Thursday, 22 November 2018

அவன் விதி – சிறுகதை


எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன். 25 மில்லியன்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்டது.

25 மில்லியன் டொலர்கள்….

இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

Thursday, 8 November 2018

பள்ளிச் சிறுமியின் பருவச்சுமை






அண்டனூர் சுராவின் ’கொங்கை’ நாவலை முன் வைத்து

தமிழர் பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்பெய்திவிட்டால், அதை ஒரு சடங்காக ‘சாமர்த்திய வீடு’ என்னும் பெயரில் கொண்டாடிவிடுவார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சிலர் அதற்குப் பெரிய விழாவே எடுத்துவிடுவார்கள். பெண்ணைக் ஹெலிகொப்டரில் ஏற்றி இறக்கி, பெரிய அரியணையில் மேள தாளங்களுடன் சுமந்து வந்து தாலாட்டி விடுகின்றார்கள். ஒருமுறை சிட்னி நகரில் எனது நண்பர் ஒருவரின் பிள்ளையின் சாமர்த்தியவீட்டிற்கு மெல்பேர்ண் நகரில் இருக்கும் நானும் மனைவியும் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு போனபோது, வேலைத்தலத்தில் அதை விளங்கப்படுத்தப் பட்ட பாடு சொல்லிமாளாது. இதற்குச் சடங்கா? எங்கள் நாட்டில் பண்பாட்டில் இது இல்லையே எனப் பலர் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு சில நாடுகளில் பெண் பருவமெய்திவிட்டால் அவர்களின் வீட்டு வாசலில் கொடி கட்டிப் பறக்கவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், அவுஸ்திரேலியாவில் எனது இன்னொரு நண்பரின் பெண் எட்டு வயதிலேயே பெரியவளாகிவிட்டாள். மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தந்தை பெரும் துயரத்திற்கு உள்ளானார். மிகவும் சிறிய வயதிலே-பேதைப் பருவத்திலே-இது நடந்தமைக்கு யார் என்ன செய்யமுடியும். அவர் காதும் காதும் வைத்ததுமாப்போல் நாலுபேருடன் சடங்கை முடித்துவிட்டார்.

Tuesday, 6 November 2018

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018


கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது  25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி.

பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;,  சான்றிதழ்களும் காத்திருக்கிறன.

பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்

முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000
(அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)

Friday, 2 November 2018

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018

2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.

நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.

மொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் : 337

பரிசுபெற்ற சிறுகதைகள் விவரம்

முதல் பரிசு:

பாம்பும், ஏணியும் - கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா)

இரண்டாம் பரிசு:

குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் - சிவக்குமார் முத்தய்யா (சென்னை)

மூன்றாம் பரிசு :

சபீரின் உம்மா கதை சொல்வதில்லை - இடலாக்குடி அசன் (நாகர்கோவில்)

Thursday, 1 November 2018

வளர்த்தவர்கள் – சிறுகதை

ஆராதனாவிற்குத் திருமணம். தாலி கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.

ஆராதனாவிற்கு சமீபத்தில்தான் பதினெட்டு வயது முடிந்திருந்தது.

ஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள் எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்” என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த பாய்க்கியம் கிடைக்கவில்லை.

“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.”
“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

சுமதி மச்சாள் அட்சதை போடும்போது, அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள் குளமாகின.