Sunday 10 June 2018

பொன் சொரிந்த பொற்காலம் (பகுதி 1)



யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

பொற்கால யூனியனின் மைந்தன் நான்.

யூனியன் கல்லூரி மைதானத்தின் கிழக்கில் அமைந்த தகரக்கூரைக் கட்டடத்தில் நான் எனது ஆறாம் வகுப்பை ஆரம்பித்தேன். அப்போது அங்கு தந்தை செல்வா பாடசாலை இருக்கவில்லை. யூனியன் கல்லூரி ஒரே பாடசாலையாக இருந்தது. 1979ஆம் ஆண்டு தை மாதம் யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்ப பிரிவு பிரித்தெடுக்கப்பட்டு, தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி ஆரம்பமானது. அதன்பின்னர் யூனியன் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடைபெற்றது.

யூனியன்கல்லூரியில் இரண்டு அதிபர்கள் சேவையில் இருந்த காலங்களில் நான் அங்கு கல்வி பயின்றுள்ளேன். ஒருவர் திரு. நடராஜா, மற்றவர் திரு. கதிர். பாலசுந்தரம்.

 
யூனியன் கல்லூரியின் வரலாறு வண. டானியல் பூஅர் (Rev. Daniel Poor), வண. எட்வேட் வாறன் (Rev. Edward Warren) அவர்களுடன் ஆரம்பிக்கின்றது. அவர்கள் வந்திறங்கிய நாளான 15.10.1816 தினம்தான் யூனியன் கல்லூரியின் நிறுவியவர் நினைவு நாளாகக் கொள்ளப்படுகின்றது. தொடர்ந்து வளர்ச்சியில் பெரிதும் பங்கு கொண்டவர்களாக வண. சிநெல் சிமித், வண. யே.எச். டிக்ஷன், வண. ஏ. வோட், திரு. ஐ.பி.துரைரத்தினம் என்போர் பேசப்படுகின்றார்கள். அந்த வரிசையில் அதிகம் பேசப்படும் அதிபர் திரு. கதிர். பாலசுந்தரம்.

இவரின் வாழ்க்கை ஓட்டம், மனிதன் இன்னல்களைக் கண்டு துவண்டு போகாமல் எதிர்நீச்சல் அடித்தால், வாழ்வு மலரும் என்பதற்கு அருமையான அத்தாட்சி. யாழ் தீபகற்பத்தின் மையத்தில் அமைந்த> ஆவரங்கால் எனும் சிறிய கிராமத்தில் பாரம்பரிய விவாசய குடும்பத்தில் 1928ஆம் ஆண்டு 14ந் திகதி புனித தைப்பொங்கல் தினத்தன்று> ஏழு பிள்ளைகளின் இரண்டாவதாய் உதித்த இவர்> ஆரம்ப கல்வியை மதவாச்சி அரசினர் தமிழ் பாடசாலையிலும்> பின்னர் புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் பெற்றவர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது உலக மகாயுத்தவேளை> ஐந்து ஆண்டுகள்  திருகோணமலை சீனன்வாடியில் ஆங்கிலேய துரைமாரின் கீழ் கடமைபுரிந்தவர். யுத்த முடிவில் தனது கல்வியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியடைந்து, ஆங்கில ஆசிரியராக இருந்தவேளை லண்டன் பல்கலைக் கழக Inter Arts பரீட்சையில் சித்தியடைந்;தவர். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்று, கலைப் பட்டதாரியான இவர் நாடக சிறுகதை நாவல் சுயசரிதை வரலாறு ஆங்கில-தமிழ் எழுத்தாளருமாவர்.

1950 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியை ஆரம்பித்த திரு. கதிர். பாலசுந்தரம், 1972 இல் யூனியன் கல்லூரிக்கு ஒரு நாடக ஆசிரியராகப் பிரவேசித்தார். இடையில் ஒலுவில் அரசினர் பாடசாலை, ஆரையம்பதி மஹா வித்தியாலயம், ஹெம்மாத்தகம மஹா வித்தியாலயம்,  நீர்வேலி அத்தியார் கல்லூரி, காங்கேசந்துறை அமெரிக்க மிஷன் பாடசாலை போன்றவற்றில் சேவையாற்றியுள்ளார். இவர் யூனியன் கல்லூரிக்கு வந்தபோது அங்கே திரு. க. கிருஷ்ணபிள்ளை அதிபராக இருந்தார்.

1975 இல் முதன்முதலாக நடந்த கல்வி நிர்வாகசேவை (SLEAS) எழுத்துப்பரீட்சையில் தோற்றி, சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்குத் தோற்றிய பட்டதாரிகளுள், காங்கேசந்துறைத்தொகுதியில் இவர் மாத்திரமே இருந்தார்.

யூனியன் கல்லூரியில் புவியியல், வரலாறு என்பவற்றைப் படிப்பித்தார். நான் அவரிடம் கலாசாரமும் பண்பாடும்என்ற பாடத்தைப் பாடசாலையிலும், ஆங்கில இலக்கணத்தை அவரது இல்லத்திலும் பயின்றேன்.  அவரது கற்பித்தல் முறையின் மேன்மையால் எப்பவும் மாணவர்கள் நிறைந்திருப்பர்.

பல வருடங்கள் உதவி ஆசிரியராகவிருந்த அவர், 1978 தை மாதம் முதல் பிரதி அதிபர் திரு. ஜே.ரி.தம்பிரத்தினத்தின் ஓய்வையடுத்து, பிரதி அதிபரானார். அப்போது திரு. த. நடராசா அதிபராக இருந்தார். நடராசா அவர்கள் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து 1979 தை மாதம் முதல் கதிர் பாலசுந்தரம் அதிபரானார்.

கதிர் பாலசுந்தரம் அவர்களை நினைக்கும் தோறும், என் மனதில் இரண்டு சம்பவங்கள் உடனே வந்து போகும். இவரது வருகை யூனியன் கல்லூரியின் பொற்காலம் என அவை கட்டியம் கூறின. ஒன்று - அவர் பிரதி அதிபரானபோது, காலைக்கூட்டத்தில் பிரதானமண்டபத்தில் பேசிய பேச்சு. அதுவே பின்னர் வருடாந்த முகாமைத்துவ செயல்திட்டம்ஆக மாறியிருக்க வேண்டும்.

இந்தப் பிரதான மண்டபம் தேவாலயத்திற்கு மேற்காக, பாடசாலைக்குள் இருக்கும் பிரதானவீதியின் தென்புறமாக இருந்தது. காலைக்கூட்டத்திற்கு நாங்கள் வரிசையாக அணிவகுத்து அங்கே செல்வோம். எனது மற்றைய நினைவும் அங்கேதான் நிகழ்ந்தது. அதை நான் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதியில் தருகின்றேன்.

இவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அரசியலில் இவருக்கு இருந்த செல்வாக்கு என்பவை யூனியன் கல்லூரியின் வளர்ச்சியை துரிதப்படுத்தின. இவர் எனது வீட்டைக் கடந்துதான் துவிச்சக்கர வண்டியில் பாடசாலை செல்வார். பெரும்பாலும் பாடசாலை ஆரம்பமாவதற்கு வெகு முன்னதாகவே சென்றுவிடுவார். மாலை மங்கும் இருட்டு வேளையில்தான் வீடு திரும்புவார். சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும், தவணை விடுமுறைக் காலங்களிலும் பாடசாலை செல்வதை நான் கண்டிருக்கின்றேன்.

1979 இல் இவர் கல்லூரி அதிபர் பணியை ஏற்கும்வரை, பல மாணவர்கள் குறிப்பாக---ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில், வடமாநில ஆசிரியர்சங்கம் நடாத்தும் எட்டாம்வகுப்புத் தேர்வு, அரச சிரேட்ட தராதரப்பத்திர தேர்வு முதலிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்றவர்கள்--- மகாஜனா போன்ற வேறு கல்லூரிகளுக்குச் செல்லும் நிலைமை இருந்தது. பலரும் மஹாஜனவுக்குச்  சிறந்த மாணவர்களை பறிகொடுக்கும் பாடசாலையாகவே யூனியனைப் பார்த்தனர். காலை வேளைகளில் யூனியனைக் கடந்து சாரிசாரியா மாணவர்கள் மேற்கே செல்லும் வீதியில், ஒரு மைலுக்கு அப்பால் அம்பனையில் அமைந்த மஹாஜனவுக்கு விரைந்துகொண்டிருப்பர்.  யூனியனில்  ஒரேயொரு ஐந்தாம்வகுப்பு புலமைப் பரிசில் பெற்ற மாணவரே---செ.சுகுமார்--- எஞ்சி இருந்தார். குறுகிய காலத்துக்குள்ளாகவே  யூனியனின்  'சிறந்த மாணவர்களை புகழ்பூத்த கல்லூரிகளுக்கு வழங்கல் செய்யும் போக்கு' - மூக்கில் கைபதித்து ஆச்சரியப்படும் வகையில் - திடீரென எதிர்த்திசையாக இறக்கை அடித்துப் பறக்கத்  தொடங்கியது.

இவர் உதவி ஆசிரியராய் பணிசெய்யும் வேளை, உயர்தர வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் இவரது செயற்பாடுகளினால் கவரப்பட்டிருந்தோம். காரணம் தரம் 11> 12 விஞ்ஞான, கலை வகுப்பு மாணவரிடையே கலாசாரமும் பண்பாடும் என்ற பாடத்தை நடத்தியவர். இவருடைய கற்பித்தல் முறைகளினால் மாணவர்கள் இவருடன் மேலும் நெருக்கமானார்கள். மேலும் வாரத்தில் ஒருநாள் நடைபெறும் மாணவர் மன்றம் என்ற நிகழ்ச்சிக்கு போஷகராக இருந்தார். இந்த நிகழ்ச்சியினால் மாணவர்களிடையே கலை இலக்கியம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உயர்தர வகுப்பு மாணவர்களே, கல்லூரி விழாக்கள் வேளை நாடகம் அரங்கேற்றுவர். இவர் அந்த நாடகங்களை எழுதிப் பயிற்றுவித்ததால் மாணவர்கள் யாவரும் அவருடன் மிக நட்பாக நெருக்கமாக பழகினர். அதனால் அதிபராகிய வேளை அவருக்கு உயர்தர வகுப்பு மாணவர் மத்தியில் பெரும் மதிப்பு உருவாகியது. அது அவரது நிர்வாக வெற்றிக்கு பெரிதும் பக்கபலமாய் இருந்தது என்று இப்பொழுது கருதுகிறேன்.

இவர் அதிபராய் வந்ததை அடுத்து> கல்லூரியில் பல மாற்றங்கள் வேகமாய் நடந்தேறின. ஆசிரியர்களும் மாணவர்களும்> பாடசாலை நேரத்தில் களவாய் நழுவுவதற்காகப் பயன்படுத்திய கல்லூரியின் பின் கேற் மூடப்பட்டது. உள்ளே மலசல கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அக்கறையற்ற பழைய பல ஆசிரியர்கள் மாயமாய் மறைந்தனர். புதிய புதிய சிறந்த ஆசிரியர்கள் வந்தனர். புதிய புதிய சிறந்த மாணவர்கள் வந்தார்கள். மகாஜனா, யாழ்.இந்து, வேம்படி, சென்.ஜோன்ஸ் போன்ற கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் யூனியனை நாடி வந்தார்கள்.

பாடநேர மணி அடித்து மூன்று நிமிட நேரத்துள் வகுப்புகள் சுறுசுறுப்பாய் இயங்கின. பாட நேரத்தில் வகுப்பறைகளுக்கு வெளியே ஒரு குருவியைக்கூட யாரும் காண முடியவில்லை. ஆசிரியர்களின் குரல்கள்மட்டும் வகுப்பறைகளுள் கேட்டன. வளாகம் எங்கும் ஒரே அமைதி.

மாலையானால் விளையாட்டு மைதானத்தில் பாலசிங்கம் சேரின் கிரிகட் அல்லது உதைபந்தாட்ட பயிற்சிகள், போட்டிகள் தொடர்ந்தன. பரிசளிப்பு-விளையாட்டு ஆண்டு விழாக்கள் ஆடம்பரமாக தொடர்ந்தன.  வகுப்பறைகளின் முன்னே வண்ண வண்ண பூஞ்செடிகள் செழித்து ஓங்கி வளர்ந்து  அழகு சொரிய -  யூனியன் அன்னை புத்தாடை அணிந்து புதுக்கோலத்தில் எழுந்து நின்று புன்னகை புரியத்தொடங்கினாள். யூனியன்  புகழ் நாலாதிக்கும் விரைந்து பரவியது.

யூனியனின் இத்தகைய மகத்தான மாறுதலுக்கு முக்கிய காரணம், இவர் தயாரித்த வருடாந்த முகாமைத்துவ செயல்திட்டம்என்று தான் சொல்வேன். ஆண்டுதோறும் பாடசாலை ஆரம்பிக்கும் முதல் தினத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்துவிடுவார். முகாமைத்துவப் பணிகள் எல்லாம் பொருத்தமான ஆசிரியர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டுவிடும். அதன் பின்னர் பாடசாலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடும்.
w


No comments:

Post a Comment