ஒரு குரல் அனுங்குமாப்போல் கேட்கிறது.  இன்னொரு குரல் ஏதோ சமாதானப் படுத்துமாப் போலும் கேட்கிறது.  

மனிதாபிமானமுள்ள ஒருவன் இதை எப்படி தாங்கிக்கொண்டிருப்பான்! 

Tuesday, 15 May 2018

குட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்?


 

கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.
எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலற் ஆகிவிடுகின்றார்.

Monday, 7 May 2018

’அக்கினிக்குஞ்சு’ இணையத்தளம் ஏழாவது ஆண்டு நிறைவு விழா


ஏழாவது ஆண்டினை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டினில் அடியெடுத்து வைக்கின்றது அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.

1991 ஆம் ஆண்டிலிருந்து சஞ்சிகை வடிவில் பல இதழ்களை மணம் பரப்பி, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து இணையத்தளமாக வடிவெடுத்து இன்று ஏழு ஆண்டுகளைப் நிறைவு செய்கின்றது அக்கினிக்குஞ்சு.

செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல், சினிமா, நேர்காணல்கள், ஒளிப்படைப்புகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இந்த இணையத்தளம், பல்லாயிரம் வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை இணையத்தளத்தில் வரும் வாசகர் கடிதங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு வருட முடிவிலும் புத்தக வெளியீட்டுவிழா, சிறுகதை – குறுநாவல் போட்டிகள் என அசத்தும் இவ் இணையத்தளம் இவ்வருடம் இசையருவிப் பாடல் போட்டி, படைப்பாளர்/கலைஞர் கெளரவிப்பு என வருகின்றது மகிழ்ச்சியைத் தரும் செய்தி.



தனி ஒரு மனிதனாக, ஃபீனிக்ஸ் பறவை போல், துடிப்புடன் இயங்கும் யாழ். பாஸ்கருக்கு வாழ்த்துக்கள்.

Saturday, 5 May 2018

கடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை


மெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட்.

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன முதியவர்---நோயாளி---வார்டின் முன்புறமாக அங்குமிங்குமாக நடக்கின்றார். நடப்பதும், பின்னர் தனது படுக்கையில் ஏறி இருந்து பெருமூச்சு விடுவதுமாக இருக்கின்றார்.

கடந்த நான்கு நாட்களாக அவர் மனம் பரிதவித்தபடி இருக்கின்றது. கடைசிக்காலம். மனம் ஏதோ சொல்ல விழைகின்றது.

பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போல தோற்றம். இன்னமும் கம்பீரம் குலையவில்லை. நிமிர்ந்த நடை. கண் பார்வைக்குக் குறைவில்லை. தினமும் அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு பட்டாளமே வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றார்கள். கலகலப்பான மகிழ்ச்சி ததும்பும் குடும்பம்.

திடீரென்று தனக்குப் பக்கத்தில் இருந்த ’தாதியரைக் கூப்பிடும் பட்டனை’ அழுத்தினார். அமைதியாக இருந்த ஏழாம் உவார்ட்டை அந்தச் சத்தம் அல்லோலகல்லோலப் படுத்தியது. ஒரு பெண் தாதி ஓடி வந்தாள்.

“பெரிய டாக்டரை நான் பார்க்க வேண்டும்.”

“ஏன் எங்களைப் பற்றி முறையிடவா?”

“இல்லை. என்னைப் பற்றி முறையிட வேண்டும்.”

Tuesday, 1 May 2018

இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் – குறும்கதை



பாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான்.

அவன் இந்தச் செய்தியைச் சொல்லி இரண்டுநாட்கள் இருக்கும், பாபுவின் தாயார் சிட்னியிலிருந்து முகுந்தனிற்கு ரெலிபோன் செய்தார்.

“தம்பி… வாறகிழமை மெல்பேர்ணிற்கு வாறம்.”

“ஓம் அனரி தெரியும். பாபு சொன்னவன்.”

“ஆனால் இது உமக்குத் தெரியாது. நாங்கள் உம்முடைய வீட்டிலைதான் தங்கப் போறம். இரண்டுகிழமைதான் நிற்போம்.”