Thursday 8 November 2018

பள்ளிச் சிறுமியின் பருவச்சுமை






அண்டனூர் சுராவின் ’கொங்கை’ நாவலை முன் வைத்து

தமிழர் பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்பெய்திவிட்டால், அதை ஒரு சடங்காக ‘சாமர்த்திய வீடு’ என்னும் பெயரில் கொண்டாடிவிடுவார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சிலர் அதற்குப் பெரிய விழாவே எடுத்துவிடுவார்கள். பெண்ணைக் ஹெலிகொப்டரில் ஏற்றி இறக்கி, பெரிய அரியணையில் மேள தாளங்களுடன் சுமந்து வந்து தாலாட்டி விடுகின்றார்கள். ஒருமுறை சிட்னி நகரில் எனது நண்பர் ஒருவரின் பிள்ளையின் சாமர்த்தியவீட்டிற்கு மெல்பேர்ண் நகரில் இருக்கும் நானும் மனைவியும் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு போனபோது, வேலைத்தலத்தில் அதை விளங்கப்படுத்தப் பட்ட பாடு சொல்லிமாளாது. இதற்குச் சடங்கா? எங்கள் நாட்டில் பண்பாட்டில் இது இல்லையே எனப் பலர் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு சில நாடுகளில் பெண் பருவமெய்திவிட்டால் அவர்களின் வீட்டு வாசலில் கொடி கட்டிப் பறக்கவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், அவுஸ்திரேலியாவில் எனது இன்னொரு நண்பரின் பெண் எட்டு வயதிலேயே பெரியவளாகிவிட்டாள். மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தந்தை பெரும் துயரத்திற்கு உள்ளானார். மிகவும் சிறிய வயதிலே-பேதைப் பருவத்திலே-இது நடந்தமைக்கு யார் என்ன செய்யமுடியும். அவர் காதும் காதும் வைத்ததுமாப்போல் நாலுபேருடன் சடங்கை முடித்துவிட்டார்.

இனி ‘கொங்கை’ நாவலுக்கு வருவோம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அண்டனூர் சுரா (சு.இராஜமாணிக்கம்) இதை எழுதியிருக்கின்றார். ’காக்கைச் சிறகினிலே’ இதழ் நடத்திய கி.பி.அரவிந்தன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘கொங்கை’ நாவல் நாஞ்செலிக்கு (நங்கேலி) சமர்ப்பணமாகின்றது. யார் இந்த நாஞ்செலி? மார்பை துணி கொண்டு மறைக்க விரும்பும் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் அதற்கென்று வரி கட்டும் கொடுமையை எதிர்த்து, மார்புகளை அறுத்து, வாழை இலையில் வைத்து திருவிதாங்கூர் சமஸ்தான மன்னனுக்குக் கொடுத்து அனுப்பியவள் நாஞ்செலி.

இங்கே ‘கொங்கை’ நாவலிலும் இதே கதைதான். மிகவும் சிறிய வயதிலே---ஒன்பது வயதில்---பெரியவளாகிவிடுகின்றாள் விமலா. அவளே நாவலின் கதைசொல்லி. விமலா தாய் இல்லாத பெண். விமலாவின் கொங்கைகள் பருத்து அவளுக்கு அது பெரும் சுமையாகிவிடுகிறது. புத்தகச்சுமைகளுடன் இது வேறு. சமூகம் என்பது எங்கேயும் ஒன்றுதானே! அதே சமூகம் அவளுக்குக் கொடுக்கும் தொல்லைகளோ தாங்க முடிவதில்லை.

’நான், சந்திரா ரீச்சருடன் மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். சுவரோடு சுவராக ஒடுங்கிப் போயிருந்த தொலைக்காட்சியில் விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. மார்பகத்தைப் பெரிதாக்கும் உள்ளாடை விளம்பரம் அது.’ தொழில்நுட்ப வளர்ச்சியின் உக்கிரத்துடன் ஆரம்பிக்கின்றது நாவல்.

விமலாவிற்கு எல்லாமே அப்பாதான். அவரே அவளுக்கு ஆடைகள் வாங்குகின்றார். உள்ளாடைகளும் ’நாப்கின்’னும் வாங்குகின்றார்.

அப்புறம் விமலாவின் பாடசாலை ஆசிரியரான சந்திரா ரீச்சர் அவளுடன் நெருக்கமாகின்றார். விமலாவிற்கு ஒரு அம்மாவாகவும் தோழியாகவும் பணி செய்கின்றார். இருவரும் தங்களின் கதைகளைப் பரிமாறிக் கொள்கின்றார்கள். இருவருக்கிடையேயான உரையாடல்கள் மார்பகம் பற்றி பல செய்திகளைச் சொல்லிச் செல்கின்றது
சந்திரா ரீச்சரின் கணவன் – அவளை ஒரு மனைவியாகப் பார்க்காமல், அழகியாகப் பார்க்க விரும்புகின்றான். ஒருதடவை சந்திராவை ஒரு எடை குறைப்பு நிலையத்திற்குக் கூட்டிச் செல்கின்றான். அங்குள்ளவர்களிடம், ‘மொத்த எடையையும் குறைக்கிற பேர்ல, மார்பகத்தோட சைஸ்ஸக் குறைச்சிடாதீங்க’ என்கின்றான் அவன்.

எல்லாவற்றுக்குமே ஓமோன்கள் தான் காரணம். இங்கே விமலாவிற்கும் அதுதான். உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் பரம்பரையாகவும் வருவதுண்டு. இப்போது அவளுக்குப் பதினொரு வயது. அவளின் மார்பகங்களை சக மாணவர்கள் பார்க்கின்றார்கள்; ரீச்சர்மார் பார்க்கின்றார்கள்; ஊரே பார்க்கின்றது; ஏன் தந்தையே பார்கின்றார். ஆனால் தந்தை பார்ப்பதற்கான காரணம், அவளது மார்பில் ஈக்கள் மொய்த்திருந்ததுதான்.

அவளது தந்தையார் அவள் மீது சந்தேகம் கொள்கின்றார். கர்ப்பிணிப்பெண்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும் தான் இப்படி மார்பில் பால் கசிவதுண்டு.

இந்த இடத்தில் எனது தாயகத்தில் நடந்த சம்பவமொன்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். நான் பாடசாலையில் ஒன்பதாம்தரம் படித்துக் கொண்டிருக்கும்போது, எனக்குக் கீழ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனுக்கு திடீரென்று மார்பகங்கள் வளர ஆரம்பித்துவிட்டன. ஆணுக்கு மார்பகங்கள் வளர்ந்தால் சொல்லிக்கொள்ளவா வேண்டும். சக மாணவர்கள் அவனின் மார்பகங்களைக் கிள்ளியும் அழுத்தியும் விளையாடத் தொடங்கிவிட்டார்கள். அப்புறம் அவனுக்கு மார்பகங்களிலிலிருந்து ஒரு திரவம்கூடக் கசியத் தொடங்கிவிட்டது. பின்னர் அவன் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டியதாயிற்று.

இங்கே விமலா உரிய நேரத்தில் தனது பிரச்சினைகளைச் சந்திரா ரீச்சரிடம் சொல்கின்றார். அவர் விமலாவை மார்பழகு நிலையத்தினரிடமும், மருத்துவரிடமும் அழைத்துச் செல்கின்றார். அவர்கள் கொடுத்த கவுன்சிலிங் ஏமாற்றம் தருகின்றது. விமலா ஒரு பள்ளிச்சிறுமி என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. வியாபாரத் தந்திரத்திலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.

விமலா மருத்துவரைச் சந்தித்துவிட்டு வந்ததை சமூகம் வேறுவிதமாகக் கற்பிக்கின்றது. முடிவு விமலா தன் முலைகளை அறுத்துக் கொள்கின்றாள்.

ஒரு சம்பவம் என்பது எங்கோ எப்பொழுதோ ஒருவருக்கு நடப்பதுதான். நமக்கு ஏற்படாதவரை அவை வெறும் சம்பவங்கள். அதுவே நாளைக்கு நமக்கும் ஏற்பட்டுவிடும். நல்லதோ /கெட்டதோ அதற்கான ஒரு முன்பதிவுகள் தான் இவை.

தமிழில் பல சொற்கள் பொத்தாம் பொதுவாக நோக்கும்போது ஒரே கருத்தைக் கொண்டிருக்கும். அவற்றை நுணுகிப் பார்த்தால் பல்வேறு பொருள்படும். அதைத்தான் இங்கே அண்டனூர் சுராவும் சொல்கின்றார். முலை என்பது எஜமானர்கள் தொழிலாளிகளிடம் பார்ப்பது, கொங்கை என்பது தொழிலாளர்கள் தன் எஜமானிகளிடம் காண்பது. பார்ப்பது, காண்பது இரண்டுமே ஒன்றுபோல இருந்தாலும் இரண்டிற்கும் பொருள் வித்தியாசம் இருக்கவே செய்கின்றது என்கின்றார் அண்டனூர் சுரா.

’கொங்கை’ அளவில் சிறிய குறுநாவல். பக்க வரையறைகள் ஒரு விடயத்தின் கனதியைத் தீர்மானிப்பதில்லை. ஹெமிங்வேயின் ’கடலும் கிழவனும்’ போல.

ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பெண்ணின் வலியையும் ஆணின் அதிகாரத்தையும் சரக் சரக் என கத்திபோல செருகிச் செல்கின்றது நாவல். இறுதியில் கண்ணகியைப் போல, விமலா தனது முலையைத்திருகி எறிந்தது என்னவோ சமூகத்தின் மேல் தான். மதுரையை எரித்த தீ இங்கே என்ன செய்யும்? பார்க்கலாம்.

No comments:

Post a Comment